2. பாடல் 18 – வேரல் வேலி

வேர்ப்பலா


பொழுதுசாயும் நேரம். முல்லைக்கு இருப்புக்கொள்ளவில்லை. இன்றைக்கு அவளின் ‘அவர்’ வருகிற நாள். 
மாலையில் பூப்பறிக்கப் போகிற சாக்கில் ஊருக்கு வெளியே உள்ள நந்தவனத்தில் முல்லை அவனைச் 
சந்திப்பதாக ஏற்பாடு. முல்லை காலையிலேயே பொன்னிக்குச் சொல்லிவிட்டிருந்தாள் - 
மாலையில் வீட்டுக்கு வரும்படி. பொன்னி வரச் சற்றுத் தாமதமானதால்தான் முல்லைக்கு வீட்டில் 
இருப்புக்கொள்ளவில்லை. குட்டிபோட்ட பூனைபோல் அங்குமிங்கும் நடமாடிக்கொண்டும் 
அடிக்கடி வாசலில் இறங்கி தெருக்கோடிவரை பார்த்துக்கொண்டுமிருந்தாள். வீட்டில் அவரவர் தத்தம் 
வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தபடியால் முல்லையின் தவிப்பை அவர்கள் கவனிக்கவில்லை. 
பொன்னி வந்துவிட்டாள். “ஏண்டீ இவ்வளவு நேரம்?” என்று தணிந்த குரலில் அவளைக் கடிந்தபடியே, 
வீட்டுக்குள் எட்டிப்பார்த்து, “அம்மா, பொன்னி வந்துட்டா, நானும் அவளும் நந்தவனம் வரைக்கும் 
போயிட்டு வந்துர்ரோம்” என்று உரக்கக் குரல்கொடுத்தாள் முல்லை. அவள் ஏற்கனவே தன் அம்மாவிடம் 
மாலையில் பொன்னியுடன் பூப்பறிக்க வெளியில் செல்வதாகச் சொல்லியிருந்தாள். எனவே, 
அம்மாவின் பதில்குரலுக்குக் காத்திராமல், பொன்னியின் கையைப் பிடித்து இழுத்தவண்ணம் 
வேகமாகத் தெருவுக்குள் இறங்கி நடக்கத்தொடங்கினாள் முல்லை.
“ஏண்டீ, எத்தன நாளய்க்குத்தான் இந்தப் பொழப்பு?” என்று முல்லையைப் பார்த்து வினவினாள் பொன்னி.
“எந்தப் பொழப்பு?”
“இல்லடீ, இப்படி ஒளிஞ்சுக்கிட்டும், மறய்ஞ்சுக்கிட்டும் அல்லாடுறதுதான் எத்தன நாளய்க்கு’ன்னேன்”
“இது அவருக்கில்லடி தெரியணும். நானும் அவருகிட்டக் கேட்டுப்பாத்தேன். மனுசன் அதப் பத்தி 
வாயத்தொறக்க மாட்டேங்குறாரு”
“இன்னிக்கி நான் கேக்குறேன்”
“என்னடீ அவருகிட்ட கேக்கப்போற?”
“இல்ல, இப்படியே போய்க்கிட்டு இருந்தா எப்படி’ன்னுதான் கேக்கப்போறேன். ஏதாவது ஒரு வழி சொல்லணும்’ல”
“என்ன வழி?”
“ஒண்ணு வீட்டுல சொல்லி மொறப்படி பொண்ணுகேட்டுவாங்க, இல்ல கூப்டுட்டுப்போயி 
கல்லாணத்தப் பண்ணிக்கங்க’ன்னு கறாரச் சொல்லப்போறேன்.
பொன்னி வெளிப்படையாகச் சொன்னதும் முல்லையின் கன்னங்கள் சற்றே சிவந்தன. 
தலையைக் கவிழ்ந்துகொண்டாள்.
“வெக்கத்தப்பாரு” என்று பொன்னி கேலிசெய்தாள்.
இதற்குள் நந்தவனமும் வந்துவிட்டது. மாலை இருட்டப்போகிற நேரம் என்பதால் அங்கு வேறு யாரும் இல்லை. 
அவன் மட்டும் ஒரு மரத்தடியில் கொடிகளுக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தான். அது அவர்களின் 
வழக்கமான இடம். தொலைவிலிருந்தே அவனைப் பார்த்துவிட்ட பொன்னி சற்று வேகமாக 
எட்டெடுத்துவைத்தாள் – அவனிடம் போய்ப்பேச. அவளது கையை எட்டிப்பிடித்த முல்லை, 
கெஞ்சும் குரலில் “கொஞ்ச நேரம் நான் மட்டும் போயிப் பேசிக்கிறேன்டீ” என்று மெல்லக் கேட்டாள். 
“சரி, நான் இங்க நிக்கிறேன். மொதல்ல நீ போயிப் பேசு, அப்பொறம் நான் வர்ரேன்” என்று சொல்லி 
நின்றுவிட்டாள் பொன்னி.
ஒரு நாழிகை நேரம் கழிந்த பின்னர், பொன்னி மெதுவாக அவர்கள் பேசிக்கொண்டிருந்த இடத்துக்குச் சென்றாள். 
மிக நெருக்கமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்த முல்லை பொன்னியைப் பார்த்ததும் சற்று விலகி அமர்ந்தாள்.
அவனுக்கு இது புரியவில்லை. இதுவரை இப்படி நடந்ததில்லை. அவர்கள் பேசிப் பிரியும்வரை பொன்னி 
தன் இடத்திலேயே காத்துக்கொண்டிருப்பதுதான் வழக்கம். எனவே இன்று பொன்னி பக்கத்தில் வந்ததும் 
சற்றுக் குழப்பத்துடன் அவளை ஏறிட்டுப் பார்த்தான் அவன். 
“என்னாண்ணே நல்லாயிருக்கீய்ங்களா?” என்று நலம் விசாரித்தாள் பொன்னி.
“உம், உம், நல்லா, நல்லாத்தேன் இருக்கேன்” என்று அவன் சற்றுத் தடுமாறினான். அவன் இதுவரை 
பொன்னியிடம் நேரிடையாகப் பேசியதில்லை.
அவர்கள் இருந்தது ஒரு பெரிய பலா மரத்தின் அடியில். அதன் அடிமரம் பருத்து, இருவர் சாய்ந்து அமர 
வசதியாக இருக்கும்.
சிறிது நேர அமைதிக்குப்பின் பொன்னிதான் பேச ஆரம்பித்தாள்.
“அண்ணே, வேர்ப்பலா’ன்னா என்ன’ண்ணே?”
 “அது வேர்ல காய்க்கிற பலா இல்ல. மரத்துத் தூர்’ல காய்ச்சுத் தரையில கிடக்கும். அதான் வேர்ப்பலா. 
ரொம்ப ருசியா இருக்கும்’னு சொல்லுவாங்க. எங்க தோட்டத்துலகூடக் காய்ச்சிருக்கு”
“அது பெரிசானப்பொறகு வேற யாரும் பறிச்சுக்கிட்டுப் போயிற மாட்டாங்களா?”
“அப்படியெல்லாம் நடக்காது, அவங்கவங்க தோட்டத்துல இருக்குறதத்தான் அவங்கவங்க பிடுங்குவாங்க”
“வேற ஏதாவது காட்டுப்பன்னி-இன்னி வந்து கடிச்சுக் கொதறிப்புடாதா?”
“அந்த வேர்ப்பலா மரத்தச் சுத்தியும் பிரம்பு மூங்கில்’ல வேலி செஞ்சு அடச்சுருப்போம்.”
“அங்க ஒங்களுக்கு வேர்ப்பலா சுளுவாக் கெடய்க்குற மாதிரி, இங்க ஒங்களுக்கு இந்த வேர்ப்பலா ரொம்பச் 
சுளுவாக் கெடச்சிருக்கு” என்று சொல்லியவண்ணம் பார்வையை முல்லை பக்கம் திருப்பிக் காண்பித்தாள்.
“அங்க பெரம்பு மூங்கில்’ல வேலி அடைக்கிற மாதிரி, இங்க இவளுக்கு எப்ப வேலிகட்டப் போறீங்க? 
காலா காலத்துல எல்லாம் நடக்கவேணாமா?”
அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பொன்னியே தொடர்ந்தாள்.
“இங்க இந்தக் கொம்புல காய்ச்சிருக்கு பாத்தீகல்ல இந்தப் பலாக்காயி. இது இவ்வளவு பெரிசா இருந்தாலும் 
இது தொங்குறது ஒரு சின்னக் காம்புலதான். காயி பழமாகிப் பழமும் பெருத்துருச்சுன்னா, காம்பு தாங்காது. 
‘டொப்புனு விட்டுரும். அதுபோலத்தான். இவ ஒங்க மேல வச்சுருக்கிற பாசம் பலாப்பழம் மாதிரி – 
ரொம்ம்ம்பப் பெரிசு. ஆனா இவ உசுரு ரொம்ப ரொம்பச் சிறிசு. சட்டுப்புட்டுன்னு கலியாணத்த முடிக்காம 
நீங்க இப்படியே தாக்காட்டிட்டே போனா இந்த உசுரு ரொம்ப நாளக்கித் தாங்காது, எப்ப ‘டொப்’புனு 
போகுமோ இவ உசுரு யாருக்கு அது தெரியும்? அதனால, காலா காலத்துல 
இவளக் கூப்பிட்டுக்கிற வழியப் பாருங்க”

பாடல் : குறுந்தொகை 18 -  ஆசிரியர் : கபிலர் – திணை : குறிஞ்சி

வேரல் வேலி வேர் கோள் பலவின்
சாரல் நாட ! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே! சாரல்
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கி ஆங்கு, இவள்
உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே

அருஞ்சொற்பொருள்

வேரல் = கெட்டி மூங்கில்; சாரல் = மலைச் சரிவு; செவ்வியை ஆகு = ஏற்ற நேரத்தில் தகுந்ததைச் செய்; 
சிறு கோட்டு = சிறிய கிளையில்; தூங்கியாங்கு = தொங்குவதைப் போல்; தவச் சிறிது = மிகவும் சிறியது. 
காமம் = காதல்.

அடிநேர் உரை

கெட்டி மூங்கினால் செய்த வேலியையுடைய வேரில் கொத்தாகப் பழுத்திருக்கும் பலாமரங்கள் (நிறைந்த)
மலைச் சரிவைச் சேர்ந்தவனே! தக்க பருவத்தில் திருமணத்தைச் செய்வாக:
யார் அதை(என் தலைவியின் நிலையை) அறிந்திருப்பார்? (இங்கு) மலைச் சரிவில்
சிறிய கொம்பில் பெரிய பழம் தொங்குவதைப் போன்று, இவளின்
உயிர் மிகவும் சிறியது, அவளின் காதலோ பெரியது.

Oh! My man of the declining hill !
Where the jackfruits fruition near the root fenced by stick bamboos;
Be prompt in doing things;
Who will ever know that?
Like the big jackfruits sling on thin branches in the mountain slopes,
Her spirit is littlish, but her love is huge.

Related posts