பாடல் 9. பாலைத் திணை பாடியவர் – கல்லாடனார்

துறை - வினை முற்றி மீண்ட, தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது

  மரபு மூலம் - துனை பரி துரக்கும் துஞ்சாச் செலவு

	கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறு புழுகின்
	வில்லோர் தூணி வீங்கப் பெய்த
	வப்புநுனை யேய்ப்ப வரும்பிய விருப்பைச்
	செப்பட ரன்ன செங்குழை யகந்தோ
5	றிழுதி னன்ன தீம்புழற் றுய்வா
	யுழுதுகாண் டுளைய வாகி யார்கழலற்
	பாலி வானிற் காலொடு பாறித்
	துப்பி னன்ன செங்கோட் டியவி
	னெய்த்தோர் மீமிசை நிணத்திற் பரிக்கு
10	மத்த நண்ணிய வங்குடிச் சீறூர்க்
	கொடுநுண் ணோதி மகளி ரோக்கிய
	தொடிமா ணுலக்கைத் தூண்டுரற் பாணி
	நெடுமால் வரைய குடிஞையோ டிரட்டுங்
	குன்றுபின் னொழியப் போகி யுரந்துரந்து
15	ஞாயிறு படினு மூர்சேய்த் தெனாது
	துனைபரி துரக்குந் துஞ்சாச் செலவி
	னெம்மினும் விரைந்துவல் லெய்திப் பண்மா
	ணோங்கிய நல்லி லொருசிறை நிலைஇப்
	பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக்
20	கன்றுபுகு மாலை நின்றோ ளெய்திக்
	கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப்
	பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித்
	தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ
	நாணொடு மிடைந்த கற்பின் வாணுத
25	லந்தீங் கிளவிக் குறுமகள்
	மென்றோள் பெறநசைஇச் சென்றவென் நெஞ்சே

 சொற்பிரிப்பு மூலம்

	கொல் வினைப் பொலிந்த கூர்ம் குறும் புழுகின்
	வில்லோர் தூணி வீங்கப் பெய்த
	அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பைச்
	செப்பு அடர் அன்ன செங்குழை அகம்தோறும்
5	இழுதின் அன்ன தீம் புழல் துய் வாய்
	உழுதுகாண் துளைய ஆகி ஆர் கழல்பு
	ஆலி வானின் காலொடு பாறித்
	துப்பின் அன்ன செங்கோட்டு இயவில்
	நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும்
10	அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்க்
	கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய
	தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல் பாணி
	நெடுமால் வரைய குடிஞையோடு  இரட்டும்
	குன்று பின் ஒழியப் போகி உரந்துரந்து
15	ஞாயிறு படினும் ஊர் சேய்த்து எனாது
	துனை பரி துரக்கும் துஞ்சாச் செலவின்
	எம்மினும் விரைந்து வல் எய்திப் பல் மாண்
	ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇப்
	பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக்
20	கன்று புகு மாலை நின்றோள் எய்திக்
	கை கவியாச் சென்று கண் புதையாக் குறுகிப்
	பிடிக்கை அன்ன பின்னகம் தீண்டித்
	தொடிக் கை தைவரத் தோய்ந்தன்றுகொல்லோ
	நாணொடு மிடைந்த கற்பின் வாள் நுதல்
25	அம் தீம் கிளவிக் குறுமகள்
	மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே

அடிநேர் உரை 
	
	கொல்லும் தொழிலில் சிறந்த, கூரிய, குறிய, புழுகு எனப் பெயர்கொண்ட
	வில்வீரர் அம்புக்கூட்டில் நிறைய வைத்திருக்கும்
	அம்பின் குப்பி நுனையைப் போன்று அரும்பிய இலுப்பையின்
	செப்புத் தகட்டைப் போன்ற சிவந்த தளிர்களின் கீழேயெல்லாம்
5	வெண்ணெய் போன்ற, இனிய, உள்துளை உள்ள மெல்லிய வாயை உடைய பூக்கள்,
	காம்பை நீக்கிக் காணத்தக்க துளையினை உடையவாகி, புல்லிவட்டம் கழன்று,
	ஆலங்கட்டி போல காற்றால் சிதறுண்டு
	பவளம் போன்ற சிவந்த மேட்டுநில வழிகளில்
	குருதி மீது உள்ள கொழுப்பைப் போல் பரந்துகிடக்கும்,
10	காட்டுப்பாதை அருகில் செல்லும் அழகிய குடிகளை உடைய சிற்றூரில்,
	வளைந்த நுண்ணிய கூந்தலை உடைய மகளிர் உயர்த்திய
	பூணால் சிறந்த உலக்கையால் குற்றும் உரலிலிருந்து எழும் தாளஒலி
	நெடிய பெரிய மலையில் உள்ள ஆந்தையின் குரலோடு மாறிமாறி ஒலிக்கும்
	குன்றுகள் பின்னிட முன்னே செல்ல, மனஉறுதியுடன் முனைப்புக்கொண்டு,
15	ஞாயிறு மறைந்தாலும், ஊர் வெகுதொலைவில் உள்ளது என்று சொல்லாமல்,
	வேகமாக ஓடும் குதிரைகளை மேலும் முடுக்கிவிட்டுச் சோர்வின்றிப் பயணம்செய்யும் 
	எம்மைக் காட்டிலும் விரைந்து சீக்கிரமாகச் சென்று, பல கட்டுக்களால் சிறப்புற
	உயர்ந்த நல்ல இல்லத்தில் ஒரு பக்கமாக நிலைகொண்டு,
	அருகில் உள்ள பல்லி ஒலிக்கும்தோறும் அதனை வாழ்த்தி,
20	பசுவின் கன்றுகள் நுழையும் மாலையில், நின்றுகொண்டிருப்பவளை அடைந்து,
	கைகளை வளைத்தவாறு சென்று, கண்களைப் பொத்தியவாறு மிகநெருங்கி,
	பெண்யானையின் துதிக்கை போன்ற பின்னிய கூந்தலைத் தீண்டி,
	தொடி அணிந்த கையைத் தழுவி வருடிவிட்டவாறு அணைத்தது அன்றோ!
	நாணத்தோடு கலந்த கற்பினையும், ஒளிபொருந்திய நெற்றியினையும்
25	அழகிய இனிய பேச்சையும் உடைய இளையோளின்
	மென்மையான தோள்களை அடைவதற்கு விரும்பிச் சென்ற என் நெஞ்சம்.

அருஞ்சொற்கள்:

புழுகு = அம்பின் தலைப்பகுதியின் பெயர்; தூணி = அம்புக்கூடு, quiver; இருப்பை = இலுப்பை, south Indian mahua; செப்பு = செம்பு; 
அடர் = தகடு; குழை = தளிர்; இழுது = வெண்ணெய்ப் பதம், grease; புழல் = உள்துளை உள்ள பொருள் tube; துய் = பஞ்சு போல் 
மென்மையான பொருள்; ஆர் = பூவின் புல்லி வட்டம், calyx; ஆலி = ஆலங்கட்டி; கால் = காற்று; பாறி = சிதறி; துப்பு = பவளம்; 
கோட்டு = மேட்டு நிலத்து; இயவு = பாலைநிலப் பாதை; நெய்த்தோர் = குருதி; நிணம் = கொழுப்பு; பரிக்கும் = பரவிக்கிடக்கும்; 
அத்தம் = கடினமான பாதை; நண்ணிய = அருகில் செல்கின்ற; கொடு = வளைந்த; ஓதி = கூந்தல்; ஓக்கிய = உயர்த்திய; 
தொடி = தோள்வளை; பாணி = தாள இசை; வரை = மலை; குடிஞை = ஆந்தை; இரட்டும் = மாறி மாறி ஒலிக்கும்; உரம் = வலிமை; 
துரந்து = முனைப்புக்கொண்டு; படினும் = மறைந்தாலும்; துனை = வேகமாகச் செல்; பரி = குதிரை; துரக்கும் = முடுக்கிவிடும்; 
துஞ்சா = சோர்வடையாத; செலவின் = பயணத்தின்; வல் = சீக்கிரமாக; சிறை = ஓரம், பக்கம்; நிலைஇ = நீடித்து நின்று, ஒரே இடத்தில் இருந்து; 
பாங்கர் = அண்மை; படு = ஒலியெழுப்பு; கவியா = வளைத்தவாறு; பிடிக்கை (பிடி + கை) = பெண்யானையின் துதிக்கை; 
பின்னகம் = சடை, பின்னிய மயிர்; தொடி = தோளில் அணியும் வளை; தைவர = தடவிக்கொடுத்து; தோய்ந்தன்று = தழுவியது; 
மிடைந்த = ஒன்று கலந்த, பின்னிய; கிளவி = சொல், பேச்சு; குறுமகள் = இளையவள்; நசைஇ = விரும்பி; 

பாடலின் பின்புலமும் பொருள் முடிபும்

	தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் தன் பணியை முடித்துத் திரும்புகிறான். அவனுடைய தேரை ஒரு பாகன் ஓட்டிவருகிறான். 
தன்னைச் சுற்றியுள்ள இயற்கை அழகைக் கண்டு மகிழ்ந்தவாறும், பலவித ஓசைகளைக் கேட்டுச் சுவைத்தவாறும் தலைவன் தன் இருக்கையில்
சாய்ந்தவண்ணம் அமர்ந்திருக்கிறான். பொழுது சாயும் நேரமும் வந்துவிட்டது. எப்படியும் ஊர்போய்ச் சேரவேண்டும் என்ற மன உறுதியுடன் 
விரைந்து செல்லுமாறு தலைவன் பாகனைப் பணிக்கிறான். இந்நேரம் தலைவி என்ன செய்துகொண்டிருப்பாள் எனக் கற்பனைசெய்து பார்க்கிறான். 
காற்றாய்க் கடுகிச் செல்லும் குதிரைகளைக் காட்டிலும் வேகமாக அவனது சிந்தனைக் குதிரை சிறகடித்துப் பறக்கிறது. ஏக்கத்துடன் காத்திருக்கும் 
தலைவியின் பின்பக்கமாகச் சென்று அவளை மெல்ல அணைத்து மகிழ்கிறது அவன் நெஞ்சம்.

புலவரின் சொல்நயம்

	சரியான சொல்லைச் சரியான இடத்தில் பயன்படுத்துவதில் சங்கப் புலவர்களுக்கு இணையாக எவரையும் கூறுவது கடினம். 
இதோ இப்பாடலினின்றும் சில மாதிரிகளைப் பார்ப்போம்.

1. விரைந்து வல் எய்தி

	இரண்டுபேர் ஓர் ஓட்டப் பந்தயத்தில் ஓடுகிறார்கள். இருவருமே எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடுகிறார்கள். 
அதில் ஒருவர் இறுதியில் மிகவிரைவாக ஓடி முதலில் வந்துவிடுகிறார். மிகவும் வேகமாகச் செல்வதை வல் விரைந்து என இலக்கியங்கள் 
கூறுகின்றன. வல் என்பதற்கு மிகுந்த, கடுமையான என்ற பொருள் உண்டு. அடுத்து உள்ள எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள். 

	மெல்லிய இனிய கூறலின் வல் விரைந்து
	உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து - நற் 17/7,8
	கார் தொடங்கின்றே காலை வல் விரைந்து
	செல்க பாக நின்தேரே - நற் 242/5,6

	வினை இவண் முடித்தனம் ஆயின் வல் விரைந்து
	எழு இனி வாழிய நெஞ்சே - அகம் 47/2,3

	உது காண் வந்தன்று பொழுதே வல் விரைந்து
	செல்க பாக நின் நல்வினை நெடுந்தேர் - அகம் 204/8,9

	வல் விரைந்து ஊர்-மதி நல் வலம் பெறுந - அகம் 234/9

	புல் ஆர் புரவி வல் விரைந்து பூட்டி - அகம் 244/12

	குழல் வாய் வைத்தனர் கோவலர் வல் விரைந்து

	இளையர் ஏகுவனர் பரிய - அகம் 354/5,6

	சில் வளை விறலியும் யானும் வல் விரைந்து
	தொழுதனம் அல்லமோ பலவே - புறம் 60/5,6

	பல் புகழ் நுவலுநர் கூற வல் விரைந்து
	உள்ளம் துரப்ப வந்தனன் - புறம் 160/15

	ஒழிக தில் அத்தை நின் மறனே வல் விரைந்து
	எழுமதி வாழ்க நின் உள்ளம் - புறம் 213/19,20

	ஆனால், இங்கு தேரில் செல்லும் தலைன் தன்னைக் காட்டிலும் வேகமாகச் செல்லும் தன் நெஞ்சத்தின் எண்ணங்களைப் பார்த்து

	துனை பரி துரக்கும் துஞ்சாச் செலவின்
	எம்மினும் விரைந்து வல் எய்தி  

	என்று சொல்கிறான். இதற்கு உரைகாரர்கள் மிக விரைவாகச் சென்று என்றுதான் பொருள் கூறுகிறார்கள். 
சிலரோ, விரைந்து வல் எய்தி – வல் விரைந்து என மாற்றுக என்றும் குறிப்பிடுகின்றனர். அப்படியெனில், புலவர் இதை எம்மினும் வல் விரைந்து 
எய்தி என்றே கூறியிருந்திருக்கலாமே. இங்கே விரைந்து என்பதை fast என்றும், வல் என்பதை quick, swift என்றும் பொருள்கொள்ளலாம். 
	இதைப் போன்று மலைபடுகடாம்-இல்,

	புனல் படு பூசலின் விரைந்து வல் எய்தி - மலை 281

	என்ற அடிக்கு உரை கூறுங்கால், ஓடி, கடுக வந்துசேர்ந்து என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார். 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், 
முதலில் சற்றே பின்தங்கி இருப்பவர் பின்னர், அனைவரையும் முந்திக்கொண்டு (overtake) வேறு யாரேனும் இவரை முந்தும் முன்னர் 
சீக்கிரமாய் முடிவுக் கோட்டை எட்டுகிற காட்சியை மனதிற்குள் கொண்டுவாருங்கள். இதுதான் விரைந்து வல் எய்துதல். விரைவாகச் செல்லும் 
தேரில் அமர்ந்திருக்கும் தலைவனின் நெஞ்சம் புறப்பட்டு, முதலில் தேரை முந்துகிறது. பின்னர் ‘சட்’டென்று சென்று தலைவியை அடைகிறது. 
இந்தப் பரபரப்பு முடிவு ‘வல் விரைந்து எய்தி’ என்று எடுத்துக்கொள்ளும்போது கிட்டாதுதானே! எனவே, புலவர் வழக்கம் போல ‘வல் விரைந்து’ 
என்னாமல், வேண்டுமென்றே வழக்கமான மரபை மீறி, விரைந்து வல் எய்தி என்று கூறியிருக்கும் நயம் உற்றுப்பார்த்தால்தான் தெரியும்.

2. ஆலி வானின் காலொடு பாறி

	இதற்கு உரைகாரர்கள், ‘வானிலிருந்து விழும் பனிக்கட்டி போலக் காற்றால் சிதறுண்டு’ என்றே பொருள்கொள்கின்றனர். 
எனவே இங்கு –இன் என்பது உவம உருபு ஆகிறது. ஆலி வானின் என்பதை வானின் ஆலி என மாற்றுக என்றும் கூறுவர். இங்கு வானின் ஆலி 
என்பது வானத்தின் ஆலி என்றே பொருள்தரும். அப்போது உவம உருபு இல்லாமல் போய்விடுகிறதே! இப்போது இதன் நேர்ப்பொருள் என்னவென்று 
பார்ப்போம். வானத்திலிருந்து ஆலங்கட்டிகள் விழுகின்றன. அப்போது பலத்த காற்று அடிக்கிறது. அதனால், நேர்க்குத்தாய்க் கீழே விழும் 
ஆலங்கட்டிகள் சிதறடிக்கப்படுகின்றன. அப்போது அந்த வானம் எவ்வாறு காட்சியளிக்கும்? நாற்புறமும் தெறித்துப் பறக்கும் ஆலங்கட்டிகள் 
நிறைந்திருக்கும் அல்லவா? இங்கே சிதறுண்டு விழுவது இலுப்பைப் பூக்கள். இலுப்பை எனப்படும் மரம் Indian Butter tree என்றும் 
south Indian Mahua (Madhuca longifolia var. longifolia) என்றும் அழைக்கப்படும். இதன் பூவைப் பற்றிக் கூறும்போது தாவரவியலார், 
It is at night that the tree blooms and at dawn each short-lived flower falls to the ground என்பர். எனவே இதன் பூக்கள் காம்புடன் 
இறுகப்பெற்ற பிடிமானம் கொண்டவை அல்ல. மேலும் இவை கொத்துக்கொத்தாய்ப் பூக்கக்கூடியவை (பார்க்க – படங்கள்).

			

	உறுதியற்ற பிடிமானம் கொண்ட இந்தப் பூங்கொத்துகள் மீது வேகமாகக் காற்றடித்தால் என்ன ஆகும்? இவை வானில் தெறித்துப் பறக்கும் 
அல்லவா? இதனைத் தெறித்துப் பறக்கும் ஆலங்கட்டிகளைக் கொண்ட வானத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார் புலவர். எனவே, ஆலி வானின் காலொடு 
பாறி என்று கூறுகிறார் எனலாம். இதைப் பற்றிய படவிளக்கத்தை, உவமைகள் என்ற அடுத்த பகுதியில் காணலாம்.

3. உரம் துரந்து, ஞாயிறு படினும் ஊர் சேய்த்து என்னாது, துனை பரி துரக்கும் 

	இதனை, ஞாயிறு படினும் ஊர் சேய்த்து என்னாது, துனை பரி உரம் துரந்து துரக்கும் துஞ்சாச் செலவின் என மாற்றி எழுதி உரை காண்பர். 
நச்சினார்க்கினியர் பாடலுக்கு ஆற்றொழுக்காகப் பொருள் கொள்ளாது, இவ்வாறு மாற்றி மாற்றி அமைத்துப் பொருள் காண்பது வழக்கம். 
அதனைக் குறை சொல்பவர்களே இங்கு இவ்வாறு மாற்றி மாற்றி அமைத்துப் பொருள் காண்பது வியப்பாக இருக்கிறது. துர என்பதற்கு செலுத்து, 
எய் என்ற பொருள் இருந்தாலும், துனை பரி துரக்கும் என்பதிலேயே துரக்கும் என்பதற்குச் செலுத்தும் என்ற பொருள் வந்துவிடுகிறதே. எனவே 
துனை பரி உரம் துரந்து துரக்கும் என்பது தேவையற்றதன்றோ? ஒருவர் தானாக நினைவு இழப்பது மயங்குதல். இன்னொருவரை நினைவு இழக்கச் 
செய்வது ,மயக்குதல். மேலும், ஊங்கு, ஊக்கு – தேங்கு, தேக்கு என்பதைப் போல துரந்து துரத்து என்பது அமையும் எனலாம். வேறொன்றை 
முடுக்கிவிடுவது துரத்துதல். கண்மண் தெரியாமல் கார் ஓட்டிச் செல்பவரை, “அடிச்சுத் துரத்திக்கிட்டுப் போறான்” என்பர். அது வாகனத்தை வேகமாக 
முடுக்கிவிடுதல். ஒருவர் மனம் தளரும்போது தன்னைத் தானே முடுக்கிக்கொண்டால் அது துரந்துதல் ஆகாதோ? ஞாயிறு மறையப்போகிறது, 
ஊரோ இன்னும் வெகு தொலைவில் உள்ளது என்று மனம் சோர்ந்து போகாமல், தன் மனவுறுதியைத் தானே முடுக்கிவிட்டு என்று பொருள்கொள்வது 
சிறப்பாக அமையுமன்றோ? புலவர் தான் அமைத்திருக்கும் சொல் அமைப்பிலேயே சிறந்த பொருள் வைத்திருப்பது அவரின் சிறந்த சொல்நயத்திற்கு 
மற்றுமொரு சான்றாகிறது. 

4. பல் மாண், ஓங்கிய நல் இல் ஒருசிறை நிலைஇப் பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி 

	தலைவன் வந்துவிடுவான் எனத் தலைவி காத்திருக்கிறாள். ஞாயிறு மறையும் நேரமும் வந்துவிட்டது. தலைவன் இன்னும் வரவில்லை. 
வீட்டிற்குள் பல கட்டுக்கள் அமைந்து உயர்ந்து நிற்கும் வீடு அது. அவள் வீட்டில் அங்குமிங்கும் நடமாடித் திரியாமல், ஒரு ஓரமாக நிலையாக 
நின்றுகொண்டிருக்கிறாள். சிறை என்பது பக்கம், ஓரம் எனப்படும். ஒருவேளை இது ஜன்னல் ஓரமாக இருக்கலாம். அப்பொழுதுதானே தலைவன் வரும் 
ஓசையை உடனே கேட்கமுடியும். நிலைஇ என்பது ஓரிடத்தில் அசையாமல் நெடுநேரம் (ஆணி அடித்தால் போல்) நின்றுகொண்டிருத்தல். அப்போது 
பல்லி ஒலி எழுப்புகிறது இதைக் கௌளி சொல்லுதல் என்பர். மதில் ஓரத்தில் நின்றுகொண்டிருக்கும் தலைவியின் வெகு அருகில் மதில் உச்சியில் 
பல்லி இருந்திருக்கிறது. எனவே அது எழுப்பும் ஒலி சத்தமாகக் கேட்கும் அல்லவா? எங்கேயோ இருக்கிற பல்லி ஒலித்தால் அது யாருக்காகவோ 
ஒலிக்கிறது எனலாம். அருகிலேயே இருக்கும் பல்லி ஒலித்தால்? அது நிச்சயம் நமக்காகத்தான். இதை உணர்த்தவே புலவர் பாங்கர்ப் பல்லி என்கிறார். 
பாங்கர் என்பது பக்கம், அண்மை என்ற பொருள் தரும். ஒரு சிறை, நிலைஇ, பாங்கர் என்ற சொற்கள் எத்துணை நயத்துடன் அமைக்கப்பட்டிருக்கின்றன 
பார்த்தீர்களா?

உவமைகள் galore

	எடுத்த எடுப்பில் ஓர் அழகிய உவமையோடு பாடலைத் தொடங்கும் புலவர் கல்லாடனார், அடுத்து அடுக்கடுக்காக உவமைகளை 
அடுக்கிக்கொண்டே போகிறார். உவமைக்குள் உவமை வைக்கும் அழகையும் செய்கிறார்.

	இலுப்பை அரும்புகளைப் பற்றியதுதான் முதல் உவமை. மேலே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு படங்களையும் பாருங்கள். 
இலுப்பை அரும்புகள் அம்புமுனை போன்று இருக்கின்றனவாம். மிகச் சரியான உவமைதான். ஆனால் அவை கொத்தாக அரும்பி, விசிறி வாழை போல் 
விரிந்து அமைந்திருக்கும் அழகையும் அவர் தொடர்ந்து உவமிக்கிறார். அம்பறாத்தூணியில் வைக்கப்பட்டுள்ள கொத்தான அம்புகளின் முனையைப் போல 
அந்த அரும்புகள் இருக்கின்றனவாம். தூணியில் ஒருசில அம்புகளே இருந்தால் அவை மொத்தமாக ஒரே கட்டாகக் கிடக்கும். அப்படி இல்லாமல், 
தூணியே கொள்ளாத அளவுக்குத் திணித்துத் திணித்து வைக்கப்பட்ட அம்புகள், கட்டாக இல்லாமல், கொத்தாக விசிறி வாழை போல விரிந்து இருக்கும் 
அல்லவா. இதைத்தான் வில்லோர் தூணி வீங்கப் பெய்த அப்புநுனை என்கிறார் புலவர்.

			

	இந்த இலுப்பை அரும்புகள் செம்புத் தகடு போன்ற சிவந்த தளிர்களிடையே இருக்கும் என்பதை, செப்பு அடர் அன்ன செங்குழை அகந்தோறு 
என்கிறார் புலவர். இந்த இலுப்பை அரும்பை அவர் எவ்வளவு கூர்ந்து நோக்கியிருக்கிறார் பாருங்கள். இரண்டாவது படத்தில் அரும்புகளுக்குக் 
கீழே இருக்கும் இலைகளின் நிறத்தைக் கவனியுங்கள்.

			

	இந்த அரும்புகள் விரியும்போது அதன் வாய்ப்பகுதியில் ஒரு நீண்ட குழல் அமைப்பு வெளிவருகிறது. புழல் என்பது நீண்ட குழல். 
இதைத் தொட்டால் மிக மென்மையாக இருக்கும்போலும். எனவேதான் இதை இழுதைப் போன்ற தீம்புழல் என்கிறார் புலவர். இழுது என்பது 
வெண்ணெய், உறைந்த நெய், கொழுப்பு ஆகியவற்றைப் போன்ற ஒரு பொருள். இந்தப் புழல், பூவின் அல்லிவட்டத்தைத் துளைத்துக்கொண்டு 
வெளியே வருவதால், இதனை நீக்கினால் அல்லிவட்டத்தில்(corolla) ஒரு துளையைக் காணலாம். இதையே தான் புலவர் உழுதுகாண் துளைய ஆகி 
என்கிறார். வேகமாகக் காற்று அடிக்கும்போது இந்தப் புழல் கழன்று விழுகிறது. பூவின் வெளி உறையான புல்லிவட்டமும் கழன்று விழுகிறது. 
இதையே ஆர் கழல்பு என்கிறார் புலவர். ஆர் என்பது புல்லிவட்டம்(calyx). எனவே, ஓங்கிக் காற்றடிக்க, இந்தப் புழலும், புல்லிவட்டமும் கழன்று விழ, 
உள்ளிருக்கும் உருண்டையான, வெண்மையான அல்லிவட்டம் தெறித்துப் பறப்பதால், வானம் ஆலங்கட்டிகள் தெறித்த வானம் போல (ஆலி வானின் 
காலொடு பாறி) காட்சியளிப்பதாகப் புலவர் கூறும் உவமையின் சிறப்பையும் அவரின் நுண்மையான நோக்கினையும் முழுதும் புரிந்துகொண்டால் 
எத்துணை இனிமை!

       (மருந்துக்காக உரித்தெடுத்த இலுப்பைப் பூக்கள் முதல் படத்தில் காணப்படுகின்றன. அவற்றில் மல்லாந்து கிடப்பவை துளையுடன் இருப்பது 
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.)

			

	தெறித்துச் சிதறிய இலுப்பை மலர்கள், சிவந்த பவளத்தைப் போன்ற செம்மண் நிலப் பாதையில் பரந்து விழுகின்றன. அது மலைசார்ந்த 
வறண்ட நிலம். எனவே அப் பகுதி மேட்டு நிலப்பகுதி என்று சொல்வதற்கும் புலவர் மறக்கவில்லை. துப்பின் அன்ன செங்கோட்டு இயவு என்கிறார். 
துப்பு என்பது செம்பவளம். கோடு என்பது உயரமான பகுதி. 

			

	சிவந்த மண்மீது வெள்ளையான இலுப்பை மலர்கள் விழுந்துகிடந்தால் எப்படி இருக்கும்? பரந்து கிடக்கும் குருதியின் மீது 
கொழுப்புக்கட்டிகள் மிதந்து கிடப்பதைப் போல் இருக்கிறதாம். நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும் என்கிறார் புலவர். நெய்த்தோர் என்பது குருதி. 
இந்த அழகிய தமிழ்ச் சொல் நெத்துரு என்று இன்றும் கன்னடத்தில் இதே பொருளில் வழங்கிவருகிறது. நிணம் என்பது கொழுப்பு. பரி என்பது 
பரந்துகிடத்தலைக் குறிக்கும்.

			

	இந்தப் பத்து அடிகளில் ஆறு உவமைகளைப் பயன்படுத்தியிருக்கிறார் புலவர். உவமைகள் பொருளை விளக்கப் பயன்பட்டாலும், 
அதன் ஒவ்வொரு பகுதியையும் உன்னிப்பாய்க் கவனித்து விளக்கும் புலவரின் திறம் வியந்து போற்றத்தக்கதன்றோ?

சொல்லோவியங்கள்

	குன்றுகள் வழியாகச் செல்லும் ஒரு நெடும்பாதையில் தலைவனின் தேர் விரைந்துகொண்டிருக்கிறது. விரைந்து ஓடும் குதிரைகளை 
விரட்டிக்கொண்டு போகிறான் பாகன். தலைவனோ சாய்ந்து அமர்ந்த வண்ணம் சுற்றுப்புற அழகைக் கண்ணாலேயே பருகிக்கொண்டிருக்கிறான். 
தொலைதூரத்தில் தெரியும் குன்றுகள் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் வந்து, பின்னர் பின்னால் சென்று மறைகின்றன (குன்று பிறக்கு ஒழியப் போகி). 
அந்தக் குன்றின் நெடிய பெரிய சரிவினில் உள்ள மரத்திலிருந்து ஒரு கூகை கூக்கு, கூக்கு என்று விட்டுவிட்டு ஒலி எழுப்புகிறது. அதே நேரத்தில் 
அடிவாரத்து ஊரில் உள்ள ஒரு வீட்டு முற்றத்தில் உள்ள உரலில் இட்ட தானியத்தை உலக்கையால் ‘உஸ்ஸ் உஸ்ஸ்’ என்று சொல்லிக்கொண்டே 
குற்றிக்கொண்டிருக்கிறார்கள். கூகையின் ஒலியும், குற்றுதலின் ஒலியும் சரியான சம அளவில் வெளிவருவதால், அவை 
‘குக்கூ, உஸ்ஸ், குக்கூ, உஸ்ஸ்’ என்று மாறி மாறி ஒலிக்கின்றன. போகும் வழியிலோ, சிவந்த பாதைகளில் சிறிய இலுப்பைப் பூக்கள் 
சிதறிக்கிடக்கின்றன. இதை எத்துணை அருமையாக புலவர் கண்முன் கொண்டுவந்து காட்டுகிறார் பாருங்கள். 

	ஒரு நல்ல ஓவியம் அது காட்டும் ஒவ்வொரு பொருளையும், அந்தப் பொருளின் ஒவ்வொரு பகுதியையும் முழுமையாகக் காட்டவேண்டும். 
தரையில் கிடக்கும் இலுப்பைப் பூக்களையும், அருகில் நிற்கும் இலுப்பை மரத்தில் மொட்டுவிட்டிருக்கும் அரும்புக் கொத்துகளையும், 
அந்த அரும்புகளின் வாய்வழியே நீண்டிருக்கும் தீம்புழல்களையும், அதற்கருகே தளிர்த்து நிற்கும் செங்குழைகளையும், புழல் நீங்கிய துளைகளையும், 
ஆர் கழன்ற அல்லிவட்டத்தையும் புலவர் உவமைகளோடு விளக்கிக் காட்டுவது கைவல் ஓவியனின் கவினுறு காட்சியாகத்தானே தெரிகிறது.

	உலக்கை மகளிரின் கூந்தலைக் கூட புலவர் ‘கொடு நுண் ஓதி’ என கொள்ளை கவனத்துடன் வரைந்திருக்கிறார். அவர்கள் குற்றுவதற்குத் 
தூக்கும் உலக்கையின் உச்சியில் இருக்கும் இரும்பு வளையத்தைக் கூடப் புலவர் குறிப்பிட மறக்கவில்லை. ‘தொடி மாண் உலக்கை’ என்ற புலவர் 
‘தூண்டு உரல்’ என்று உலக்கைகள் வேகமாக ஏவப்பட்டு உரலில் விழுவதையும் மறக்காமல் குறிப்பிடுகிறார் புலவர். தூண்டு என்பது ஏவுதல், குற்றுதல் 
ஆகியவற்றைக் குறிக்கும். ஒரே ஒரு பெண்ணும் உரலில் குற்றலாம். இருவரும் குற்றலாம். இங்கே மகளிர் என இருவரைக் குறிப்பிடுகிறார் புலவர். 
இருவர் குற்றும்போது, ஒருவர் உலக்கையை ஓங்கித் தூக்கும்போது அடுத்தவர் ஓங்கிய உலக்கையை உள்ளே இறக்குவார். இது மிகவும் ஒழுங்கான 
இடைவெளியில் நடைபெறவேண்டும். இல்லையெனில் உலக்கைகள் முட்டிக்கொள்ளும். இதையே புலவர் மகளிர், ஓக்கிய உலக்கைத் தூண்டு உரல் 
பாணி’ என்கிறார். பாணி என்பது தகுந்த கால இடைவெளியில் ஒலிக்கப்படும் தாளம். உயிரற்ற ஓவியங்கள் பேசமாட்டா. இங்கே புலவர் காட்டும் 
ஒலியுள்ள சித்திரங்களை உயிரோவியம் என்னலாமா? ஆம், புலவர் நமக்குக் காட்டுவது ஒரு graphic and vivid verbal description எனலாம்.

			

	அடுத்து, புலவர் காட்டும் ஒரு சொல் விழியத்தைப் (video) பார்ப்போம். ஓடிக்கொண்டிருக்கும் தேரில் உட்கார்ந்துகொண்டிருக்கும் தலைவனின் 
நினைவுகளாகக் காட்சி விரிகிறது. அடுத்தடுத்து பல கட்டுகளைக் கொண்ட பெரிய இல்லம். அங்கே ஓரத்தில் ஒரு பெண் வெளியில் பார்த்தவண்ணம் 
ஆடாமல் அசையாமல் நெடுநேரம் நின்றுகொண்டிருக்கிறாள். அப்போது கௌளிச் சத்தம் கேட்கிறது. சற்றே நகர்ந்த காமிரா உயரே உள்ள ஒரு 
பல்லியைக் காட்டுகிறது. அந்தப் பெண் சற்றே நிமிர்ந்து, பல்லியை நோக்கிவிட்டுக் கைகூப்பித் தொழுகிறாள். முற்றத்து வாசலில் ‘அம்மா’ என்ற 
சத்தம். பசுங்கன்று ஒன்று தன் தாயைத் தேடி விரைந்து நுழைகிறது. அடுத்து, தலைவனின் நிழல்போன்ற ஒரு வெள்ளை உருவம் உள்ளே நுழைகிறது. 
வெளியிலேயே பார்த்துக்கொண்டிருக்கும் தலைவியை அவ்வுருவம் மெல்ல மெல்ல நெருங்குகிறது. சற்றே குனிந்தவாறு, தன் இரு கைகளையும் 
முன்னே வளைத்துக்கொண்டு முன்னேறிய வெள்ளை உருவம், தலைவியை நெருங்கி, இடதுகையால் அவள் இரு கண்களையும் பொத்துகிறது. 
தலைவிக்குத் தெரியாதா – இப்படி இங்குச் செய்ய ஒரே ஒருவரால்தான் முடியும் என்று? உருவம் அவளை ஒட்டி நிற்கிறது. பின்புறமாகத் தொங்கும் 
அவளின் தடித்த பின்னலைத் தீண்டி இழுக்கிறது உருவம். தன் வலது கையால் அவளின் மேல் தோளில் இருக்கும் வந்திகையைத் தோளோடு தடவிக் 
கொடுக்கிறது. அப்படியே இரு கைகளையும் இடுப்புக்கு இறக்கி அவளை இழுத்து அணைக்கிறது. ‘சட்’-டென்று கற்பனை உருவம் மறைகிறது. 
தலைவி நின்றவண்ணம் வெளியில் பார்த்துக்கொண்டே இருக்கிறாள் – காட்சி மாறுகிறது - தலைவன் தேரில் கண்விழித்துப் பார்க்கிறான். தேர் 
ஓடிக்கொண்டேயிருக்கிறது.

	இந்த அருமையான காட்சியைப் புலவரின் சொற்களால் காண, பாடலின் இறுதிப் பகுதியைப் படித்துச் சுவையுங்கள். 

	தேரில் வரும் தலைவனின் வருகையைத் தலைவி தெரிந்துகொண்டிருந்தால், இது ஓர் அருமையான முல்லைத் திணைப் பாடல் ஆகும். 
தேர் வரும் வழியும் வளமிக்க முல்லை நிலப் பகுதியாய் இருந்திருக்கும். இங்கே காட்டப்படுவதோ நெடிய பாலை நில வழியே செல்லும் நீண்ட 
இயவுகளும், குன்றுகளுக்கு ஊடே செல்லும் குற்றூர் அத்தங்களுமே. தொடரும் பயணம். துனை பரி துரக்கும் துஞ்சாச் செலவு. ஞாயிறு படியும் நேரம். 
ஊரும் சேய்த்து. இவை அனைத்தும் சேர்ந்து இதனைப் பாலைத்திணைப் பாடலாக்கிவிட்டன. இப் பாடலின் மைய நபர் தேரில் வரும் தலைவன். 
26 அடிகள் கொண்ட பாடலில் 17-ஆவது அடியில் குறிப்பிடப்படுகிறான். அவன் எண்ணமெல்லாம் வீட்டில் இருந்தாலும், அவன் பார்வையெல்லாம் 
கடந்துகொண்டிருக்கும் பாதை மீதே இருக்கிறது - இது எப்போது முடிந்து முல்லை நிலம் தோன்றும் என்று. எனவேதான் 26 அடிகள் கொண்ட 
இப் பாடலில் 14 அடிகளில் பாலை வழிக் காட்சிகள் வருணிக்கப்படுகின்றன. 

			

	மிகச் சாதாரணமாகத் தோன்றும் இப் படம் மிகச் சிறந்த புகைப்படங்களில் ஒன்றாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. புகைப்படம் 
முன்னிறுத்திக்காட்டும் மங்கையர் அணிந்திருக்கும் ஆடைகளின் மாறுபட்ட வண்ணங்கள் – அவர்தம் முகத்தில் தோன்றும் இயல்பான 
உணர்ச்சி வெளிப்பாடுகள் – மனித நடமாட்டம் அதிகம் இல்லாத அதிகாலை நேரம் - அதிகாலை நேரத்தை உணர்த்தும் பஞ்சுமூட்டப் பின்னணி – 
அமர்ந்து இரைதேடும் புறா – குளிருக்கு அடக்கமாய்க் குல்லாயுடன் போர்த்தியிருக்கும் மங்கலான ஆளின் உருவம் – இந்தப் பெண்கள் 
திறமைசாலிகள் என்பதைக்காட்டும் அவர்களின் தலையில் விழாமல் இருக்கும் பாத்திரங்கள் – இவர்கள் தம் பணியில் சுத்தமானவர்கள் என்பதைக் 
காட்டும் பளிச்சென்ற உடை – இவை எல்லாம் சேர்ந்து இப் படத்தைச் சிறந்த படமாக ஆக்கியுள்ளன. 

	இலுப்பை அரும்புகளின் ஒவ்வொரு பாகத்தையும் புலவர் நுணுக்கமாகத் தீட்டியிருக்கும் நுட்பம் – பூவின் அல்லிவட்டத்துக்குள் இருக்கும் 
உழுது காண் துளை – அதன் உச்சியில் இருக்கும் தீம் புழல் துய் வாய் - உலக்கை குற்றும் மகளிரின் கொடு நுண் ஓதி – தொடி மாண் உலக்கை என 
உலக்கையின் இரும்புப் பூண் – தலைவியின் பிடிக்கை அன்ன பின்னகம் – தொடிக்கை – எனப் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய சிற்பம் போல, பாடலைச் 
சொல்கொண்டு கோத்துக் கோத்துத் தொடுத்திருக்கிறார் புலவர்.

	பொதுவாக, ஒரு சிறந்த ஓவியம் எவ்வாறு அமையவேண்டும்? ஒரு புகைப்படம்கூட ஒருவகையில் ஓவியம்தானே! எனவே, 
புகைப்படக் கலையில் சிறந்து விளங்கும் திரு. உதயன் அவர்களைக் கேட்டேன் – மின்னஞ்சல் வழி. அவர் கூறிய பதிலில் ஒரு பகுதி இங்கே:

சில பொதுவான விதிகள்

	பொதுவாக நாம் படம் எடுக்கும் போது நபர்களை நடுவில் இருக்குமாறு எடுப்போம், அப்படி எடுத்தால் அது வெறும் Snapshot, 
கல்யாணப் படங்கள் இவ்வாறு இருக்கும், ஆனால் போட்டோகிராபி என்பது வேறு, கீழே உள்ள படம் உதாரணம்.

	அந்தப் பெண்ணின் பார்வை எந்தப் பக்கம் உள்ளதோ அந்தப் பக்கம் அதிக இடம் கொடுக்க வேண்டும்.

			

	சங்கப்பாடல் ஒவ்வொன்றும் ஒரு சொல்லோவியம் என்று சொல்லலாம். இந்த விதியை மனதில் கொண்டு நம் பாடலைப் பார்ப்போம். 
உதயன் காட்டியுள்ள இப்படத்தில் ஒவ்வொரு பகுதியையும் அளந்து பார்த்ததில், அவை ஏறக்குறைய 5:3 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. 

	நம் பாடலில் மொத்த அடிகள் 26. அதை 5:3 என்ற விகிதத்தில் பிரித்தால், 16,10 எனக்கிடைக்கும். நம் பாடலில் முதல் 14 அடிகள் 
தலைவன் செல்லும் பாதையைப் பற்றிக் குறிப்பிடுவன. புகைப்பட விதிப்படியே, தலைவனின் பார்வை எந்தப் பக்கம் உள்ளதோ அந்தப் பக்கம்தானே 
அதிக இடம் கொடுத்துள்ளார் புலவர். பாலைத் திணையின் பிரிவுத்துயரத்தைப் பற்றிய பாடலில், உரிப்பொருளான பிரிவு உணர்ச்சிக்குக் குறைந்த 
அடிகளையும், முதல்பொருளான நிலம், பொழுது ஆகியவற்றுக்கும், கருப்பொருளான, மரம், பூ,  பறவை ஆகியவற்றுக்கும் புலவர் அதிக இடம் 
கொடுத்திருப்பதன் காரணம் என்ன என்று ஆய்ந்தபோது புகைப்பட நுணுக்கம் அதனைப் புரிந்துகொள்ள உதவியது. பாடலின் மையப் பொருளான 
தலைவனைப் பற்றிய குறிப்பு 17-ஆவது அடியில்தான் வருகிறது. படத்தில் பெண் மையத்தில் இல்லாமல் ஓரத்தில் இருப்பதையும், அதற்கு உதயன் 
அளித்திருக்கும் விளக்கத்தையும் படிக்கும்போதுதான் பாடலின் சூட்சுமம் புரிகிறது. 

	படத்தில், பெண் நிற்கும் இடத்தில் தலைவனின் தேர். பெண்ணின் பார்வை இருக்கும் இடம் தலைவன் வரும் வழி. பெண் நிற்கும் பகுதி, 
தலைவனின் நினைவுகள். அதிலும் சிறிய மேல்பகுதி தலைவனின் உறுதி, பெரிய கீழ்ப்பகுதி தலைவியின் நிலை. இவ்வாறு ஒவ்வொரு பகுதியிலும் 
இந்த விகிதம் ஏறக்குறைய ஒரே அளவில் கையாளப்பட்டிருப்பதைக் காணலாம்.

	இனி உதயன் மற்றுமொரு விதி சொல்கிறார். அது the rule of thirds. படத்தின் அளவை மூன்று பிரிவாகப் பிரித்து அதில் ஒரு பக்கம் 
சப்ஜெக்ட் இருக்குமாறு செய்ய வேண்டும் என்கிறார் உதயன்.

			

	கொல் வினைப் பொலிந்த கூர்ம் குறும் புழுகின்
	வில்லோர் தூணி வீங்கப் பெய்த
	அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பைச்
	செப்பு அடர் அன்ன செங்குழை அகம்தோறும்
	இழுதின் அன்ன தீம் புழல் துய் வாய்
	உழுதுகாண் துளைய ஆகி ஆர் கழல்பு
	ஆலி வானின் காலொடு பாறித்
	துப்பின் அன்ன செங்கோட்டு இயவில்
	நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும்

	அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்க்
	கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய
	தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல் பாணி
	நெடுமால் வரைய குடிஞையோடு  இரட்டும்
	குன்று பின் ஒழியப் போகி உரந்துரந்து
	ஞாயிறு படினும் ஊர் சேய்த்து எனாது
	துனை பரி துரக்கும் துஞ்சாச் செலவின்
	எம்மினும் விரைந்து வல் எய்திப் பல் மாண்

	ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇப்
	பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக்
	கன்று புகு மாலை நின்றோள் எய்திக்
	கை கவியாச் சென்று கண் புதையாக் குறுகிப்
	பிடிக்கை அன்ன பின்னகம் தீண்டித்
	தொடிக் கை தைவரத் தோய்ந்தன்றுகொல்லோ
	நாணொடு மிடைந்த கற்பின் வாள் நுதல்
	அம் தீம் கிளவிக் குறுமகள்
	மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே

	The rule of thirds is applied by aligning a subject with the guide lines and their intersection points, placing the horizon on the top 
or bottom line, or allowing linear features in the image to flow from section to section. The main reason for observing the rule of thirds is to 
discourage placement of the subject at the center, or prevent a horizon from appearing to divide the picture in half.

	When photographing or filming people, it is common to line the body up with a vertical line, and having the person's eyes in line 
with a horizontal one. If filming a moving subject, the same pattern is often followed, with the majority of the extra room being in front of the 
person (the way they are moving). (தேரில் வரும் தலைவனின் முன்னே விரியும் காட்சிகள்). Likewise, when photographing a still subject who is not 
directly facing the camera, the majority of the extra room should be in front of the subject with the vertical line running through their perceived 
center of mass (வீட்டில் இருக்கும் தலைவியின் பின்னே நிகழும் காட்சிகள்).

	பாடலும் மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. விளக்கங்கள் self explanatory. பாடல் ஏற்கனவே விளக்கப்பட்டுவிட்டது. எனவே மீண்டும் 
பாடலைப் படித்துப் புரிந்துகொள்ளுங்கள்.

	புகைப்பட விதிகள் மனிதரின் கண்ணை எது எளிதில் கவரும் என்ற நோக்கில் ஆய்ந்து ஏற்படுத்தப்படவை. 
இவற்றையும் மீறி, கண்ணைக்கவரும் படங்கள் இருக்கலாம். 

	மனிதரின் மனதை எது எளிதில் கவரும் என்பதை உள்ளுணர்வினாலேயே உணர்ந்துகொள்ளும் திறம் படைத்தவரே பெரிய அறிஞர் 
ஆகமுடியும். அப்படிப்பட்ட சங்கப் புலவர்கள் தம் உள்ளுணர்வால் படைத்த ஒப்பற்ற இலக்கியங்கள் இன்றைய நவீன அளவுகோல்களுக்கும் 
ஒத்துப்போகின்றன என்பதில் வியப்பில்லை. 

		

	மேலும் பாடலில் 3, 4, 5, 6 ஆகிய அடிகளில் கல்லாடனார் அடுத்தடுத்துக் காட்டும் காட்சிகளின் sequence எவ்வாறு 
long shot, middle shot, close up, deep close up என அடுத்தடுத்து அமைந்து, காட்சியைத் தெளிவாக்கி விவரிக்கின்றன என்பதைத் 
திரைப்படக் கல்லூரிக்காரர்கள், visual communication படிப்பவர்கள் கவனிக்கவேண்டும்.

	இந்த மாதிரி இலக்கியங்கள் எத்தனை நாட்டினருக்குக் கிடைத்திருக்கின்றன?