14. பாடல் 156 – பார்ப்பன மகனே

எழுதாக் கற்பு


	அந்தக் கிராமத்து ஓரத்துக் கோயிலின் திண்ணையில் வழக்கமாக வந்து உட்காரும் இளவட்டங்கள் எல்லாரும் 
வந்துசேர்ந்தனர் - அவனைத் தவிர. அவன்தான் அக்கூட்டத்துக்கு இயங்குசக்தி போன்றவன். சற்றுத் தாமதமாக சோர்ந்த முகத்துடன் 
அவன் வந்து சேர்ந்தான். அவனுடைய சோகத்துக்குக் காரணம் அவர்களுக்குத் தெரியும். சிறிது நாட்களாகவே அவன் சோர்வுடன்தான் 
காணப்பட்டான். தோண்டித் துருவிக் கேட்டதில் அவனது துயரம் அவர்களையும் தொற்றிக்கொண்டது. ஆம், சில நாட்களாகவே 
அவனது ‘அவள்’ அவளது ஊர் நந்தவனத்துப்பக்கம் வருவதில்லை. எனவே அவர்களின் சந்திப்பு முற்றிலும் நின்றுபோனது. அவள் 
இருக்கும் அடுத்த ஊருக்குச் சென்று அவள் வீட்டுப்பக்கம் நடந்துபார்த்தான். முற்றிலும் புதியவனான அவனை எல்லாரும் வெறித்துப் 
பார்த்தார்கள். ஒருசிலர் சாடைமாடையாக அவனைப் பழித்துப் பேசினார்கள். அவளைப் பற்றிய எந்த செய்தியும் கிடைக்கவில்லை. 
ஒருவேளை அவர்கள் பழகுவது அவளின் வீட்டாருக்குத் தெரிந்து அவளை வீட்டுக்குள் அடைத்துப்போட்டிருக்கவேண்டும். என்ன 
செய்வது என்று தெரியாமல் அவன் கிறுக்குப்பிடித்ததுபோல் இருந்தான். அது அவன் கூட்டாளிகளுக்குத் தெரியும்.

“இப்போது என்ன செய்யலாம்”, ஒருவன் பொதுவாகக் கேட்டான்.

“ஒண்ணும் தோணலயேடா!”

	அப்போது அந்தப்பக்கம் ஒரு அந்தணன் நடந்துவந்தான். அவனும் அவர்களை மாதிரி இளையவன்தான். சொல்லப்போனால் 
அவர்கள் எல்லாரையும் காட்டிலும் வயதில் சிறியவன். எனினும் சிறிய வயதில் அவர்களோடு பழகியவன். அவர்கள் சிறுவர்களாய் 
மாந்தோப்பில் மாங்காய் களவாடச் செல்லும்போது அவனும் கூடச் செல்வான். ஓரமாய் நின்று வேடிக்கை பார்ப்பான். சிறியவனாயிற்றே 
என்று அவனுக்கும் கொஞ்சம் கொடுப்பார்கள். தோட்டத்துக் கிணற்றில் உயரத்தில் இருந்து கிணற்றுக்குள் குதித்து அவர்கள் குளித்து 
விளையாடும்போது கிணற்றுமேட்டில் அமர்ந்து அவர்களின் குதியாட்டங்களை இரசித்துப் பார்ப்பான். நீச்சல் சொல்லிக்கொடுக்கிறோம் 
என்று அவர்கள் வற்புறுத்தினாலும் வரமாட்டான். அதன்பின் அவன் வெகுதூரம் சென்று வேதம் கற்கச் சென்றுவிட்டான் என்று கேள்வி. 
சிறிது நாள்களுக்கு முன்னர் முற்றிலும் மாறியவனாய் அவன் ஊருக்கு வந்தான். முன்புபோல் அவன் இந்தக் கூட்டத்தில் சேரவில்லை. 
அவனது தோற்றத்திலும் மாறுதல் காணப்பட்டது. மிகவும் எளிய உணவே உண்பதால் அவனது மேனி ஒடிசலாகப் போய்விட்டது. இடது 
கையில் ஒரு குச்சியைப் பிடித்துக்கொண்டிருந்தான். வலதுகையில் உறியில் கட்டிய தூக்குபோல் ஒரு பாத்திரத்தைக் கட்டித் 
தொங்கவிட்டுப் பிடித்திருந்தான். இதே கோலத்தில்தான் அவன் அந்தப்பக்கம் நடந்துவந்தான்.

	திண்ணையில் உட்கார்ந்திருப்பவர்கள் அவனிடம் பேச விரும்பினார்கள். ஆனால் அவர்களுக்குக் குழப்பமாக இருந்தது. 
அவனை எப்படி அழைப்பது? முன்பு அழைத்தமாதிரியிலா? முன்பெல்லாம் அவனை “ஏ பாப்பாரப் பிள்ள” என்றுதான் அழைப்பார்கள். 
இன்று அவனுடைய மரியாதைக்குரிய தோற்றமே அவர்களை மயங்க வைத்தது. 
அந்த அந்தணன் தற்செயலாக அவர்கள் அமர்ந்திருக்கும் பக்கம் திரும்பிப் பார்த்தான். திண்ணையில் கால்மடக்கி உட்கார்ந்திருந்த 
தலைவன் சட்டென்று கால்களை நீட்டித் திண்ணையைவிட்டு இறங்கிநின்றான். தலைவனே கீழிறங்கிய பின்னர், ஏனையோரும் கீழே 
இறங்கி நின்றனர். புன்னகையுடன் அந்த அந்தணன் வீதியைக் கடந்து அவர்களை நோக்கி வந்தான்.

“என்ன எல்லாரும் நலமாக இருக்கிறீர்களா?” அவன் செந்தமிழில் வினவியது அவர்களுக்கு எப்படியோ இருந்தது.

“நல்லா இருக்கோம்’ப்பா” என்றார்கள் பொதுவாக. 

“என்ன இந்தப்பக்கம்?” என்று தலைவன் மெதுவாகக் கேட்டான்.

“ஆற்றங்கரைக்குச் செல்கிறேன். தியானம் செய்யவேண்டும்” என்றான் அந்தணன்.

“கையில ஒரு சுவடியும் இல்லையே” என்றான் தலைவன்.

	அந்தணன் ஒரு சிரிப்புச் சிரித்தான்.

“எல்லாம் மனப்பாடம்தான்” என்றான் அவன்.

“வெளியூர்ல படிக்கும்போதுகூட ஓலச்சுவடி இருக்காதா?”

“எப்பொழுதுமே எங்களுக்கு வாய்மொழிக் கல்விதான். எழுதிப்படிப்பது கிடையாது”

	அப்பொழுது நண்பர் கூட்டத்தில் ஒருவன் கேட்டான்.

“ஐயா, ஒரு சந்தேகம்”

“என்ன? நீங்கள் என்னை ஐயா என்று அழைப்பது என்னைச் சங்கடத்தில் ஆழ்த்துகிறது. எப்போதும்போல நான் உங்கள் 
பாப்பாரப்பிள்ளைதான். அப்படியே நீங்கள் என்னை அழைக்கலாம்”

“என்ன இருந்தாலும் நீ …, நீங்க அப்ப இருந்த மாதிரியா இப்ப இருக்கீங்க? வெளியூருக்குப் போயி ஒசந்த படிப்பெல்லாம் 
படிச்சிருக்கீங்க. நாங்க திண்ணப்பள்ளிக்கூடத்தக்கூடத் தாண்டாதவங்க. இவன் மட்டுந்தான் கொஞ்சம் கூடப் படிச்சிருக்கான்” 
என்று தலைவனைச் சுட்டிக்காட்டிச் சொன்னான் ஒருவன்.

“சரி, சந்தேகம் என்று ஏதோ சொன்னீர்களே?” என்று அந்தணன் நினைவூட்டினான்.

“ஒங்க கையில அது என்னங்க குச்சி. இந்த ஊருல ஒங்க சொந்தக்காரங்க யாரும் இத வச்சுக்கிறதில்லையே?”

“இதுவா, இது தண்டு. எங்கள் மதச் சம்பிரதாயம். சிவப்புப்பூ பூக்கும் பூவரசு மரத்துக் கிளையை ஒடித்துப் பட்டையை நீக்கி 
இதனைச் செய்வோம்”

“அது என்ன கையில ஒரு சொம்பு”:

	அந்தணன் சிரித்தான். 

“நோன்பில் இருக்கும் அந்தணர்கள் வைத்திருப்பார்கள். இதில் புனித நீர் உண்டு. மதச் சடங்குகளின் போது பயன்படுத்துவோம்”

	அப்போது பின்வரிசையிலிருந்த ஒருவன் முண்டிக்கொண்டு முன்னால் வந்தான்.

“எங்களுக்கு இவனப்பத்திக் கொஞ்சம் கவலை. நீங்க ஏதாவது செய்யமுடியுமா?” என்று தலைவனைச் சுட்டிக்காட்டிக் 
கூறினான் அவன். 

“சும்மாயிருடா அதிகப்பிரசங்கி” என்று அவனை அதட்டினான் தலைவன்.

“நீங்கள் சொல்லுங்கள். இவருக்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்றான் அந்தணன்.

“இவன் ஒரு பொண்ண விரும்புறான். கொஞ்சநாளா அந்தப் பொண்ண இவனால பாக்கமுடியல்ல. அந்தப் பொண்ண 
வீட்டவிட்டு வெளியில விடமாட்டேங்கிறாங்க”

“ஓ, இற்செறிப்பா?” என்றான் அந்தணன்.

“அதென்னமோ தெரியல்ல. வீட்டுக்குள்ளயே அந்தப் பொண்ண பூட்டி வச்சிருக்காங்க”

“அதத்தாண்டா அவரு சொன்னாரு” என்றான் தலைவன்.

	அந்தணன் கேட்டான், “அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?”

“நீ ..  நீங்க படிச்சிருக்கங்க’ல்ல, அந்த வாய்ப்பாட்டுப் பாடத்துல இவங்களச் சேத்துவைக்க ஏதாவது மந்திரம் இருக்கா?”

	அந்தணன் சிரித்துக்கொண்டான். தண்டைப் பிடித்த கையை மேலே உயர்த்திக் காட்டினான். பின்னர் இரு 
கைகளையும் எடுத்து மேல்நோக்கியவாறு கும்பிடுவதுபோலக் காண்பித்தான். தலைவன் தோளைத் தட்டிக்கொடுத்தான். 
பின்னர் திரும்பிச் சென்றுவிட்டான்.

	கேள்விகேட்டவன் சொன்னான், ”என்ன சொல்லிட்டுப்போனாரு அந்த பாப்பாருப் பிள்ள? புரிஞ்சமாதிரியும் 
இருக்கு, புரியாதமாதிரியும் இருக்கு”

பாடல் : குறுந்தொகை 156 ஆசிரியர் : பாண்டியன் ஏனாதிநெடுங்கண்ணன்  திணை : குறிஞ்சி

	பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
	செம்பூ முருக்கின் நல்நார் களைந்து
	தண்டொடு பிடித்த தாழ்கமண்டலத்துப்
	படிவ உண்டிப் பார்ப்பன மகனே!
	எழுதாக் கற்பின் நின் சொல்லுள்ளும்
	பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
	மருந்தும் உண்டோ? மயலோ இதுவே!

அருஞ்சொற்பொருள்

முருக்கு = புரச மரம் (palas Tree); நல்நார் = மேல் பட்டை; தண்டு = முக்கோல்; படைவ உண்டி = நோன்பு உணவு; 
எழுதாக் கற்பு = எழுதாமல் வாய்ப்பாடமாகக் கற்கும் கல்வி; மயல் = மயக்கம்

அடிநேர் உரை

	பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
	சிவந்த பூக்களைக்கொண்ட புரச மரத்தின் கொப்பின் பட்டையை உரிந்து
	தண்டாக்கி அதனுடன் பிடித்த தொங்கவிட்ட கமண்டலத்துடன்
	நோன்பு உணவு உண்ணும் பார்ப்பன மகனே!
	எழுதாமல் வாய்ப்பாடமாகக் கற்கும் நின் பாடங்களில்
	பிரிந்தவரைச் சேர்த்துவிக்கும் தன்மையுள்ள
	மருந்தும் இருக்கிறதோ? இது ஒரு மயக்க நிலையோ?
		
	Oh Brahmin! Oh Brahmin!
	Holding as staff the peeled off branch of the palasa tree with red flowers,
	And also a low hanging kamaNTalam,
	Oh Brahmin of austere food!
	In the words of your scripture which you learn not by writing (but by chanting),
	Is there a remedy for bringing together the separated?
	Or is it only a delusion?

Related posts