13. பாடல் 119 – சிறுவெள் அரவின்

சிறு வெள் அரவு


	ஊருக்கு வெளியில் உள்ள சிறு கோவிலுக்கு வெளியே உள்ள திண்ணையில் நாலைந்து இளவட்டங்கள் அமர்ந்திருந்தனர். 
கோவிலுக்கு வெளியே உள்ள அரசமரத்து நிழல் அந்தத் திண்ணைக்குப் போதுமான நிழலைத் தந்தது. 
அந்த இளவட்டங்கள் நடுவே அவன் அமர்ந்திருந்தான். ‘பரேர் எறுழ் திணிதோள்’ என்று இலக்கியங்கள் வருணிக்கும் பருத்த வலிமை 
மிக்க திண்மையான உருண்டு திரண்ட தோள்கள். நல்ல உயரம். கருகருவென்ற மீசை. ‘முடலை யாக்கை’ என்பது போல முறுக்கேறிய 
நல்ல வாட்டசாட்டமான உடம்பு. அவனே அந்தக் கூட்டத்தின் நாயகனாக இருந்தான். இருப்பினும் அன்று மற்ற அனைவரின் கேலிக்கும் 
ஆளாகியிருந்தவனும் அவனே. காரணம் அண்மையில் அவன் ஒரு பெண்ணின் கண்பார்வையில் மயங்கிவிட்டான். அதுவே அவர்களின் 
கேலிக்குக் காரணம்.

“இந்த ஊருல எத்தனையோ வயசுபொண்ணுகள் இருக்கு. யாருடா அது?” ஒருவன் தொடங்கினான்.

“எந்தக் காளையையும் எதித்து நிக்கும் இந்தக் காளை. இந்தக் காளையையே மடக்கிப்போட்டுச்சே ஒரு பசு. அதுதாண்டா ஆச்சரியம்!”

“இவன் ஒருத்தன். காளை என்ன இன்னொரு காளையைப் பாத்தா மயங்கும்? காளை’ன்னாலே ஏதோ ஒரு பசுகிட்ட மடங்கித்தானே 
நிக்கணும்”

“என்ன இருந்தாலும் ஒரு மொரட்டுக்காளையா இருந்தவன, அப்படியே மயங்கிப்போக வச்சுருச்சே ஒரு பூம்பிஞ்சு” என்றான் ஒருவன்.

“இங்க பாரு, நாம எல்லாம் இப்ப எளந்தாரிகதான். எதுவந்தாலும் தாங்குவோம்’னு எதுத்து நிக்குறவங்கதான். இப்ப ஒரு சின்ன 
பாம்புக்குட்டி நம்மளுக்குள்ள ஊருது’ன்னு வச்சுக்க. அம்புட்டுப்பேரும் பதறியடிச்சு ஓடிற மாட்டோமா?”

“பாம்புக்குட்டி என்னடா? ஒரு பாம்புராணி நொழஞ்சாலே பதறிப்போயிருவோம்’ல.”

“நாம என்னடா? ஒரு பெரிய காட்டு யானையே ஒரு சின்னப் பாம்பக் கண்டா மெரண்டுபோயி நிக்காதா? அதுபோலத்தான் அண்ணன் 
இம்புட்டுப்பெரிய ஆளு, ஒரு சின்னத்தாவணி வாசனையில கெறங்கிப்போயி நிக்கிறாரு”

	அங்கு எழும்பிய சிரிப்பலை ஓய வெகுநேரமாயிற்று.

“டே, சொல்லுடா, யார்டா அந்த அழகி ஒன்ன வளச்சுப்போட்டவ?” – ஒருவன் நேரிடையாகவே அவனிடன் கேட்டான்.

“ந்தா பாருங்கடா, கொஞ்சம் மரியாதயோட பேசுங்க. என்னா இருந்தாலும் அவ ஒருநாளக்கி ஒங்க எல்லாத்துக்கும் 
அண்ணியாகப்போகிறவ”

	அவன் பேச்சில் கொஞ்சம் வெப்பம் தெரிந்தது. ஆனால் அவனது பேச்சு மீண்டும் அவர்களிடையே அலையலையாகச் 
சிரிப்பை ஏற்படுத்தியது.

	சிரிப்பு ஓய்ந்ததும் அவனே தொடர்ந்தான்.

“இவன் சொன்னது நெசந்தான்டா. ஒரு வெள்ளப் பாம்போட சின்னக் குட்டி, முதுகில வரிவரியா இருக்குமே அது. சின்னக் குட்டினாக்கூட, 
அது வளஞ்சு வளஞ்சு ஊர்ந்து வரும்போது எதுக்க ஒரு காட்டுயானை வந்தா நெலகுலஞ்சுபோகாதா? அதுபோலத்தான். அவ சின்னவதான். 
ஆனாலும் அவ பார்வைக்கு முன்னால நான் மெரண்டுபோறேன்’டா. பேச்சே வரமாட்டேங்குது. அது குட்டிப்பாம்புனாக்கூட கூர்மையான 
பல்லு இருக்குமில்ல, அதப் போல இந்த நாண’ல்ல சிறிசா முளை விட்டிருக்குமே அந்த மாதிரி கூர்மையான சின்னப்பல்லுக்காரி அவ. 
பாம்புக்குட்டி ஒடம்புல வரிவரியா இருக்குமே அது போல வரிவரியா வளையல் போட்டிருப்பா கைநெறைய. அவதான்’டா என்னய 
நெலகுலயச் செஞ்சவ.

பாடல் : குறுந்தொகை 119  ஆசிரியர் : சத்திநாகனார்  திணை : குறிஞ்சி

	சிறுவெள் அரவின் அவ்வரிக் குருளை
	கான யானை அணங்கியாஅங்கு
	இளையள், முளைவாள் எயிற்றள்
	வளையுடைக் கையள் எம் அணங்கியோளே.

அருஞ்சொற்பொருள்

வெள் அரவு = நல்லபாம்பு; அவ்வரி = அழகிய கோடுகள்; குருளை = (பாம்புக்)குட்டி; அணங்கியாஅங்கு = நிலைகுலையவைத்தது போல; 
முளை = நாணல் முளை; வாள் எயிற்றள் = ஒளிபொருந்திய பற்களையுடையவள்; எம் அணங்கியோளே = என்னை நிலைகுலையச் 
செய்தவள்.

அடிநேர் உரை

	வெண்மையான பாம்பின், அழகிய வரிகளைக் கொண்ட சிறிய குட்டி
	காட்டு யானையை நிலைகுலையவைப்பது போல
	இளையவள், முளை போன்ற ஒளிமிக்க பற்களையுடையவள்
	வளையுடைக் கையினள் என்னை நிலைகுலையவைத்தவள்.
		
	The small beautifully striped young one of a white snake
	Would afflict a wild elephant;
	Likewise-
	A young lass, with sprout-like bright teeth,
	And hands with bangles – It was she who afflicted me.

	குறிப்பு:-

	பாம்புக்குட்டி தலைவிக்கு உவமை. கான யானை அவளது காதலனுக்கு உவமை. அந்தப் பாம்புக்குட்டி சிறியது – அவளும் 
இளையள். அந்தப்பாம்புக்குட்டிக்கும் சிறிய பல் உண்டு – அவளும் முளை வாள் எயிற்றள். அந்தப் பாம்புக்குட்டிக்கு அழகிய வரிகள் 
உண்டு – அவளுக்கும் கைநிறைய வளையல்கள் உண்டு. புலவர் சொல்லாமற் சொல்லும் இந்த ஒற்றுமையே பாடலின் தனிச்சிறப்பு. 
பாடலில் குட்டியின் பற்களைப்பற்றிய குறிப்பு இல்லை. எனினும் அதைப் போன்ற பற்கள், ஆனால் ஒளிமிக்கவை என்ற நோக்கில் 
முளை வாள் எயிற்றள் என்று புலவர் கூறியிருப்பது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது.

	ஒரு பெரிய காட்டுயானையை ஒரு சிறிய பாம்புக்குட்டி வருத்துவதைப் போல வீரமிக்க காளை போன்றவனை ஒரு சிறிய 
பெண் வருத்துகின்றாள் என்ற தலைவன் கூற்றே பாட்டின் மையக் கருத்து.

Related posts