17. பாடல் 196 – வேம்பின் பைங்காய்

தேம்பூங்கட்டி	பொன்னியும் முல்லையும் நந்தவனத்தில் பூப்பறிக்க வருகிறமாதிரி வந்து அவனுக்காகக் காத்திருந்தனர். 
முல்லை சற்றுப் படபடப்பாக இருப்பினும் பொன்னி சிந்தனைவயப்பட்டவளாய் இருந்தாள். திடீரென அவள் முகத்தில் 
ஒரு குறும்புத்தனமான புன்னகை தோன்றியது.

“என்னடீ, மனசுக்குள்ள சிரிப்பு?” என்று வினவினாள் முல்லை.

“இல்ல எனக்கு ஒரு யோசனை”

“என்ன”

தாங்கள் நின்றிருந்த வேப்பமரத்தின் தாழ்ந்த கிளையொன்றைத் தாவிப் பிடித்தாள் பொன்னி. அதில் கொத்தாகக் காய்த்திருந்த 
காய்களில் நன்கு பச்சைப்பசேல் என்றிருக்கும் நான்கைந்து முற்றிய காய்களைப் பறித்தாள்.

“என்னடீ பண்ற?” என்று வியப்புடன் வினவினாள் முல்லை.

“இதென்ன? வேப்பங்காய். இத அண்ணங்கிட்டக் கொடுத்து வெல்லக்கட்டி’ன்னு சொல்லு”

“ஏன்டி, வெல்லக்கட்டி பச்சையாவா இருக்கும்?”

“கேட்டா, வெல்லத்தை எளக்கி நிறம் சேத்துருக்கோம்’னு சொல்லு”

“இதென்னடி விளையாட்டு? ‘சட்’-னு இதக் கடிச்சுட்டார்’னா?”

“ஏன்டீ, அவர நான் அண்ணன் மாதிரிதான நெனச்சிருக்கேன். என் அண்ணனுக்கு இப்படிச் செய்வேனா? அதான்’டி சொன்னேன். 
வெல்லப் பால் கொழக்கட்ட’ன்னு சொல்லாம, சும்மா வெல்லக்கட்டி’னு மாத்திரம் சொல்லு’ன்னு சொன்னேன். அப்ப, யாரும் 
அதக் கடிக்கமாட்டாக, சும்மா சப்பிமட்டும் பாப்பாக”

“பாத்து?”

“பாத்து அண்ணன் என்ன சொல்றாரு’னு மட்டும் சொல்லு”

“ஏதாவது சொன்னா ஒங்க தங்கச்சிதான் கொடுத்தா’ன்னு சொல்லிறுவேன்”

“ஐயய்யோ, அப்படிமட்டும் சொல்லிறாத. எல்லாம் பாழாயிரும். ஒங்கையாலே ஒங்க வீட்’ல செஞ்சதுல மூணுநாலு எடுத்தாந்தேன்’னு 
சொல்லு. அண்ணன் என்ன சொல்லுது’ன்னு பாப்போம்”

முல்லை மறுமொழி சொல்வதற்குள் அவன் வரும் அரவம் கேட்டது. சட்டென்று முல்லையின் உள்ளங்கையில் வேப்பங்காய்களைத் 
திணித்துவிட்டு பொன்னி ஒதுங்கிப்போனாள்.

முல்லையும் அவனும் வழக்கமாக அமர்ந்துபேசும் இடத்திற்குப் போனார்கள். சிறிது நேரம் கழித்து அவனே கேட்டான்.

“அதென்ன கையில, ஒளிச்சுவச்சிருக்க.”

“ஓளிச்செல்லாம் இல்ல, வீட்’ல கொஞ்சம் வெல்ல உருண்டை செஞ்சேன்”

“ஒனக்கு, ஒங்க வீட்’ல அடுப்படி எங்க இருக்குன்னுகூடத் தெரியுமா?”

“போங்க நீங்க! நானாச் செஞ்சது இது. ஒண்ணு சாப்’டுப் பாக்குறீங்களா?. சும்மா வாயில போட்டுச் சப்புனால போதும் கரஞ்சுரும்”

அவள் ஒரு காயை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

“இதென்ன பச்சையா இருக்கு? வேப்பங்காயி கணக்கா?”

“வெல்லக்கட்டிய எளக்கிப் பச்சை நிறம் சேத்துருக்கேன்”

“அப்படியா! புதுசாயிருக்கே” என்று சொல்லியவண்ணம் ஒரு காயை வாங்கிச் சப்புவதற்குப் பதில் நறுக்’கென்று கடித்தான். நாக்கில் 
பட்ட படுகசப்பில் முகம் எட்டுக்கோணலாக மாறினாலும், சமாளித்துக்கொண்டான்.

“நாந்தான் கடிக்காதீங்க, சப்பிச் சாப்பிடுங்க’ன்னு சொன்னேன்’ல” என்று முல்லை பதறினாள்.

அவன் சமாளித்துக்கொண்டான். வலிய ஒரு புன்னகையை வரவழைத்துக்கொண்டான். வெல்லக்கட்டியே இனிக்கும். அதும் 
ஒங்கையால செஞ்சு ஒங்கையால கொடுத்ததுல, நல்லாவே இனிக்குது”

“ஐயய்யோ, நான் சும்மா வெளயாட்டுக்கு .. “ என்று முல்லை இழுத்தாள்.

“வெளயாட்டுக்குச் செஞ்சதே இவ்வளவு நல்லாருக்கு. எனக்கு நேரமாச்சு. அப்புறம் அடுத்த வாரம் பாப்போம்” என்று சொல்லியவாறே 
அவன் நடக்கத் தொடங்கினான். 

முல்லை இருக்குமிடம் வந்ததும், முல்லை சிரித்துக்கொண்டே தோன்றினாள்.

“அண்ணே, வெல்லக்கட்டி எப்படி இருந்துச்சு?”

“ரொம்ப நல்லாவே இருந்துச்சு’ம்மா. ஒந் தோழி தொட்டுக்கொடுத்தா வேப்பங்காயிகூட இனிக்காதா என்ன?” அவன் பொடிவைத்துப் 
பேசினான்.

பின் அவனே தொடர்ந்தான். “முல்லை நம்மள ஏமாத்துறாங்’கறதக் காட்டிலும், அவகிட்ட ஏமாந்தமாதிரி நடிக்கிறதே ஒரு 
சொகந்தான்’மா”

“அப்ப முல்லைக்குக் கவலயில்ல. என்னத்த ஆக்கிப்போட்டாலும் சாப்புட்டுறீவீங்க” என்று கேலி செய்தாள் பொன்னி.

“போடீ, அவ கெடக்கா, நான் நல்லாவே சமைப்பேன். இப்ப வெளயாட்டுக்குத்தான் .. “ என்று முடிக்கமாட்டாமல் அவனைப் பார்த்து 
இழுத்தாள் முல்லை.

அவன் சிரித்துக்கொண்டே விடைபெற்றுச் சென்றான்.

அப்புறம் நடந்தது பெரிய கதை. முல்லையின் முறை மாப்பிள்ளைக்கு அவளை மணம் முடிக்கும் பேச்சு எழுந்தது. முல்லை 
நேரிடையாகப் பெற்றோரிடம் சொல்லாமல், வளர்ப்புத்தாய் முத்தம்மாவிடம் தன் காதல் சங்கதியைக் கூறினாள்.

“மூச்சுவிடக்கூடாது. அப்பாவுக்குக் கெட்ட கோவம் வந்துரும். அப்புறம் அவரு என்ன செய்வாருன்னு தெரியாது” என்று அவளை 
அடக்கிவிட்டாள் முத்தம்மா.

அப்புறம் என்ன? அடுத்தமுறை அவனைச் சந்திக்கும்போது முல்லை உறுதியாகச் சொல்லிவிட்டாள்.

“சீக்கிரம் என்னயக் கூப்டுட்டுப் போயிருங்க, இல்லன்னா செத்துருவேன்”

ஒருநாள் இரண்டாம் கோழி கூப்புடுகிற நேரத்தில், முல்லையின் வீட்டுக்கு வந்து அவன் கோழி போலக் கூவினான். தூங்காமல் 
விழித்திருந்த முல்லை, பெற்றோரின் கால்களைத் தொடாமலேயே கும்பிட்டுவிட்டு அவனுடன் புறப்பட்டுச் சென்றுவிட்டாள்.
ஆறுமாதம் கழிந்திருக்கும். ஒருநாள் அவன் பொன்னியின் வயல்பக்கம் வந்தான். மாட்டுக்குப் புல் அறுத்துக்கொண்டிருந்த 
பொன்னியிடம் தங்கள் இருப்பிடம்பற்றிச் சொல்லிவிட்டுச் சென்றான். முல்லைக்குப் பிடித்த சில பலகாரங்களைச் செய்துகொண்டு, 
ஒரு திருகுசெம்பில் நிறையத் தண்ணீர் எடுத்துக்கொண்டு இரண்டு நாள்களில் பொன்னி புறப்பட்டுவிட்டாள். 
பொன்னியைக் கண்ட முல்லை அவளைக் கட்டிப்பிடித்துக் கதறிவிட்டாள். பின்னர் பெற்றோரின் நலம் விசாரித்தாள். அப்புறம்தான் 
பொன்னி கொண்டுவந்திருந்தவைகளைக் கவனித்தாள். ஆசையாசையாய் சில பலகாரங்களைத் தின்றாள். அப்புறம் அந்தத் 
திருகுசெம்பைக் கவனித்தாள். 

“இதுல என்னடி இருக்கு?”

“தண்ணி”

“தண்ணியா?”

“சும்மா தண்ணி இல்லடீ. எங்கப்பா பறம்பு மலைக்கு முயல் வேட்டைக்குப் போயிருந்தாக”

“எந்தப் பறம்பு மலை. அந்த பாரி ராசா ஆளுறதா?”

“அதேதான். அங்க சுனையில தண்ணி குடிச்சாங்களாம். ரொம்ப ருசியா இருந்துச்சாம். ஒரு பானை நெறயா கொண்டுவந்தாங்க. 
ஒரு மண் சட்டியில ஊத்திவையி. அண்ணன் வர்ரதுக்குள்ள நல்லா குளுந்துரும். குடிச்சா அம்புட்டு நல்லா இருக்கும். 
போன வாட்டி வேப்பங்கா கொடுத்தேன்’ல, அதுக்குப் பரிகாரம்”

அவன் வரும் சத்தம் கேட்டது. 

“டீ, நான் உள்ள போயி இருக்கேன். நன் வந்ததச் சொல்லாத. நீயா இந்தச் தண்ணியக் குடுத்துப்பாரு” என்று சொல்லிவிட்டு 
பொன்னி ஓர் அறைக்குள் நுழைந்துகொண்டான்.

வந்தவன் தனக்குள் பேசிக்கொண்டே வந்தான். மிகவும் கோபத்துடன் காணப்பட்டான். ஊர்ச் சாவடியில் ஆடுபுலி ஆட்டத்தில் 
ஒருவன் அவனை ஏமாற்றியிருக்கிறான். காய்களை எடுத்துவீசிவிட்டு, வேகமாக வீட்டுக்கு வந்துவிட்டான். இது தெரியாத முல்லை, 
“ரொம்ப வெயிலு அடிக்குது. நல்லா குளுந்த தண்ணி குடிங்க” என்று சொல்லி பொன்னி கொண்டுவந்து குளிரவைத்த நீரை ஒரு 
குவளையில் ஊற்றி அவனுக்குக் கொடுத்தாள்.
கோபத்தில் இருந்த அவனுக்கு நீரின் குளிர்ச்சியோ, சுவையோ தெரியவில்லை. வழக்கமாகக் குடிக்கும் நீராக அது இல்லாததினால், 
வாயில் ஊற்றிய நீரைப் ‘புளிச்’-சென்று துப்பினான். “இதென்ன புதுத் தண்ணி, ஏதோ உப்புக் கரிச்ச மாதிரி, எங்கயிருந்து இதக் 
கொண்டுவந்த?” என்று குரலை உயர்த்திக் கூறினான். 

“நாந்தா’ண்ணே கொண்டுவந்தேன்.” என்று சொல்லியவண்ணம் பொன்னி உள்ளுக்குள் இருந்து வெளியே வந்தாள்.

“பொன்னியா? வா’ம்மா. நீ எப்ப’ம்மா வந்தே? நான் கவனிக்கல” என்று சற்றுத் தணிந்த குரலில் அவளை வரவேற்றான் அவன். 

“நான் வந்தது இருக்கட்டும். இப்ப ஏன் இவ மேல எரிஞ்சு விழுந்தீங்க?” அவனை மடக்கினாள் பொன்னி.

சற்றே சங்கடத்துடன் நெளிந்தான் அவன். 

“அதில்ல’ம்மா, வெளிய கொஞ்சம் கோவம், அதான் செத்த படபட’ன்னு பேசிப்புட்டேன்” அவன் சமாளித்தான்.

வெளியுல போற ஆம்புளய்ங்களுக்கு ஆயிரம் நடக்கும். அதெல்லாம் வீட்டுக்குள்ள கொண்டுவந்து காமிச்சா, இங்க ஒருத்தி 
ஒங்களயே நெனச்சுக்கிட்டு இருக்கிறாளே அவ நெலம என்ன ஆகுறது?”
அவன் ஒன்றும் பேசவில்லை. அவளே தொடர்ந்தாள்.

“எனக்கென்னமோ அண்ணே நீங்க கொஞ்சம் மாறிப்போன மாதிரி தெரியுது”

“சும்மாயிருடீ, வேலயத்தவ, நீங்க கையக்காலக் கழுவிட்டு வாங்க, சோறு போடறேன்” என்று முல்லை குறுக்கிட்டாள்.

“நீ கொஞ்ச நேரம் சும்மா இருக்குறயா” என்று முல்லையை அடக்கினாள் பொன்னி.

“எனக்குத்தாண்ணே தெரியும், இவ பட்டபாடு. பெத்தவங்கள விட்டுப்புட்டு ஒங்கள நம்பி வந்திருக்காளே இவ, அவ மனசு 
நோகலாமா?”

“நான் என்னிக்கும் மாறமாட்டேன்’மா” என்று நெளிந்தான் அவன்.

பொன்னி விடவில்லை.

அன்னிக்கு வேப்பங்காய்க் கதையயும் நான் ஒளிஞ்சுகிட்டு இருந்துதான் பாத்தேன். அன்னிக்கு இவ கொடுத்த வேப்பங்காயக் கூட 
வெல்லக்கட்டி’ன்னு சொன்னீங்க. இன்னிக்கு அவ கொடுத்தது வெறுந்தண்ணி இல்ல’ண்ணே. பாரியோட பறம்புமலையில 
இருக்கிற சுனைத்தண்ணி. அதயும் தைமாசக் குளுரு போல குளுரவச்சுக் கொடுத்திருக்கா. அதப்போயி உப்புக் கரிக்குது’ன்னு 
சொல்லிப்புட்டீங்களே!. இம்புட்டுத்தான் ஒங்க வகுசி. இவ்வளவுதானா ஒங்க காதல்?

பாடல் : குறுந்தொகை 196 – ஆசிரியர் : மிளை கந்தன் – திணை : மருதம்

	வேம்பின் பைம் காய் என் தோழி தரினே
	தேம் பூம் கட்டி என்றனிர்; இனியே
	பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண் நீர்
	தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
	வெய்ய உவர்க்கும் என்றனிர்
	ஐய அற்றால் அன்பின் பாலே!

அருஞ்சொற்பொருள்

தேம்பூங்கட்டி = இனிப்பான நல்ல வெல்லக்கட்டி; தெண் நீர் = தெளிந்த நீர்; திங்கள் = மாதம்; தண்ணிய = குளிரவைத்ததாய்; 
அற்றால் = அப்படிப்பட்டதோ; அன்பின் பாலே = காதலின் தன்மையே.

அடிநேர் உரை

	வேப்பமரத்தின் பசிய காயை என் தோழி தரும்போது
	இனிப்பான நல்ல வெல்லக்கட்டி என்று சொன்னீர்; இப்பொழுதோ,
	பாரியின் பறம்பு மலையில் குளிர்ந்த சுனையில் உள்ள தெளிந்த நீரை
	தை மாதத்துக் குளிர்போன்று குளிரவைத்ததாகக் கொடுத்தாலும்
	மிகவும் உவர்ப்பாய் இருக்கிறதென்று கூறுகின்றீர்;
	தலைவனே! அப்படி ஆகிவிட்டது உம் அன்பின் தன்மை.
		
	When my friend gave you a green unripe fruit of the neem tree
	You said,”It was a sweet good jaggery cube”, but now
	Even if she gives you 
	The clear cool water from the mountain spring in Pari’s Parampu Hills,
	As cool as the chillness in the month of Thai,
	You say, “It tastes astringent”
	Oh, chief, so is the level of your love now.

Related posts