ம – முதல் சொற்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மக்கள்
மக
மகட்கொடை
மகடூஉ
மகம்
மகமுறை
மகரப்பகுவாய்
மகரம்
மகரவலயம்
மகரவாய்
மகவு
மகள்
மகள்கொடை
மகன்
மகன்றில்
மகாஅஅர்
மகாஅன்
மகார்
மகிழ்
மகிழ்நன்
மகிழம்
மகுளி
மங்குல்
மஞ்சள்
மஞ்சனம்
மஞ்சிகை
மஞ்சு
மஞ்ஞை
மட்டம்
மட்டு
மடங்கல்
மடங்கு
மடந்தை
மடம்
மடம்படு
மடமை
மடர்
மடல்
மடவ
மடவது
மடவந்தனள்
மடவம்
மடவர்
மடவரல்
மடவள்
மடவன்
மடவார்
மடவீர்
மடவை
மடவோய்
மடவோர்
மடவோள்
மடவோன்
மடன்
மடா
மடாய்
மடி
மடிவு
மடிவை
மடு
மடை
மண்
மண்டாத
மண்டிலம்
மண்டு
மண்டை
மண்ணகம்
மண்ணல்
மண்ணு
மண்ணுறு
மண்ணை
மண
மணப்பு
மணம்
மணன்
மணி
மணிச்சிகை
மணிப்புறா
மணிமாடம்
மத்தகம்
மத்தம்
மத்தரி
மத்தி
மத்திகை
மத்து
மதகு
மதம்
மதமா
மதர்
மதர்வை
மதலை
மதவலி
மதவு
மதன்
மதாணி
மதி
மதிநாள்
மதியம்
மதில்
மது
மதுகை
மதைஇய
மதைஇனள்
மந்தி
மந்திரம்
மம்மர்
மயக்கம்
மயக்கு
மயக்குறு
மயங்கு
மயர்
மயல்
மயிர்குறைகருவி
மயிலை
மரந்தை
மரபு
மரபுளி
மரம்
மரல்
மரவம்
மரன்
மரா
மராம்
மரீஇ
மரீஇய
மரீஇயோர்
மரு
மருஊட்டு
மருகன்
மருங்கு
மருங்குல்
மருங்கூர்
மருங்கை
மருட்கை
மருட்டல்
மருட்டு
மருடல்
மருடிர்
மருத்து
மருதம்
மருதன்
மருதி
மருது
மருந்துரை
மருப்பு
மருமான்
மருவு
மருள்
மருளி
மரூஉ
மரை
மரையா
மரையான்
மல்
மல்கு
மல்லர்
மல்லல்
மல்லன்
மல்லிகா
மல்லிகை
மலக்கு
மலங்கு
மலர்
மலர்ப்பு
மலர்ப்போர்
மலர்பு
மலி
மலிதரு(தல்)
மலிர்
மலிவனம்
மலிவு
மலை
மலைப்பு
மலைமகள்
மலையன்
மலைவு
மழ
மழபுலம்
மழவர்
மழி
மழு
மழுகு
மழுங்கல்
மழுங்கு
மழுபு
மழை
மள்ளர்
மள்ளன்
மற்று
மற்றும்
மற்றை
மறப்பு
மறம்
மறலி
மறலு
மறவர்
மறவல்
மறவலேன்
மறவன்
மறவி
மறவை
மறன்
மறா
மறாதீவாள்
மறாமை
மறாற்க
மறி
மறிதரு(தல்)
மறு
மறுக்கம்
மறுக்குந்து
மறுகால்
மறுகு
மறுத்தரல்
மறுத்தரவு
மறுதரல்
மறுப்படு
மறுமை
மறுமொழி
மறுவரல்
மறுவித்தம்
மறை
மறைகம்
மறைகு
மன்
மன்பது
மன்பதை
மன்ற
மன்றம்
மன்றல்
மன்று
மன்னு
மன்னும்
மனவன்
மனவு
மனன்
மனாலம்
மனும்
மனை
மனையோள்

மக்கள்

(பெ) 1. மனிதர்கள், people, human beings
2. ஒருவருக்குப் பிறந்தவர்கள், மகன்,மகள் ஆகியோர், children, sons and daughters

1

அத்தம் நண்ணிய அம் குடி சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் – குறு 41/3,4

பாலைவழிக்கு அருகிலுள்ள அழகிய சிற்றூரில்
மனிதர்கள் கைவிட்டுப்போனபின், அணில்கள் ஓடியாடும் முற்றத்தையுடைய

2

மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர் – புறம் 191/3

என்னுடைய மாட்சிமைப்பட்ட குணங்களையுடைய மனைவியுடனே புதல்வரும் அறிவு நிரம்பினர்

மேல்


மக

(பெ) குழந்தை, குட்டி, child or young one of an animal

கெடு மக பெண்டிரின் தேரும் – அகம் 347/15

தன் குழந்தையைக் காணாமற்போக்கிய பெண்டிர் போல தேடித்திரியும்

மக முயங்கு மந்தி வரை_வரை பாய – பரி 15/38

குட்டி இறுகப்படித்துக்கொண்ட குரங்கு மலைக்கு மலை தாவ,

மேல்


மகட்கொடை

(பெ) தன் மகளைத் திருமணம்செய்துகொடுத்தல், giving away one’s daughter in marriage

உண்துறை மகளிர் இரிய குண்டு நீர்
வாளை பிறழும் ஊரற்கு நாளை
மகட்கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே – நற் 310/3-5

நீருண்ணும் துறையில் நீர்மொள்ளும் மகளிர் வெருண்டு ஓட,
வாளை மீன் நீருக்குள் பிறழும் ஊரனாகிய தலைவனுக்கு, ஒவ்வொரு நாளும்
ஒரு பெண்ணை மணமுடிக்க நேர்ந்துவிடும் அறிவில்லாத பெண்ணே!

மேல்


மகடூஉ

(பெ) பெண், female, woman

மகவு உடை மகடூஉ பகடு புறம் துரப்ப – பெரும் 58

குழவியைக் கைக்கொண்ட பெண் எருத்தை முதுகிலே அடிப்ப

மேல்


மகம்

(பெ) 27 நட்சத்திரங்களுள் பத்தாவது நட்சத்திரம், the 10th nakṣatra;

மதி சேர்ந்த மக வெண் மீன் – பட் 35

சந்திரனைச் சேர்ந்த மகம் என்னும் வெள்ளிய மீனின்

மேல்


மகமுறை

(பெ) தாய்பிள்ளை உறவு, close relationship

தொடி கை மகடூஉ மகமுறை தடுப்ப – சிறு 192

தொடி(அணிந்த) கையினையும் உடைய பெண், தாய் பிள்ளை உறவு (கொண்டு)தடுக்க,

மேல்


மகரப்பகுவாய்

(பெ) சுறாமீனின் திறந்த வாயின் வடிவில் உள்ள ஒரு தலை அணிகலன்,
a head ornament shaped like an open-mouthed shark

திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்
மகரப்பகுவாய் தாழ மண்_உறுத்து – திரு 24,25

திலகம் இட்ட மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில்
சுறாவின் அங்காந்த வாயாகப்பண்ணின தலைக்கோலம் தங்கச் செய்து,

மேல்


மகரம்

(பெ) 1. பத்தாம் இராசி., மகரராசி, the tenth contellation, Capricorn of the zodiac;
2. சுறாமீன், shark

1

இறை யமன்
வில்லின் கடை மகரம் மேவ – பரி 11/8,9

யமனைத் தமையனாகக் கொண்ட சனி
தனுராசியின் பின்னர் உள்ள மகரராசியில் நிற்க

2

மகர மறி கடல் வைத்து நிறுத்து – பரி 23/72

சுறாமீனையுடைய அலைபுரளும் அந்தப் பாற்கடலில் வைத்து நிலைபெறச் செய்து

மேல்


மகரவலயம்

(பெ) சுறாமீன் வடிவில் உள்ள ஒரு தலை அணிகலன்,
a head ornament shaped like a shark

ஏறி மகரவலயம் அணி திகழ் நுதலியர் – பரி 10/77

தாக்கிக் கொல்லும் சுறாமீன் வடிவத்தில் அமைந்த மகரவலயம் என்னும் அணி விளங்கும் நெற்றியையுடைய மகளிர்,

மேல்


மகரவாய்

(பெ) சுறாமீனின் திறந்த வாயின் வடிவில் உள்ள ஒரு தலை அணிகலன்,
a head ornament shaped like an open-mouthed shark

பொலம் புனை மகரவாய் நுங்கிய சிகழிகை – கலி 54/6

பொன்னால் செய்யப்பட்ட மகரமீன் வடிவான தலைக்கோலத்தை விழுங்கிய கூந்தல் முடிப்பை

மேல்


மகவு

(பெ) குழந்தை, குழவி, குட்டி, child, young of animals

மகவு உடை மகடூஉ பகடு புறம் துரப்ப – பெரும் 58

குழவியைக் கைக்கொண்ட பெண் எருத்தை முதுகிலே அடிப்ப

மகவு உடை மந்தி போல – குறு 29/6

குட்டியை உடைய குரங்கு போல

மேல்


மகள்

(பெ) 1. பெண் குழந்தை, daughter
2. பெண், woman

1

குவளை உண்கண் என் மகள் – நற் 271/8

குவளை மலர்போன்ற மையுண்ட கண்களையுடைய என் மகள்

2

உழை படு மான் பிணை தீண்டலின் இழை_மகள்
பொன் செய் காசின் ஒண் பழம் தாஅம் – நற் 274/3,4

உழை மானின் அழகிய பெண்ணானது உராய்தலால், இழை அணிந்த ஒரு பெண்ணின்
பொன்னால் செய்யப்பட்ட மேகலைக்காசு போன்று ஒள்ளிய பழங்கள் உதிரும்

மேல்


மகள்கொடை

(பெ) பார்க்க : மகட்கொடை

மகள்கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே – நற் 310/5

மேல்


மகன்

(பெ) 1. ஆண் குழந்தை, son
2. ஆண், ஆள், man
3. நல்லவன், சிறந்தவன், goodman, exalted man

1

என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும்
தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர் – கலி 9/6,7

என் மகள் ஒருத்தியும், வேறொருத்தியின் மகன் ஒருவனும்
தமக்குத்தாமே காதல் கொண்டு, இப்போது பிறர் அறியும்படி ஒன்றுசேர்ந்தனர்,

2

வாழ்வோர் போகிய பேர் ஊர்
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே – நற் 153/9,10

குடிமக்கள் விட்டு ஓடிப்போன பெரிய ஊரில்
பாழ்பட்ட இடங்களைக் காவல்புரிந்து நிற்கும் தனி ஆளைப் போல

3

நீயே பெரு நலத்தையே அவனே
நெடு நீர் பொய்கை நடுநாள் எய்தி
தண் கமழ் புது மலர் ஊதும்
வண்டு என மொழிப மகன் என்னாரே – நற் 290/6-9

நீயோ பெண்மை நலம் மிகுதியாகப் பெற்றவள்; உன் கணவனோ
ஆழமான நீரையுடைய பொய்கைக்கு நள்ளிரவில் சென்று
குளிர்ச்சியுடன் மணங்கமழும் புதிய மலரில் தேனுண்ணும்
வண்டு என்று சொல்வார்கள், அவனை நல்லவன் என்று யாரும் சொல்லமாட்டார்.

மேல்


மகன்றில்

(பெ) இணைபிரியாத நீர்வாழ் பறவைகள், a species of aquatic love-birds

பூ இடைப்படினும் யாண்டு கழிந்து அன்ன
நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல – குறு 57/1,2

(நீர்ப்பரப்பில் இணையாகப் பறந்து வரும்போது)
ஒரு பூ இடையில் வந்தாலும், (அதனால் ஏற்படும் பிரிவினால்) ஓர் ஆண்டு கழிந்ததைப் போன்ற
நீரில் வாழும் மகன்றில்களின் சேர்க்கை போல

வார் சிறை
குறும் கால் மகன்றில் அன்ன
உடன்புணர் கொள்கை காதலோரே – ஐங் 381/3-5

நீண்ட சிறகுகளையும்,
குட்டையான கால்களையும் கொண்ட மகன்றில் பறவையைப் போல
சேர்ந்தே இருக்கும் கொள்கையினையுடைய காதலர்கள்!

அலர் ஞெமல் மகன்றில் நன்னர் புணர்ச்சி – பரி 8/44

மலர்களினூடே திரியும் மகன்றில் பறவைகளின் நல்ல புணர்ச்சியைப் போன்ற

மேல்


மகாஅஅர்

(வி.வே) மக்களே! Oh! sons!

சிறாஅஅர் துடியர் பாடு வல் மகாஅஅர் – புறம் 291/1

சிறுவர்களே! துடிப்பறை கொட்டுபவர்களே! பாடுதல் வல்ல மக்களே!

மேல்


மகாஅன்

(வி.வே) மகனே, Oh! son!

சான்றாளர் ஈன்ற தகாஅ தகாஅ மகாஅன் – பரி 8/57

சான்றாளர் பெற்றெடுத்தும் அதற்குத் தகுதியில்லாத மகனே!

மேல்


மகார்

(பெ) 1. குழந்தைகள், சிறுவர், children
2. மகன்கள், sons

1

கடும் பறை கோடியர் மகாஅர் அன்ன
நெடும் கழை கொம்பர் கடுவன் உகளினும் – மலை 236,237

தீவிரமாய்ப் பறையடிக்கும் கழைக்கூத்தாடிகளின் பிள்ளைகளைப் போன்று,
நீண்ட மூங்கிலின் உச்சிக்கொம்பில் குரங்குகள் (நழுவியும் ஏறியும்) ஆடிக்கொண்டிருப்பினும்

காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி
வண் கோள் பலவின் சுளை விளை தீம் பழம்
உண்டு படு மிச்சில் காழ் பயன் கொண்மார்
கன்று கடாஅ_உறுக்கும் மகாஅர் ஓதை – மலை 336-339

காந்தளின், துடுப்பைப்போன்ற, கமழுகின்ற (வெட்டுவதற்குக்கூரான விளிம்புள்ள)மடலை ஓங்கிப்பாய்ச்சி,
உருண்டு திரண்ட குலைகளையுடைய பலாவின் சுளைகள் நன்கு பழுத்த இனிய பழத்தினை
தின்று விழுந்த மீதமான(பழங்களின்) கொட்டைகளின் பயன் கொள்ள(=அவற்றை எடுக்க)
கன்றுகளால் (அப் பழங்களின்மீது)போரடிக்கும் சிறுவர்களின் ஓசையும்;

2

துருவின் அன்ன புன் தலை மகாரோடு
ஒருவிர்_ஒருவிர் ஓம்பினர் கழி-மின் – மலை 217,218

செம்மறியாட்டைப் போன்று, பரட்டைத் தலையினையுடைய (உம்)பிள்ளைகளோடே,
ஒருவர் ஒருவராக (ஒருவரை ஒருவர்)இறுகப் பிடித்தவராய்ச் செல்லுங்கள்

மேல்


மகிழ்

1. (வி) 1. உவ, மனம் மகிழ்ச்சிகொள், be happy, rejoice
2. குடித்துவிட்டு மகிழ்ச்சியாயிரு, revel
3. உண், அருந்து, take in, drink
4. குரை, bark
– 2. (பெ) 1. மகிழ்ச்சி, உவகை, joy, happiness
2. மது அருந்துவதால் ஏர்படும் களிப்பு, intoxication
3. கள், toddy

1.1

வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே – புறம் 192/4,5

வாழ்தலை
இனிதென்று உவந்ததும் இலம்

1.2

நறவு உண் செம் வாய் நா திறம் பெயர்ப்ப
உண்டும் தின்றும் இரப்போர்க்கு ஈந்தும்
மகிழ்கம் வம்மோ மற போரோயே – புறம் 364/6-8

கள்ளுண்ணும் சிவந்த வாயிலிட்டு நாவானது இரு மருங்கும் புரட்டிக்கொடுக்க
தின்றும் உண்டும் இரவலரை உண்பித்தும்
மகிழ்வோம் வருவாயாக மறம் பொருந்திய போரைச் செய்பவனே!

இரும் பன தீம் பிழி உண்போர் மகிழும்
ஆர் கலி யாணர்த்து ஆயினும் – நற் 38/3,4

கரிய பனையின் இனிய கள்ளினை உண்போர் மகிழ்ச்சியோடிருக்கும்
பெருத்த ஆரவாரம் மிக்க புதியவரவுகளைக் கொண்டிருப்பினும்,

1.3

வானம் நீங்கிய நீல் நிற விசும்பின்
மின்னு நிமிர்ந்து அனையர் ஆகி நறவு மகிழ்ந்து
மாண் இழை மகளிர் புலந்தனர் – மது 678-680

வானத்தில் கடந்து செல்லும் நீல நிறமுடைய முகிலினில்
மின்னுக்கொடி நுடங்கின தன்மையுடையவராய், மதுவை உண்டு,
மாட்சிமைப்பட்ட அணிகலன்களையுடைய மகளிர் (கணவரோடு)புலந்தனராய்,

1.4

இலங்கு வேல் இளையர் துஞ்சின் வை எயிற்று
வலம் சுரி தோகை ஞாளி மகிழும்
அரவ வாய் ஞமலி மகிழாது மடியின்
பகல் உரு உறழ நிலவு கான்று விசும்பின்
அகல் வாய் மண்டிலம் நின்று விரியும்மே – அகம் 122/7-11

விளங்கும் வேலினராகிய காவலர்கள் துஞ்சினும், கூரிய பல்லினையும்
வலமாகச் சுரிதலையுடைய வாலினையுமுடைய நாய் குரைக்கும்
ஒலி மிக்க வாயினையுடைய நாய் குரையாது உறங்கினும்
பகலின் ஒளியினை ஒக்க நிலவினைத் தந்து
வானின்கண் அகற்சி வாய்ந்த மதியம் விளங்கிப் பரவும்

மகிழ்தல் மகிழ்ந்து குரைத்தல் என்பார் வேங்கடசாமி நாட்டார். ஒருவேளை வெறித்தனமாகக்
குரைப்பதை அவ்வாறு குறிப்பிட்டார் போலும்.

2.1

தமிழ் நிலைபெற்ற தாங்க அரு மரபின்
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே – சிறு 66,67

தமிழ் வீற்றிருந்த, (தானே)தாங்க முடியாத பாரம்பரியத்தையுடைய,
மகிழ்ச்சியைத் தோற்றுகின்ற தெருவினையுடைய மதுரை(யைத் தரும் கொடை)யும் சிறிதே

2.2

வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து – நெடு 33

வண்டுகள் மொய்க்கும் கள்ளினை மிகுதியாக உண்டு, களிப்பு மிக்கு,

2.3

பிழி மகிழ் வல்சி வேண்ட மற்று இது
கொள்ளாய் என்ப கள்ளின் வாழ்த்தி – புறம் 269/7,8

வடித்த கள்ளை ஏந்தி உண்க என்று வேண்டியும், அதனைக்
வேண்டா என்று கொள்ளாய், கள்ளினை வாழ்த்தி

மேல்


மகிழ்நன்

(பெ) 1. மருதநிலத் தலைவன், chief of an agricultural tract
2. கணவன், husband

1

கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே – நற் 70/8,9

வயல்களையுடைய நல்ல ஊரினையுடைய எனது காதலரிடம் சென்று என்னுடைய
அணிகலன்கள் கழன்றுபோகும் துன்பத்தை இதுவரை சொல்லாதிருக்கின்றாய்!

2

அம்ம வாழி தோழி மகிழ்நன்
ஒரு நாள் நம் இல் வந்ததற்கு எழு நாள்
அழுப என்ப அவன் பெண்டிர் – ஐங் 32/1-3

தோழியே கேட்பாயாக! எம் தலைவனான கணவன்
ஒரே ஒருநாள் நமது வீட்டுக்கு வந்ததற்காக, ஏழு நாட்கள்
அழுதிருந்தனர் என்று சொன்னார்கள், அவனது பரத்தைப் பெண்டிர்

பொதுவாக ஊடலும் ஊடல் நிமித்தமும் என்ற உரிப்பொருளைக் கொண்ட மருதத்திணைப் பாடல்களில் வரும்
பாடல் தலைவன் மகிழ்நன் எனப்படுவான்.

மேல்


மகிழம்

(பெ) ஒரு மரம்/பூ, a tree/its flower, pointed-leaved ape-flower, Mimusaps elangi

ஒருசார் அணி மலர் வேங்கை மராஅ மகிழம்
பிணி நெகிழ் பிண்டி நிவந்து சேர்பு ஓங்கி – பரி 23/7,8

இவ்வூரின் ஒரு பக்கத்தே, அழகிய மலர்களையுடைய வேங்கை, வெண்கடம்பு, மகிழம்,
அரும்புகள் கட்டவிழ்ந்த அசோகம் ஆகியவை உயர்ந்து ஒன்றுகூடி வளர்ந்து

மகிழம் என்பது ஓர் சிற்றின மரம் ஆகும். இது வகுளம், இலஞ்சி, மகிழ் என்றும் அழைக்கப்படும்
இம்மரம் தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வெப்பமண்டல காடுகளில் காணப்படும்
ஒரு நடுத்தர அளவிலான பசுமையான மரமாகும்.
இந்த மரத்தை பொதுவாக ஆங்கிலத்தில் ஸ்பானிஷ் செர்ரி, மெட்லர், புல்லட் உட் என்று அழைக்கின்றனர்.

மேல்


மகுளி

(பெ) 1. எள் பயிர் முதலியவற்றிற்கு வரும் அரக்கு நோய்
Redness, a disease affecting sesame and other plants;
2. ஓர் இசைக்கருவி (தோல் கருவி ?),
a musical instrument, probably a percussion instrument

1

நீலத்து அன்ன விதை புன மருங்கில்
மகுளி பாயாது மலி துளி தழாலின்
அகளத்து அன்ன நிறை சுனை புறவின்
கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ்
நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எள் – மலை 102-106

நீல மணிகள் போன்ற (விதைகள்)விதைக்கப்பட்ட கொல்லைக்காட்டின் பக்கத்தே,
மகுளியென்னும் அரக்குநோய் பரவாமல், மிகுந்த மழைத் துளியைத் தழுவுதலால்,
நீர் இறைக்கும் சாலைப் போன்று நிறைந்த சுனைகளையுடைய காட்டுநிலத்தில்,
பிஞ்சுத்தன்மை போன(=முற்றிய) கரிய காய்கள் ஒரு கைப்பிடிக்குள் ஏழு காய்களே கொள்ளத்தக்கனவாய்
நெய் (உள்ளே)கொண்டிருக்க வளர்ந்தன பலவாகக் கிளைத்த ஈரப்பதமான எள்;

2

ஒத்த குழலின் ஒலி எழ முழவு இமிழ்
மத்தரி தடாரி தண்ணுமை மகுளி
ஒத்து அளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார்
நித்தம் திகழும் நேர் இறை முன்கையால்
அ தக அரிவையர் அளத்தல் காண்-மின் – பரி 12/40-44

ன்றோடொன்று ஒத்து இசைக்கும் குழல் வாத்தியங்களினின்றும் இசை எழ, முழவின் முழக்கத்தோடு
மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி ஆகிய இசைக்கருவிகளின்
தாளத்தை அளந்து சீரின் கூறுபாட்டை அறிந்து, ஒருவருக்கொருவர் பின்னிடாத தகுதியுடையவராய்
நடன அசைவுகள் நன்கு விளங்கும் நேராக இறங்கும் தம் முன்கையால்
அழகுமிக்கதாய் ஆடல்மகளிர் அந்தத் தாளத்தை அளத்தலைப் பாருங்கள்;

3

உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்
கடும் குரல் குடிஞைய நெடும் பெரும் குன்றம் – அகம் 19/4,5

உருண்டையான உடுக்கின் ஓசையைப் போன்று, பொருள் தெரிந்து ஒலிக்கும்
கடும் குரலையுடைய ஆந்தைகள் உள்ள உயரமான பெரிய மலையில்,

இங்கு மகுளி என்பதற்குப் பெரும்பாலும் ஓசை என்றே பொருள்கொள்ளப்படுகிறது. எனினும் பரிபாடலில்
காணப்படும் மகுளி என்பதை ஓர் இசைக்கருவியாகவே கொள்ளவேண்டியிருக்கிறது.
அங்கு மகுளி என்பதனுடன் கொடுக்கப்பட்டுள்ள முழவு, மத்தரி, தடாரி, தண்ணுமை ஆகியன
தோற்கருவிகளாதலால், மகுளி என்பதுவும் ஒரு தோற்கருவி என்றே கொள்ளத்தோன்றுகிறது.
இங்கு இது துடியுடன் சேர்த்துக் கூறப்படுவதால், துடியாகிய மகுளி எனக்கொண்டு, மகுளியைத் துடி
என்ற உடுக்கு வகைக் கருவி எனக் கொள்ளத்தோன்றுகிறது.

மேல்


மங்குல்

(பெ) 1. மூடுபனி, தாழ்ந்து வரும் மேகம், fog, low lying clouds
2. இருள், darkness
3. மேகமூட்டம், sky overcast with clouds

1

குரூஉ குய் புகை மழை மங்குலின்
பரந்து தோன்றா வியல் நகரால் – மது 757,758

நிறத்தையுடைய தாளிப்புப் புகை கருமையான மூடுபனியைப் போலப்
பரந்து தோன்றவும், அகன்ற (இம் மதுரை மா)நகரத்தே

சாரல்
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை
ஆடு மழை மங்குலின் மறைக்கும் – நற் 282/6-8

மலைச் சாரலில்
அகில் கட்டையை எரிக்கும் குறவன், முதலில் சருகளைக் கொளுத்துவதால் எழுகின்ற புகை
அசைகின்ற மழையின் மேகமூட்டம் போலப் பரந்து மறைக்கும்

கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் இயம் கறங்க
ஊர்பு எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க – கலி 105/24,25

கார்காலத்தில் தோன்றிய மிகுந்த ஒலியினையுடைய கடுமையான பேரிடியைப் போன்று இசைக்கருவிகள் முழங்க,
பரந்து உயர்ந்து எழுந்து அசைவாடும் மூடுபனியைப் போல நறுமணப்புகை மேலெழ,

திரு உடை திரு மனை ஐது தோன்று கமழ் புகை
வரு மழை மங்குலின் மறுகு உடன் மறைக்கும் – புறம் 379/16,17

செல்வமுடைய நின் திருமனைக்கண் மெல்லிதாகத் தோன்றும் நறிய புகை
பெய்தற்கு வரும் மழை முகில் படிந்து மறைப்பது போல தெருவெல்லாம் ஒருங்கு மறைக்கும்

புடை நடுகல்லின் நாட்பலி ஊட்டி
நன்னீராட்டி நெய் நறை கொளீஇய
மங்குல் மா புகை மறுகு உடன் கமழும் – புறம் 329/2-4

பக்கத்தே நடப்பட்ட நடுகல்லுக்கு விடியற்காலத்துப் பலியை ஊட்டி
நல்ல நீரையாட்டி, நெய்விளக்கேற்றுதலால் உண்டாகிய
மேகம் போலும் புகை எழுந்து தெருவில் மணக்கும்

முனை சுட எழுந்த மங்குல் மா புகை
மலை சூழ் மஞ்சின் மழ களிறு அணியும் – புறம் 103/6,7

பகைவரின் முனைப்புலத்தைச் சுடுதலான் எழுந்த மங்குலாகிய கரிய புகை
மலையைச் சூழும் முகில் போல இளம் களிற்றைச் சூழும்

கங்குல் ஓதை கலி மகிழ் உழவர்
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள்
மங்குல் வானின் மாதிரம் மறைப்ப – அகம் 37/2-4

பின்னிருட்டில் ஆரவாரத்தை உடைய மிகுந்த மகிழ்ச்சியுள்ள உழவர்
தூற்றாப் பொலியை முகந்து தூற்ற எழும் கனமற்ற நுண்ணிய தூசுகள்
மூடுபனி வானத்தைப் போன்று நாற்புரத்தையும் மறைக்க –

மா கழி மணி பூ கூம்ப தூ திரை
பொங்கு பிதிர் துவலையொடு மங்குல் தைஇ
கையற வந்த தைவரல் ஊதையொடு – குறு 55/1-3

பெரிய கழியின் நீலமணி போன்ற பூக்கள் கூம்ப, தூவுகின்ற அலைகளினின்றும்
பொங்கி வரும் சிதறல்கள் கொண்ட துவலையோடு, தாழ்ந்த முகில்களையும் சேர்த்துக்கொண்டு
செயலற்றுப்போக வந்த தடவிச்செல்லும் வாடைக்காற்றோடு

தொடை மடி களைந்த சிலை உடை மறவர்
பொங்கு பிசிர் புணரி மங்குலொடு மயங்கி
வரும் கடல் ஊதையின் பனிக்கும் – பதி 60/9-11

அம்பினைத் தொடுப்பதில் சோம்பலைக் களைந்த வில்லையுடைய மறவர்கள்
பொங்குகின்ற சிறு திவலைகளைச் சிதறும் அலைகளோடு, தாழ்ந்து வரும் மேகங்கள் கலந்து
வரும் கடலின் குளிர்ந்த காற்றில் மிகவும் நடுக்கம்கொள்ளும்,

2

மங்குல் வானத்து திங்கள் ஏய்க்கும்
ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை
நீடு இரும் பித்தை பொலிய சூட்டி – பெரும் 480-482

இருண்ட வானத்தின்கண் திங்களைப் போன்று
உலாவும் வண்டுகள் ஒலியாத, தீயில் மலர்ந்த வெண்பொற்றாமரையை
நீண்ட கரிய மயிரில் அழகுபெறச் சூட்டி;

3

சொல்லிய பருவம் கழிந்தன்று எல்லையும்
மயங்கு இருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க – நற் 364/1-3

திரும்புவேன் என்று தலைவர் சொல்லிச் சென்ற பருவமும் வந்துசென்றுவிட்டது; பகற்போதிலும்
இருள் கலந்த நள்ளிரவைப் போல மேகமூட்டத்துடன் சேர்ந்து
ஆரவாரத்தையுடைய மேகங்கள் நீர் நிறைந்து வானத்தில் இயங்க

மங்குல் என்பதற்குப் பல பொருள்கள் கூறப்பட்டாலும், மிகப்பெரும்பாலும் இது புகை மூட்டத்திற்கு
ஒப்பிடப்படுவதால், மங்குல் என்பது மேகங்கள் தாழ்ந்துவருவதால் ஏற்படும் மூட்டமான நிலை
என்பது பெறப்படும்.

மேல்


மஞ்சள்

(பெ) வேரில் கிழங்கு வைக்கும் ஒரு செடி, Turmeric, curcuma longa;

1. இது சேரநாட்டு நீர்நிலை ஓரங்களில் செழித்து வளரும்.

கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை
பைம் கறி நிவந்த பலவின் நீழல்
மஞ்சள் மெல் இலை மயிர் புறம் தைவர
விளையா இளம் கள் நாற மெல்குபு பெயரா
குளவி பள்ளி பாயல் கொள்ளும்
குட புலம் காவலர் மருமான் – சிறு 42-47

செங்கழுநீர்ப்பூவைத் தின்ற பெரிய வாயையுடைய எருமை
பசிய மிளகுக் கொடி படர்ந்த பலாமரத்தின் நிழலில்,
மஞ்சளின் மெல்லிய இலை தனது மயிரையுடைய முதுகினைத் தடவிநிற்ப,
முற்றாத இளைய தேன் மணக்கும்படி, மென்றவாறு நடந்து,
காட்டு மல்லிகையாகிய பள்ளியில் துயில்கொள்ளும்
மேற்றிசைக்கண்ணுள்ள நிலத்தைக் காக்கும் சேரர் குடியிலுள்ளோன்

2.வீட்டு முற்றங்களில் இதன் கிழங்கைப் புதைத்துவைத்துச் செடியாக இதனை வளர்ப்பர்.

வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை
தண்டலை உழவர் தனி மனை – பெரும் 353-355

வளவிய தோட்டினையுடைய தென்னை மரத்தின் வற்றிய மடலினை வேய்ந்த,
மஞ்சளையுடைய முற்றத்தினையும் மணம் கமழ்கின்ற சுற்றுப்புறங்களையும் உடைய
தோப்புகளில் வாழும் உழவரின் தனித்தனியாக அமைந்த மனைகளில்

3.முற்றாத மஞ்சள்கிழங்கின் சொரசொரப்பான முதுகினைப் போல இறாமீன்களிருக்குமாம்.

முற்றா மஞ்சள் பசும் புறம் கடுப்ப
சுற்றிய பிணர சூழ் கழி இறவின் – நற் 101/1,2

முற்றாத இளம் மஞ்சள்கிழங்கின் பசிய மேற்புறத்தைப்போலச்
சுற்றிலும் அமைந்த சொரசொரப்பையுடைய, சூழ்ந்துள்ள கழியில் உள்ள இறாமீனின்

4.இறந்த வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்ட நடுகற்களை நீராட்டி, மஞ்சள் கிழங்கை அரைத்துப் பூசுவர்.

ஏறு உடை இன நிரை பெயர பெயராது
செறி சுரை வெள் வேல் மழவர் தாங்கிய
தறுகணாளர் நல் இசை நிறும்-மார்
பிடி மடிந்து அன்ன குறும் பொறை மருங்கின்
நட்ட போலும் நடாஅ நெடும் கல்
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய – அகம் 269/3-9

ஏறுகளுடன் கூடிய பசுவினமாய் நிரைகள் மீளவும், மீளாது நின்று
திணிந்த சுரையையுடைய வெள்ளிய வேலையுடைய வெட்சி மறவரைத் தடுத்துப் பொருது பட்ட
அஞ்சாமையுடைய கரந்தை வீரரது நல்ல புகழை நிலைநிறுத்துமாறு
பெண்யானைகள்கிடந்தாலொத்த குன்றுகளின் பக்கத்தே
நட்டு வைத்தலைப் போன்ற இயற்கையில் எழுந்த நீண்ட கற்களின்
அகன்ற இடத்தைச் செதுக்கி இயற்றிய பல வடிவுகளையும் நீராட்டி
நறுமணமுள்ள மஞ்சள் அவற்றின் ஈரிய புறத்தில் விளங்குமாறு பூசி


மேல்


மஞ்சனம்

(பெ) நீராட்டுதல், Ablutions, used of great persons; ceremonial bath as of a deity

கழு நீர மஞ்சன குங்கும கலங்கல் – பரி 24/89

கழுவப்படும் தன்மையுள்ள மஞ்சனப் பொருள்களும், குங்குமம், குழம்பு முதலியனவும் கலந்து கலங்கலாகி

மேல்


மஞ்சிகை

(பெ) கூடை, basket

உரு கெழு கரும்பின் ஒண் பூ போல
கூழ் உடை கொழு மஞ்சிகை – பட் 162,163

அழகு பொருந்திய கரும்பின் பிரகாசமுள்ள பூவைப் போன்ற,
சோறுடைய கொழுவிய கூடைக்கும்,

மேல்


மஞ்சு

(பெ) 1. மேகம், cloud
2. வெண்மேகம், white cloud
3. மூடுபனி, fog

1

முனை சுட எழுந்த மங்குல் மா புகை
மலை சூழ் மஞ்சின் மழ களிறு அணியும் – புறம் 103/6,7

பகைவரின் முனைப்புலத்தைச் சுடுதலான் எழுந்த மங்குலாகிய கரிய புகை
மலையைச் சூழும் முகில் போல இளம் களிற்றைச் சூழும்

2

துகில் அணி அல்குல் துளங்கு இயல் மகளிர்
அகில் உண விரித்த அம் மென் கூந்தலின்
மணி மயில் கலாபம் மஞ்சு இடை பரப்பி
துணி மழை தவழும் துயல் கழை நெடும் கோட்டு – சிறு 262-265

துகில் சூழ்ந்த அல்குலினையும், அசைந்த சாயலினையும் உடைய மகளிர்
அகிற்புகையை ஊட்டுதற்கு விரித்த, அழகும் மென்மையும் உடைய, கூந்தலைப் போல்
(நீல)மணி (நிறமுடைய)மயிலின் தோகையை வெண்மேகத்தின் இடையே (அணையாக)விரித்து,
தெளிந்த முகில் தவழும் அசைகின்ற மூங்கிலையுடைய நெடிய மலையின் சிகரத்தில்,

3

வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில்
துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு பட காணாது
பெரும் களிறு பிளிறும் சோலை – நற் 222/7-9

வாழை மரங்கள் உயர்ந்து, சுரபுன்னை மரங்களுடன் பொருந்திய மலைச்சாரலில்
தூங்கும் தன் பெண்யானையின் பக்கத்தில் மூடுபனி சூழ்ந்திருக்க, அதனைக் காணாது
பெரும் களிறு பிளிறும் சோலையுள்

மேல்


மஞ்ஞை

(பெ) மயில், peacock

கான மஞ்ஞை அறை ஈன் முட்டை
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும் – குறு 38/1,2

காட்டு மயில் பாறையில் இட்ட முட்டையை
வெயிலில் விளையாடும் குரங்குக்குட்டி உருட்டும்

மேல்


மட்டம்

(பெ) கள், toddy

மட்டம் பெய்த மணி கலத்து அன்ன
இட்டு வாய் சுனைய பகு வாய் தேரை – குறு 193/1,2

கள்ளை எடுத்துவைத்த நீல நிறக்குப்பியைப் போல்
சிறிய வாயையுடைய சுனையில் உள்ள பிளந்த வாயையுடைய தேரைகள்

மேல்


மட்டு

(பெ) 1. கள், toddy, fermented liquor
2. தேன், honey
3. கள் இருக்கும் குடம்,

1

நிலம் புதை பழுனிய மட்டின் தேறல் – புறம் 120/12

நிலத்தின்கண் புதைக்கப்பட்ட முற்றிய கள்ளின் தெளிவை

துணை புணர்ந்த மட மங்கையர்
பட்டு நீக்கி துகில் உடுத்தும்
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும் – பட் 106-108

(தம்)கணவரைக் கூடிய மடப்பம் பொருந்திய இளம்பெண்கள்,
பட்டுடையை நீக்கிப் (மெல்லிய)பருத்தி ஆடையை உடுத்தவும்,
(மிதமான கிளர்ச்சியைத் தரும்)கள்ளைத் தவிர்த்து (வெறியூட்டும்)மது (உண்டு) மகிழ்ந்தும்,

2

கட்டுவட கழலினர் மட்டு மாலையர் – பரி 12/24

கட்டுவடத்தோடு, கால்விரலில் மோதிரம் அணிந்துகொண்டோரும், தேன் துளிக்கும் மாலையினரும்,

3

மட்டு வாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும் – புறம் 113/1

கள் குடத்தை வாய் திறப்பவும், ஆட்டுக்கிடாயை வீழ்ப்பவும்

மேல்


மடங்கல்

(பெ) 1. சிங்கம், lion
2. யமன், Yama, as subduer of all things
3. ஊழிப்பெருந்தீ, வடவைத்தீ, வடவாமுகாக்கினி,
பெண்குதிரை முகத்தின் வடிவில் கடலுள் தங்கியிருந்து, யுகமுடிவில் வெளிப்பட்டு,
உலகத்தை அழித்துவிடுவதாக நம்பப்படும் தீ,
A submarine fire in the shape of a mare’s head believed to consume
the word at the end of an aeon
4. ஊழியின் முடிவுக்காலம், end of an aeon
5. இறப்பு, சாவு, death
6. கூற்றுவன், யமனுக்கு ஏவல் செய்பவன், attendent of Yama
7. மடங்கிப்போதல், கீழ்ப்படுதல், turning about, submission

1

தடம் கோட்டு ஆமான் மடங்கல் மா நிரை
குன்ற வேங்கை கன்றொடு வதிந்து என – நற் 57/1,2

வளைந்த கொம்புகளையுடைய காட்டுப்பசு, சிங்கம் முதலான விலங்குகளின் கூட்டம் உள்ள
குன்றிலுள்ள வேங்கை மரத்தடியில் தன் கன்றுடன் படுத்திருந்ததாக,

2

மடங்கல் போல் சினைஇ மாயம் செய் அவுணரை
கடந்து அடு முன்பொடு முக்கண்ணான் மூ எயிலும்
உடன்ற_கால் முகம் போல ஒண் கதிர் தெறுதலின் – கலி 2/3-5

யமனைப் போல் சினங்கொண்டு, அழிவு செய்யும் அந்த அரக்கர்களைக்
கொன்று அழிக்கும் ஆற்றலோடு, முக்கண்ணனாகிய சிவன் அந்த அரக்கர் வாழும் திரிபுரக் கோட்டைகளைச்
சினந்து நோக்கிய பொழுது இருந்த பொறி பறக்கும் முகத்தினைப் போல, வெண் கதிர் வீசும் ஞாயிறு
சுட்டுப்பொசுக்குவதால்,

3

பொங்கு பிசிர் நுடக்கிய செம் சுடர் நிகழ்வின்
மடங்கல் தீயின் அனையை
சினம் கெழு குருசில் நின் உடற்றிசினோர்க்கே – பதி 72/14-16

பொங்கியெழும் பிசிரினையுடைய வெள்ளத்தை வற்றச் செய்யும் சிவந்த சுவாலைகளோடு தோன்றும்
ஊழிப்பெருந்தீயைப் போன்றவன்,
சினம் பொருந்திய குருசிலே! உன்னைக் கோபப்படுத்தியவர்களுக்கு.

மடங்கலும் கணிச்சியும் காலனும் கூற்றும் – கலி 105/20

ஊழித்தீயும், சிவனும், காலதேவனும், கூற்றுவனும்,

4

நால் திசையும் நடுக்கு_உறூஉம் மடங்கல் காலை
கூற்று நக்கது போலும் உட்குவரு கடு மாலை – கலி 120/8,9

நான்கு திசைகளும் நடுக்கமுறும் ஊழியின் முடிவுக்காலத்தில்
கூற்றுவன் சிரிப்பது போன்று அச்சத்தை வருவித்துக் கொடுமை செய்யும் மாலைக்காலமே

5

வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை
மடங்கல் உண்மை மாயமோ அன்றே – புறம் 363/7-9

இறவாமல்
உடம்போடே என்றும் இருந்தவர் யாருமில்லை
இறப்பு உள்ளது பொய்யன்று

6

தா_மா_இருவரும் தருமனும் மடங்கலும்
மூ_ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும்
மாயோய் நின் வயின் பரந்தவை உரைத்தேம் – பரி 3/8-10

அசுவினி, தேவர் ஆகிய இருவரும், இயமனும், கூற்றுவனும்,
மூன்று ஏழேழு உலகங்களாகிய இருபத்தியொரு உலகங்களும், அவ் உலகத்து உயிர்களும்,
மாயவனே! உன்னிடமிருந்து தோன்றிப் பரவினவை என்று சொன்னோம்,

7

உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும்
புல்லி அவன் சிறிது அளித்த_கால் என்
அல்லல் நெஞ்சம் மடங்கலும் காண்பல் – கலி 122/17-19

என்னை நினைத்துப்பார்க்கவும் செய்யாத பண்பற்றவன் என்பதை அறிவேன், அப்படி அறிந்திருந்தும்
என்னைத் தழுவிக்கொண்டு அவன் நம்மேல் சிறிதளவாவது அன்புகாட்டியவுடனே என்
அல்லல்படும் நெஞ்சம் மடங்கிப்போவதையும் காண்கிறேன்;

மேல்


மடங்கு

(வி) 1. வளை, மடி, கோணு, become bend
2. ஒடுங்கு, be absorbed
3. சுருங்கு, அடங்கு, shrink, be contained
4. இணங்கு, கீழடங்கு, yield, submit
5. தீய்ந்துபோ, கருகிப்போ, be burnt
6. குறைவுபடு, be diminished
7. மீள், திரும்பிச்செல், go back, return
8. உக்கிரம் அடங்கு, be decreased in force

1

மாண்ட எறித்த படை போல் முடங்கி மடங்கி
நெறித்துவிட்டு அன்ன நிறை ஏரால் என்னை
பொறுக்கல்லா நோய் செய்தாய் பொறீஇ நிறுக்கல்லேன் – கலி 94/9-11

“சிறப்பான கலப்பையில் இறுக்கப்பட்ட கொழுவினைப் போல் முடங்கியும், வளைந்தும்
சுருட்டிவிட்டதைப் போன்ற நிறைந்த அழகால், எனக்குப்
பொறுக்க முடியாத காம நோயை ஏற்படுத்தினாய்! நான் பொறுத்திருக்கமாட்டேன்,

2

தொல் ஊழி தடுமாறி தொகல் வேண்டும் பருவத்தால்
பல் வயின் உயிர் எல்லாம் படைத்தான்_கண் பெயர்ப்பான் போல்
எல் உறு தெறு கதிர் மடங்கி தன் கதிர் மாய – கலி 129/1-3

பழைய ஊழிக்காலத்தில் உயிர்கள் தோன்றி, பின் முறைகெட்டு, ஒன்றாகச் சேர்ந்து ஒடுங்கக்கூடிய ஊழி முடிவில்,
பல அண்டங்களில் வாழும் அந்த உயிர்கள் அனைத்தையும் படைத்த தன்னிடமே அடக்கிக்கொள்ளும்
இறைவனைப் போல,
பகற்பொழுதைச் செய்யும் சுடுகின்ற கதிர்களைத் தன்னிடத்தில் மீட்டுக்கொண்டு ஞாயிறு மறைய,

3

பலர்க்கு நிழல் ஆகி உலகம் மீக்கூறி
தலைப்போகு அன்மையின் சிறு வழி மடங்கி
நிலை பெறு நடுகல் ஆகிய கண்ணும் – புறம் 223/1-3

பலருக்கும் நிழல் போல் இனியனவனாக இருந்து உயர்ந்தோர் பாராட்ட
அரசாளும் கடமையை நிறைவேற்றமுடியாமல், சிறிய வழியிடத்தில் அடங்கி
என்றும் நிலைபெறும் நடுகல்லாக நீ ஆனபோதும்

4

புரிபு மேற்சென்ற நூற்றுவர் மடங்க
வரி புனை வல் வில் ஐவர் அட்ட
பொரு_களம் போலும் தொழூஉ – கலி 104/57-59

போரினை விரும்பி அதனை மேற்கொண்ட நூற்றுவர்கள் கீழடங்க
வரிந்து கட்டப்பட்ட வலிமை பொருந்திய வில்லினையுடைய ஐவர் போரிட்ட
போர்க்களம் போன்று இருந்தது தொழுவம்;

5

நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் மண்டிலம்
புலம்_கடை மடங்க தெறுதலின் ஞொள்கி – அகம் 31/1,2

தீயைப்போலச் சினந்து விளங்கும் வெம்மை ஒளிரும் ஞாயிறு
விளைநிலங்களின் கடைசிமட்டும் கருகிப்போகத் தக்கதாகச் சுட்டுப்பொசுக்குவதால் சுருங்கிப்போய்

6

அடங்கா மன்னரை அடக்கும்
மடங்கா விளையுள் நாடு கிழவோயே – புறம் 200/16,17

உனக்கு அடங்கிநடக்காத மன்னரை அடக்கிவைக்கும்
குறையாத மிக்க விளைதலையுடைய நாட்டையுடையோய்

மடங்கா விளையுள்’

என்பதற்கு ‘மடக்கப்படாத மிக்க விளையுள் – போகம் பல தலையாப் பல்கிப் பெருகலின்,
மடக்குதல் “போகம் ஒருக்குதல்” – ஒருக்குதல் வரையறுத்தல் என்பார் ஔவை.துரைசாமியார்.

7

மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து
அடங்கா தானை வேந்தர் – புறம் 71/1,2

சிங்கம் போல் சினந்து, மீளாத மேற்கோள் பொருந்திய உள்ளத்தினையும்
மிகைத்துச் செல்லும் படையையும் உடைய வேந்தர்

8

குறியவும் நெடியவும் குன்று தலைமணந்த
சுரன் இறந்து அகன்றனர் ஆயினும் மிக நனி
மடங்கா உள்ளமொடு மதி மயக்கு_உறாஅ
பொருள்_வயின் நீடலோ இலர் – அகம் 233/10-13

குறியனவும் நெடியனவுமாய குன்றுகள் இடந்தோறும் உள்ள
சுரத்தினைக் கடந்து சென்றவராயினும் மிகப்பெரிதும்
அடங்காத உள்ளமுடையவராய் அறிவு மயங்குதலுற்று
பொருள் ஈட்டுதலைக் கருதி தாழ்த்திருத்தல் இலராவர்.

மேல்


மடந்தை

(பெ) 1. பதினான்கு முதல் பத்தொன்பது வயதுவரையுள்ள பருவத்துப் பெண்,
Woman between the ages of 14 and 19;
2. பெண், woman

1

சிறு வரை இறப்பின் காண்குவை செறி தொடி
பொன் ஏர் மேனி மடந்தையொடு
வென் வேல் விடலை முன்னிய சுரனே – ஐங் 388/3-5

சிறிய குன்றின் இறக்கத்தில் நின்று பார்த்தால் காணலாம், செறிவாக வளையல்கள் அணிந்த
பொன்னைப் போன்ற மேனியையுடைய சிறுபெண்ணுடன்
வெற்றிகொள்ளும் வேலினையுடைய இளைஞன் சென்ற வழியை

2

மணி மலை பணை தோள் மா நில_மடந்தை
அணி முலை துயல்வரூஉம் ஆரம் போல
செல் புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று – சிறு 1-3

மணிகளையுடைய மலையே மூங்கில்(போன்ற) தோள்களாகவுள்ள பெரிய நிலமகளின்
அழகிய முலையின்கண் கிடந்து அசைந்துநிற்கும் முத்துமாலை போல,
ஓடுகின்ற நீரால் வருந்தின, தொலைவினின்றும் வருகின்ற, காட்டாற்றின்

மேல்


மடம்

(பெ) 1. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற மகளிர் குணங்கள் நான்கனுள் ஒன்று.
one of the four characteristic features of women
2. பேதைமை, கபடமின்மை, credulity, artlessness
3. மென்மை, softness, tenderness, delicacy
4. அறியாமை, ignorance, folly
1.
மடம் என்பது கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை.
சொன்னவுடனே ஒன்றனைப் புரிந்துகொண்டு, அதனை விடாமல் பற்றிக்கொள்ளுதல்.

குன்ற குறவன் காதல் மட மகள்
வரை அர_மகளிர் புரையும் சாயலள் – ஐங் 255/1,2

குன்றத்துக் குறவனின் அன்புக்குரிய மடப்பம் பொருந்திய மகள்,
மலையிலிருக்கும் தெய்வ மகளிரைப் போன்ற சாயலையுடையவள்,

2

எள்ளல் நோனா பொருள் தரல் விருப்பொடு
நாணு தளை ஆக வைகி மாண் வினைக்கு
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே – அகம் 29/20-23

(பிறர்) இகழ்வதைப் பொறுக்காத பொருளீட்டும் விருப்பத்துடன்
மான உணர்வு கட்டிப்போட்டதனால் தங்கி, மாண்புள்ள வினை காரணமாக
(என்)உடம்பு அங்கு இருந்ததே ஒழிய
பேதைமை உள்ள (என்) நெஞ்சம் உன் அருகிலேயேதான் இருந்தது.

பெரும் கவின் பெற்ற சிறு தலை நௌவி
மட கண் பிணையொடு மறுகுவன உகள – மது 275,276

பெரும் அழகைப் பெற்ற சிறிய தலையையுடைய நௌவிமான்
கபடமற்ற கண்ணையுடைய பிணையோடே சுழல்வனவாய் துள்ள,

3

மட நடை ஆமான் கயமுனி குழவி – மலை 500

மென்மையான நடையையுடைய காட்டுப்பசுவின் கன்றும், யானைக்கன்றும்,

4

மடம் பெருமையின் உடன்று மேல் வந்த
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
வீந்து உகு போர்_களத்து ஆடும் கோவே – பதி 56/6-8

அறியாமை மிகுதியால் பகைகொண்டு மேலேறி வந்த
வேந்தர்கள் தம் உடம்பை விட்டு மேலுலகத்துக்குச் சென்று வாழும்படி
இறந்து விழும் போர்க்களத்தில் ஆடுகின்ற அரசன்

மேல்


மடம்படு

(வி) அறியாமைப்படு, assume ignorance

1. அறிவு மடம்படுதல்

அறிவு குறைந்தவர் முன்னே அறிந்தும் அறியாததுபோல் தன் அறிவைக் குறைவாகக் காட்டிக்கொள்வது.

அறிவு மடம்படுதலும் அறிவு நன்கு உடைமையும் – சிறு 216

அறிவு குறைந்தோர் முன்னே அறிவு குறைவுபடுதலையும், (அறிஞர் மாட்டு)அறிவு நன்குடைமையும்,

2. கொடை மடம்படுதல் – யாருக்குக் கொடுக்கிறோம் என்பதில் அறியாமைப்படுதல்

வேண்டியோர், வேண்டாதவர், வலியோர், மெலியோர், புதியோர், பழையோர் எனக் கருதாது யாவருக்கும் கொடுத்தல்

3. படை மடம்படுதல் – யாருடன் போரிடுகிறோம் என்பதில் அறியாமைப்படுதல்.

வீரர் அல்லாதோர், புறமுதுகிட்டோர், புண்பட்டோர், மூத்தோர் எனக் கருதாது யாவரிடத்தும் போரிடல்.
அறிவு மடம்படுதலும், கொடை மடம்படுதலும் சிறந்தவை. படை மடம்படுதல் சிறந்ததன்று.
பேகன் படை மடம்படான் என்கிறார் பரணர்.

கடாஅ யானை கழல் கால் பேகன்
கொடை மடம்படுதல் அல்லது
படை மடம்படான் பிறர் படை மயக்கு_உறினே – புறம் 142/4-6

மதம் மிக்க யானையும், கழல் அணிந்த காலும் உடைய பேகன்
பிறர்க்குக் கொடை அளிக்கும்போது அறியாமையுடையவன், அதுவல்லது
பிறர் படை வந்து போர்செயின் தான் அறியாமைப்படான்.

மேல்


மடமை

(பெ) அறிவின்மை, அறியாமை, stupidity, ignorance

அளியரோ அளியர் தாமே அளி இன்று
ஏதில் பொருள்_பிணி போகி தம்
இன் துணை பிரியும் மடமையோரே – அகம் 43/13-15

(நிச்சயமாய்) இரங்கத்தக்கவராவர் – இரக்கமின்றி
அயல்நாட்டுப் பொருளீட்டும் ஆசையால் பிரிந்து சென்று தம்முடைய
இனிய துணையைப் பிரியும் அறிவில்லாதோர்

தண் பெரும் பவ்வம் அணங்குக தோழி
மனையோள் மடமையின் புலக்கம்
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே – குறு 164/4-6

குளிர்ந்த பெரிய கடல் என்னை வருத்துவதாக! தோழி!
இல்லாள் அறியாமையில் ஊடல்கொள்ளும்
தன்மையுடைவளாய், தலைவனுக்கு நான் ஆகிவிட்டேன் என்றால்.

மேல்


மடர்

(பெ) மடார், வள்ளம், குவளை, cup

கூம்புவிடு மென் பிணி அவிழ்ந்த ஆம்பல்
தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள – புறம் 383/7,8

குவிந்திருந்து விரியும் மெல்லிய அரும்பு மலர்ந்த ஆம்பல் பூவைப்போன்ற
தேன் பரந்துள்ளதாகிய கள் தெளிவை அழகிய மணம் கமழும் மடாரில் பெய்து

மேல்


மடல்

(பெ) 1. வாழை, பனை, தாழை போன்றவற்றின் இலைப்பகுதி,
Flat leaf of plantain, palm and screwpine
2. பனங்கருக்கு, Jagged stem of a palmyra leaf;
3. சோளக்கதிர், வாழைப்பூ முதலியவற்றின் மேலுறை,
sheath of indian corn, plantain flower etc.,
4. தலைவியைப் பெற இயலாத தலைவன் பனங்கருக்கினால் செய்து ஏறும் குதிரை
Horse of palmyra stems on which a thwarted lover mounts to proclaim his grief.

1

படு நீர் சிலம்பில் கலித்த வாழை
கொடு மடல் ஈன்ற கூர் வாய் குவி முகை – நற் 188/1,2

நீர் வளமுடைய மலைச்சரிவில் செழித்து வளர்ந்த வாழையின்
வளைந்த மடல்கள் ஈன்ற கூரிய வாயையுடைய குவிந்த மொட்டு

இறவு அருந்திய இன நாரை
பூ புன்னை சினை சேப்பின்
ஓங்கு திரை ஒலி வெரீஇ
தீம் பெண்ணை மடல் சேப்பவும் – பொரு 204-207

இறவினைத் தின்ற திரண்ட நாரைகள் (இருக்கும்)
பூக்களையுடைய புன்னையின் கொம்புகளில் தங்கின்,
உயர்ந்த அலையின் ஆரவாரத்திற்கு வெருவி,
இனிய பனையின் மடலில் தங்கவும்,

வால் இணர் மடல் தாழை – பட் 118

வெண்மையான பூங்கொத்துக்களையும் மடல்களையுமுடைய தாழையையுடைய

வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை – பெரும் 353,354

வளவிய தோட்டினையுடைய தென்னை மரத்தின் வற்றிய மடலினை வேய்ந்த,
மஞ்சளையுடைய முற்றத்தினையும் மணல் கமழ்கின்ற சுற்றுப்புறங்களையும் உடைய

முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்
கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை – நெடு 23,24

பெரிய அடிப்பகுதியையுடைய பாக்கு மரத்தின் (நீல)மணியைப் போன்ற கழுத்தின்
கொழுத்த மடல்களில் (பாளை)விரிந்த திரட்சியைக் கொண்ட கொத்துக்களில்

காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி – மலை 336

காந்தளின், துடுப்பைப்போன்ற, கமழுகின்ற (வெட்டுவதற்குக்கூரான விளிம்புள்ள)மடலை ஓங்கிப்பாய்ச்சி,

2

தூங்கல் ஓலை ஓங்கு மடல் பெண்ணை
மா அரை புதைத்த மணல் மலி முன்றில் – நற் 135/1,2

தொங்குகின்ற ஓலைகளையும், உயர்ந்து நீண்ட மடல்களையும் கொண்ட பனைமரத்தின்
கரிய அடிமரத்தைப் புதைத்த மணல் மிகுந்துகிடக்கும் வீட்டு முற்றத்தில்

ஒழி மடல் விறகின் கழி மீன் சுட்டு – புறம் 29/14

வீழ்ந்த பனங்கருக்காகிய விறகால் கழிக்கண் மீனைச் சுட்டு

3

குழல் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலை – அகம் 336/1

துளை பொருந்திய தண்டினையுடைய சேம்பினது கொழுவிய மடலிலுள்ள அகன்ற இலையுடன் கூடிய

4

இ நோய்
பொறுக்கலாம் வரைத்து அன்றி பெரிது ஆயின் பொலம் குழாய்
மறுத்து இ ஊர் மன்றத்து மடல் ஏறி
நிறுக்குவென் போல்வல் யான் நீ படு பழியே – கலி 58/20-23

இந்த நோயைப்
பொறுக்கக்கூடிய அளவையும் மீறி இது பெரியதானால், பொன்னால் செய்த குழையினையுடையவளே!
இதற்குப் பதிலாக, இந்த ஊர் மன்றத்தில் மடல் ஏறி
உன் மேல் நிலைநாட்டுவது போல் உள்ளேன் நான், நீ எய்தும் பழியை.

மேல்


மடவ

(வி.மு) அறியாமையுடையன, these are ignorant

மடவ மன்ற தடவு நிலை கொன்றை
கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை நெரிதர
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த
வம்ப மாரியை கார் என மதித்தே – குறு 66

அறியாமையுடையன, நிச்சயமாக! இந்த அகலமாய் நிற்கும் கொன்றை மரங்கள்!
மலைகள் விளங்கும் பாலைநிலத்து அரிய வழியில் சென்றோர் கூறிய
பருவம் இன்னும் வராதபோது, மிகச் செறிவாக
கிளைகளில் சேர்ந்த கொடிபோல் கொத்தாகப் பூத்தன,
காலமல்லாது திடீரென்று தோன்றிய மழையைக் கார்ப்பருவ மழை என்று கருதி.

மேல்


மடவது

1. (வி.மு) அறியாமையுடையது, this is ignorant
– 2. (பெ) பேதைமை, innocence

1

மடவது அம்ம மணி நிற எழிலி
————– ———————- ———————–
நன் நுதல் நீவி சென்றோர் தம் நசை
வாய்த்து வரல் வாரா அளவை
——————————— ———————-
தளி தரு தண் கார் தலைஇ
விளி இசைத்தன்றால் வியல் இடத்தானே – நற் 316

அறியாமையுடையது, இந்த நீலமணி நிறத்தைக்கொண்ட மேகம்;
—————— ———————- ——————–
நல்ல நெற்றியை நீவிவிட்டுச் சென்றோர், தம்முடைய பொருளிட்டும் விருப்பம்
வாய்க்கப்பெற்று திரும்பி வருவதற்கு முன்னரேயே,
—————— ———————– ———————–
மழைத்துளியைப் பெய்யும் குளிர்ந்த கார்காலத்தைச் செய்து
இடிமுழக்கத்தை எழுப்பியது அகன்ற வானப்பரப்பில்.

2

களிறு கெழு தானை பொறையன் கொல்லி
ஒளிறு நீர் அடுக்கத்து வியல்_அகம் பொற்ப
கடவுள் எழுதிய பாவையின்
மடவது மாண்ட மாஅயோளே – அகம் 62/13-16

யானைகள் மிக்க படையினையுமுடைய சேரனது கொல்லி மலையின்
ஒளிறும் அருவியினை உடைய மலைச் சரிவின் அகலமான இடம் பொலிவுபெற
தெய்வமாக அமைத்த கொல்லிப்பாவையினைப் போன்ற,
பேதைமையால் சிறந்த மாநிறத்தவளாகிய தலைவி.

மேல்


மடவந்தனள்

(வி.மு) பல்வேறு பொருள் – கீழேகாண்க, various meanings, refer below

வல் வில் ஓரி கொல்லி குட வரை
பாவையின் மடவந்தனளே
மணத்தற்கு அரிய பணை பெரும் தோளே – குறு 100/5-7

1. உ.வே.சா உரை

வலிய வில்லையுடைய ஓரியினது கொல்லிமலையின் மேல்பக்கத்திலுள்ள
பாவையைப் போல, நான் கண்டு காமுற்ற மகள் மடப்பம் வரப்பெற்றாள்;
ஆயினும், அவளுடைய மூங்கிலைப்போன்ற பெரிய தோள்கள் தழுவுதற்கு அரியனவாகும்

மடவந்தனள் அறியாமையை உடையளாயினள்.யான் அவளைக் கண்டு படுந்துன்பத்தை அறியாளாயினள்
என்பது கருத்து. மடவந்தனள் – வெருவினாள் என்றலுமாம்.

2.பெருமழைப்புலவர் உரை.

வலிய வில்லையுடைய ஓரி வள்ளலினது கொல்லியாகிய மேற்குமலையின்கண் எழுதப்பட்ட
பாவை தன்னைக் கண்டார்க்கு மடமைவரச்செய்யுமா போல, மடமைவரச் செய்பவள் ஆவள்
அவளுடைய மூங்கில் போன்ற பெரிய தோள்கள் தழுவுதற்கு அரியனவாகும்

கொல்லிப்பாவை கண்டாரை மடமையுறுத்துவது போன்று மடமையுறுத்துபவள்.

3. ச.வே.சுப்பிரமணியன் உரை

வல்வில் ஓரி வள்ளலின் மேற்கு மலையின் கொல்லிமலையில் மலையைக் குடைந்து செய்த
கொல்லிப்பாவை போல் அழகும் இளமையும் பொருந்தியவள் என் காதலி.
அவளது மூங்கில் போன்ற பருத்த தோள்கள் தழுவுவதற்கு அரியவை ஆகும்

4. வைதேகி எர்பர்ட் ஆங்கில உரை

The young woman with arms
like bamboo is hard to embrace,
and naive like the Kolli goddess
who resides on the westside
of strong-bowed Ori’s mountain,

மடவந்தனள் she is delicate, she is naive

5. இரா. இராகவையங்கார் உரை

பாவையைப் போல கண்டார்க்கு அறியாமை வருதல் செய்தாள்.

மேல்


மடவம்

(வி.மு) பேதையர் ஆவோம், let us be foolish

அருளும் அன்பும் நீக்கி துணை துறந்து
பொருள் வயின் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே – குறு 20

அருளையும் அன்பையும் கைவிட்டு (தம்)துணையைத் துறந்து
பொருள்தேடுவதற்காகப் பிரிந்துசெல்வோர் வலியோர் ஆயின்
வலியோர் வலியோராகவே இருக்கட்டும்!
பேதையர் ஆவோம் மங்கையராகிய நாமே!

மேல்


மடவர்

(பெ) 1. அறிவில்லாதவர், foolish people
2. பேதையர், innocent people

1

வட புல வாடைக்கு பிரிவோர்
மடவர் வாழி இ உலகத்தானே – நற் 366/11,12

வடநாட்டிலிருந்து வாடை வீசும் காலத்தில் பிரிந்து செல்வோர்
அறிவில்லாதவர் ஆவார், வாழ்க நெஞ்சமே! இந்த உலகத்தில்.

2

இளையரும் மடவரும் உளரே
அலையா தாயரொடு நற்பாலோரே – குறு 246/7,8

இளையவர்களும், மடப்பமுடையோரும் இருக்கின்றனரே!
இப்படி அலைக்கழிக்காத அன்னையரோடு! அவர்கள் புண்ணியம் செய்தவர்கள்!

மேல்


மடவரல்

(பெ) 1. மடப்பம், பேதமை, கபடமின்மை, Simplicity, artlessness, credulity, guilelessness
2. மடப்பம் பொருந்தியவள், a lady possessing simplicity and artlessness

1

மடவரல் மகளிர் பிடகை பெய்த
செவ்வி அரும்பின் பைம் கால் பித்திகத்து – நெடு 39,40

பேதைமை (மிக்க)பெண்கள் — (தம் கையிலுள்ள) பூத்தட்டுகளில் பறித்துப்போட்ட
(மலரும்)பக்குவத்திலுள்ள மொட்டுக்களின் பசிய காலினையுடைய பிச்சியின்

2

ஒண் தொடி மடவரல் கண்டிகும் கொண்க – ஐங் 194/2

ஒளிரும் தோள்வளைகளைக் கொண்ட மடப்பம் பொருந்தியவளைக் காண்பாயாக தலைவனே!

மேல்


மடவள்

(பெ) அறியாமையுடையவள், ignorant woman

மடவள் அம்ம நீ இனி கொண்டோளே
தன்னொடு நிகரா என்னொடு நிகரி
பெரு நலம் தருக்கும் என்ப – ஐங் 67/1-3

அறியாமையுடையவள், நீ இப்பொழுது கொண்டிருப்பவள்;
தன்னோடு ஒப்பிடமுடியாத என்னைத் தனக்கு ஒப்பாகக் கூறிக்கொண்டு
தன்னுடைய பெண்மைநலம் பெரிது என்று பெருமைபேசிக்கொண்டிருக்கிறாள் என்கிறார்கள்;

மேல்


மடவன்

(பெ) அறிவில் குறைந்தவன், he who has limited knowledge

தடவு நிலை பலவின் நாஞ்சில் பொருநன்
மடவன் மன்ற செம் நா புலவீர் – புறம் 140/1,2

பெரிய நிலைமையையுடைய பலாமரத்தை உடைத்தாய நாஞ்சில் மலைக்கு வேந்தன்
அறிவு மெல்லியன் நிச்சயமாக, செவ்விய நாவையுடைய புலவர்களே

மேல்


மடவார்

(பெ) பெண்கள், women

மலையின் இழி அருவி மல்கு இணர் சார் சார்
கரை மரம் சேர்ந்து கவினி மடவார்
நனை சேர் கதுப்பினுள் தண் போது மைந்தர்
மலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ் தாஅய் – பரி 16/31-34

மலையிலிருந்து இறங்கும் அருவிநீர், செழித்த பூங்கொத்துக்களை இடமெல்லாம் கொண்ட
கரைமரங்களைச் சேர்ந்து அவற்றின் நிழலால் அழகுபெற்று, நீராடும் பெண்களின்
அரும்புகள் சேர்ந்த கூந்தலுக்குள் இருக்கும் குளிர்ந்த மலர்களும், மைந்தர்களின்
அகலமான மார்பிலிருந்து உதிர்ந்து விழுந்த மலரிதழ்களும் கலந்து பரவி,

மேல்


மடவீர்

(வி.வே) பெண்களே! Oh, ladies!

மை ஈர் ஓதி மடவீர் நும் வாய்
பொய்யும் உளவோ என்றனன் – அகம் 48/18,19

கரிய நெய்தடவிய கொண்டையினையும் உடைய இளமங்கையரே! உமது வாயில்
பொய்யும் உண்டோ?’ என்றனன்,

மேல்


மடவை

(வி.மு) அறியாமையுடையவனாய்(ளாய்) இருக்கிறாய், you are ignorant

பெரு வரை அடுக்கம் பொற்ப சூர்_மகள்
அருவி இன் இயத்து ஆடும் நாடன்
மார்பு தர வந்த படர் மலி அரு நோய்
நின் அணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து
கார் நறும் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறி மனை வந்தோய்
கடவுள் ஆயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே – நற் 34/4-11

பெரிய மலைச் சரிவுகள் பொலிவுபெற, சூரர மகளிர்
அருவியின் ஓசையே இசையாகக் கொண்டு ஆடுகின்ற நாட்டையுடைய தலைவனின்
முயக்கத்தினால் ஏற்பட்ட துன்பம் மிகுந்த நீங்குதற்கு அரிய இந்தக் காமநோய்
நீ வருத்தியதால் ஏற்பட்டது இல்லை என அறிந்தும், தலைநிமிர்ந்து
கார்காலத்து மலரும் நறிய கடம்பின் இலைகளால் தலைமாலை செய்து சூடிக்கொண்டு
வேலன் வெறியாடி வேண்டிக்கொள்ள வெறிக்களத்துக்கு வந்திருக்கிறாய்!
நீ உண்மையாகவே கடவுளே ஆயினும் ஆகுக,
ஆனால் நீ அறியாமை உடைத்திருக்கிறாய், வாழ்க முருகனே!

பெரும் பெயர் தந்தை நீடு புகழ் நெடு நகர்
யாயொடு நனி மிக மடவை – நற் 162/8,9

மிக்க பொருளையுடைய நின் தந்தையின் பெருமனையின்கண் மனையறத்தால் நீண்ட புகழ்பெற்ற
தாயினன்பு நிழலில் வளர்ந்தவளாதலால் நீ மிகமிக இளமையும் மடமையும் உடையவளாவாய்.

மடவை மன்ற கொண்க வயின்-தோறு
இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும்
நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே
இன மீன் ஆர்ந்த வெண்_குருகு மிதித்த
வறு நீர் நெய்தல் போல
வாழாள் ஆதல் சூழாதோயே – நற் 183/6-11

அறியாமையையுடையாய், தலைவனே! – இடந்தோறும்
துன்புறுத்தி அலைக்கும் ஊதைக்காற்றோடு
நீ இல்லாத தனிமைக்காலத்து வரும் மாலைப்பொழுதும் சேர்ந்துகொள்கிறது;
கூட்டமான மீன்களை நிறைய உண்ட வெண்குருகு மிதித்த
நீரற்ற குளத்தின் நெய்தல் மலர் போல
இவள் உயிர்வாழமாட்டாள் என்பதனை நினைத்துப்பார்க்காத நீ –

மேல்


மடவோய்

(வி.வே) மடப்பத்தையுடவளே!, Oh, ignorant woman!

மை ஈர் ஓதி மடவோய் யானும் நின்
சேரியேனே அயல் இல்லாட்டியேன் – அகம் 386/10,11

கரிய பெரிய கூந்தலையுடைய மடவோளே! யானும் நின்
சேரியில் உள்ளவனே! அயன் மலைக்கு உரியேன்!

மேல்


மடவோர்

(பெ) 1. அறிவில்லாதவர், foolish people
2. மடப்பத்தையுடைய மகளிர், innocent women
3. அறியாமையுள்ளவர், ignorant people

1

உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும்
பிறர்க்கு நீ வாயின் அல்லது நினக்கு
பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே – பதி 73/1-3

அறிவுடையோர் நினைத்துப்பார்த்தாலும், அறிவில்லாதர் நினைத்துப்பார்த்தாலும்
பிறர்க்கு நீ ஒப்புமையாக அமைவதல்லாமல், உனக்குப்
பிறர் ஒப்புமை ஆகாத தனிச் சிறப்பு வாய்ந்த வேந்தனே!

மறுபிறப்பு இல் எனும் மடவோரும் சேரார் – பரி 5/76

மறுபிறப்பு என்பது இல்லையென்று வாதிடும் அறிவற்றோரும் உன்னை ஒருபோதும் அடையமாடார்கள்;

2

மடவோர்
நகாஅர் அன்ன நளி நீர் முத்தம் – சிறு 56,57

மடப்பத்தையுடைய மகளிர்
சிரிப்பு(ப் பல்) போன்ற செறிந்த நீர்மையுடைய முத்தினை,

3

ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்
வளை கை கிணைமகள் வள் உகிர் குறைத்த
குப்பை வேளை உப்பு இலி வெந்ததை
மடவோர் காட்சி நாணி கடை அடைத்து
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்
அழி பசி வருத்தம் வீட – சிறு 135-140

மெலிவடையச்செய்யும் பசியால் வருந்திய, ஒடுங்கி ஒட்டிப்போன, வயிற்றினையும்,
வளையல்(அணிந்த) கையினையும் உடைய கிணைமகள் பெரிய நகத்தால் கிள்ளின
குப்பை(யில் முளைத்த) கீரை உப்பில்லாமல் வெந்ததை,
வறுமையுறுதல் இயல்பென்று அறியாது புறங்கூறுவோர் காணுதற்கு நாணி, தலை வாயிலை அடைத்து,
கரிய பெரிய சுற்றத்துடன் ஒன்றாக இருந்து தின்னும்,
அழிக்கின்ற பசியின் வருத்தங்கள் கெடுமாறு;

மேல்


மடவோள்

(பெ) இளம்பெண், young lady

திரு மணி புரையும் மேனி மடவோள்
யார் மகள்-கொல் இவள் தந்தை வாழியர் – நற் 8/3,4

அழகிய நீலமணி போன்ற மேனியையும் கொண்ட இளையோளாகிய தலைவி
யாருடைய மகளோ? இவளின் தந்தை வாழ்க!

மேல்


மடவோன்

(பெ) அறிவிலி, foolish man

பெரும் தேன் கண்படு வரையில் முது மால்பு
அறியாது ஏறிய மடவோன் போல – குறு 273/5,6

பெரிய தேனிறால் தங்கியிருக்கும் மலைப்பக்கத்தில், பழைய கண்ணேணியின்மேல்
அறியாமல் ஏறிய அறிவிலியைப் போல

மேல்


மடன்

(பெ) பார்க்க : மடம்

கொடும் தாள் முதலை கோள் வல் ஏற்றை
வழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெரும் துறை
இன மீன் இரும் கழி நீந்தி நீ நின்
நயன் உடைமையின் வருதி இவள் தன்
மடன் உடைமையின் உவக்கும் யான் அது – குறு 324/1-5

வளைந்த கால்களையுடைய முதலையின் கொல்லுதலில் வல்ல ஆணானது
வழியில் பிறர் செல்வதை இல்லாமற்செய்யும் கடற்கரைச் சோலையுள்ள அழகிய பெரிய துறையில்
திரளான மீன்களுள்ள கரிய கழியை நீந்திக் கடந்து, நீ உனது
அன்புடைமையால் வருகிறாய்; இவள் தனது
அறியாமை உடைமையால் மகிழ்கிறாள்;

மாதரும் மடனும் ஓராங்கு தணப்ப
நெடும் தேர் எந்தை அரும் கடி நீவி
இருவேம் ஆய்ந்த மன்றல் இது – குறி 19-21

(என் பெற்றோரின்)விருப்பமும் (எனது)மடனும் ஒருசேர நீங்கிப்போக,
நெடிய தேரையுடைய என் தந்தையின் அரிய காவலை(யும்) மீறி,
தலைவனும் யானுமே ஆய்ந்துசெய்த மணம் இது

மடன் – கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமை என்னுமொரு பெண்மைப் பண்பு

அன்பும் மடனும் சாயலும் இயல்பும் – அகம் 225/1

அன்பு – ஒருவரையொருவர் இன்றியமையாக்கேதுவாகிய காதல்
மடன் – ஒருவர்குற்றம் ஒருவர் அறியாமை
சாயல் – மென்மைத்தன்மை
இயல்பு – ஒழுக்கம்

மேல்


மடா

1. (வி.எ) செய்யாவென்னும் வாய்பாட்டு வினையெச்சம், மடுத்து, feeding,
– 2. (பெ) அகன்ற மண்குடம், large earthen vessel

1

கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
உறாஅ வறு முலை மடாஅ
உண்ணா பாவையை ஊட்டுவோளே – ஐங் 128

கண்கூடாகப் பார்த்தேன் அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை,
நன்கு வளராத வறிய தன் முலையை வாயில் வைத்து,
உண்ணாத பாவைக்கு ஊட்டிக்கொண்டிருந்தவளை –

2

அடை சேம்பு எழுந்த ஆடு_உறும் மடாவின் – பதி 24/20

இலையையுடைய சேம்பினைப் போன்ற அடுப்பிலிடப்பட்ட பெரிய பானையினையும்,

மடாஅ நறவு உண்டார் போல மருள
விடாஅது உயிரொடு கூடிற்று என் உண்கண்
படாஅமை செய்தான் தொடர்பு – கலி 147/54-56

பெரிய பானையளவு மது உண்டவர் போல, என்னை மயங்க
விடாமல் என் உயிரோடு கலந்துவிட்டது, என் மைதீட்டிய கண்களை
உறங்காமற் செய்தவனின் நட்பு;

மேல்


மடாய்

(வி.வே) மடை என்பதன் விளிவேற்றுமை, மடை – ஆபரணங்களின் கடைப்பூட்டு
Clasp, as of an ornament

கொக்கு உரித்து அன்ன கொடு மடாய் நின்னை யான்
புக்கு அகலம் புல்லின் நெஞ்சு ஊன்றும் – கலி 94/18,19

கொக்கை உரித்ததைப் போன்ற வளைந்த மூட்டுவாய் போன்ற கூனியே! உன் கைகளுக்குள் நான்
புகுந்து உன் மார்பினைத் தழுவினேனாயின் என் நெஞ்சிலே உன் கூன் அழுந்தும்

மேல்


மடி

1. (வி) 1. தொழில் செய்யாதிரு, சோம்பியிரு, be indolent, inactive
2. மடங்கு, வளை, be bent, folded
3. இற, முடிவுக்கு வா, die, come to an end
4. உறங்கு, sleep
5. வீழ், fall down
6. ஊக்கம் குன்றியிரு, be disprited, dull
7. அற்றுப்போ, இல்லாமல்போ, cease to exist
8. சுருங்கு, கரை, shrink, contract
9. தங்கு, stay
10. மற, forget
11. வருந்து, feel sorry
12. மடக்கு, வளை, bend, fold
– 2. (பெ) 1. மடிப்பு, fold
2. மடிப்பு உள்ள துணி, folded cloth
3. வயிறு, belly, stomach
4. சோம்பல், Sloth, idleness, indolence

1.1

வான் மடி பொழுதில் நீர் நசைஇ குழித்த
அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி – பெரும் 107,108

மழை பெய்தலைத் தவிர்ந்த காலத்தில் நீரை விரும்பித் தோண்டிய
பள்ளங்களைச் சூழ்ந்த மூடுகுழிகளின் அகத்தே மறைந்து ஒதுங்கி,

தேம் பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து
சேமம் மடிந்த பொழுதின் வாய் மடுத்து
இரும் புனம் நிழத்தலின் சிறுமை நோனாது – குறி 155-157

தேனால் சமைந்த கள் தெளிவை உண்டு, மகிழ்ச்சி மிக்கு,
காவல்தொழிலில் சோம்பியிருந்த பொழுதில், (யானை தன் கையால் தினையை உருவி)வாயில் செலுத்தி(உண்டு)
பெரிய புனத்தை அழித்துவிடுகையினால், (தம்)மனத் தாழ்மையைப் பொறுக்கமாட்டாமல்,

உவவு மடிந்து உண்டு ஆடியும் – பட் 93

உவாநாள்(பௌர்ணமி/அமாவாசை) ஓய்வுஅனுசரித்து உண்டும் விளையாடியும்;

ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்து அன்ன – சிறு 154

உயர்ந்த தன்மையையுடைய ஒட்டகம் உறக்கத்தே கிடந்தாலொத்த

1.2

பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில் – பெரும் 199

பிடியின் வாயை ஒத்த, மடங்கிய வாயையுடைய கலப்பையின்

மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் – அகம் 50/11

(நம்)வீட்டைச் சேர்ந்துள்ள பனைமரத்தில், வளைந்த அலகையுடைய அன்றில் பறவைகள்

1.3

ஒருவேன் ஆகி
உலமர கழியும் இ பகல் மடி பொழுதே – நற் 109/9,10

யானும் தன்னந்தனியாய் ஒருத்தியாக இருந்து
வருத்தமுறும்படியாகக் கழிந்துபோகும் இந்தப் பகல் முடியும் அந்திப்பொழுது.

1.4

நள்ளென் கங்குல் புள் ஒலி கேள்-தொறும்
தேர் மணி தெள் இசை-கொல் என
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே – நற் 287/9-11

நள்ளென்னும் ஓசையினையுடைய இரவில் பறவைகளின் ஒலி கேட்கும்போதெல்லாம்
அவனது தேர் மணியின் தெளிந்த ஓசை அல்லவா என்று
ஊரெல்லாம் உறங்கும் இரவிலும் துயிலை மறந்தது.

1.5

இரும் களிற்று இன நிரை ஏந்தல் வரின் மாய்ந்து
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன – குறு 180/2,3

பெரிய களிற்றுயானைகளின் கூட்டத்துக்குத் தலைவனாகிய களிறு வந்துபுகுந்ததால், அழிந்து
பாத்தியில் விழுந்துகிடக்கும் கரும்பின் நடுவே நிற்கும் ஒற்றைக் கரும்பு போல

ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்து அன்ன – சிறு 154

உயர்ந்த தன்மையையுடைய ஒட்டகம் உறக்கத்தே கிடந்தாலொத்த

பிடி மடிந்து அன்ன குறும் பொறை மருங்கின் – அகம் 269/6

பெண்யானைகள் படுத்துக்கிடந்தாலொத்த குன்றுகளின் பக்கத்தே

1.6

ஈன்று கான் மடிந்த பிணவு பசி கூர்ந்து என – நற் 29/3

குட்டிகளை ஈன்று காட்டினில் ஊக்கம் குன்றியிருக்கும் தன் பெண்புலி பசியால் வாடியது என

1.7

இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறி – நற் 257/8

வழிச்செல்வோர் அற்றுப்போன நீர் நிறைந்த பள்ளங்கள் உள்ள சிறிய வழியில்,

1.8

தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடிய
கனையல் அம் குரல கால் பரி பயிற்றி
படு மணி மிடற்ற பய நிரை ஆயம் – அகம் 54/7-9

கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்றுகள் (தம்) பெருத்த மடியைக் குடித்து அவை சுருங்கவேண்டி
கனைக்கின்ற குரலுடனே காலால் தாவித் தாவிப் பாய்ந்து
ஒலிக்கும் மணிகள் கழுத்தில் கட்டப்பட்ட பால்பசுக்களாகிய கூட்டம்

1.9

மல்லல் பேரூர் மடியின் மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி
மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர் – பெரும் 254-256

வளன் மிக்க பெரிய ஊரின்கண் தங்குவீராயின், தொழில் ஒழிந்திராத
உழவர் தந்த வெண்மையான நெற்சோற்றை
மனையில் வாழும் பெட்டைக்கோழி(யைக்கொன்று) வாட்டிய பொரியலோடு பெறுவீர்

திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்
இல் எலி வல்சி வல் வாய் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதக குழறும் – அகம் 122/12-14

திங்கள் மேற்கு மலையினை அடைந்து மிக்க இருள் தங்கின்
இல்லிலுள்ள எலியை இரையாகக் கொண்ட வலிய வாயினதான கூகையின் சேவல்
பேய்கள் திரியும் நள்ளிரவில் அழிவு உண்டாகக் குழறும்

1.10

வைகு தொழில் மடியும் மடியா விழவின்
யாணர் நன்னாட்டு – புறம் 212/5,6

செய்கின்ற தொழில் மறந்துபோகும் அளவுக்கு ஓய்வில்லாமல் நடக்கிற விழாவினையும்
புது வருவாயும் உளதாகிய சோழநாட்டு

1.11

வடிய வடிந்த வனப்பின் என் நெஞ்சம்
இடிய இடை கொள்ளும் சாயல் ஒருத்திக்கு
அடியுறை காட்டிய செல்வேன் மடியன்-மின்
அன்னேன் ஒருவனேன் யான் – கலி 140/9-12

சிறந்த உருவத்தைச் செத்துக்கியெடுத்த அழகினையுடைய, என் நெஞ்சம் என்ற அரண்
இடிந்துபோகும்படி நடுவே வந்து என்னை ஆட்கொள்ளும் சாயலையுடைய ஒருத்திக்கு
அடிமை என்பதை உலகுக்குக் காட்டுவதற்குச் செல்கிறேன், நீங்கள் எனக்காக வருந்தவேண்டாம்,
நான் அப்படிப்பட்ட ஒருவன்தான்;

1.12

முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின்
யானை கை மடித்து உயவும்
கானமும் இனிய ஆம் நும்மொடு வரினே – குறு 388/5-7

உலர்ந்த கிளையைப் பிளக்கும் வலிமை இல்லாததினால்
யானை தன் துதிக்கைகையை மடக்கிக்கொண்டு வருந்தும்
பாலைநிலமும் இனியதாகும் உம்மோடு வந்தால்-

2.1

துறை போகு அறுவை தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவி சிறு வெள்ளாங்குருகே – நற் 70/2,3

சலவைத்துறையில் மிதக்கும் வெள்ளை ஆடையின் தூய மடிப்பு போன்ற
நிறம் விளங்கிய சிறகினை உடைய சிறிய வெள்ளைக் குருகே!

2.2

குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து – மது 520

சிறியனவும் பெரியனவுமாகிய மடிப்புடைவைகளைக் கொண்டுவந்து விரித்து,

தோடு அமை தூ மடி விரித்த சேக்கை – நெடு 135

மலரிதழ்கள் வைத்து(மணமூட்டப்பட்ட)தூய மடித்தது விரித்த படுக்கையின்கண்,

2.3

அவன் மடி மேல் வலந்தது பாம்பு – பரி 4/43

அவனது வயிற்றின் மேல் கச்சாகக் கட்டப்பட்டிருப்பதும் பாம்பு,

2.4

மடி இலான் செல்வம் போல் மரன் நந்த – கலி 35/1

சோம்பல் இல்லாதவனின் செல்வத்தைப் போல் மரங்கள் தழைத்துச் சிறக்க

மேல்


மடிவு

(பெ) சோம்புதல், being idle

கொடியோர் தெறுதலும் செவ்வியோர்க்கு அளித்தலும்
ஒடியா முறையின் மடிவு இலை ஆகி – புறம் 29/9,10

தீயோரைத் தண்டஞ்செய்தலும், நடுவுநிலைமையுடையோர்க்கு அருள்பண்ணுதலுமாகிய
இடையறாத முறைமையால் சோம்புதலையுடையை அல்லை ஆகி

மேல்


மடிவை

(பெ) தழை, foliage

அகலுள் ஆங்கண் அம் பகை மடிவை
குறும் தொடி மகளிர் குரூஉ புனல் முனையின் – அகம் 226/3,4

அகன்ற ஊரிடத்தே அழகிய பகுப்பையுடைய தழையுடையினையும்
குறிய வளையல்களையும் உடைய மகளிர் நிறமுள்ள புனல்விளையாட்டை வெறுப்பின்

அலர்ந்த ஆம்பல் அக மடிவையர் – பதி 27/3

மலர்ந்த ஆம்பல் பூவின் அக இதழை மடித்துவைத்துத் தைத்த தழையாடை அணிந்தவராய்

மேல்


மடு

(வி) 1. ஊட்டு, feed
2. செலுத்து, நுழை, cause to go or enter
3. தீ மூட்டு, ignite, kindle
4. சேர்த்துவை, unite, join
5. ஊடுருவக்குத்து, gore, pierce, thrust
6. மேற்கொள், undertake
7. அமிழ்த்து, immerse, cause to sink
8. கொண்டுபோ, எடுத்துச்செல், take with
9. நுழை, புகு, enter
10. உணவுபடை, பலியுணவு செலுத்து, offer food, offer oblation to deity
11. துயில்கொள், go to sleep
12. உண், அருந்து, eat, drink
13. விழுங்கு, devour

1

கரும் கோட்டு எருமை செம் கண் புனிற்று ஆ
காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும்
நுந்தை நும் ஊர் வருதும் – ஐங் 92/1-3

கரிய கொம்பினையுடைய எருமையின் சிவந்த கண்ணையுடைய அண்மையில் ஈன்ற பெண்ணெருமை
தன் அன்புக்குரிய கன்றினுக்குப் பால் சுரக்கும் தன் முலையைத் தந்து ஊட்டிவிடும்
உனது தந்தை இருக்கும் உன் ஊருக்கு வருகிறேன்,

2

கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும்
ஆரை சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரன் உடை நோன் பகட்டு அன்ன – புறம் 60/7-9

கழியின் நீரால் விளைந்த உப்பை முகந்துகொண்டு மலைநாட்டை நோக்கிச் செலுத்துகின்ற
ஆரையுடைய சகடையினது குழிப்பாய்தலைத் தீர்த்துச்செலுத்தும்
வலியையுடைய பாரம் பொறுக்கும் பகட்டை ஒக்கும்

சேமம் மடிந்த பொழுதின் வாய் மடுத்து
இரும் புனம் நிழத்தலின் சிறுமை நோனாது – குறி 156,157

காவல்தொழிலில் சோம்பியிருந்த பொழுதில், (யானை தன் கையால் தினையை உருவி)வாயில் நுழைத்து(உண்டு)
பெரிய புனத்தை அழித்துவிடுகையினால், (தம்)மனத் தாழ்மையைப் பொறுக்கமாட்டாமல்,

3

காம்பு தலைமணந்த கல் அதர் சிறு நெறி
உறு பகை பேணாது இரவின் வந்து இவள்
பொறி கிளர் ஆகம் புல்ல தோள் சேர்பு
அறு_கால்_பறவை அளவு இல மொய்த்தலின்
கண் கோள் ஆக நோக்கி பண்டும்
இனையையோ என வினவினள் யாயே
அதன் எதிர் சொல்லாள் ஆகி அல்லாந்து
என் முகம் நோக்கியோளே அன்னாய்
யாங்கு உணர்ந்து உய்குவள்-கொல் என மடுத்த
சாந்த ஞெகிழி காட்டி
ஈங்கு ஆயினவால் என்றிசின் யானே – நற் 55/2-12

மூங்கில்கள் பின்னிக்கிடக்கும் கற்பாறை நெறியாகிய சிறிய வழியில்,
நேரக்கூடிய தீங்குகளை எண்ணிப்பாராமல், இரவில் வந்து இவளின்
புள்ளித்தேமல் படர்ந்த மார்பகத்தைத் தழுவிச்செல்ல, இவளின் தோளைச் சேர்த்து
வண்டினங்கள் அளவில்லாதனவாய் மொய்க்க,
கண்ணால் கொல்பவளைப் போல் பார்த்து, “இதற்கு முன்பும்
இவ்வாறு மொய்க்கப்பெற்றாயோ” எனக் கேட்டாள் தாய்;
அதற்கு மறுமொழி சொல்லாதவளாய் மனம்வருந்தி
என் முகத்தை நோக்கினாள் தலைவி; “அன்னையே”
எப்படி ஆராய்ந்து இதனின்றும் தப்பிப்பாள் என எண்ணி, தீ மூட்டிய
சந்தனக் கொள்ளிக்கட்டையைக் காட்டி,
“இதனால்தான் இப்படி ஆயிற்று” என்றேன் நான்.

4

கொல் வினை பொலிந்த கூர் வாய் எறி_உளி
முகம் பட மடுத்த முளி வெதிர் நோன் காழ் – குறு 304/1,2

கொல்லன் தொழிலால் பொலிவுபெற்ற கூரிய வாயையுடைய எறியுளி
முகத்தில் படும்படி சேர்த்துக்கட்டப்பட்ட உலர்ந்த மூங்கிலின் வலிமையுள்ள கழியை

5

முறம் செவி மறை பாய்பு முரண் செய்த புலி செற்று
மறம் தலைக்கொண்ட நூற்றுவர்_தலைவனை
குறங்கு அறுத்திடுவான் போல் கூர் நுதி மடுத்து அதன்
நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை – கலி 52/1,4

தன் முறம் போன்ற செவியின் மறைவிடத்தில் பாய்ந்து தாக்கிய புலியைச் சினந்து,
அறத்தை விட்டு மறத்தை மேற்கொண்ட நூற்றுவர் தலைவனான துரியோதனனின்
தொடையை முறித்திட்ட வீமசேனன் போல் தன் கூரிய கொம்புமுனையால் குத்தி, அதன்
மருமத்தைக் கிழித்துத் தன் பகையைத் தீர்த்துக்கொண்ட நீண்ட கொம்புகளையுடைய அழகிய யானை,

6

எல்லு தொழில் மடுத்த வல் வினை பரதவர் – அகம் 340/19

பகலிலே மீன் பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட வலிய செயலையுடைய மீன்பிடிப்போர்

7

அழல் எழு தித்தியம் மடுத்த யாமை
நிழலுடை நெடும் கயம் புகல் வேட்டாங்கு – அகம் 361/11,12

அழல் ஓங்கிய வேள்விக்குண்டத்தின் கண் ஆழ இடப்பெற்ற யாமை
நிழல் பொருந்திய பெரிய பொய்கையின்கண் போதலை விரும்புவது போல

8

அறியா தேஎத்து அரும் சுரம் மடுத்த
சிறியோற்கு ஒத்த என் பெரு மட தகுவி – அகம் 369/20,21

அறியப்படாத தேயத்தின்கண் அரிய சுர நெறியில் கொண்டுபோன
இளையானுக்குப் பொருந்திய பெரிய மடப்பமும் தகுதியும் உடைய என் மகள்

9

வையை மடுத்தால் கடல் என தெய்ய – பரி 20/42

வையை கடலில் சென்று புகுந்தாற்போல

10.

சிறு முத்தனை பேணி சிறு சோறு மடுத்து நீ
நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ – கலி 59/20,21

ஒரு பாவைப்பிள்ளையைச் செய்து, அதனைப் பேணி, அதற்கு மணமுடிக்க விளையாட்டாகச் சோறு சமைத்துப்
படைத்து, நீ
நறிய நெற்றியையுடைய தோழியருடன் மகிழ்ந்திருக்கும் நோன்பின் பயன் உனக்கு வந்து பொருந்துமோ?

ஒண் சுடர் விளக்கம் முந்துற மடையொடு
நன் மா மயிலின் மென்மெல இயலி
கடும் சூல் மகளிர் பேணி கைதொழுது
பெரும் தோள் சாலினி மடுப்ப ஒருசார் – மது 607-610

ஒளிரும் சுடரையுடைய (நெய்)விளக்கு முற்பட, உண்டிகளோடு,
நல்ல பெரிதான மயில் போல மெள்ள மெள்ள நடந்து,
முதிர்ந்த சூல்கொண்ட மகளிரைக் காத்து, கைகுவித்துத் தொழுது,
பெரிய தோளினையுடைய இறைவாக்குப்பெண் பலியுணவுகொடுக்க – ஒருபக்கத்தே,

11.

பாடு ஆன்று அவிந்த பனி கடல் புரைய
பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்ப
பானாள் கொண்ட கங்குல் இடையது – மது 629-631

ஒலி நிறைந்து அடங்கிய குளிர்ந்த கடல் போல,
படுக்கையில் துயில்கொள்வோர் கண் இனிதாகத் துயில்கொள்ள
நடுநிசியைக் கழித்த இரவின் இடையாமத்தே

12

மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும்
மகிழ்ந்து இனிது உறைமதி பெரும – மது 780,781

மணம் நாறுகின்ற கள்தெளிவைத் தர அதனைப் பருகி, நாள்தோறும்
மகிழ்ச்சி எய்தி இனிதாக இருப்பாயாக, பெருமானே,

13

திங்களுள் தோன்றி இருந்த குறு முயால்
எம் கேள் இதன் அகத்து உள்_வழி காட்டீமோ
காட்டீயாய் ஆயின் கத நாய் கொளுவுவேன்
வேட்டுவர் உள்_வழி செப்புவேன் ஆட்டி
மதியொடு பாம்பு மடுப்பேன் மதி திரிந்த
என் அல்லல் தீராய் எனின் – கலி 144/18-23

திங்களுக்குள் தோன்றியிருக்கும் சின்ன முயலே!
என் காதலன் இந்த உலகத்தில் இருக்கும் இடத்தைக் காட்டுவாயா?
காட்டாவிட்டால் வேட்டை நாயை உன்மீது ஏவிவிடுவேன்,
வேடர்கள் இருக்குமிடம் சென்று அவரிடம் அறிவித்துவிடுவேன், படமெடுக்கச் செய்து
பாம்பினை, திங்களுடன் உன்னையும் விழுங்க அனுப்புவேன் – மதி மாறிப்போயிருக்கும்
என் அல்லலைத் தீர்த்துவைக்காவிட்டால்,

மேல்


மடை

1. (வி) மடு, ஊட்டு, அருத்து, feed, make to drink
– 2. (பெ) 1. பலியுணவு, oblation of food to a deity
2. மடுத்தல், உண்ணுதல், பருகுதல், the act of eating / drinking
3. ஆபரணங்களின் மூட்டுவாய், Clasp of an ornament;
4. மதகு, Shutters of a sluice
5. உருளையான பொருள்களின் பொருத்துவாய், joint as in a spherical objects
6. மடுத்தல், தடுத்துநிறுத்தல், obstructing

1

ஓங்கு நிலை தாழி மல்க சார்த்தி
குடை அடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலை – அகம் 275/1-3

உயர்ந்த நிலையினதாகிய சாடியில் நிறைய அடைவித்து
பனக்குடையால் முகந்த நீரினை மடுத்தவளாய்ச் சொரிந்து வளர்த்த
வயலைக் கொடி படர்ந்த பந்தரில்

2.1

தெய்வ மடையின் தேக்கு இலை குவைஇ நும்
பை தீர் கடும்பொடு பதம் மிக பெறுகுவிர் – பெரும் 104,105

– தெய்வங்களுக்கு இட்டுவைத்த பலியுணவுபோலத் தேக்கின் இலையில் குவிக்கையினால், உம்முடைய
பசுமை(வளமை) தீர்ந்த சுற்றத்தோடு அவ்வுணவினை மிகப் பெறுவீர்;

2.2

இரு மடை கள்ளின் இன் களி செருக்கும் – நற் 59/5

மிகுதியாகப் பருகுதலையுடைய கள்ளின் இனிய மயக்கத்தாலே செருக்குண்டு

2.3

மடை மாண் நுண் இழை பொலிய தொடை மாண்டு
முத்து உடை சாலேகம் நாற்றி – நெடு 124,125

மூட்டுவாய் சிறந்துவிளங்கும் நுண்ணிய நூல் அழகுபெறும்படி, (அதனைத்)தொடுத்தல் சிறப்புற அமைந்து
முத்துக்களை உடைய (தொடர் மாலைகளைப்)பலகணிகள்(போன்று) தொங்கவிட்டு

மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம்
மடை செறி முன்கை கடகமொடு ஈத்தனன் – புறம் 150/20,21

மார்பிற் பூணப்பட்ட விளங்கிய முத்து வடங்களையுடைய ஆரத்தை
கொளுத்துச் செறிந்த முன்கைக்கணிந்த கடகத்துடனே தந்தனன் (கொளுத்து = ஆபரணங்களின் மூட்டுவாய்)

2.4.

படை மாண் பெரும் குள மடை நீர் விட்டு என
கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை – நற் 340/3,4

சிறப்பாகச் செய்யப்பெற்ற பெரிய குளத்தின் மடை நீரைத் திறந்துவிட,
வாய்க்காலை ஒட்டிச் சென்று மடைநீரை எதிர்கொண்ட திரண்ட கொம்பினையுடைய வாளை மீன்

2.5

மடை மாண் செப்பில் தமிய வைகிய
பெய்யா பூவின் மெய் சாயினளே – குறு 9/2,3

அழகிய பொருத்துவாய் அமைந்த செம்பினுள் தனித்து இருக்கும்
சூடாத பூவைப் போல உடல் மெலிந்தாள்;

செறி மடை வயிரின் பிளிற்றி – அகம் 40/15

செறிந்த மூட்டுவாயினை உடைய கொம்புவாத்தியம் போல் பிளிற்றிப்

மடை அமை திண் சுரை மா காழ் வேலொடு – அகம் 119/13

மூட்டுவாய் அமைந்த திண்ணிய சுரையினையும் கரிய தண்டினையுமுடைய வேலே துணையாக

செறி மடை அம்பின் வல் வில் கானவன் – அகம் 282/2

மூட்டுவாய் செறிந்த அம்பினையும் வலிய வில்லினையுமுடைய வேட்டுவன்

2.6

மடை செலல் முன்பின் தன் படை செல செல்லாது
அரு வழி விலக்கும் எம் பெரு விறல் போன்ம் – அகம் 248/8,9

பகைவர் படையைத் தடுப்பதற்குச் செல்லும் ஆற்றல் வாய்ந்த தன் படை மறவர் புறங்காட்டி ஓடிவிட, தான் மட்டும்
ஓடாமல்
பகைவர் வரும் வழியில் தடுத்து நிற்கும் எம் வலிய வீரனைப் போல்

மேல்


மண்

(பெ) 1. நிலம், நிலத்தின் மேற்பரப்பு, soil, earth
2. நாடு, country
3. உலகம், பூமி, earth
4. பூமியிலுள்ளோர், world
5. மார்ச்சனை, மத்தள முதலியவற்றிற் பூசும் சாந்து,
Paste smeared on the head of a drum for toning it

1

மண் திணி ஞாலம் விளங்க – நற் 153/2

செறிவான நிலத்தையுடைய இந்த உலகம் ஒளிர்ந்துவிளங்க

பைம் சாய் கொன்ற மண் படு மருப்பின்
கார் ஏறு பொருத கண் அகன் செறுவின் – பெரும் 209,210

பசிய கோரையை (அடியில்)குத்தி எடுத்த மண் படிந்த கொம்பினையுடைய
கரிய ஆனேறுகள் பொருத இடமகன்ற வயல்களில்,

2

தென் புல காவலர் மருமான் ஒன்னார்
மண் மாறு கொண்ட மாலை வெண்குடை – சிறு 63,64

தென்னாட்டின் காவலருடைய குடியிலுள்ளானும்; பகைவருடைய
நிலத்தை மாறுபாட்டால் கைக்கொண்ட, (முத்து)மாலை அணிந்த வெண்கொற்றக்குடையினையும்

3

குன்று தலைமணந்த மலை பிணித்து யாத்த மண்
பொதுமை சுட்டிய மூவர் உலகமும் – புறம் 357/1,2

குன்றுகளோடு கூடிய மலைகளைத் தன்பாற் பிணித்துக்கட்டி நிற்கும் மண்ணுலகத்தில்
பொதுவெனக் கருதப்பட்ட மேவேந்தருடைய நாடு மூன்றையும்

4

மண் நாண புகழ் வேட்டு – புறம் 384/15

உலகத்திலுள்ளோர் கண்டு நாணும்படியாகப் புகழைச் செய்து

5

மண் அமை முழவின் பண் அமை சீறியாழ் – பொரு 109

மார்ச்சனை அமைந்த முழவினோடே பண் (நன்கு)அமைந்த சிறிய யாழையுடைய

மேல்


மண்டாத

(பெ) 1. விரும்பாதன, words of disliking
2. பொருந்தாதன, unfitting words

1

கண்டேன் நின் மாயம் களவு ஆதல் பொய் நகா
மண்டாத சொல்லி தொடாஅல் – கலி 90/1,2

“கண்டேன், உன் வஞ்சகச் செயல்கள் மறைவாக நடைபெறுவதை; பொய்யாகச் சிரித்து
நான் விரும்பாதவற்றைச் சொல்லி என்னைத் தொடாதே!

2

மண்டாத கூறி மழ குழக்கு ஆகின்றே – கலி 108/21

பொருந்தாதவற்றைக் கூறிச் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கின்றாய்!

மேல்


மண்டிலம்

(பெ) 1. சூரியன், sun
2. மண்டலம், நாட்டின் பெரும்பகுதி, division of a country
3. நிலம், உலகம், earth
4. கண்ணாடி, mirror
5. சந்திரன், moon
6. சூரியப்பாதையின் வான வெளிப்பகுதி, space around sun’s path
7. வட்டமான பாதை, circular path
8. வட்டம், circle

1

பகல் செய் மண்டிலம் பாரித்து ஆங்கு – பெரும் 442

பகற்பொழுதைச் செய்யும் ஞாயிறு தன் கதிர்களைப் பரப்பித் தோன்றினாற் போல,

2

வியன் கண் முது பொழில் மண்டிலம் முற்றி – மது 190

அகன்ற இடத்தையுடைய பழைய நாவலந்தீவின் நாடுகளை நின்னதாக வளைத்து

3

கடல் சூழ் மண்டிலம் பெறினும்
விடல் சூழலன் யான் நின் உடை நட்பே – குறு 300/7,8

கடல் சூழ்ந்த நிலத்தைப் பெற்றாலும்
விட்டுப் பிரிவதை எண்ணிப்பார்க்கமாட்டேன் – உனது நட்பினை

4

நிழல்_காண்_மண்டிலம் நோக்கி
அழல் புனை அவிர் இழை திருத்துவாள் குறிப்பும் – பரி 21/23,24

தன் உருவத்தைக் காட்டும் கண்ணாடியைப் பார்த்து,
தீயினை அணிந்துகொண்டது போன்ற ஒளிவிடும் தன் அணிகலன்களைத் திருத்திக்கொள்வாளின் மெய்ப்பாடும்,

5

இவட்கே செய்வு_உறு மண்டிலம் மையாப்பது போல்
மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே – கலி 7/7,8

ஆனால் இவளுக்கோ, செம்மையாகச் செய்யப்பட்டது போன்ற முழுநிலவில் மேகம் படர்வது போல்
மறு இல்லாத ஒளியையுடைய முகத்தில் பசப்பு பரவத் தொடங்கிற்று;

6

செஞ்ஞாயிற்று செலவும் அஞ்ஞாயிற்று
பரிப்பும் பரிப்பு சூழ்ந்த மண்டிலமும்– புறம் 30/2-4

சிவந்த ஞாயிற்றின் வீதியும், அஞ் ஞாயிற்றின்
இயக்கமும், அந்த இயக்கத்தால் சூழப்படும் வானவெளிப்பகுதியும்

7

கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின்
அடிபடு மண்டிலத்து ஆதி போகிய
கொடி படு சுவல இடுமயிர் புரவியும் – மது 389-391

(கோலைக்)கொண்ட வலவன் தான் பயிற்றுவித்தைக் கூறியபடி ஓட்டலின்,
தடம் பதிந்த வட்டமான பாதைகளில் ஆதிஎன்னும் ஒட்டத்தில் ஓடின
ஒழுங்குபட்ட பிடரிமயிரினையும், இடுமயிரினையும் (சவரி முடி)உடைய குதிரைகளும்

8

பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப – அகம் 269/17,18

ஓசை பரந்து எழும் பெரிய வாய் உள்ள வட்டத்தையுடைய
ஊதுகொம்பினிடத்து எழுந்த தெளிந்த இசை ஒலிக்க

மேல்


மண்டு

(வி) 1. படி, அடியில்தங்கு, settle as sediment
2. அழுந்து, அமிழ், புதைபடு, go down, sink
3. ஆர்வத்துடன் உண்/பருகு, eat/drink greedily
4. முனைப்பு கொள், உக்கிரமாகு, vehement, intense
5. ஊடுறுவு, உட்செலுத்து, pierce, thrust in
6. மிகு, அதிகமாகு, abound in, increase
7. விரைந்து செல், rush, move swiftly
8. நெருங்கித்தாக்கு, press upon, close in
9, எதிர், oppse, resist
10. நெருங்கித்திரள், அடர்த்தியாய்க்கூடு, flock densely, throng
11. அடைசலாய் இரு, be crowded
12. கூடு, இணை, சேர், join
13. சேர்த்து இணை, insert and fasten

1

உகிரும் கொடிறும் உண்ட செம் பஞ்சியும்
நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட
இலையும் மயிரும் ஈர்ம் சாந்து நிழத்த – பரி 6/17-19

நகத்திலும், கன்னங்களிலும் பூசப்பட்ட செம்பஞ்சிக்குழம்பும்,
முலைகளில் அணிந்த குங்குமக் குழம்பும் மிகுதியாய் வண்டல் போன்று படிந்து தோன்ற,
தளிரால் செய்யப்பட்ட படலைமாலையும், கூந்தலும், குளிர்ந்த சந்தனத்தை அழிக்க,

2

பொய்கை வாயில் புனல் பொரு புதவின்
நெய்தல் மரபின் நிரை கள் செறுவின்
வல் வாய் உருளி கதுமென மண்ட
அள்ளல் பட்டு துள்ளுபு துரப்ப
நல் எருது முயலும் அளறு போகு விழுமத்து
சாகாட்டாளர் கம்பலை – பதி 27/9-14

நெய்தல் பூக்களை மொய்க்கும் வழக்கமுடைய கூட்டமான வண்டுகளைக் கொண்ட வயல்வழிச் சென்ற
வலிமையான மேற்புறத்தையுடைய சக்கரம் திடீரென்று அழுந்திவிடுதலால்
சேற்றில் மாட்டிக்கொள்ள, பதைப்புடன் முடுக்கிவிடப்பட்ட
நல்ல எருதுகள் இழுப்பதற்கு முயலுகின்ற அந்த, சேற்றிலிருந்து மீளும் சிரமத்தின்போது
வண்டியை ஓட்டுபவர்கள் எழுப்பும் ஆரவார ஒலிg

3

வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி
தொழில் செருக்கு அனந்தர் வீட எழில் தகை
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்து
கிளி போல் காய கிளை துணர் வடித்து
புளி_பதன் அமைத்த புது குட மலிர் நிறை
வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ் பசும் குடை
கயம் மண்டு பகட்டின் பருகி – அகம் 37/5-11

வைகறை புலர்ந்த விடியற்காலையில் வைக்கோலைப் பிடித்துப்போட்டு கடாவிட்டு,
வேலைக் களைப்பால் கள்ளுண்ட மயக்கம் தீர, அழகால் மேம்பட்ட,
காற்றால் கிளைத்த கொழுவிய தளிர்களையுடைய மாமரத்தில்
கிளி(மூக்கு) போன்ற காய்களைக் கொண்ட கிளை(யில் தொங்கும்) கொத்துக்களைச் சாறெடுத்து,
புளிப்புச் சுவை சேர்த்துப் புதுக்குடங்களில் விளிம்புதட்ட நிறைத்ததை,
வெயிலில் குப்புற நிறுத்திய மிக்க இதழ்களையுடைய பசிய (பனையோலைக்)குடையில்
குளத்தில் நீரைப் பேரவாவுடன் மிகுதியாகக் குடிக்கும் காளையைப் போலப் பருகி

4

மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து – திரு 272

மிக்குச் செல்கின்ற/உக்கிரமான போர்களை முடித்த வென்று அடுகின்ற (உன்னுடைய)மார்பிடத்தே,

5

நுதி முகம் மழுங்க மண்டி ஒன்னார்
கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே – புறம் 31/7,8

கொம்பினது நுனை முகம் தேய ஊடுருவக்குத்தி பகைவரது
காவலையுடைய மதிலைத் தாக்கும் நின்னுடைய யானைகள் அடங்கா;

6

மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் – கலி 73/19

மிகுந்து வரும் வெள்ளத்தாலும் நிரம்பாமல் பெருக்கமுறும் கடலைப் போல

7

நின் மலை பிறந்து நின் கடல் மண்டும்
மலி புனல் நிகழ்தரும் தீம் நீர் விழவின் – பதி 48/13,14

உனது மலையில் பிறந்து, உனது கடலில் விரைந்து சென்று கலக்கும்
மிகுந்த நீர் நிறைந்த ஆற்றில் நிகழ்த்தப்பெறும் இனிய நீராட்டு விழாவும்

அரம் போழ் நுதிய வாளி அம்பின்
நிரம்பா நோக்கின் நிரையம் கொண்மார்
நெல்லி நீள் இடை எல்லி மண்டி – அகம் 67/5-7

அரத்தினால் அராவப்பட்ட முனையையுடைய பற்களையுடைய அம்பினையும்
இடுக்கிக் குறிபார்க்கும் பார்வையினையுமுடையராய், தம் பசுக்களை மீட்கவேண்டி
நெல்லி மரங்களையுடைய நீண்ட இடங்களில் இருளிலே விரைந்துசென்று

8

மொய் வளம் செருக்கி மொசிந்து வரும் மோகூர்
வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி
நெய்த்தோர் தொட்ட செம் கை மறவர்
நிறம் படு குருதி நிலம் படர்ந்து ஓடி – பதி 49/8-11

மிகுந்த வலிமையால் மனம் செருக்கி, ஒன்றுகூடி வருகின்ற மோகூர் மன்னனின்
வெற்றிதரும் சேனையின் கூட்டம் கலைந்து சிதையும்படி நெருங்கித் தாக்கி,
இரத்தத்தைத் தொட்டதால் சிவந்த கையையுடைய மறவர்களின்
மார்பிலிருந்து ஒழுகும் குருதி, நிலத்தில் படர்ந்து ஓடி,

9,10.

புனல் மண்டி ஆடல் புரிவான் சனம் மண்டி – பரி 10/9

புதுப்புனலை எதிர்த்து ஆடல்புரிவதற்கு மக்கள் கூட்டம் நெருக்கியடித்துக்கொண்டு திரண்டெழ,

11.

குயில் காழ் சிதைய மண்டி அயில் வாய்
கூர் முக சிதலை வேய்ந்த
போர் மடி நல் இறை பொதியிலானே – அகம் 167/16-18

இயற்றப்பட்ட கைமரங்கள் சிதையுமாறு நெருக்கமாக அடைந்து, வேலின் முனை போன்று
கூரிய முகத்தினையுடைய கறையான் மூடிக்கொள்தலின்
கூரை மடிந்த நல்ல இறப்பினையுடைய அம்பலத்தின்கண்

12

திங்கள்
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து – அகம் 136/4,5

திங்களை உரோகணி கூடிய குற்றமற்ற நன்னாள் சேர்க்கையில்

13

காழ் மண்டு எஃகம் களிற்று முகம் பாய்ந்து என – மலை 129

காம்பினுள் சேர்த்து இணைக்கப்பட்ட (எஃகினாலான)வேல் (நுனிப்பாகம்)யானையின் முகத்தில் பாய்ந்தது எனும்படி,

மேல்


மண்டை

(பெ) 1. இரவலர் உண்கலம், mendicants’ begging bowl
2. உண்கலம், vessel for eating/drinking
3. மண்கலம், earthen vessel
4. கபாலம், மண்டையோடு, skull

1

பொழுது இடைப்படாஅ புலரா மண்டை
மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப – புறம் 103/9,10

ஒருபொழுதும் ஓயாமல் உண்ணவும் தின்னவும்படுதலான் ஈரம் புலராத கலம்
மெழுகான் இயன்ற மெல்லிய அடை போல கொழுத்த நிணம் மிக

அரும் தலை இரும் பாணர் அகல் மண்டை துளை உரீஇ – புறம் 235/10

அரிய தலைமையையுடைய பெரிய பாணரது அகலிய பாத்திரத்தின்கண் துளையையுருவி

2

விழவு இன்று ஆயினும் உழவர் மண்டை
இரும் கெடிற்று மிசையொடு பூ கள் வைகுந்து – புறம் 384/7,8

விழா நிகழா வழியும் உழவருடைய உண்கலத்தில்
பெரிய கெடிற்று மீனாகிய உணவுடனே இஞ்சி முதலிய பூ விரவிய கள் நிறைந்திருக்கும்

செந்தீ அணங்கிய செழு நிண கொழும் குறை
மென் தினை புன்கம் உதிர்த்த மண்டையொடு– அகம் 237/9,10

செந்தீயில் சுட்ட வளம் பொருந்திய நினத்தில் கொழிவிய துண்டுகளை
மெல்லிய தினைச்சோற்றிலே சொரிந்த கலத்துடன்

3

உச்சி குடத்தர் புத்து அகல் மண்டையர்
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர் – அகம் 86/8,9

உச்சியில் குடத்தினை உடையவரும், கையினில் புதிய மண்டை எனும் அகன்ற கலத்தினை உடையவரும் ஆகிய
மனத்தினைச் செய்துவைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கலப்பெண்டிர்

4

பொருந்தா தெவ்வர் அரிந்த தலை அடுப்பின்
கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல்
ஆனா மண்டை வன்னி அம் துடுப்பின்
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த – புறம் 372/5-9

மனம் பொருந்தாத பகைவர் உடலினின்றும் துண்டித்த தலைகளாற் செய்யப்பட்ட அடுப்பிலே
கூவிளங்கட்டையாகிய விறகிட்டெரித்து ஆக்கப்படும் கூழிடையே வரிக்குடர்கள் பிறழ்ந்து பொங்க
தலையிற் பொருந்தாத மண்டையோடு அகப்பையாகவும், வன்னிமரத்தின் கொம்பு அதில் செருகப்பட்ட காம்பாகவும்
கொண்டு
ஈனாத பேய்மகள் தோண்டித்துழாவிச் சமைத்த
மாக்களுமுண்ண மறுக்கும் ஊன்சோறாகிய பிண்டத்தை

மேல்


மண்ணகம்

(பெ) உலகம், earth

உண்மை நலன் உண்டு ஒளித்தானை காட்டீமோ
காட்டாயேல் மண்ணகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன் என்
கண்ணீர் அழலால் தெளித்து – கலி 144/42-44

இயற்கை நலத்தை நுகர்ந்த பின் தன்னை ஒளித்துக்கொண்டவனைக் கண்டிபிடித்துத்தா!
அவ்வாறு தராவிட்டால், இந்த மண்ணகம் எல்லாவற்றையும் சேர்த்து உன்னையும் சுடுவேன் – என்
கொதிக்கும் கண்ணீரைத் தெளித்து, அதிலிருந்து எழும் அழலால்;

மேல்


மண்ணல்

(வி.வி.மு) மண்ணுக, கழுவுக, ஒப்பனைசெய்க, wash, decorate

இன்று நின் ஒலி குரல் மண்ணல் என்றதற்கு
என் புலந்து அழுதனள் – அகம் 369/11,12

இன்று நினது தழைத்த கூந்தலைப் புனைக என்றதற்கு
என்னை வெறுத்து மனம் உடைந்தவளாகி

மேல்


மண்ணு

(வி) 1. கழுவு, wash, clean by wasing
2. குளி, குளிப்பாட்டு, நீராடு, நீராட்டு, bathe
3. ஒப்பனைசெய், adorn, decorate
4. பூசு, smear
5. செய், do perform
6. செம்மைப்படுத்து, polish, finish, perfect

1

மண்ணு மணி அன்ன மா இதழ் பாவை – அகம் 136/13

கழுவிய நீலமணியை ஒத்த கரிய இதழையுடைய பாவை

பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய
துகில் விரி கடுப்ப நுடங்கி – புறம் 337/8,9

பெண்மைநலம் நிறைந்த பொற்புடனே, கழுவப்பட்ட
துகிலை விரித்தவழி அது நுடங்குவது போல நுடங்கி

2

நெடும் சுழி நீத்தம் மண்ணுநள் போல – அகம் 62/10

நெடிது சுழலும் சுழிகளையுடைய வெள்ளத்திற் படிந்து குளிப்பவள் போல

வதுவை மண்ணிய மகளிர் விதுப்பு உற்று
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய – அகம் 136/8,9

தலைவிக்கு மணநீராட்டிய மகளிர் விரைவாக
தமது கூரிய கண்களாலும் இமையாராய் நோக்கி மறைந்திட

3

மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன
அணங்கு மெய் நின்ற அமைவரு காட்சி – பொரு 19,20

(புது)மணக்கோலம் பொலிவு பெற்ற மாதரை ஒப்பனைசெய்து கண்டாற் போன்ற,
(யாழ்க்குரிய)தெய்வம் நிலைத்துநின்ற (நன்கு)அமைந்துவரப்பெற்ற தோற்றத்தையுடைய,

4

தகரம் மண்ணிய தண் நறு முச்சி – அகம் 393/23

மயிர்ச்சாந்து பூசிய தண்ணிய நறிய கூந்தலில்

5

ஆவுதி மண்ணி அவிர் துகில் முடித்து – மது 494

யாகங்களைச் செய்து, பளிச்சிடும் மெல்லிய ஆடையைச் சுற்றிக் கட்டி,

6

கைவல் கம்மியன் கவின் பெற கழாஅ
மண்ணா பசு முத்து ஏய்ப்ப குவி இணர்
புன்னை அரும்பிய புலவு நீர் சேர்ப்பன் – நற் 94/4-6

கைத்தொழிலில் வல்ல கம்மியன் அழகுபெறக் கழுவாத
செம்மைப்படுத்தப்படாத பசுமுத்தைப் போல குவிந்த கொத்துக்களையுடைய
புன்னை மரம் அரும்புவிட்டிருக்கின்ற புலவுநாறும் கடற்கரைத் தலைவனான தலைவன்

மேல்


மண்ணுறு

(வி) 1. கழுவப்படு, be washed, made clean
2. திருநீராட்டப்படு, நீரூற்றிப் பூசிக்கப்படு, bathe as an idol
3. கைசெய், அலங்கரிக்கப்படு, get adorned, decorated

1

பூசல் ஆயம் புகன்று இழி அருவியின்
மண்ணுறு மணியின் தோன்றும்
தண் நறும் துறுகல் ஓங்கிய மலையே – குறு 367/5-7

ஆரவாரத்தையுடைய மகளிர்கூட்டம் விரும்பி இறங்கும் அருவியினால்
கழுவப்பட்ட நீலமணிபோல் தோன்றும்
குளிர்ந்த நறிய குத்துப்பாறை உயர்ந்துள்ள மலையினை.

2

காண்குவெம் தில்ல அவள் கவின் பெறு சுடர் நுதல்
விண் உயர் அரண் பல வௌவிய
மண்ணுறு முரசின் வேந்து தொழில் விடினே – ஐங் 443/3-5

காண்பேனே, அவளின் அழகுபெற்ற ஒளிவிடும் நெற்றியை;
வானளாவிய அரண்கள் பலவற்றைக் கைப்பற்றிய,
கழுவிப்பூசிக்கப்பட்ட முரசையுடைய வேந்தன் தனது போரைக் கைவிட்டால்.

3

தெய்வவுத்தியொடு வலம்புரி வயின் வைத்து
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்
மகர பகு வாய் தாழ மண்ணுறுத்து
துவர முடித்த துகள் அறும் முச்சி – திரு 23-26

தெய்வவுத்தி, வலம்புரி ஆகிய தலைக்கோலங்களை அதனதன் இடத்தில் வைத்து,
திலகம் இட்ட மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில்
சுறாவின் அங்காந்த வாயாகப்பண்ணின தலைக்கோலம் நெற்றியில்தங்க அலங்கரிக்கப்பட்டு,
முற்ற முடித்த குற்றம் இல்லாத கொண்டையில்

மேல்


மண்ணை

(பெ) மொண்ணை, கூர் முழுங்கியிருத்தல், bluntness

கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து
நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு
சிறு கண் யானை நெடு நா ஒண் மணி – அகம் 24/11-13

காவலை உடைய கதவை முட்டுவதால் பூண் பிளந்து
கூரிய முனை மழுங்கிப்போன மொண்ணையான வெள்ளிய தந்தத்தை உடைய
சிறு கண் யானையின் நெடு நா ஒள் மணியோசையும்,

மேல்


மண

1. (வி) 1. கமழ், மணம்வீசு, emit fragrance, smell sweet
2. கல, கூடு, mingled
3. அணை, தழுவு, embrace, clasp
4. கூடியிரு, ஒன்றாக இரு, be in company with
5. களவுமணம் செய், have premarital union
6. கூடு, புணர், come together, copulate with
– 2. (பெ.அ) திருமணத்திற்குரிய, for wedding

1.1

மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப – கலி 27/4

மகளிரின் பற்கள் போல் மணக்கின்ற காட்டு முல்லை அரும்புகள் மலரவும்

நெய்ம் மாண் சிவிறியர் நீர் மண கோட்டினர் – பரி 6/34

நெய்பூசிச் சிறப்படைந்த துருத்தியை உடையோரும், உள்ளே மணக்கும் நீர் கொண்ட கொம்பினையுடையோரும்,

1.2

அறையும் பொறையும் மணந்த தலைய
எண் நாள் திங்கள் அனைய கொடும் கரை
தெள் நீர் சிறு குளம் – புறம் 118/1-3

பாறையும் சிறு குவடும் கலந்த உச்சியையுடையவாகிய
எட்டாம் பக்கத்துப் பிறை போலும் வளைந்த கரையையுடைய
தெளிந்த நீரையுடைய சிறிய குளம்

1.3

இலங்கு வளை நெகிழ சாஅய்
புலம்பு அணிந்தன்று அவர் மணந்த தோளே – குறு 50/4,5

ஒளிரும் தோள்வளைகள் கழலும்படி மெலிந்து
தனிமைத் துயரைப் பூண்டுநிற்கின்றன அவர் தழுவிய தோள்கள்.

1.4

அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்த_கால்
கொடும் குழாய் தெளி என கொண்டதன் கொளை அன்றோ – கலி 132/16,17

அடும்பங்கொடிகள் படர்ந்துள்ள அழகிய மணல்மேட்டில் இவளுடன் விளையாடி நீ ஒன்றாக இருந்தபோது
‘வளைந்த குழைகளை அணிந்தவளே! என்னை நம்புவாயாக’ என்றதை ஏற்றுக்கொண்டதன் விளைவு அன்றோ

1.5

யாரும் இல்லை தானே கள்வன்
தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ
தினை தாள் அன்ன சிறு பசும் கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே – குறு 25

ஒருவரும் இல்லை; அவர்தானே களத்திலிருந்தார்;
அவரே தனது உறுதிமொழியைப் பொய்க்கச்செய்தால் நான் என்ன செய்யமுடியும்?
தினைத் தாள் போன்ற சிறிய இளமையான கால்களையுடையன,
ஓடுகின்ற நீரில் இருக்கும் ஆரல்மீனைப் பார்க்கும்
நாரைகளும் இருந்தன தலைவர் என்னைக் களவுமணம் புரிந்தபொழுது.

1.6

நீயும்
தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி
கோங்கு முகைத்து அன்ன குவி முலை ஆகத்து
இன் துயில் அமர்ந்தனை ஆயின் வண்டு பட
விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர்
பூ வேய் புன்னை அம் தண் பொழில்
வாவே தெய்ய மணந்தனை செலற்கே – அகம் 240/9-15

நீயும்
தேன் ஒழுகும் கூந்தலையுடைய தலைவியது அழகிய நெற்றியைத் தடவி
கோங்கு அரும்பினாலொத்த குவிந்த முலையினையுடைய மார்பகத்தே
இனிய துயிலை விரும்பினாயாயின் வண்டுகள் மொய்க்க
விரிந்த பூக்களையுடைய செருந்திமரம் பொருந்திய வெள்ளிய மணல் பரந்த முடுக்கில்
பூக்கள் பொருந்திய புன்னை மரங்களையுடைய அழகிய தண்ணிய சோலைக்கண்
வருவாயாக அவளைக் கூடிச் செல்வதற்கு

2

மண இல் கமழும் மா மலை சாரல் – மலை 151

திருமணம் நடக்கும் வீடு (போன்று) மணக்கும் பெரிய மலைப்பக்கத்தே

மண மனை ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே – கலி 70/10

திருமணம் நடக்கும் வீடுகளில் முழங்கும் உன் திருமணத்திற்கான முழவின் ஓசை வந்து அத் தூக்கத்தைக்
கலைக்கும்;

மேல்


மணப்பு

(பெ) 1. ஒன்றுசேர்தல், கூடுதல், the act of uniting
2. எய்துதல், acquiring, attaining

1

பகலும் நம்_வயின் அகலான் ஆகி
பயின்று வரும்-மன்னே பனி நீர் சேர்ப்பன்
இனியே மணப்பு அரும் காமம் தணப்ப நீந்தி
வாராதோர் நமக்கு யாஅர் என்னாது
மல்லல் மூதூர் மறையினை சென்று
சொல்லின் எவனோ பாண – அகம் 50/5-10

பகலிலும் நம்மைவிட்டு அகலாதவனாகி,
(முன்பெல்லாம்)அடிக்கடி வருவானே! குளிர்ந்த கடற்கரையையுடைய தலைவன்;
இப்பொழுதோ, ஒன்றுசேர்வதற்கு அரிதாயிருந்த (பழைய)விருப்பம் நீங்கிவிட, (இப்பொழுது இருக்குமிடத்தைத்)
துறந்து
வராமலிருப்பவர் நமக்கு யார் என்று வாளாவிராமல்,
(இப்பொழுது தலைவன் இருக்கும் அந்த)வளமிக்க பழமையான ஊருக்கு மறைவாகச் சென்று
(அவனிடம்) சொன்னால் என்ன பாணனே!,

2

மணப்பு அரும் காமம் புணர்ந்தமை அறியார் – அகம் 112/15

எய்துதற்கு அரிய காமத்தால் நீர் கூடிய களவொழுக்கத்தினை அறியாத எமர்

மேல்


மணம்

(பெ) 1. திருமணம், wedding
2. இனிய வாசனை, fragrance
3. கூடுதல், union

1

மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன
அணங்கு மெய் நின்ற அமைவரு காட்சி – பொரு 19,20

(புது)மணக்கோலம் பொலிவு பெற்ற மாதரை ஒப்பனைசெய்து கண்டாற் போன்ற,
(யாழ்க்குரிய)தெய்வம் நிலைத்துநின்ற (நன்கு)அமைந்துவரப்பெற்ற தோற்றத்தையுடைய,

2

மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை – பெரும் 354

மஞ்சளையுடைய முற்றத்தினையும் இனிய வாசனை கமழ்கின்ற சுற்றுப்புறங்களையும் உடைய

3

கதிர்க்கோட்டு நந்தின் சுரி முக ஏற்றை
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம் – புறம் 266/4,5

கதிர்போலும் கோட்டையுடைய நத்தையினது சுரி முகத்தையுடைய ஏற்றை
நாகாகிய இளைய சங்குடனே பகற்காலத்தே கூடி மகிழும்

மேல்


மணன்

(பெ) பார்க்க :மணம் –

1

பொம்மல் ஓதி எம் மகள் மணன் என – அகம் 221/3

பொலிவுற்ற கூந்தலையுடைய எம் மகளுக்குத் திருமணம் என்று கூறி

மேல்


மணி

(பெ) 1. கண்டை, bell, gong
2. விலையுயர்ந்த கல், நவரத்தினம், gem, precious stones
3. நீலமணி, sapphire
4. பளிங்கு crystal
5. மணியோசை, sound of a bell

1

நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள் – முல் 50

நெடிய நாக்கினையுடைய ஒள்ளிய மணி ஒலித்துச் சிறிது சிறிதாக அடங்கிய நடுயாமத்தும்,

2

முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி
மின் உறழ் இமைப்பின் சென்னி பொற்ப – திரு 84,85

முடியோடு விளங்கிய (ஒன்றற்கொன்று)மாறுபாடு மிகும் அழகினையுடைய மணிகள்
மின்னலுக்கு மாற்றாகும் சிமிட்டலுடன் தலையில் பொலிவுபெறவும்,

3

பொன் கொன்றை மணி காயா – பொரு 201

பொன்னிறம் போன்ற நிறமுடைய கொன்றை மலரினையும், நீலமணி போன்ற காயா மலரினையும் உடைய,

4

மணி கண்டு அன்ன துணி கயம் துளங்க – அகம் 56/2

பளிங்கைப் போன்ற தெளிந்த நீருள்ள குளம் அலையடித்துக் கலங்க

5

மணி ஓர்த்து அன்ன தெண் குரல் – அகம் 151/14

மணியோசையைக் கேட்டாற் போலும் தெளிந்த குரலைக்கொண்ட

மேல்


மணிச்சிகை

(பெ) குன்றிமணி, அதன் செடி, பூ, Crab’s eye, Abrus precatorius

செங்கொடுவேரி தேமா மணிச்சிகை – குறி 64

மேல்


மணிப்புறா

(பெ) புறாவகை, Ring-dove, turtle-dove, spotted dove;

மணிப்புறா துறந்த மரம் சோர் மாடத்து – அகம் 167/14

மணிப்புறா விட்டொழிந்த மரம் சோர்ந்த மாடத்தினையும்

மேல்


மணிமாடம்

(பெ) அழகுற அமைக்கப்பட்ட உப்பரிகை உள்ள வீடு, மேல்நிலை மாடம்,
beautiful storied house;

நளிர் மலை பூ கொடி தங்குபு உகக்கும்
பனி வளர் ஆவியும் போன்ம் மணிமாடத்து
உள் நின்று தூய பனி நீருடன் கலந்து
கால் திரிய ஆர்க்கும் புகை – பரி 10/122-125

செறிந்த மலையிடத்துப் பூங்கொடிகளிடத்தில் தங்குவதற்காக மேலேறிச் செல்லும்,
குளிர்ச்சி மிகுந்த நீராவியான மேகத்தைப் போன்றிருந்தது, மதுரை நகரின் மணிமாடங்களின்
உள்ளேயிருந்து தூவிய பனிநீர் மணத்துடன் கலந்து,
தென்றல் காற்று மணமுடையதாக மாறும்படியாக எழுப்பும் நறுமணப்புகை;

மேல்


மத்தகம்

(பெ) தலைக்கோலம், A kind of head-ornament, worn by women

துறையே முத்து நேர்பு புணர் காழ் மத்தக நித்திலம்
பொலம் புனை அவிர் இழை கலங்கல் அம் புனல் மணி
வலஞ்சுழி உந்திய – பரி 16/5-7

நீராடும் துறைகளில், முத்துக்களை ஒன்றாகக் கட்டிய வடம், தலைக்கோலம் என்ற முத்தணி,
பொன்னால் செய்யப்பட்ட ஒளிரும் அணிகலன்கள், கலங்கலான அழகிய நீரைப் போன்ற சிவந்த மணிகள்,
ஆகியவை, வலமாகச் சுழித்துக்கொண்டு வரும் சுழியினால் உந்தப்பட்டுவர

மேல்


மத்தம்

(பெ) மத்து, Churning stick
மத்து என்பது பெரும்பாலும் தயிரைக் கடைந்து வெண்ணெய் பெறுவதற்காக பயன்படுத்தும் ஒரு கருவியாகும்.
தயிரைக் கடையும்போது, அதிலுள்ள கொழுப்பு நிறைந்த பதார்த்தம் வெண்ணெயாக மாறிவர, மிகுதியாக இருக்கும்
நீர்த் தன்மையான பதார்த்தம் மோர் எனப்படும்.
இதில் கை மத்து என்பது கையினால் பாத்திரத்திலுள்ள சிறிய அளவு தயிரைக் கடைவதற்கான கருவியாகும்.
பானையில் உள்ள பேரளவு தயிரைக் கடைய பெரிய மத்து பயன்படுத்தப்படும்.
சுவரை ஒட்டி ஒரு சிறிய கொம்பு நட்டிருப்பார்கள். அதில் ஒரு கயிறு கட்டி இருக்கும். மோர் கடையும் மத்து
ஒரு நீளக் கம்பில் கட்டப்பட்டிருக்கும். அந்த மத்தின் மையப் பகுதியில் கயிறு சுற்றுவதற்கு ஏற்றவாறு வடிவமைப்பு
இருக்கும்.
நின்றுகொண்டோ, தரையில் அமர்ந்தவாறோ அந்தக் கயிற்றை இழுத்து மத்தைத் தயிருக்குள் சுழற்றுவார்கள்.

தயிர் கடையும்போது மத்தம் ‘சர் சர்’ என்று ஒலிப்பது புலி உறுமுவதுபோல் இருக்கும் என்கிறது
பெரும்பாணாற்றுப்படை.

இடு முள் வேலி எரு படு வரைப்பின்
நள் இருள் விடியல் புள் எழ போகி
புலி குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ்
உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து
புகர் வாய் குழிசி பூ சுமட்டு இரீஇ
நாள் மோர் மாறும் நன் மா மேனி – பெரும் 154-160

கட்டு முள் வேலியினையுடைய எருக்குவியல்கள் மிகுந்திருக்கும் ஊரில் –
செறிந்த இருள் (போகின்ற)விடியற்காலத்தே பறவைகள் துயிலெழ எழுந்து சென்று,
புலி(யின் முழக்கம் போன்ற) முழக்கத்தையுடைய மத்தினை ஆரவாரிக்கும்படி கயிற்றை வலித்து,
குடைக்காளானுடைய வெண்மையான முகைகளை ஒத்த குவிந்த முகைகளையுடைய
உறையினால் கெட்டியாகத் தோய்ந்த இளம் புளிப்பான தயிரைக் கடைந்து, வெண்ணையை எடுத்து,
(தயிர்)புள்ளிபுள்ளியாகத் தெரிந்த வாயையுடைய மோர்ப்பானையை மெல்லிய சுமட்டின் மேல் வைத்து,
அன்றைய மோரை விற்கும், நல்ல மாமை நிறத்தையுடைய மேனியையும்,

மத்தில் இறுக்கக் கட்டப்பட்டுள்ள கயிறு, மத்தினைச் சுழற்றுபோது ஏற்படும் உராய்வினால் அந்த மத்தின் காம்பு
தேய்ந்துபோவது உண்டு.

விளம்பழம் கமழும் கமம் சூல் குழிசி
பாசம் தின்ற தேய் கால் மத்தம்
நெய் தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும் – நற் 12/1-3

விளாம்பழம் கமழும், நிறைசூலியைப் போன்ற தயிர்ப்பானையில்
தயிறு கடையும் கயிறு உராய்வதால் தேய்வுற்ற தண்டினையுடைய மத்தின்
வெண்ணெய் தோன்றச் சுழலும் சுழற்சியால் தறியின் அடிப்பகுதி முழக்கமிடும்

மத்தில் இறுக்கக் கட்டப்பட்டுள்ள கயிற்றை, மத்தினைச் சுழற்றுவதற்காக, இருபுறமும் மாற்றிமாறி
இழுக்கும்போது அந்தக் கயிறு வேகமாகச் சுழலும்.

மெல் இயல் ஆய்_மகள்
மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம்
சுற்றி சுழலும் என் நெஞ்சு – கலி 110/9-11

மென்மையான இயல்பினையுடைய ஆயர்மகளே!
தயிர் கடையும் மத்தில் கட்டிய கயிற்றினைப்போல் உன் அழகைச்
சுற்றிச் சுற்றிச் சுழலும் என் நெஞ்சு;

மேல்


மத்தரி

(பெ) பறைவகை, a kind of drum

ஒத்த குழலின் ஒலி எழ முழவு இமிழ்
மத்தரி தடாரி தண்ணுமை மகுளி
ஒத்து அளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார்
நித்தம் திகழும் நேர் இறை முன்கையால்
அ தக அரிவையர் அளத்தல் காண்-மின் – பரி 12/40-44

ஒன்றோடொன்று ஒத்து இசைக்கும் குழல் வாத்தியங்களினின்றும் இசை எழ, முழவின் முழக்கத்தோடு
மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி ஆகிய இசைக்கருவிகளின்
தாளத்தை அளந்து சீரின் கூறுபாட்டை அறிந்து, ஒருவருக்கொருவர் பின்னிடாத தகுதியுடையவராய்
நடன அசைவுகள் நன்கு விளங்கும் நேராக இறங்கும் தம் முன்கையால்
அழகுமிக்கதாய் ஆடல்மகளிர் அந்தத் தாளத்தை அளத்தலைப் பாருங்கள்;

மத்தரி என்பதை மத்தளம் என்று கூறுவர்

பம்பை, தொண்டகச் சிறுபறை, தழல், தண்ணும்மை, துடி, பதலை ஆகிய பறைகள் வேட்டைப் பறைகளாக
இயங்கியுள்ளன.

அரிப்பறை, எல்லரி சல்லரி தட்டை, தடாரி, மத்தரி, கிணை ஆகிய பறைகள் வேளாண் பறைகளாக விளங்கியுள்ளன.

முழவு, முரசு, பணை, பெருந்துடி, தண்ணும்மை, கிணை ஆகிய பறைகள் போர்ப்பறைகளாக முழங்கியுள்ளன.

மேல்


மத்தி

(பெ) ஒரு சங்ககால மன்னன், a chieftain belonging to ssangam period

மத்தி சங்ககால மன்னர்களில் ஒருவன். இவனது தலைநகர் வெண்ணி. மத்திக்கும் கல்லா எழினி என்பவனுக்கும்
இடையே போர் மூண்டது. போரில் கல்லா எழினியின் பல்லைப் பிடுங்கிக்கொண்டு வந்து மத்தி தன் கோட்டையின்
வாயில் கதவில் பதித்துக்கொண்டான். பதித்த பல் வெண்மணி போல் விளங்கியதால் வெண்மணி என்னும் ஊரின்
பெயரே வெண்மணிவாயில் என வழங்கப்படுவதாயிற்று.
இந்த மத்தியின் நாட்டில் இருந்த ஓர் ஊர் கழார். அது காவிரிக்கரையில் இருந்தது.
வெண்மணிவாயில் என்பது இவன் நாட்டில் இருந்த ஓர் ஊர் என்றும், கழார் என்னும் ஆற்றங்கரையூர் இவனது
தலைநகர் என்றும் கூறுவர்.
இவன் பரதவன் கோமான் என்றும் கூறப்படுதலால்,இவனது ஊர் கடற்கரையை ஒட்டி இருந்த ஆற்றங்கரையூர்
என்பது பெறப்படும்.

கைவண் மத்தி கழாஅர் அன்ன – ஐங் 61/3

வள்ளண்மை உள்ள மத்தி என்பானின் கழார் என்னும் ஊரைப் போன்ற

பல் வேல் மத்தி கழாஅர் அன்ன எம் – அகம் 6/20

பல வேற்படையினையுடைய மத்தி என்பானது கழார் என்னும் ஊரினை ஒத்த

கடுஞ் சின வேந்தன் ஏவலின் எய்தி,
நெடுஞ் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய
வன்கண் கதவின் வெண்மணி வாயில்,
மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை – அகநானூறு 211/11-15

மிக்க சினங்கொண்ட சோழமன்னனது ஏவலாற் சென்று,
நெடும் சேய்மைக்கண்னதாகிய நாட்டில் முதற்படையில் அகப்பட்டுக்கொண்ட
கல்லாத எழினி என்பானின் பல்லைப் பறித்துவந்து பதித்த
வன்மை பொருந்திய கதவினையுடைய வெண்மணி என்னும் ஊரின் வாயிலிடத்தே
மத்தி என்பவனால் நாட்டப்பட்ட கல்பொருந்திய குளிர்ந்த துறையில்

வல் வில் எறுழ் தோள் பரதவர் கோமான்
பல் வேல் மத்தி கழாஅர் முன்துறை – அகம் 226/7,8

வலிய வில்லைத் தாங்கிய வலிமைபொருந்திய தோள்களையுடைய பரதவர்கட்குத் தலைவனாகிய
பல வேற்படைகளையுடைய மத்தி என்பானது கழார் என்னும் பதியின் துறையின் முற்றத்தே

மேல்


மத்திகை

(பெ) குதிரைச்சவுக்கு, சாட்டை, கசை, horsewhip, whip

மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து
வலி புணர் யாக்கை வன்கண் யவனர் – முல் 59-61

கசை வளைந்துகிடக்கின்ற, (அக் கசை)மடங்கிப் புடைக்குமாறு நெருங்கக் கட்டின உடையையும்,
சட்டையிட்ட அச்சம் வரும் தோற்றத்தையும்,
வலிமை கூடின உடம்பினையும் உடைய கடுமையான யவனர்,

மார்பு அணி கொங்கை வார் மத்திகையா புடைப்பார் – பரி 9/46

மார்பினை அழகுசெய்யும் தம் கொங்கைகளின் கச்சினையே சாட்டையாகக் கொண்டு அடித்துக்கொள்வார்,

மேல்


மத்து

(பெ) பார்க்க : மத்தம்

மத்து உரறிய மனை இன் இயம் இமிழா – 26/3

தயிர் கடையும் மத்துகள் முழங்கும் வீடுகளில் வேறு இன்னிசைக் கருவிகள் ஒலிக்கத் தேவையில்லை;

மேல்


மதகு

(பெ) குளம் முதலியவற்றில் நீர் பாயும் மடைவகை, sluice to let off water from a tank
அணை, ஏரி முதலியவற்றில், தேவையான நீரைச் சீராக வெளியேற்றுவதற்கு ஏற்ற வகையில் திறந்து மூடக்கூடிய
அமைப்பு.

நுரையுடன் மதகு-தொறு இழிதரு புனல் கரை புரளிய செலும் – பரி 24/66

மிக்க நுரையுடன் மதகுகள்தோறும் புகுந்து வெளிவரும் நீர் கரை புரண்டு ஓடும்;

மேல்


மதம்

(பெ) 1. யானையின் துணைதேடும் காலத்து வெறி, rut of an elephant,
a state or period of heightened sexual arousal and activity
2. வலிமை, strength, valour
3. செருக்கு, இறுமாப்பு, pride, arrogance
4. வெறி, frenzy, madness
5. கஸ்தூரி,
musk, An odorous glandular secretion from the male musk deer; used as a perfume fixative

1

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கி
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை
குளகு மென்று ஆள் மதம் போல
பாணியும் உடைத்து அது காணுநர் பெறினே – குறு 136

காமம் காமம் என்று உலகினர் அதைக் கண்டு அஞ்சுகின்றனர்; அந்தக் காமம்
வருத்தமும் நோயும் அன்று; நுண்ணிதாகி
மிகுவதும் குறைவதும் அன்று; யானை
தழையுணவை மிகுதியாக உண்டு அதனால்கொண்ட மதத்தைப் போல
அது வெளிப்படும் தன்மையும் உடையது காணக்கூடியவரைப் பெற்றால்.

2

மதம் தபு ஞமலி நாவின் அன்ன
துளங்கு இயல் மெலிந்த கல் பொரு சீறடி – மலை 42,43

வலிமை குன்றிய நாயின் நாவைப் போன்றதும்,
சோர்வடைந்த தன்மையினால் தளர்வுற்றதும், கற்களை மிதித்து நடந்ததுமான சிறிய பாதங்களையும்,

3

தீம் சுனை நீர் மலர் மலைந்து மதம் செருக்கி
உடை நிலை நல் அமர் கடந்து மறம் கெடுத்து
கடும் சின வேந்தர் செம்மல் தொலைத்த
வலம் படு வான் கழல் வயவர் பெரும – பதி 70/8-11

இனிய சுவையுள்ள சுனைநீரின் மலர்களைக் கண்ணியாகச் செய்து சூடி, இறுமாப்புடன் செருக்கி,
தனக்கே உரித்தானதாகப் பெற்ற நிலையையுடைய நல்ல போர்களை வென்று, எதிர்ப்போரின் வீரத்தை அழித்து,
மிக்க சினத்தையுடைய வேந்தர்களின் தலைமையினையும் இல்லாமற்செய்த
வெற்றி பொருந்திய பெரிய கழல் அணிந்த வீரர்களுக்குத் தலைவனே!

4

பகு வாய் வராஅல் பல் வரி இரும் போத்து
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி
ஆம்பல் மெல் அடை கிழிய குவளை
கூம்பு விடு பன் மலர் சிதைய பாய்ந்து எழுந்து
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது
கயிறு இடு கத சே போல மதம் மிக்கு
நாள் கயம் உழக்கும் பூ கேழ் ஊர – அகம் ;36/1-7

பிளந்த வாயையுடைய வராலின், பல வரிகளைக் கொண்ட ஆண்மீன்
வளைந்த வாயையுடைய தூண்டில்முள்ளில் மாட்டிய இரையை விழுங்கி,
ஆம்பலின் மெல்லிய இலை கிழியுமாறு, குவளையின்
மலர்கின்ற பல மலர்கள் சிதைந்துபோகப் பாய்ந்து எழுந்து,
பின்னிக்கிடக்கும் வள்ளையின் அழகிய கொடிகளை உழப்பி,
தூண்டில்காரன் வளைத்து இழுக்க வராமல்,
கயிறிட்டுப் பிடிக்கும் சினம் மிக்க காளையைப் போல வெறி மிகுந்து,
காலையில் குளத்தைக் கலக்கும் பூக்கள் பொருந்திய ஊரனே!

5

அடுத்தடுத்து ஆடுவார் புல்ல குழைந்து
வடு படு மான்_மத_சாந்து ஆர் அகலத்தான் – பரி 16/43,44

மீண்டும் மீண்டும் நீராடும் பரத்தையரைத் தழுவியதால், குழைந்துபோய்
உருக்குலைந்துபோன கத்தூரிச் சாந்து நிறைந்த மார்பினையுடைவன்,

மேல்


மதமா

(பெ) யானை, elephant

உரல் போல் பெரும் கால் இலங்கு வாள் மருப்பின்
பெரும் கை மதமா புகுதரின் அவற்றுள் – பதி 43/3,4

உரல் போன்ற பெரிய கால்களையும், ஒளிருகின்ற கூர்மையான கொம்புகளையும்,
பெரிய துதிக்கையையும் கொண்ட யானைகள் தமது காட்டினுள் புகுந்தால்,

மேல்


மதர்

1. (வி) 1. செழி, கொழு, வளப்பமுடன் இரு, be rich, luxuriant
2. செருக்குடன் இரு, be arrogant, be self-conceited
3. இறுமாந்திரு, be elated, feel exulted
2. (பெ) 1. செருக்கு, Pride, arrogance, self-conceit, wantonness
2. களிப்பு, கள்வெறி, state of ecstacy, Intoxication, inebriation

1.1

கடும்தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலி தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் – புறம் 378/18-20

மிக்க திறலையுடைய இராமனுடன் காட்டிற்குச் சென்ற சீதையை
மிக்கவலிமைபெற்ற அரக்கன் இராவணன் கவர்ந்துசென்றபோது
சீதை கழற்றியெறிய நிலத்தே வீழ்ந்த வளப்பம் மிக்க அணிகலன்களைக் கண்டெடுத்த குரங்கினுடைய

1.2

மதர் புலி வெரீஇய மையல் வேழத்து – அகம் 39/11

செருக்குற்ற புலியினைக் கண்டு அஞ்சிய மயக்கம் பொருந்திய யானைக்கூட்டம்

கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை
அள்ளல் அம் கழனி உள்வாய் ஓடி
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து
செம் சால் உழவர் கோல் புடை மதரி
பைம் கால் செறுவின் அணை முதல் பிறழும் – நற் 340/4-8

வாய்க்காலை ஒட்டிச் சென்று மடைநீரை எதிர்கொண்ட திரண்ட கொம்பினையுடைய வாளை மீன்
சேற்றையுடைய அழகிய கழனியின் உட்பக்கம் ஓடி
காளைகள் சேற்றை மிதித்தலால் எழுந்த சேறுத்துகள் படிந்த தம் வெள்ளையான முதுகுடன்,
செம்மையாக நீள உழும் உழவர் தம் கோலால் அடிப்பதற்கும் அஞ்சாது செருக்குற்று
பசுமையான வாய்க்காலையுடைய வயல் வரப்பின் அணையினடியில் பிறழும்

1.3

மதர் எழில்
மாணிழை மகளிர் பூணுடை முலையின்
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு – அகம் 99/3-5

இறுமாந்த அழகினையும்
மாண்புற்ற அணியினையுமுடைய மகளிரது பூண் அணிந்த முலையினைப் போன்ற
முகைகள் அலர்ந்த கோங்கம்பூக்களொடு

இதழ் அழிந்து ஊறும் கண்பனி மதர் எழில்
பூண் அக வன முலை நனைத்தலும் – குறு 348/4,5

இமையின் விளிம்பைக் கடந்து ஊறுகின்ற கண்ணீர்த்துளி, இறுமாந்த அழகினையுடைய
பூண்களின் அகத்தே இருக்கும் அழகிய முலையை நனைக்கின்றதனையும்

2.1

மதர் கயல் மலைப்பின் அன்ன கண் – அகம் 140/10

செருக்குள்ள கயல் இரண்டு எதிர்த்துப் பொருவது போன்ற அவள் கண்கள்

நொடை நவில் நெடும் கடை அடைத்து மட மதர்
ஒள் இழை மகளிர் பள்ளி அயர – மது 622,623

பண்டங்களுக்கு விலைகூறும் நெடிய கடையை அடைத்து மடப்பத்தினையும் செருக்கினையும்
ஒள்ளிய அணிகலன்களையுமுடைய மகளிர் துயிலுதலைச் செய்ய

2.2

காமம் கனைந்து எழ கண்ணின் களி எழ
ஊர் மன்னும் அஞ்சி ஒளிப்பார் அவர் நிலை
கள்ளின் களி எழ காத்த ஆங்கு அலர் அஞ்சி
உள்ளம் உளை எழ ஊக்கத்தான் உள்_உள்
பரப்பி மதர் நடுக்கி பார் அலர் தூற்ற
கரப்பார் களி மதரும் போன்ம் – பரி 10/63-68

காம உணர்வு மிகுந்து எழ, அதனால் கண்ணில் அக் காமக் களிப்பு தோன்ற,
ஊருக்காக மிகவும் அஞ்சி, அக் காமக்களிப்பினை ஒளிப்பார் சிலர், அவரின் நிலை
கள்ளுண்டதால் களிப்பு மிகுந்து எழ, அதைக் கட்டுப்படுத்துவது போன்றிருந்தது; ஆனால் ஊராரின் பேச்சுக்கு அஞ்சி,
உள்ளத்தில் துன்பம் உண்டாக, கள்வெறியை மறைக்க முயலும் முயற்சியால் அதை மேலும் மேலும்
பரப்பி, தம் களிப்புக்காக நடுங்கி, உலகம் பலவாறாய்த் தூற்ற,
தம்முள் மறைக்கும் கள்வெறியைப் போன்றது, முன்னவர் கொண்ட காமவெறி.

மேற்கூறிய வழக்காறுகள் தவிர சங்க இலக்கியங்களில் 21 இடங்களில் மதர் என்ற சொல் பெண்களின் கண்களைக்
குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவற்றுள் 11 இடங்களில்

அரி மதர் மழைக்கண்

என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரி மதர் மழை கண்

என்ற தொடரில் வரும் மதர் என்ற சொல் பெயர்ச்சொல்லா, வினைச்சொல்லா என்பதில்
குழப்பம் நிலவுகிறது. இத்தொடரில் அரி (செவ்வரி), மழை (குளிர்ச்சி) ஆகிய சொற்கள் பெயர்ச்சொற்களே.
எனவே மதர் என்பதனையும் ஒருபெயர்ச்சொல்லாக எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால், பெரும்பாலான உரையாசிரியர்கள் இத்தொடருக்கு, செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ந்த கண் என்றே
உரை கொள்கின்றனர். ஆனால், தமது விளக்கவுரையில், மதர் – செருக்கு, மதர் – களிப்பு என்ற
பொருளும் தருகின்றனர். எனவேதான் இத்தொடரில் வரும் ‘மதர்’ என்ற சொல்லை எதில் சேர்ப்பது
என்ற குழப்பம் நிலவுகிறது.

கண் என்ற சொல்லுக்கு அடையாகக்கொடுக்கப்படும் மதர் என்ற சொல் பயன்பாட்டை மூன்று விதங்களாகப்
பிரிக்கலாம்.

1. தலைவி அல்லது ஓர் இளம்பெண்ணின் கண்களைப் பாராட்டும் விதமாக அமைந்திருப்பது.

அசை மென் சாயல் அம் வாங்கு உந்தி
மட மதர் மழை கண் இளையீர் – குறி 140,141

தளர்ந்த மென்மையான சாயலினையும், அழகாக வளைந்திருக்கும் கொப்பூழினையும்
மடப்பத்தையுடைய மதர்த்த குளிர்ந்த கண்ணினையுமுடைய இளையீரே

அல்கு படர் உழந்த அரி மதர் மழை கண்
பல் பூ பகை தழை நுடங்கும் அல்குல்
திரு மணி புரையும் மேனி மடவோள்
யார் மகள்-கொல் இவள் தந்தை வாழியர் – நற் 8/1-4

நீங்காத துயரத்தின்வாய்ப்பட்ட செவ்வரி படர்ந்த குளிர்ச்சியான கண்களையும்,
பல பூக்களும் மாறுபட்ட தழைகளும் உடைய தழையாடை அசைந்தாடும் அல்குலையும்
அழகிய நீலமணி போன்ற மேனியையும் கொண்ட இளையோளாகிய தலைவி
யாருடைய மகளோ? இவளின் தந்தை வாழ்க!

முது நீர் இலஞ்சி பூத்த குவளை
எதிர் மலர் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழை கண் காணா ஊங்கே – நற் 160/8-10

நாட்பட்ட நீரினைக்கொண்ட பொய்கையில் பூத்திருக்கும் குவளை மலர்களை
எதிர் எதிராக வைத்துக்கட்டியதைப் போன்ற இவளது
செவ்வரி பரந்த செழுமையும் குளிர்ச்சியும் மிகுந்த கண்களைக் காண்பதற்கு முன்னர்

ஒரீஇயின போல இரவு மலர் நின்று
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண் – பதி 21/34,35

குளத்திலிருந்து நீங்கி வந்ததைப் போல, இரவிலும் மலர்ந்து நின்று,
அழகிய முகத்தினில் சுழல்கின்ற பெரிய அமைதியான குளிர்ச்சியான கண்களையும்,

கய வாய் நெய்தல் அலர் கமழ் முகை மண நகை
நயவரு நறவு இதழ் மதர் உண்கண் வாள் நுதல்
முகை முல்லை வென்று எழில் முத்து ஏய்க்கும் வெண் பல்
நகை சான்ற கனவு அன்று நனவு அன்று நவின்றதை – பரி 8/74-77

குளத்திடத்து இருக்கும் நெய்தல் பூக்களையும், மலர்ந்து மணங்கமழும் மொட்டுக்களின் மணத்துடனான
மலர்ச்சியினால்
கண்டோர் விரும்புவதற்குரிய நறவம் பூவின் இதழையும் போன்ற மதர்த்த மையுண்ட கண்களையும்,
ஒளிவிடும் நெற்றியையும்,
மொட்டாகிய முல்லையையும் வென்று, அழகிய முத்துக்களைப் போன்றிருக்கும் வெண்மையான பற்களையும்
கொண்ட தலைவி
கூறியது நகைப்பதற்குரிய கனவு அன்று, உண்மையாக நடந்த நிகழ்ச்சியும் அன்று!

திருநகர் அடங்கிய மாசு இல் கற்பின்
அரி மதர் மழை கண் அமை புரை பணை தோள்
அணங்குசால் அரிவையைக் காண்குவம் – அகம் 114/13-15

செல்வமுள்ள மனையில் தங்கிய குற்றமற்ற கற்பினையும்
செவ்வரி படர்ந்த மதர்ந்த குளிர்ந்த கண்களையும் மூங்கிலை ஒத்த பருத்த தோளினையும் உடைய
தெய்வம் போல் சிறந்த நம் தலைவியைக் காண்போம்.

ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம்
காந்தள் அம் சிறுகுடி கௌவை பேணாது
அரி மதர் மழை கண் சிவப்ப நாளை
பெரு மலை நாடன் மார்பு புணையாக
ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி – அகம் 312/4-8

உயர்ந்த மலையினின்றும் வீழும் மிக்க மழையாலான அருவி நீரில்,
காந்தள் பூக்களையுடைய இச்சீறூரின் அலரினைப் போற்றாது
செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ந்த கண்கள் சிவந்திட, நாளை
பெருமலைநாட்டினனாகிய தம் தலைவனின் மார்பு தெப்பம் ஆக
விளையாடுவோம் வருவாயாக காதல் மிக்க தோழியே!

கள்ளின்
மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழை கண்
சின் மொழி பொலிந்த துவர் வாய்
பன்மாண் பேதையின் பிரிந்த நீயே – அகம் 343/16-19

கள்ளால் ஆகிய
மகிழ்வு போல் மகிழ்தற்கு ஏதுவாகிய செவ்வரி படர்ந்த மதர்ந்த குளிர்ந்த கண்களையும்
சிலவாய மொழிகளால் பொலிவுற்ற பவளம் போன்ற வாயினையும்
பலவாய மாண்புகளையும் உடைய நம் தலைவியாகிய பேதைப்பெண்ணைப் பிரிந்த நீ

தூமலர் தாமரை பூவின் அங்கண்
மா இதழ் குவளை மலர் பிணைத்து அன்ன
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண்
அணி வளை முன்கை ஆய் இதழ் மடந்தை – அகம் 361/1-4

தூய மலராய தாமரைப் பூவிடத்தே
கரிய இதழ்களையுடைய குவளை மலர் இரண்டினைப் பிணைத்துவைத்தாற் போன்ற
அழகிய முகத்தே சுழலும் பெரிய மதர்த்த குளிர்ந்த கண்களையும்
அழகிய வளைகளையுடைய முன்கையினையும் அழகிய வாய் இதழினையுமுடைய நம் தலைவியின்

நுதி வேல் கொண்டு நுதல் வியர் தொடையா
கடிய கூறும் வேந்தே தந்தையும்
நெடிய அல்லது பணிந்து மொழியலனே
இஃது இவர் படிவம் ஆயின் வை எயிற்று
அரி மதர் மழை கண் அம் மா அரிவை
மரம் படு சிறு தீ போல
அணங்கு ஆயினள் தான் பிறந்த ஊர்க்கே – புறம் 349

தன் கை வேலின் கூரிய இலையால் தன் நெற்றி வியர்வையைத் துடைத்து
கேட்டார் அஞ்சத்தக்க மொழிகளைக் கூறுகின்றான் வேந்தனும், இவள் தந்தையும்
நெடுமொழிகளைத் தவிர பணிவைப் புலப்படுத்தும் சொற்களைச் சொல்லுகின்றானில்லை,
இது இவர்கள் கொள்கை ஆகும், இதனை ஆராயுங்கால் கூரிய பற்களையும்
அரி பரந்து மதர்த்துக் குளிர்ந்த கண்களையும் அழகிய மாமை நிறத்தையுமுடைய அரிவையாவாள்
மரத்தைக் கடையுமிடத்துத் தோன்றும் சிறு தீ அம் மரத்தை அழிப்பது போள
வருத்தம் விளைவிப்பவளாயினள் இவள் தான் பிறந்த ஊர்க்கு.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உள்ள ‘மதர்’ என்ற சொல், ஒரு பாராட்டுச்சொல்லாகவே இருக்கக் காண்கிறோம்.
எனவே, இத்தகைய இடங்களில் வரும் மதர் என்பதற்கு, செழிப்பான (luxuriant), வளமைபொருந்திய(rich),
மகிழ்ச்சிநிறைந்த(joyful) போன்ற பொருள்கள் ஒத்துவரும் எனத் தோன்றுகிறது.
மேலும், இவற்றில் சில இடங்களில், மதர்க்கண் என்பதைக் காந்தக்கண்கள், சுண்டியிழுக்கக்கூடிய கண்கள்,
கவர்ச்சியான கண்கள் என்றும் பொருள் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது.

2. அடுத்து, தலைவனை மயக்கி இழுக்கும் பரத்தையரின் கண்களும் மதர்க்கண்கள் எனப்படுகின்றன.

மட மதர் உண்கண் கயிறு ஆக வைத்து
தட மென் தோள் தொட்டு தகைத்து மட விரலால்
இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில் எம் இழையை
தொட்டு ஆர்த்தும் இன்ப துறை பொதுவி – பரி 20/55-58

இணக்கமுள்ள மதர்த்த மையுண்ட கண்களைக் கயிறாகக் கொண்டு,
தன் பெரிய மென்மையான தோள்களாகிய கட்டுத்தறியிலே கட்டி, நிறுத்தி, இளமைபொருந்திய விரல்களால்
பொருள்கொடுப்போருக்கு யாழினை இசைத்து இசையெழுப்பி இன்பமூட்டும் பொழுதே, என் அணிகலன்களையும்
அணிந்து, மகிழ்வித்து, இன்பம் வழங்குவதில் பொதுமையுடையவளே!

சேரி
அரி மதர் உண்கண்ணார் ஆரா கவவின்
பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு யானும்
செரு ஒழிந்தேன் சென்றீ இனி – கலி 91/12-15

சேரியிலிருக்கும்
செவ்வரி படர்ந்த மதர்த்த மைதீட்டிய கண்ணையுடைய பரத்தையரின் ஆசை குறையாத தழுவலால்
உன் இயல்பான நிலை அழிந்துநிற்கும் உன் மேனியைக் கண்டு, நானும்
கோபம் தீர்ந்தேன்! செல்வாயாக அந்தப் பரத்தையரிடமே இப்போது”;

அரி மதர் மழை கண் மாஅயோளொடு
நெருநையும் கமழ் பொழில் துஞ்சி இன்றும்
பெரு நீர் வையை அவளொடு ஆடி
புலரா மார்பினை வந்து நின்று எம்வயின்
கரத்தல்கூடுமோ – அகம் 296/3-7

செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ந்த கண்ணினை உடைய மாமை நிறத்தையுடைய பரத்தையுடன்
நேற்றும் மணம் கமழும் பொழிலில் துயின்று இன்றும்
அவளுடன் வையையின் நீர்ப்பெருக்கில் விளையாடி
ஈரம் புலராத மார்பினையுடையையாய் எம்பால் வந்து நின்று
எமக்கு மறைத்தல் இயலுமோ?

பரத்தையரின் கண்ணழகைத் தலைவியர் பாராட்டமாட்டார் என்பது உறுதி.
எனவே இது ஒரு வஞ்சப்புகழ்ச்சியாக இருக்கவேண்டும்.
மதர் என்ற சொல்லுக்கு with intense desire என்ற ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பு உண்டு.
வைதேகி ஹெர்பர்ட் அம்மையார் தமது சங்க இலக்கிய ஆங்கில மொழிபெயர்ப்புகளில்
இச்சொல்லுக்கு இந்த இடங்களில் luscious என்று பொருள்கொண்டிருப்பார். இதற்கு,
Having strong sexual appeal என்று பொருள்.
இதனை seductive, voluptuous என்றும் கொள்ளலாம். எனவே, இத்தகைய இடங்களில் வரும் மதர் என்ற
சொல்லுக்கு போதை தரும், மயக்கம் தரும், வெறியூட்டும் என்ற பொருள்கொள்வது பொருத்தமாகத் தோன்றுகிறது.

3. அடுத்து, மிகுந்த துயரத்தில் ஆழ்ந்து கண்ணீர்விடும் ஒரு பெண்ணின் கண்களும் மதர்க்கண் எனப்படுகின்றன.

நீர் எறி மலரின் சாஅய் இதழ் சோரா
ஈரிய கலுழும் இவள் பெரு மதர் மழை கண் – குறி 247,248

பெரிய மழைத் துளிகள் ஓங்கிப்பாய்ந்த மலர் போல் அழகழிந்து, இமை சோர்ந்து,
ஈரமுள்ளனவாய் கலங்கிநின்றன – (இவளின் பெரிய செழிப்பான குளிர்ந்த கண்கள்),

திரு முகம் இறைஞ்சினள் வீழ்பவற்கு இனைபவள்
அரி மதர் மழை கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல் – கலி 77/3,4

தன் அழகிய முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு, தான் விரும்பியவனுக்காக வருந்துபவளின்
சிவந்த வரிகளும், செருக்கும், குளிர்ச்சியும் கொண்ட கண்ணின் நீர், பரந்த முலையின் மேல் தெறிப்பது போல்

ஆங்கே அரி மதர் உண்கண் பசப்ப நோய் செய்யும்
பெருமான் பரத்தைமை ஒவ்வாதி என்றாள் – கலி 82/20,21

அப்பொழுது, ‘மகளிரின் செவ்வரிபடர்ந்த, செழித்த, மைதீட்டிய கண்கள் பசந்துபோகும்படி அவருக்கு நோவைத் தரும்
உன் தந்தையின் பரத்தைமைக் குணத்தைப் போலிருக்காதே’ என்றாள்,

மதர் எழில் மழை கண் கலுழ இவளே
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல்
மாண் நலம் சிதைய ஏங்கி ஆனாது
அழல் தொடங்கினளே – அகம் 120/6-9

மதர்த்த அழகினையுடைய குளிர்ந்த கண் கலங்கிட, இவள்
மிக்க நாணத்தைக் கொண்ட சிறிய மெல்லிய சாயலினையுடைய
தன் மாண்புற்ற அழகு கெட ஏக்கமுற்று அமையாது
அழுதலைத் தொடங்கியுள்ளாள்

வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து
எதிர் மலர் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே – அகம் 149/17-19

வண்டு வீழ நீண்ட ஆழமான சுனையில் பூத்த நீலப்பூவின்
புதிய மலர் இரண்டின் சேர்க்கை போன்ற இவளது
செவ்வரி படர்ந்த மதர்த்த குளிர்ந்த கண்கள் தெளிந்த நீரினைக் கொள்ள

நெடிது உயிர்த்து
வருந்துவள்கொல் அளியள் தானே சுரும்பு உண
நெடுநீர் பயந்த நிரை இதழ் குவளை
எதிர் மலர் இணை போது அன்ன தன்
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே – அகம் 381/17-21

பெருமூச்செறிந்து
வருந்தியிருப்பாளோ! இரங்கத்தக்காள்! வண்டு தேனைப் பருக
ஆழமான நீரினால் தரப்பட்ட நிரையாகவுள்ள இதழ்களையுடைய குவளையது
புதிய மலராய இரண்டு பூக்களைப் போன்ற தனது
செவ்வரி பரந்த மதர்த்த குளிர்ந்த கண்கள் தெளிந்த நீரைக் கொள்ள

திருந்து இழை நெகிழ்ந்து பெரும் தோள் சாய்
அரி மதர் மழை கண் கலுழ செல்வீர் – அகம் 387/1,2

இவளின் திருந்திய அணி நெகிழவும் பெரிய தோள் நெகிழவும்
அரி பரந்த மதர்த்த கண்களில் நீர் ஒழுகவும் செல்லும் தலைவரே

கார் வான் இன் உறை தமியள் கேளா
நெருநல் ஒரு சிறை புலம்பு கொண்டு உறையும்
அரி மதர் மழை கண் அம் மா அரிவை – புறம் 147/3-5

கார்காலத்து மழையின் இனிய துளி வீழ்கின்ற ஓசையை தமியளாய்க் கேட்டு
நேற்று ஒருபக்கத்துத் தனிமைகொண்டிருந்த
அரி பரந்த மதர்த்த குளிர்ச்சியையுடைய கண்ணினையும் அழகிய மாமை நிறத்தினையுமுடைய அந்த அரிவையின்

இவற்றில், சில இடங்களில், தலைவி துயருறுவதற்கு முன்னர் கண்கள் இருந்த நல்ல நிலை சுட்டப்படுவதாகக்
கொள்ள இடமுண்டு. முன்பு மதர்த்திருந்த கண்கள் இப்போது கண்ணீர் மழை சொரிய என்ற பொருள் கொண்டால்
இங்கு மதர் என்ற சொல்லுக்கு நாம் முதன்முதலில் (எண் 1) கண்ட பொருள் ஒத்துவரும். ஆனால்,

நெருநல் ஒரு சிறை புலம்பு கொண்டு உறையும்
அரி மதர் மழை கண் அம் மா அரிவை

என்ற அடிகளில் தனிமைத்துயரில் வாடும் மதர்க்கண்னையுடைய அரிவை என்ற பொருள் அமைவதால்,
பொதுவாக, மதர் என்ற சொல்லுக்குத் தரப்படும், செழிப்பு, களிப்பு, செருக்கு ஆகிய பொருள் ஏற்புடையனவாக
இல்லை.

வான் ஆர் மதி வாள் முகமும் மட மான் மதர் நோக்கும்
கோன் ஆர் மகள்தன் வடிவம் நோக்கி – சிந்தா:12 2456/2,3

வான் நிலவு அனைய ஒளி முகமும், இளம் மானைப் பழிக்கும் மதர்த்த நோக்கும் உடைய
கோவிந்த மன்னனுடைய மகளின் வடிவழகைக் கண்டு

என்ற சிந்தாமணி அடிகள் நமக்கு ஒரு புதுப்பொருளைத் தருகின்றன.

மட மான் மதர் நோக்கும்

என்ற தொடருக்கு ’மடமானை வென்ற மதர்த்த நோக்கும்’ என்று
பொருள்கொள்வார் பெருமழைப்புலவர்.

மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர் – சிறு 31
மான் அமர் நோக்கம் கலங்கி கையற்று – குறி 25
மயில் இயல் மான் நோக்கின்
கிளி மழலை மென் சாயலோர் – பட் 149,150
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே – நற் 101/9
பேர் எழில் மலர் உண்கண் பிணை எழில் மான் நோக்கின் – கலி 58/2
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக – கலி 69/4
மருண்ட மான் நோக்கம் காண்-தொறும் நின் நினைந்து – அகம் 74/10
மட மான் நோக்கி நின் மாண் நலம் மறந்தே – அகம் 91/18
மான் பிணை நோக்கின் மட நல்லாளை – அகம் 195/6

ஆகிய அடிகள், பெண்கள் மானைப்போன்ற பார்வையைக் கொண்டவர்கள் என்று குறிப்பிடுகின்றன.
மானின் கண்களில் உள்ள சிறப்பு அதன் மருண்ட பார்வைதான்.

மருண்ட மான் நோக்கம் காண்-தொறும் நின் நினைந்து – அகம் 74/10

என்ற அகநானூற்று அடி இதனை உறுதிப்படுத்துகிறது.
எனவே, மதர் என்பதற்கு இங்கு ’மருண்ட’ அல்லது ‘மருட்சி’ என்ற ஒரு பொருளும் உண்டு என்பது இதனால்
புலப்படுகிறது. இந்தப் பொருளே மூன்றாவதாக இங்குக் குறிப்பிடப்படும் துயருள்ள பெண்களின் கண்ணுக்கு
அடையாகக் குறிப்பிடப்படும் மதர் என்ற சொல்லுக்குச் சரியான பொருளாகும்.
ஆனால் எந்த அகராதியிலும் இந்தப் பொருள் கொடுக்கப்படவில்லை. இனிவரும் அகராதிகளில் இந்தப்பொருளும்
சேர்க்கப்பட்டால், இச் சொல்லுக்குரிய பொருள் அட்டவணை முழுமைபெறும்.

மேல்


மதர்வை

(பெ) மதர்வு, மதர்ப்பு, செழிப்பு, களிப்பு, இறுமாப்பு, செருக்கு,
luxuriance, exultation, haughtiness, arrogance

மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி – நற் 69/7

செம்மாப்பையுடைய நல்ல பசுவின் குற்றமற்ற தெளிந்த மணியோசை

மேல்


மதலை

(பெ) 1. தூண், post, pillar, pop
2. கொடுங்கை, கட்டிட/தூண்களின் உச்சியில் சிற்பவேலைப்பாடமைந்த பிதுக்கம்
Overhanging border, cornices or projections on the sides, front or pillars of a house
3. ஆதரவு, பற்றுக்கோடு, support
4. துணை, உதவி, help, aid
5. மதலை கோல் – இசைப்பவர் தலைவன் தன் கையில் வைத்திருக்கும் கோல்,
மதலை – support to produce music (vaidehi herbert)

1

வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்ற அரும் சென்னி
விண் பொர நிவந்த வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி
உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும் – பெரும் 346-350

வானம் (வீழாதபடி முட்டுக்காலாக) ஊன்றிவைத்த தூண் போல
ஏணியைச் சாத்திய ஏறுதற்கரிய தலையினையுடைய,
விண்ணைத் தீண்டும்படி உயர்ந்த வேயாது (சாந்திட்ட)மாடத்தில்,
இரவில் கொளுத்தின விளங்குகின்ற விளக்கு நெகிழ்ந்து
பெருநீர்ப்பரப்பாகிய கடலில் ஓடும் மரக்கலங்களை அழைக்கும்

2

மனை உறை புறவின் செம் கால் சேவல்
இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது
இரவும் பகலும் மயங்கி கையற்று
மதலை பள்ளி மாறுவன இருப்ப – நெடு 45-48

வீட்டில் வாழும் புறாவின் சிவந்த காலினையுடைய சேவல்
(தான்)இன்பம் நுகரும் பெடையொடு நாற்சந்தியில் (இரை)தேடி உண்ணாமல்,
இரவுக்காலமும் பகற்காலமும் தெரியாமல் மயங்கி, செயலற்று,
கொடுங்கைகளைத் துயிலிடமாய்க் கொண்டு, (அவற்றிற்கிடையே)தாவிக்கொண்டிருக்க;

3

அகழ் இழிந்து அன்ன கான்யாற்று நடவை
வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பி
பரூஉ கொடி வலந்த மதலை பற்றி
துருவின் அன்ன புன் தலை மகாரோடு
ஒருவிர்ஒருவிர் ஓம்பினர் கழிமின் – மலை 214-218

அகழியில் இறங்குவது போன்ற, காட்டாற்று வழித்தடம்
வழுக்கும் இடங்களைக் கொண்டிருத்தலால், வழுவாமை காத்து,
பருத்த கொடிகள் பின்னியவற்றை ஆதரவாகப் பிடித்துக்கொண்டு,
செம்மறியாட்டைப் போன்று, பரட்டைத் தலையினையுடைய (உம்)பிள்ளைகளோடே,
ஒருவர் ஒருவராக (ஒருவரை ஒருவர்)இறுகப் பிடித்தவராய்ச் செல்லுங்கள் –

4

அயலதை அலர் ஆயின் அகன்று உள்ளார் அவர் ஆயின்
மதலை இல் நெஞ்சொடு மதன் இலள் என்னாது
நுதல் ஊரும் பசப்பு ஆயின் நுணங்கு_இறை அளி என்னோ – கலி 28/13-15

நம்மைச் சுற்றிப் பழிச்சொற்கள் மிகுந்தன, அவரோ என்னை விட்டுப் பிரிந்து இருக்கிறார்,
துணையில்லாத நெஞ்சுடன் இவள் துயர் தாங்கும் ஆற்றல் இல்லாதவள் என்றிராமல்,
என் நெற்றியில் பசலை படர்கின்றது, நொடித்திறங்கும் தோளினாய்! அவரின் அன்பால் என்ன பயன்?

5

மண் முழா அமை-மின் பண் யாழ் நிறு-மின்
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடு-மின்
எல்லரி தொடு-மின் ஆகுளி தொடு-மின்
பதலை ஒரு கண் பையென இயக்கு-மின்
மதலை மா கோல் கைவலம் தமின் என்று – புறம் 152/14-18

முழவுக்கு மண்சாந்து பூசுங்கள், யாழை மீட்டுங்கள்
கந்தூம்பு என்ற யானையின் துதிக்கை போல்வடிவமைந்த பெருங்குழலை ஊதுங்கள்
சல்லரியைத் தட்டுங்கள், சிறுபறையை அறையுங்கள்
ஒரு பக்கமுள்ள மதலையைக் கொட்டுங்கள்
இசைப்புலமைக்குச் சான்றாக அமையும் கோலை என் கையில் தாருங்கள் – ச.வே.சுப்பிரமணியன்

இறுதி அடிக்கு மட்டும் வேறு உரை:

place in my hand the black rod that foretells the future – Vaidehi Herbert
நமது பிறப்புணர்த்தும் கரிய கோலைக் கையின்கண்ணே தாருங்கள் – ஔவை துரைசாமி.

இதற்கு

கண்டி நுண்கோல் கொண்டு களம் வாழ்த்தும் பதி 43:27

என்று பதிற்றுப்பத்து நூலில் குறிப்பிடப்படும் நுண்கோல் என்ற சொல்லை எடுத்துக்காட்டுவார் உரையாசிரியர்.
இந்த நுண்கோல் என்பதை இசைஞர்கள் தம் கையில் வைத்திருந்தனர் என்று அகம் 152/4, அகம் 208/3, புறம் 70/3
ஆகிய பாடல்களால் அறிகிறோம்.
இன்றைக்கும் மேற்கத்திய இசை இசைக்கும் இசைக்குழுவுக்குத் தலைவர், தம் குழுவினர் பாடும்போது கையில்
ஒரு சிறு கோல் வைத்திருப்பதைக் காணலாம். ஒருவேளை, இதைப்போன்றே, பாணர் தலைவர் தம் கையில்
கோல் வைத்திருந்தார் என எண்ணத் தோன்றுகிறது.

மேல்


மதவலி

(பெ) மிகுந்த வலிமை, Great strength
ஆகுபெயராக மிகுந்த வலிமையுடைய ஒருவனையும் குறிக்கும்.Person of great strength
சிறப்பாக, முருகன் என்ற தெய்வத்தைக் குறிக்கும், Lord Murugan

சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி
போர் மிகு பொருந குருசில் – திரு 275,276

சூரபன்மாவின் குலத்தை இல்லையாக்கின வலிமையுடைமையால் மதவலி என்னும் பெயரையுடைத்தோய்,
போர்த்தொழிலில் மிகுகின்ற வீரனே, தலைவனே

ஒன்பதிற்று தட கை மன் பேராள
பதிற்று கை மதவலி நூற்று கை ஆற்றல் – பரி 3/39,40

ஒன்பது பெரிய கைகளைக் கொண்ட புகழ் நிலைபெற்ற பேராளனே!
பத்துக் கைகளைக் கொண்ட மிகுந்த வலிமை கொண்டவனே! நூறு கைகளைக் கொண்ட ஆற்றலாளனே!

வில் ஏர் வாழ்க்கை சீறூர் மதவலி – புறம் 331/2

வில்லைக்கொண்டு வேட்டையாடி வாழும் வாழ்க்கையையுடைய சீறூருக்குரியவனாகிய மிக்க வலிமையுடைய
தலைவன்

மேல்


மதவு

(பெ) 1. மிகுதியான ஆர்வம், excessive desire, abundance of desire
2. வலிமை, strength
3. மடம் – மென்மை, tenderness, delicacy
மத அல்லது மதவு என்ற சொல்லைத் தொல்காப்பியம் வரையறுத்துள்ளது.

மதவே மடனும் வலியும் ஆகும் – தொல்-சொல்-உரி/79
மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே – தொல்-சொல்-உரி/80

எனவே, மடமை. Ignorance; வலிமை. Strength; மிகுதி. Excess. abundance; அழகு. Beauty;
என்பனவே மதவு என்பதற்குப் பொருளாகும்.

இந்த மதவு என்ற சொல் சங்க இலக்கியத்துல் 5 முறை வருகிறது.
இந்த ஐந்துமே அகநானூறு என்ற ஒரு நூலில் மட்டும் வருவது வியப்பிற்குரிய செய்தி. அவை,

பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன் – அகம் 14/9

பதவின் பாவை முனைஇ மதவு நடை
அண்ணல் இரலை – அகம் 23/7,8

கவவு கை நெகிழ்ந்தமை போற்றி மதவு நடை
செவிலி கை என் புதல்வனை நோக்கி – அகம் 26/17,18

கடவுக காண்குவம் பாக மதவு நடை
தாம்பு அசை குழவி – அகம் 54/6,7

பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு
மதவு உடை நாக்கொடு அசை வீட பருகி – அகம் 341/7,8

1.1

காலையில் வெளியில் மேயச்சென்ற கறவைமாடுகள், மாலையில், மடிநிறைய பாலினை ஏந்திக்கொண்டு
வீட்டிலுள்ள தம் கன்றுக்குப் பாலூட்ட, மிகுந்த ஆர்வத்துடன் வேகநடை போட்டுவருவதையே, மதவுநடை நல்லான்
என்று புலவர் குறிப்பிடுகிறார், எனலாம்.

பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன்
வீங்கு மாண் செருத்தல் தீம் பால் பிலிற்ற
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் – அகம் 14/9-11

அறுகம்புல் மேய்ச்சலில் உணவருந்திய மிகுந்த ஆர்வத்துடனான நடையுடைய நல்ல ஆனினங்கள்
பருத்த மாண்புடைய மடி இனிய பாலைப் பொழிய,
கன்றை நினைத்து அழைக்கும் குரலையுடையவாய் மன்றத்தில் கூட்டமாய்ப் புகுகின்ற

1.2

கடவுக காண்குவம் பாக மதவு நடை
தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடிய
கனையல் அம் குரல கால் பரி பயிற்றி
படு மணி மிடற்ற பய நிரை ஆயம்
கொடு மடி உடையர் கோல் கை கோவலர்
கொன்றை அம் குழலர் பின்றை தூங்க
மனை_மனை படரும் நனை நகு மாலை – அகம் 54/6-12

விரைந்து செலுத்துக! காண்போம் பாகனே! செருக்கான நடையுடன்
கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்றுகள் (தம்) பெருத்த மடியைக் குடித்துக் குறைக்க
கனைக்கின்ற குரலுடனே காலால் தாவித் தாவிப் பாய்ந்து
ஒலிக்கும் மணிகள் கழுத்தில் கட்டப்பட்ட பால்பசுக்களாகிய கூட்டம்
வளைந்த (வேட்டி)மடிப்பினையுடைய, கோலைக் கையிலே கொண்ட இடையர்,
கொன்றக்கனியால் குழலிசைப்பவராய்ப் பின்னால் மெதுவே நடந்துவர,
வீடுகள்தோறும் செல்லும், மொட்டுகள் மலரும், மாலை நேரத்தில்;

இங்கே,

மதவு நடை

என்பதை, பய நிரை ஆயம் என்பதனோடு பொருத்திக் கன்றினுக்குப் பாலூட்ட
விரைந்து நடக்கும் பசுக்கூட்டம் என்று பொருள்கொள்ளவேண்டும்.
ஆனால்,

மதவு நடை

என்பதை, தாம்பு அசை குழவி என்று அடுத்து வருகின்ற கன்றுக்கும் பொருத்தலாம்.
எனில், தாய்ப்பசுவிடம் பால்குடிக்க மிகுந்த ஆர்வத்துடன் ஓடிவரும் கன்றினுக்கு என்று பொருள் கொள்ளலாம்.

2.1

பதவின் பாவை முனைஇ மதவு நடை
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ – அகம் 23/7,8

அறுகின் கிழங்கையும் வெறுத்து, செருக்கான நடையினை உடைய
தலைமைப் பண்புள்ள ஆண் இரலைமான்கள் தான் விரும்பிய பெண்மானைத் தழுவி

இங்கே, மதவு என்பதற்கு, வலிமை அல்லது அந்த வலிமையினாலுண்டான செருக்கு என்று பொருள் ஏற்றதாகிறது

2.2

மழை கழிந்து அன்ன மா கால் மயங்கு அறல்
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு
மதவு உடை நாக்கொடு அசை வீட பருகி – அகம் 341/6-8

மழை பெய்து கழிந்தாலொத்த பெரிய வாய்க்கால்களில் தங்கிய கலங்கல் நீரினை
அறுகம்புல்லைத் தின்ற அசையும் திமிலையுடைய நல்ல ஏற்களும்
வலிமையுடைய நாவினால் தளர்ச்சி நீங்கக் குடித்து

அதிகமான தாகத்தினால், மிகுந்த ஆர்வத்துடன் நாவைச் சுழற்றி, காளை நீர் குடிக்கிறது என்றும் கொள்ளலாம்.

இங்கே,

மதவு உடை நாக்கொடு

என்ற தொடர், பாடபேதமாக, மதவு நடை நாகொடு என்றும் கொள்ளப்படுகிறது.
நாகு என்பது இளம் பசு. எனவே இங்கு மதவு என்பதற்கு மிகுந்த ஆர்வம் என்று முதலில் நாம் கண்ட பொருள்
ஏற்புடையதாகிறது.

3

கவவு கை நெகிழ்ந்தமை போற்றி மதவு நடை
செவிலி கை என் புதல்வனை நோக்கி
நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் – அகம் 26/17-19

(முன்பு இறுக)அணைத்த கை (இப்போது) நெகிழ்ந்ததைக் கண்டு, மென்மையான நடையுள்ள
செவிலியின் கையிலுள்ள என் புதல்வனை நோக்கி
(என்னைக் காட்டிலும்)நன்றாக இருப்போரிடம் ஒத்துப்போவீர் நீவிர்,

மேல்


மதன்

(பெ) 1. அறியாமை, மடம், ignorance
2. வனப்பு, அழகு, beauty
3. செருக்கு, arrogance
4. மனவெழுச்சி, Enthusiasm, elation
5. மிகுதி, abundace, exces
6. வலிமை, strength

1

உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள் – திரு 4

தன்னைச் சேர்ந்தாரின் தீவினையைப் போக்கி அவரைத் தாங்கிய அறியாமையை உடைத்தற்குக் காரணமாகிய
வலிமையுடைய தாள்

2

மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன் தாள் – சிறு 259

தன் கடுமையால் குதிரையின் செலவைப் பின்னே நிறுத்தும் வனப்புடைத்தாகிய வலியினையுடைய தாளினையும்

அகல் வயல்
அரிவனர் அரிந்தும் தருவனர் பெற்றும்
தண் சேறு தாஅய மதன் உடை நோன் தாள்
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும் – நற் 8/5-8

அகன்ற வயலில்
கதிரறுப்போரால் அறுக்கப்பட்டு, அதனைக் கொண்டுவருவோரால் கொணரப்பெற்றும்
குளிர்ந்த சேறு பரவிய அழகுடைய வலிய தண்டினையுடைய
கண் போன்ற நெய்தல் பூ, நெற்போரில் பூத்திருக்கும்

3

மன்னர், மன் எயில் கதுவும் மதன் உடை நோன் தாள் – பட் 277,278

பகைமன்னரின், நிலைபெற்ற மதிலைக் கைப்பற்றும் செருக்கினையும், வலியினையுமுடைய தாளினையும்

4

மண்டு அமர் பரிக்கும் மதன் உடை நோன் தாள் – புறம் 75/6

அடுத்துப் பொரும் போரைப் பொறுக்கும் மனவெழுச்சியையுடைத்தாகிய வலிய முயற்சியையுடைய

5

மண்டு அமர் அட்ட மதன் உடை நோன் தாள் – புறம் 213/1

மடுத்தெழுந்த போரின்கண் பகைவரைக் கொன்ற மிகுதி பொருந்திய வலிய முயற்சியையுடைய

6

மதன் உடை முழவு தோள் ஓச்சி தண்ணென – புறம் 50/12

நினது வலியையுடைய முழவு போலும் தோளை எடுத்து

மேல்


மதாணி

(பெ) கழுத்தணியின் தொங்கல், Large pendant suspended from the necklace

திண் கதிர் மதாணி ஒண் குறு_மாக்களை – மது 461

திண்ணியதாய் ஒளிரும் பேரணிகலன்களையுடைய இயற்கையாகவே அழகுள்ள சிறுபிள்ளைகளை

ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும்
பூண் அணி கவைஇய ஆர் அணி நித்தில
நித்தில மதாணி அ தகு மதி மறு
செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம் – பரி 2/29-32

ஓங்கி உயர்ந்த வானத்தில் தோன்றும் வளைந்த வானவில்லைப் போன்ற
பலநிறப் பூணாகிய அணிகள் அகத்திடப்பட்ட, நிறைந்த அழகான முத்துக்களால் ஆன
நித்தில மதாணி என்னும் அழகிய தகுதிபடைத்த மதியினோடு, அந்த மதியில் உள்ள களங்கம் போன்று
சிவந்த நிறத்தவளான திருமகள் வீற்றிருக்கும் உன் மாசற்ற மார்பு;

மேல்


மதி

1. (வி) 1. உயர்வாகக் கருது, பெருமையாகக் கொள், esteem, value, regard, respect
2. எண்ணு, உறுதிசெய், துணி, decide, ascertain
3. கருது, consider, think
– 2. (பெ) 1. சந்திரன், moon
2. மதிப்பு, சிறப்பு, esteem, value
3. இயற்கை அறிவு, understanding, intellect
4. நல்லறிவு, பகுத்தறிவு, Discrimination, judgment, discernment
– 3. (இ.சொ) ஒரு முன்னிலை/படர்க்கை அசைச்சொல்,
An euphonic suffix of the imperative mood / Expletive of the third person

1.1

மன்னர் மதிக்கும் மாண் வினை புரவி – நற் 81/3

மன்னர்கள் உயர்வாகக் கருதும் மாட்சிமையான போர்வினையில் மேம்பட்ட குதிரைகளின்

1.2

அணி சிறை இன குருகு ஒலிக்கும்_கால் நின் திண் தேர்
மணி குரல் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே
உள் ஆன்ற ஒலியவாய் இருப்ப கண்டு அவை கானல்
புள் என உணர்ந்து பின் புலம்பு கொண்டு இனையுமே – கலி 126/6-9

அழகிய சிறகுகள் கொண்ட கூட்டமான குருகுகள் ஒலிக்கும்போது, அதனை, உன்னுடைய திண்ணிய தேரின்
மணியொலி என்று இவள் எண்ணுவாள், அவ்வாறு எண்ணித்துணிந்தபோது
உள்ளுக்குள் அடங்கின ஒலியாக இருக்கக்கண்டு , அவை கடற்கரைச் சோலையின்
பறவைகளின் குரல் என்று தெளிந்து, பின்னர் தனிமை கொண்டு வருந்துவாள்;

1.3

காதலார் எவன் செய்ப பொருள் இல்லாதார்க்கு என
ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாயோ – கலி 14/12,13

காதலைவைத்துக்கொண்டு என்ன செய்ய, பொருள் இல்லாவிட்டால்? என்று
ஊரார் கூறும் சொற்களை ஒரு பொருட்டாக மதித்தாயோ?

2.1

பல் மீன் நடுவண் பால் மதி போல – சிறு 219

பல விண்மீன்களுக்கு நடுவிலிருந்த பால்(போலும் ஒளியை உடைய) திங்கள் போன்று

2.2

மதி நிறைந்த மலி பண்டம் – பட் 136

மதிப்பு மிக்க ஏராளமான பண்டங்கள்

2.3

மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி
வில் நவில் தட கை மேவரும் பெரும் பூண்
நன்னன் சேய் நன்னன் – மலை 62,64

தன் அறிவிற்கு மாறாக நினைக்காமல் நல்லனவற்றை உணரும் நுண்ணறிவுடைய,
வில்தொழில் பயின்ற பெரிய கையினையும், (தனக்குப்)பொருத்தமான சிறந்த அணிகலன்களையும் உடைய
நன்னன் மகனான நன்னனை

2.4

அஞ்சுவர பனிக்கும் வெம் சுரம் இறந்தோர்
தாம் வர தெளித்த பருவம் காண்வர
இதுவோ என்றிசின் மடந்தை மதி இன்று
மறந்து கடல் முகந்த கமம் சூல் மா மழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இல
பிடவமும் கொன்றையும் கோடலும்
மடவ ஆகலின் மலர்ந்தன பலவே – நற் 99/3-10

அச்சம் தரும்படி நடுக்குகின்ற கொடுமையான பாலைநிலக்காட்டில் சென்றோர்
தான் திரும்பி வருவேன் என்று தெளிவாகக் கூறிய பருவம் மிக்க அழகிதாக
வந்திருக்கும் இதுவோ என்று கேட்கிறாய் மடந்தையே! நல்லறிவில்லாது
பருவகாலத்தை மறந்து, கடல் நீரை முகந்த நிறைவான சூல்கொண்ட கரிய மேகங்கள்,
அதனைத் தாங்கமாட்டாது கொட்டித்தீர்த்த பெருமழையைக்
கார்காலத்து மழை என்று பிறழக்கருதிய உள்ளத்தோடு, தேர்ந்தறியும் அறிவு இல்லாதனவான
பிடவமும், கொன்றையும், காந்தளும்
மடமையுடையனவாதலால் மலர்ந்துவிட்டன பலவாக –

3

இது-மன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே
செறி_தொடி உள்ளம் உவப்ப
மதி உடை வலவ ஏ-மதி தேரே – ஐங் 487

இதுவே பிரிந்திருப்போர் ஒருவரையொருவர் நினைத்தேங்கும் மாலைக்காலம்;
செறிவான வளையல்களை அணிந்தவளின் உள்ளம் உவக்குமாறு
அறிவுடைய பாகனே! விரைந்து செலுத்துவாய் தேரினை.

மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி
அஞ்சல் ஓம்பு-மதி அறிவல் நின் வரவு என
அன்பு உடை நல் மொழி அளைஇ விளிவு இன்று
இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து
ஒரு நீ ஆகி தோன்ற விழுமிய
பெறல் அரும் பரிசில் நல்கு-மதி – திரு. 290-295

மணம் கமழ்கின்ற தெய்வத்தன்மை பொருந்திய இளைய வடிவைக் காட்டி அருளி,
‘அஞ்சுவதை விடுக, அறிவேன் நின் வரவை’ என
அன்புடைய நல்ல மொழிகளைப் பலகாலும் அருளிச்செய்து, கேடு இன்றாக
இருண்ட நிறத்தையுடைய கடலால் சூழப்பட்ட (இந்த)உலகத்தில்
ஒருவனாகிய நீயே (யாண்டுமாகித்)தோன்றுமாறு, சீரிய
பெறுதற்கரிய பரிசில்(ஆன வீடுபேற்றினைத்) தந்தருளுவான்

மேல்


மதிநாள்

(பெ) முழுமதிநாள், பௌர்ணமி, full moon

என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து
குன்று ஊர் மதியம் நோக்கி நின்று நினைந்து
உள்ளினென் அல்லெனோ யானே முள் எயிற்று
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்
எமதும் உண்டு ஓர் மதிநாள் திங்கள் – நற் 62/3-7

வெம்மையான கோடைக்காலம் நீடிய மூங்கில்கள் மிகுந்த காட்டுவழியில்
குன்றினை நோக்கி ஊர்ந்துசெல்லும் முழுநிலவை நோக்கி, நின்று, அவளை நினைந்து
மனத்துள் எண்ணிப்பார்த்தேன் அன்றோ நான்! முள் போல் கூர்மையான பற்களையும்,
திலகமிட்ட இனிய மணமுள்ள சிறப்பான நெற்றியையும் கொண்ட ஒருத்தியாக
எம்முடையவளும் உண்டு ஒரு நிறைநாள் திங்கள்(போன்றவள்),

மேல்


மதியம்

(பெ) 1. திங்கள், சந்திரன், moon
2. முழுநிலவு, full moon

1

ஒண் சுடர் ஞாயிற்று விளக்கத்தான் ஒளி சாம்பும்
நண்பகல் மதியம் போல் நலம் சாய்ந்த அணியாட்கு – கலி 121/17,18

ஒளிரும் சுடரினைக் கொண்ட ஞாயிற்றின் பிரகாசத்தால் தன் ஒளி மங்கித் தோன்றும்
நண்பகலில் காணப்படும் திங்களைப் போல் தன் பொலிவிழந்த இந்த அழகிக்கு;

2

கோடு கூடு மதியம் இயல்_உற்று ஆங்கு – பதி 31/12

பிறைநிலவின் கொம்புகள் கூடிநிற்கும் முழுமதி வானத்தில் ஊர்ந்துவந்தாற் போன்று

மேல்


மதில்

(பெ) கோட்டைச்சுவர், wall round a fort, fortification

குண்டு கண் அகழிய மதில் பல கடந்து – பதி 45/7

ஆழமான இடத்தையுடைய அகழிகளைக் கொண்ட கோட்டைச் சுவர்கள் பலவற்றை வெற்றிகொண்டு

மேல்


மது

(பெ) 1. போதையூட்டும் பானம், Intoxicating drink
2. தேன், honey

1

மட்டு நீக்கி மது மகிழ்ந்தும் – பட் 108

(மிதமான கிளர்ச்சியைத் தரும்)கள்ளைத் தவிர்த்து (வெறியூட்டும்)மது (உண்டு) மகிழ்ந்தும்,

2

விரி மலர் மதுவின் மரன் நனை குன்றத்து – பரி 17/5

மலர்ந்த பூக்களினின்றும் ஒழுகும் தேனினால் மரங்கள் நனைந்துபோகும் திருப்பரங்குன்றத்தில்,

மேல்


மதுகை

(பெ) 1. வலிமை, ஆற்றல், strength, power
2. மனத்திட்பம், mental strength, firmness of mind

1

மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து – கலி 1/8

மிக்குச் செல்கிற போர்கள் பலவற்றையும் வென்று, அதன் வலிமையால் பகைவர் வெந்த சாம்பலை அணிந்து

தம் இன்றி
யாம் உயிர் வாழும் மதுகை இலேம் ஆயின் – கலி 24/13,14

அவரின்றி
நான் உயிர் வாழும் ஆற்றல் எனக்கில்லை என்பதால்,

2

பிரசம் கலந்த வெண் சுவை தீம் பால்
விரி கதிர் பொன் கலத்து ஒரு கை ஏந்தி
புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல்
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்
முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்ப தத்து_உற்று
அரி நரை கூந்தல் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்
கொண்ட கொழுநன் குடி வறன்_உற்று என
கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள்
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே – நற் 110

தேன் கலந்த நல்ல சுவையையுடைய இனிய பாலை,
விரிந்து ஒளிவிடும் பொன்னால் ஆன பாத்திரத்தில் இட்டு அதனை ஒரு கையில் ஏந்திக்கொண்டு
அடித்தால் சுருண்டுகொள்ளும் மெல்லிய நுனியையுடைய சிறிய கோலை,
‘குடி’ என்று உயர்த்திப்பிடிக்க, அதினின்றும் தப்பிப்பிழைக்க, தெளிவான தன்மையுள்ள
முத்துக்களைப் பரல்களாகக் கொண்ட பொற்சிலம்பு ஒலிக்கத் தத்தித்தத்தி ஓடி,
மென்மையான நரைக்கூந்தலையுடைய செவ்விய முதுமையையுடைய செவிலியர்
ஓடித் தளர்ந்து தம் முயற்சியைக் கைவிட, பந்தல்கால்களுக்கிடையே ஓடி
செவிலியரின் கெஞ்சலை மறுக்கும் சிறிய விளையாட்டைச் செய்பவள்,
இல்லறத்துக்குரிய அறிவையும் ஒழுக்கத்தையும் எங்கிருந்து கற்றுக்கொண்டாளோ?
தன்னைக் கைப்பிடித்த கணவனின் குடும்பம் வறுமை அடைந்ததாக,
தன்னைக் கைப்பிடித்துக்கொடுத்த தந்தை வீட்டின் மிகுதியான சோற்றினை நினைத்துப்பார்க்கமாட்டாள்,
சிறிதாக ஓடும் நீரில் நுண்ணிய வளைவுவளைவான கருமணலைப் போல
வேண்டும்பொழுது உண்ணாமல் கிடைக்கும்பொழுது உண்ணும் சிறியவளான மனத்திட்பமுடையள் ஆயினள்.

மேல்


மதைஇய

(சொல்லிசை அளபெடை – பெ.அ) 1. மதர்த்த, மருண்ட, bewildered
2. மதர்த்த, செருக்கிய, proud, elegant

1

மாரி வீழ் இரும் கூந்தல் மதைஇய நோக்கு எழில் உண்கண் – கலி 131/21

கார்மேகம் விரும்பும் கரும் கூந்தலையும், மருண்ட பார்வையினைக் கொண்ட அழகிய மையுண்ட கண்களையும்
(இராசமாணிக்கனார் உரை)

2

மாவின்
மடம் கொள் மதைஇய நோக்கின்
ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோளே – அகம் 86/29-31

மானின்
மடத்தினைக் கொண்டதும் செருக்கினையுடையதுமான நோக்கினையும்
ஒடுங்கிய குளிர்ந்த கூந்தலினையும் உடைய மாமை நிறத்தினையுடையோள்
(வேங்கடசாமி நாட்டார் உரை)

மேல்


மதைஇனள்

(பெ) மதர்த்தவள், செருக்குடையவள், one who is elated with self-pride

போர் ஆரா ஏற்றின் பொரு நாகு இளம் பாண்டில்
தேர் ஊர செம்மாந்தது போல் மதைஇனள்
பேர் ஊரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல்
மோரோடு வந்தாள் தகை கண்டை யாரோடும்
சொல்லியாள் அன்றே வனப்பு – கலி 109/4-8

போர்க்குணம் குறையாத காளைக்கு, ஏனைய பசுக்களுக்கு இணையாக இருக்கும் பசுவினிடத்தில் பிறந்த
இளம் எருது
வண்டியை இழுத்துக்கொண்டு போகும்போது பெருமிதத்துடன் செல்வது போல, செருக்குடையவளாய்
பெரிய ஊர்களிலும், சிறிய ஊர்களிலும் தன்னைப் பற்றிய பேச்சு பெரிதாக எழச் செய்பவளைப் போல
மோரோடு வந்தவளின் அழகைப் பார்! ஊரிலுள்ள எந்தவொரு பெண்ணோடும்
ஒப்புமை கூற இயலாத வனப்பையுடையவள்;

மேல்


மந்தி

(41) 1. குரங்கு, monkey
2. பெண் குரங்கு, female monkey

1

மா மேயல் மறப்ப மந்தி கூர – நெடு 9

விலங்குகள் மேய்தலை மறந்துபோக, குரங்குகள் (குளிரால்)கூனிப்போக

2

பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும்
மூடும் நாகும் கடமையும் அளகும்
மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவும்
அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே – தொல்-பொருள்-மர/3

நெடும் கை யானை நெய் மிதி கவளம்
கடும் சூல் மந்தி கவரும் காவில் – பெரும் 394,395

நெடிய கைகளையுடைய யானைக்கு இடும் நெய்வார்த்து மிதித்த கவளத்தை,
முதற் சூலையுடைய மந்தி கவர்ந்துகொண்டுபோகும் சோலையினையும்;

மந்தி கணவன் கல்லா கடுவன் – ஐங் 274/1

மந்தியின் கணவனான, ஒன்றையும் கற்றுக்கொள்ளாத ஆண்குரங்கு

மேல்


மந்திரம்

(பெ) திருமறை வாசகம், vedic hymn

ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே – திரு 94-96

ஒரு முகம்
மந்திர நியதிகளின் மரபுள்ளவற்றில் வழுவாத
அந்தணருடைய வேள்விகளை கூர்ந்து கேட்கும்

முழங்கும் மந்திரத்து
அரும் திறல் மரபின் கடவுள் பேணியர்
உயர்ந்தோன் ஏந்திய அரும் பெறல் பிண்டம் – பதி 30/33-35

முழங்குகின்ற மந்திரவொலியால்
அரிய திறல் படைத்த மரபினையுடைய கடவுளை வாழ்த்தும்பொருட்டு,
வழிபாட்டினைச் செய்யும் உயர்ந்தோன் படைத்த பெறுவதற்கரிய பலியினைக் கண்டு

மேல்


மம்மர்

(பெ) 1. மனமயக்கம், delusion
2. மனக்கலக்கம், துன்பம், grief, distress, sorrow, affliction

1

நீர் நீவி கஞன்ற பூ கமழும்_கால் நின் மார்பில்
தார் நாற்றம் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே
அலர் பதத்து அசை வளி வந்து ஒல்க கழி பூத்த
மலர் என உணர்ந்து பின் மம்மர் கொண்டு இனையுமே – கலி 126/10-13

நீர் மட்டத்திற்கும் மேலே நெருக்கமாய் மலர்ந்திருக்கும் பூக்கள் மணம் பரப்பும் போது, அதை உன் மார்பின்
மாலையிலிருந்து வரும் மணம் என்று இவள் நினைப்பாள், அவ்வாறு நினைத்தபோது,
பூக்கள் மலர்கின்ற வேளையில் அவற்றை அசைத்த காற்று வந்து தன் மேனியில் மோத, கழியில் பூத்த
மலரின் மணமே அது என்று தெளிந்து பின்னர் மனமயக்கம் கொண்டு வருந்துவாள்;

2

உறைத்தும் செறுத்தும் உணர்த்துவானை
புல்லாது ஊடி புலந்து நின்றவள்
பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய
வேல் எழில் உண்கண் எறி நோக்கம் பட்ட புண்
பாய் குருதி சோர பகை இன்று உளம் சோர
நில்லாது நீங்கி நிலம் சோர அல்லாந்து
மல் ஆர் அகலம் வடு அஞ்சி மம்மர் கூர்ந்து
எல்லா துனியும் இறப்ப தன் காதலன்
நல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல் எஞ்ஞான்றும்
வல்லதால் வையை புனல் – பரி 12/66-75

அவன் மீண்டும் வலியுறுத்திக்கூறியும், சினந்து மொழிந்தும் அவளைத் தெளிவிப்பானை,
அணைத்துக்கொள்ளாது ஊடல்கொண்டவளாகக் பிணக்குற்றிருப்பவள்
பூவின் மணத்தையும் அழகையும் கொண்ட, அரக்கு வண்ணமூட்டப்பட்ட நீரால் நிறைக்கப்பெற்ற, வட்டினை எறிய,
வேலாகிய அழகிய மையுண்ட கண்கள் வீசிய பார்வை பட்டதுபோல் புண்ணிலிருந்து
பாய்கின்ற குருதியாக வண்ணநீர் வடிய, அவன் அவளிடம் பகைமை கொள்ளாமல் உள்ளம் சோர்ந்துபோக,
அவ்விடத்தில் நிற்காமல் நீங்கிச் சென்று நிலத்தில் வீழ, மனம் கலங்கி,
அவனது மற்போருக்கு இயைந்த மார்பில் பட்ட புண்ணுக்காக அச்சமுற்று, துயரங்கொண்டு
தன் கோபம் தணிந்தவளாய், தன் காதலனின்
நல்ல பொலிவுள்ள அழகிய மார்பினைத் தழுவிக்கொள்ளச் செய்தது, எக்காலத்திலும்
வல்லமை மிக்க வையையின் நீர்,

மேல்


மயக்கம்

(பெ) 1. அறிவின் திரிபு, தடுமாற்றம், Mental delusion: stupor, beweilderment; aberration of mind
2. பிரிவுத்துன்பம், Pining due to separation from one’s beloved;
3. ஒரு மரணச்சடங்கு, a funeral rite
4. கலப்பு, mixture

1

தேறு கள் நறவு உண்டார் மயக்கம் போல் காமம்
வேறு ஒரு பாற்று ஆனது-கொல்லோ – கலி 147/2,3

தெளிந்த கள்ளையும், மதுவையும் உண்டவரின் மயக்கத்தைப் போல, நன்றான காம உணர்வு
வேறொரு பாதையில் சென்றுவிட்டதோ?

2

வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின்
கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து ஆங்கே
மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால் மரன் நோக்கி
எவ்வத்தால் இயன்ற போல் இலை கூம்பல் எவன்-கொலோ – கலி 134/19-22

என்னோடிருந்து என் நலனை அனுபவித்துச் சென்றவர் வராமற்போய்விட்டதை நினைத்துக்கொண்டிருத்தலால்
செயலற்ற நெஞ்சத்தினளாய் நான் கலக்கத்தினுள் ஆழ்ந்து அங்கே
மையல் கொண்ட நெஞ்சத்தோடு பிரிவுத்துயரில் இருக்க, மரம் அதனைப் பார்த்து
அந்தத்துன்பத்தால் தாம் பதிக்கப்பட்டது போல் இலைகளைக் குவித்துக்கொண்டதே! அது எதனாலோ?

3

கடும் பகட்டு யானை நெடும் தேர் குட்டுவன்
வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்து அன்ன – நற் 395/4,5

பெரும் வலிமை கொண்ட யானையையும், நெடிய தேரினையும் உடைய குட்டுவன்,
பகைவேந்தரைக் கொல்லும்போதான மரணச்சடங்குகளில் முரசுகள் அதிர்வதைப் போல்
மயக்கம் – மரணச்சடங்கினுளொன்று. (யாழ். அக.) A funeral rite – Tamil Lexicon

4

புன்_புல மயக்கத்து விளைந்தன தினையே – ஐங் 260/4

புன்செய்ப் பகுதியாகப் பதப்படுத்திய நிலத்தில் விளைந்துநிற்கின்றன தினைப்பயிர்கள்.
மயக்கம் – பண்படுத்தப்பட்டமையான், மண்ணும் எருவும் பிறவும் கலந்த நிலம் என்க – பொ.வெ.சோமசுந்தரனார்

மேல்


மயக்கு

1. (வி) 1. உழக்கு, சிதை, damage, ruin
2. நிலைகுலையச்செய், unsettle
3. கல, mix up
4. பிறர் மனத்தைக் கவர், கவர்ந்து தன்வசப்படுத்து, allure, charm, fascinate
5. ஊடலுணர்த்து, clear one’s misunderstanding, as in sulks
6. கீழ்மேலாகப் புரட்டிப்போடு, turn upside down
– 2. (பெ) 1. பொருள் மயக்கம், ambiguity, equivocalness
2. மயக்கம், குழப்பம், confusion

1.1

பெரும் கடல் கரையது சிறு_வெண்_காக்கை
களிற்று செவி அன்ன பாசடை மயக்கி
பனி கழி துழவும் பானாள் – குறு 246/1-3

பெரிய கடற்கரையில் உள்ளன சிறிய வெண்ணிற நீர்க்காகங்கள்,
யானையின் காதைப் போன்ற பச்சை இலைகளை உழக்கி,
குளிர்ந்த கழிநீரைத் துழாவி மீன்தேடும் நள்ளிரவில்

1.2

வயவர் வீழ வாள் அரில் மயக்கி
இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப – பதி 12/1,2

வீரர்கள் தோற்றுவிழும்படியாக, வாளால் செய்யும் போரினால் அவரை நிலைகுலையச் செய்து
பகைவரின் நாட்டைக் கவர்ந்துகொள்ளும் சுற்றத்தாரையுடைய அரசர்கள் தலைநடுங்கி வணங்க,

1.3

மா தீம் தளிரொடு வாழை இலை மயக்கி
ஆய்ந்து அளவா ஓசை அறையூஉ பறை அறைய
போந்தது வையை புனல் – பரி 10/6-8

மாமரத்தின் காண்பதற்கு இனிமையான தளிரோடு, வாழை இலைகளையும் கலந்து
ஆராய்ந்து அளவிடமுடியாத பல்வேறு ஓசைகள் ஒலிக்க, கரைக் காவலர் பறை அறைய,
போகிறது வையையின் வெள்ளம்;

பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி
குறு முயல் கொழும் சூடு கிழித்த ஒக்கலொடு – புறம் 34/10,11

பாலின்கண் பெய்து அடப்பட்ட சோற்றை தேனொடு கலந்து உண்டு
குறிய முயலினது கொழுவிய சூட்டிறைச்சியைத் தின்ற என் சுற்றத்தோடு கூட

1.4

மாய பொய் கூட்டி மயக்கும் விலை கணிகை – பரி 20/49

மாயப் பொய்யுடன் சேர்த்து வந்தவரை மயக்கும் விலைமாதே!

1.5

கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்_வழி
மனத்தில் தீது இலன் என மயக்கிய வருதி-மன் – கலி 73/10,11

நெஞ்சைச் சுடும்படியாக நீ செய்வதைக் கடிந்துகொள்வார் இல்லாதபோது
“மனத்தால் நான் தீது இல்லாதவன்” என்று எம் ஊடலைத்தீர்க்க வருவாய்

1.6

கானவர், கரி புனம் மயக்கிய அகன் கண் கொல்லை – புறம் 159/15,16

வேடர் சுடப்பட்டுக் கரிந்த புனத்தைக் கீழ்மேலாகப் புரட்டி உழுத அகன்ற இடத்தையுடைய கொல்லைக்கண்
சாலமன் பாப்பையா உரை

2.1

மயக்கு உடைய மொழி விடுத்தனன் ஆங்கு – புறம் 239/18

பொருள்மயக்கம் தரும் சொற்களைச் சொல்லமாட்டான்

2.2

மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇ – புறம் 362/11

மருட்கையினின்றும் நீங்கி, அம் மருள் காரணமாகத் தோன்றும் மயக்கத்தையும் போக்கி

மேல்


மயக்குறு

(வி) 1. கலக்கப்படு, get mixed up
2. மயங்கச்செய், குழம்பச்செய், confuse, confound
3. தடுமாற்றமடை, குழம்பு, get baffled, perplexed
4. போரிடு, fight
5. கிறக்கு, பரவசப்படுத்து, captivate, delight, enthrall

1

தண் புன கருவிளை கண் போல் மா மலர்
ஆடு மயில் பீலியின் வாடையொடு துயல்வர
உறை மயக்கு_உற்ற ஊர் துஞ்சு யாமத்து – நற் 262/1-3

குளிர்ச்சியான கொல்லையில் வளர்ந்த கருவிளம்பூவின், கண் போல மலர்ந்த, பெரிய பூவானது
ஆடுகின்ற மயிலின் தோகை போல வாடைக்காற்றில் முன்னும்பின்னும் அசைய,
அத்துடன் சேர்ந்து தூறல்மழையும் கலக்கப்பட்ட, ஊரே துயில்கொள்ளும் நடுயாமத்தில்,

2

பூவொடு புரையும் கண்ணும் வேய் என
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என
மதி மயக்கு_உறூஉம் நுதலும் – குறு 226/1-3

பூவினை ஒத்திருந்தன கண்கள்; மூங்கிலோ என
ஈடில்லா அழகை எய்தியிருந்தன தோள்கள்; இளம்பிறை என்னும்படி
அறிவினை மயங்கச்செய்தது நெற்றி;

3

வையை வரு புனல் ஆடல் இனிது-கொல்
செவ்வேள் கோ குன்றம் நுகர்தல் இனிது-கொல்
வை வேல் நுதி அன்ன கண்ணார் துணை ஆக
எவ்வாறு செய்வாம்-கொல் யாம் என நாளும்
வழி மயக்கு_உற்று மருடல் நெடியான்
நெடு மாட கூடற்கு இயல்பு – பரி 35/1-5

வையையில் புதிதாக வருகின்ற நீரில் புனலாடுவது இனியதா?
முருகப்பிரான் இருக்கும் தலைமைப் பண்புள்ள திருப்பரங்குன்றத்தினை வணங்கி இன்புறுதல் இனியதா?
கூர்மையான வேலின் நுனி போன்ற கண்களையுடைய பெண்கள் துணையாக வர
இவ்விரண்டினில் எதனைச் செய்வோம் நாம் என்று எந்நாளும்
வழியில் தடுமாற்றமடைந்து மருளுதல், பாண்டியனின்
நெடிய மாடங்களையுடைய மதுரை மக்களுக்கு இயல்பு.

4

பெரும் களிற்று இனத்தொடு வீங்கு எருத்து எறுழ் முன்பின்
இரும் புலி மயக்கு_உற்ற இகல் மலை நன் நாட – கலி 48/6,7

பெரிய யானைக் கூட்டத்தோடு, பருத்த கழுத்தும் பெரிய உடல்வன்மையும் கொண்ட
பெரிய புலி போரிடுகின்ற மலையினையுடைய நல்ல நாடனே!

5

குறுகுறு நடந்து சிறு கை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய் உடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்கு_உறு மக்களை இல்லோர்க்கு
பய குறை இல்லை தாம் வாழும் நாளே – புறம் 188/3-7

குறுகக் குறுக நடந்து சென்று, சிறிய கையை நீட்டி
கலத்தின்கண் கிடந்ததைத் தரையிலே இட்டும், கூடப்பிசைந்து தோண்டியும், வாயாற்கவ்வியும், கையால் துழந்தும்
நெய்யையுடைய சோற்றை உடம்பின்கண் படச் சிதறியும்
இங்ஙனம் அறிவை இன்பத்தான் மயக்கும் மக்களை இல்லாதவர்க்கு
பயனாக முடிக்கப்படும் பொருளில்லை தாம் உயிர்வாழும் நாளின்கண்

மேல்


மயங்கு

(வி) 1. குழம்பு, தடுமாறு, get confused, baffled
2. நெருங்கியிரு, be crowded together
3. வருந்து, be distressed
4. கல, be mixed up
5. கலங்கு, be perturbed
6. மிகுந்திரு, be in excesss
7. செறிந்திரு, be dense
8. போன்றிரு, ஒத்திரு, resemble
9. கைகலந்து போரிடு, engage in a hand-to hand fight
10. தங்கு, be stagnant, stay
11. அறிவுகெடு, lose one’s senses
12. பின்னிக்கிட, get entwined
13. கீழ்மேலாகப் புரள், roll over
14. மாறுபடு, be changed
15. குன்று, decline, dwindle
16. ஐயங்கொள், be in doubt
17. ஒன்றால் ஈர்க்கப்படு, be charmed, fascinated, enchanted

1

மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின் – பெரும் 106

மானின் அடிச்சுவடுகள் பதிந்த குழம்பிப்போவதற்குக் காரணமான வழிகளின் பக்கத்தில்

2

முகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு காட்ட – பரி 15/39

அரும்புகள் நெருங்கியிருக்கின்ற முல்லை மகளிரின் முறையாக நடக்கின்ற கற்புநெறியைக் காட்ட,

3

பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிர காலையும்
அரிதே காதலர் பிரிதல் இன்று செல
இளையர் தரூஉம் வாடையொடு
மயங்கு இதழ் மழை கண் பயந்த தூதே – நற் 5/5-9

பெருமழையைப் பொழிந்த தொழிலையுடைய மேகங்கள்
தெற்குப்பக்கமாய் எழுந்து முழங்கும் முன்பனிக்காலத்திலும்
அரிதானதாகும் உன் காதலர் உன்னைவிட்டுப் பிரிதல்; இன்றைக்குச் செல்லும்
அந்த இளைஞரைத் தடுத்துத் திரும்பும்படி செய்யும் வாடையுடன்
வருந்துகின்ற இமைகளில் மழையாய் நீரைச் சிந்தும் உன் கண்கள் சொல்லிய செய்தியும்.

4

புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல் – நற் 63/8

பறவைகள் வந்து உட்கார வளைந்து உதிர்ந்த பூக்கள் கலந்த சேறு நிரம்பிய

5

மாண்பு இல் கொள்கையொடு மயங்கு துயர் செய்த
அன்பு இல் அறனும் அருளிற்று மன்ற – ஐங் 394/1,2

மாண்பு சிறிதும் இல்லாத நெறிமுறையோடு, மனம் கலங்க இன்னல் செய்த
அன்பே இல்லாத தருமமும் எனக்கு அருள்செய்வதாயிற்று, உண்மையாய் –

மழை கழிந்து அன்ன மா கால் மயங்கு அறல் – அகம் 341/6

மழைபெய்து கழிந்தாலொத்த பெரிய வாய்க்கால்களில் தங்கிய கலங்கிய நீரை
புலியூர்க்கேசிகன் உரை

6

எல்லையும்
மயங்கு இருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க – நற் 364/1-3

பகற்போதிலும்
இருள் மிக்க நடுயாமத்துக் காரிருளோடன்றி
பேராரவாரத்தையுடைய மேகங்கள் நீர் நிறைந்து வானத்தில் இயங்க,
பின்னத்தூரார் உரை

7

இருள் மயங்கு யாமத்து இயவு கெட விலங்கி – அகம் 218/10

இருள் செறிந்த நடுயாமத்தே நெறி தடுமாறலான் விலகி
ந.மு.வேங்கடசாமிநாட்டார் உரை

8

வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன் – பரி 15/50

நம்மைக் கவ்விக்கொள்ளும் கரிய இருள் போன்ற நீலமணி நிற மேனியன்,

9

பனை தடி புனத்தின் கை தடிபு பல உடன்
யானை பட்ட வாள் மயங்கு கடும் தார் – பதி 36/5,6

பனைமரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டிருக்கும் காட்டினைப் போல துதிக்கைகள் வெட்டப்பட்டு, திரளான
யானைகள் இறந்துகிடக்கும், வாட்படைவீரர் ஒருவரோடொருவர் மோதிக்கொள்ளும் கடுமையான முன்னணிக்
களத்தில்

தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து – புறம் 294/4

எதிர்வோர், உறவினரென்றும் பிறரென்றும் பாராமல் கைகலந்து செய்யும் போர்க்களத்தில்

10.

மழை கழிந்து அன்ன மா கால் மயங்கு அறல் – அகம் 341/6

மழைபெய்து கழிந்தாலொத்த பெரிய வாய்க்கால்களில் தங்கிய நீரை
ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை – ச.வே.சுப்பிரமணியன் உரை – இரா.செயபால் உரை

படை மயங்கு ஆரிடை நெடு நல் ஊரே – புறம் 343/17

படை ஏந்திய மறவர் நின்று காக்கும் அரிய வழிகளையுடைய நெடுய நல்ல ஊரின்கண்

11.

வேறுபட்டு ஆங்கே கலுழ்தி அகப்படின்
மாறுபட்டு ஆங்கே மயங்குதி யாது ஒன்றும் – கலி 91/19,20

நான் உன்னுடன் வேறுபட்டு நிற்கும்போது நெஞ்சு கலங்குகின்றாய்! உன் கைக்குள் அகப்பட்டுக்கிடந்தால்
என்னோடு மாறுபட்டு பரத்தையர் சேரி புகுந்து அறிவு மயங்குகிறாய்!
மா.இராசமாணிக்கனார் உரை

12

முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க – பரி 6/20

மகளிர் முலையும், மைந்தர் மார்பும் முயங்குவதால் அவற்றிலுள்ள அணிகலன்கள் ஒன்றோடொன்று
பின்னிக்கிடக்க

எந்தையும் யாயும் உணர காட்டி
ஒளித்த செய்தி வெளிப்பட கிளந்த பின்
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப
நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே
முடங்கல் இறைய தூங்கணம்_குரீஇ
நீடு இரும் பெண்ணை தொடுத்த
கூடினும் மயங்கிய மையல் ஊரே – குறு 347

நம் தந்தையும் தாயும் உணரும்படி அறிவித்து
மறைத்து வைத்திருந்த செய்தியை வெளிப்படையாகப் பேசிய பின்னர்
மலைகள் பொருந்திய இடத்தைச் சேர்ந்த நம் தலைவன் நம்மிடம் வந்து வேண்ட
நல்லதையே விரும்பும் கொள்கையினால் கருத்துகள் ஒன்றுபட்டன;
வளைந்த சிறகுகளையுடைய தூக்கணங்குருவி
உயரமான கருத்த பனைமரத்தில் கட்டிய
கூட்டைப் பார்க்கிலும் கதைபின்னிக்கொண்டிருந்த இந்த ஊரும் நம்மோடு ஒன்றிப்போயிற்று

13

பூழி மயங்க பல உழுது வித்தி – புறம் 120/3

புழுதி கீழ்மேலாகப் புரள பல சால்பட உழுது வித்தி

14

அழிந்தோர்க்கு
ஏமம் ஆகும் நின் தாள் நிழல் மயங்காது
செய்தல் வேண்டுமால் நன்றே – புறம் 213/20-22

அஞ்சினோர்க்கு
அரணாகும் நின் அடிநிழல், மாறுபடாமல்
செய்தல் வேண்டும் நல்வினையை

15

கடல் பாடு அவிந்து கானல் மயங்கி
துறை நீர் இரும் கழி புல்லென்றன்றே – குறு 177/1,2

கடல் ஒலி அடங்கிக் கடற்கரைச் சோலைகள் ஒளிமங்கித்
துறையில் உள்ள நீர்நிறைந்த கழிகள் பொலிவிழந்து காணப்பட்டது.
ச.வே.சுப்பிரமணியன் உரை

16

அறியாமையின் வெறி என மயங்கி
அன்னையும் அரும் துயர் உழந்தனள் – ஐங் 242/1,2

அறியாமையினால், தீயசக்தி தாக்கியதாக ஐயங்கொண்டு
அன்னையும் நீக்குதற்கரிய துயரத்தில் ஆழ்ந்தாள்;

17

தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார்
தார் மயங்கி வந்த தவறு அஞ்சி போர் மயங்கி
நீ உறும் பொய் சூள் அணங்கு ஆகின் மற்று இனி
யார் மேல் விளியுமோ கூறு – கலி 88/18-21

தேர் ஏறி வரும் சிறப்பால் ஈர்க்கப்பட்டு உன்னிடம் வந்த, தெரிந்தெடுத்த மாலை சூடிய அந்த அழகிய பரத்தையரின்
மாலையை மாற்றி உன் கழுத்தில் சூடி வந்த தவற்றுக்கு அஞ்சி நான் உன்னோடு கொண்ட ஊடல் போரில் கலங்கி
நீ கூறும் பொய்ச்சூள் உனக்குத் தெய்வகுற்றம் ஏற்படுத்துமாயின் அதனால் விளையும் கேடு, இனி
யார்மேல் இறங்குமோ கூறு!”

மேல்


மயர்

(பெ) 1. மயக்கம், Bewilderment, confusion
2. மறதி, forgetfulness

1

இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே
பெரும் கலி ஞாலத்து தொன்று இயல் புகழது
கண்டு மயர் அறுக்கும் காமக்கடவுள் – பரி 15/35-37

இருங்குன்றம் என்ற பெயர் பரந்த அந்த மலை
கடல்சூழ்ந்த நிலவுலகில் தொன்மையான இயல்பையுடைய புகழினைக் கொண்டது;
அதனைக் கண்ட அளவில் காண்போரின் மயக்கத்தைப் போக்கும் வழிபடும் கடவுள் அது;

2

அயிரி யாறு இறந்தனர் ஆயினும் மயர் இறந்து
உள்ளுப தில்ல தாமே – அகம் 253/20,21

அயிரி என்னும் யாற்றினைக் கடந்து சென்றனராயினும், மறதி அற்று
என்றும் அவர் நினைந்திருப்பார்
வேங்கடசாமி நாட்டார் உரை.

மேல்


மயல்

(பெ) 1. மயக்கம், Confusion; bewilderment;
2. கலக்கம், perplexity, discomposure
3. மயக்கம், delusion

1

நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகை ஆக
துனி செய்து நீடினும் துறப்பு அஞ்சி கலுழ்பவள்
பொருள் நோக்கி பிரிந்து நீ போகுதி என கேட்பின்
மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள்-மன்னோ – கலி 10/14-17

மிகவும் அதிமான மெல்லியல்பு கொண்டவளான இவள், விருப்பத்துடன் நீ விளையாட்டாகப்
பொய்க்கோபம் கொண்டு மறைந்திருந்தாலும், அந்தச் சிறு பிரிவிற்கே அஞ்சி நடுங்குகின்றவளாயிற்றே;
பொருளின் மீது நோக்கம்கொண்டு இவளை விட்டுப் பிரிந்து நீ போகிறாய் என்று கேள்விப்பட்டால்
மருண்ட தன் பார்வை மடிந்துபோக, மயக்கம் கொண்டுவிடுவாள் அன்றோ?

2

ஒல்லா மயலொடு பாடு இமிழ்பு உழிதரும்
மடங்கல் வண்ணம் கொண்ட கடும் திறல்
துப்பு துறைபோகிய கொற்ற வேந்தே – பதி 62/7-9

உயிர்களுக்குப் பொறுக்கமுடியாத கலக்கத்தைத் தந்து, பெரும் முழக்கத்தோடு திரியும்
கூற்றுவனின் இயல்பினைக் கொண்டகடுமையான வலிமைமிக்க,
போர்த்துறையில் சிறப்பெய்திய வெற்றியையுடைய வேந்தனே!

3

பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம் பூ முருக்கின் நன் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்து
படிவ உண்டி பார்ப்பன மகனே
எழுதாக்கற்பின் நின் சொல்லுள்ளும்
பிரிந்தோர் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ இதுவே – குறு 156

பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
சிவந்த பூக்களைக்கொண்ட புரச மரத்தின் கொப்பின் பட்டையை உரிந்து
தண்டாக்கி அதனுடன் பிடித்த தொங்கவிட்ட கமண்டலத்துடன்
நோன்பு உணவு உண்ணும் பார்ப்பன மகனே!
எழுதாமல் வாய்ப்பாடமாகக் கற்கும் நின் பாடங்களில்
பிரிந்தவரைச் சேர்த்துவிக்கும் தன்மையுள்ள
மருந்தும் இருக்கிறதோ? இது ஒரு மயக்க நிலையோ?

மேல்


மயிர்குறைகருவி

(பெ) கத்தரிக்கோல், scissors

மயிர்குறைகருவி மாண் கடை அன்ன
பூ குழை ஊசல் பொறை சால் காதின் – பொரு 29,30

மயிரைக் குறைக்கின்ற கருவியாகிய கத்தரிகையின் சிறப்பாயமைந்த கடைப்பகுதியை ஒத்ததும்,
பொலிவினையுடைய மகரக்குழையின் அசைவினைப் பொறுத்தல் அமைந்ததும் ஆகிய காதினையும்,

மேல்


மயிலை

(பெ) இருள்வாசிப்பூ, இருவாட்சிப்பூ, Tuscan jasmine, Jasminum sambacflore manoraepleno

கான காக்கை கலி சிறகு ஏய்க்கும்
மயிலை கண்ணி பெரும் தோள் குறு_மகள் – புறம் 342/1,2

காட்டுக்காக்கையின் தழைத்த சிறகை ஒத்த
இருள்வாசிப்பூவால் தொடுக்கப்பட்ட கண்ணியையும் பெரிய தோளையுமுடைய இளையவள்

மேல்


மரந்தை

(பெ) சங்ககாலத்துச் சேரநாட்டுக் கடற்கரைப் பட்டினம்,
a port city in cEra country during sangam period
இந்த ஊர் மாந்தை என்னும் பாடமும் கொண்டுள்ளது. (நெடிலுக்குக் கால் வாங்கும் எழுத்தை ‘ர’ என்றும் படித்தனர்.
இதனால் நேர்ந்த வேறுபாடுகளே இவை).

இரங்கு நீர் பரப்பின் மரந்தையோர் பொருந – பதி 90/28

ஒலிக்கின்ற கடற்பரப்பின் கரையிடத்தேயுள்ள மரந்தை நகரில் உள்ளார்க்குத் தலைவனே

இரங்கு நீர் பரப்பின் மரந்தை

என்பதால் இது கடற்கரை நகரமாகிறது. இந்தப் பதிற்றுப்பத்துப்பாடல் குடக்கோ
இளஞ்சேரலிரும்பொறை என்ற சேர மன்னனைப் பெருங்குன்றூர்க்கிழார் பாடிய பாடல் என்பதால், இது சேர நாட்டுப்
பட்டினமாகிறது.

யானையங்குருகின் கானல் அம் பெரும் தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம்
குட்டுவன் மரந்தை அன்ன எம்
குழை விளங்கு ஆய்_நுதல் கிழவனும் அவனே – குறு 34/5-8

யானைக்கொக்கு எனப்படும் பறவைகளின் கடற்கரையின் பெருங்கூட்டம்
பகைவரைக் கொன்ற மறவரின் ஆரவார ஓசைக்கு அஞ்சியோடும்
குட்டுவனின் மாந்தை நகரத்தைப் போன்ற எனது
கூந்தல் புரண்டு விளங்கும் ஆய்ந்து நன்றெனக்கண்ட நெற்றியையுடையவளின் தலைவனும் அவனே!

இது

குட்டுவன் மரந்தை

என்பதாலும், கடற்கரைப்பறவைகள் அங்கிருப்பதாலும் மேற்கூறிய கூற்றுகள்
உறுதிப்படுகின்றன.

தண் கடல் படு திரை பெயர்த்தலின் வெண் பறை
நாரை நிரை பெயர்த்து அயிரை ஆரும்
ஊரோ நன்று-மன் மரந்தை – குறு 166/1-3

குளிர்ந்த கடலில் உண்டான அலைகள் மோதித்தள்ளியதால், வெள்ளைச் சிறகுகளைக் கொண்ட
நாரைக்கூடம் இடம்பெயர்ந்து வேறிடத்தில் அயிரை மீனை நிறைய உண்ணும்
ஊராகிய மரந்தை இனியது;

இந்நகர் செல்வச் செழிப்புடன் விளங்கியது.

1

வலம் படு முரசின் சேரலாதன்
முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து
முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து
நன் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார்
பணி திறை தந்த பாடு சால் நன் கலம்
பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய் நிறைய குவைஇ – அகம் 127/3-9

வெற்றி தங்கிய முரசினையுடைய சேரலாதன் என்னும் அரசன்
கடல் நாப்பணுள்ள பகைவர்களைபுறக்கிடச் செய்து அவர் காவல் மரமாகிய கடம்பினை வெட்டி, இமையமலையில்
தனது முன்னோரை ஒப்ப வளைந்த வில் இலச்சினையைப் பொறித்து
மரந்தை என்னும் ஊரிலுள்ள தனது நல்ல மனையின் முற்றத்தில், பகைவர்
பணிந்து திறையாகத் தந்த பெருமை சான்ற நல்ல அணிகலங்களுடன்
பொன்னானியன்ற பாவையினையும் வயிரங்களையும் ஆம்பலென்னும்
எண்ணளவு இடம் நிறையக் குவித்து

2

செல்லல் மகிழ்ந நின் செய் கடன் உடையென்-மன்
—————– ————————- —————–
குரங்கு உளை புரவி குட்டுவன்
மரந்தை அன்ன என் நலம் தந்து சென்மே – அகம் 376/1-18

செல்லாதே, தலைவனே! நின்பால் செய்யும் கடமைகலை மிகவுமுடையேன்
—————– ———————- ———————-
வளைந்த பிடரிமயிரினையுடைய குதிரைகளையுடைய குட்டுவனது
மரந்தை என்னும் ஊர் போன்ற என் அழகினைத் தந்து செல்க.

3

கடல் கெழு மாந்தை அன்ன எம்
வேட்டனையல்லையால் நலம் தந்து சென்மே – நற் 395/9,10

கடற்கரையில் உள்ள மாந்தை என்னும் நகரத்தைப் போன்ற எம்மை
விரும்பினாயல்லையாகலான் நின்பொருட்டால் இழந்த எம் நலத்தைத் தந்து செல்வாயாக

இங்கு வரும் மாந்தை என்ற சொல்லை, மரந்தை என்று கொள்வார் ஔவை.சு.து. அவ்வாறு கொண்டு,
மரந்தை, சேரநாட்டுக் கடற்கரை ஊர்களுள் ஒன்று. இது மருண்டா (Marunda) என யவனர் குறிப்புக்களுள்
காணப்படுகிறது என்பார்.

இங்கு சொடுக்குக : மாந்தை
மேல்


மரபு

(பெ) 1. குடிப்பிறப்பு, வமிசம், ancestral line
2. பாரம்பரியம், lineage
3. முறை, நியதி, Rule, law; established usage or order; that which is sanctioned by custom
4. இயல்பு, தன்மை, nature, property
5. மேம்பாடு, மேன்மை, பெருமை, greatness, ideal
6. பண்பு, characteristic

1

பல் இய கோடியர் புரவலன் பேர் இசை
நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு
தாங்க அரு மரபின் தன்னும் தந்தை
வான் பொரு நெடு வரை வளனும் பாடி
முன் நாள் சென்றனம் ஆக – சிறு 125-129

பல்வேறு இசைக்கருவிகளையுடைய கூத்தரின் புரவலனும் ஆகிய பெரிய புகழையுடைய
நல்லியக்கோட(ன் என்னும் மன்ன)னைக் காண்பதற்கு விரும்பிய கொள்கையுடன்
(பிறரால்)பொறுத்தற்கரிய குடிப்பிறந்தோர்க்குரிய முறைமையினையுடைய தன்னையும், (அவன்)தந்தையுடைய
வானத்தைத் தொடும் நெடிய மலையின்கண் உள்ள செல்வத்தையும் பாடி,
சில நாட்களுக்கு முன்னே யாம் சென்றேமாக

2

தமிழ் நிலைபெற்ற தாங்கு அரு மரபின்
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று – சிறு 66,67

தமிழ் வீற்றிருந்த பொறுத்தற்கரிய பாரம்பரியத்தையுடைய
மனமகிழ்ச்சியைத் தோற்றுகின்ற தெருவினையுடைய மதுரையும் சிறிதாயிருக்கும்

3

அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின்
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக
நூல் நெறி மரபின் பண்ணி – சிறு 227-230

அமிழ்தத்தைப் பொதிந்து துளிக்கின்ற முறுக்கு அடங்கின நரம்பையும் உடைய
பாடும் துறைகளெல்லாம் முடியப் பாடுதற்கு, பயன் விளங்குகின்ற இசைகளைத்
சுதிசேர்த்தல் கொண்ட இனிய யாழை, (பாலை யாழின்)குரலையே(செம்பாலையை) குரலாகக் கொண்டு
இசைநூல் கூறுகின்ற முறையால் இயக்கி,

4

பகைவர் இவர் இவர் நட்டோர் என்னும்
வகையும் உண்டோ நின் மரபு அறிவோர்க்கே – பரி 3/57,58

பகைவர் இவர், நண்பர் இவர் என்னும்
வேறுபாடு உண்டோ, உன் இயல்பினை அறிவோர்க்கு?

5

நினைக்கும்_காலை மருட்கை உடைத்தே
எனை பெரும் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல்
அதனினும் மருட்கை உடைத்தே பிறன் நாட்டு
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி
இசை மரபு ஆக நட்பு கந்து ஆக
இனையதோர் காலை ஈங்கு வருதல் – புறம் 217/5-7

நினைக்கும்போது வியப்பாய் உள்ளது
எவ்வளவோ பெரிய தலைமையோடு கூடியும் சோழன் அச் சிறப்புகளை எல்லாம் கைவிட்டு இவ்விடம் வருதல்,
ஆனால் அதனினும் வியப்பளிக்கிறது, வேற்று நாட்டில் வாழும்
புகழ்பெற்ற சான்றோன் –
புகழ் மேம்பாடாக, நட்பே பற்றுக்கோடாக – இவ்விரண்டையும் பெரிதாக எண்ணி
இத்தன்மைத்தாகிய ஓர் இன்னாக் காலத்து இவ்விடத்து வருதல்

6

வாயடை அமிர்தம் நின் மனத்து அகத்து அடைத்தர
மூவா மரபும் ஓவா நோன்மையும்
சாவா மரபின் அமரர்க்கா சென்ற நின் – பரி 2/69-71

தேவர்களின் உணவான அமிர்தத்தை உன் மனத்தினுள்ளே நினைத்த பொழுதே,
மூப்படையாத பண்பும், ஒழியாத ஆற்றலும்,
இறவாத பண்பினையுடைய அந்தத் தேவர்களைச் சென்றடைந்தன;

மேல்


மரபுளி

(பெ) முறைமை, நியதி, மரபு உள்ளவை, that which is in established usage or order

ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே – திரு 94-96

ஒரு முகம்
மந்திர நியதிகளின் மரபுள்ளவற்றில் வழுவாத
அந்தணருடைய வேள்விகளை கூர்ந்து கேட்கும்;

குரவை தழீஇ யாம் மரபுளி பாடி
தேயா விழு புகழ் தெய்வம் பரவுதும் – கலி 103/75,76

குரவைக் கூத்தில் தழுவிக்கொண்டு நாம் எமது மரபுப்படி பாடி,
குன்றாத சிறப்பின் புகழையுடைய தெய்வத்தைப் போற்றுவோம்,

மேல்


மரம்

(பெ) 1. விருட்சம், tree
2. மரக்கலம், Ship or boat;
3. மரக்கட்டை, wood, timber
4. வில், bow

1

பழு மரம் தேரும் பறவை போல – பெரும் 20

பழுத்த மரத்தைத் தேடித்திரியும் பறவைகளைப் போல,

2

பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை
பெரு நீர் போகும் இரியல் மாக்கள்
ஒரு மர பாணியில் தூங்கி ஆங்கு – பெரும் 431-433

பொன்னைக் கொழித்துக்கொண்டு குதிக்கும் கடத்தற்கரிய கங்கையாற்றின்
பெரிய நீரைக் கடந்துபோகும் மனக்கலக்கமுள்ள மாக்கள்
ஒரேயொரு தோணி வரும் காலத்திற்காகக் காத்திருத்தலைப் போல

பெரும் கடல் நீந்திய மரம் வலி_உறுக்கும்
பண்ணிய விலைஞர் போல புண் ஒரீஇ – பதி 76/4,5

பெரிய கடலில் சென்றுவந்த மரக்கலத்தினைப் பழுதுநீக்கி மீண்டும் வலிமைப்படுத்தும்
பொருள்கள் விற்கும் கடல்வாணிகர் போலப் போரில் ஏற்பட்ட புண்களை ஆற்றி,

3

அகல் இலை முருக்கின்
பெரு மர கம்பம் போல
பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே – புறம் 169/10-12

அகன்ற இலையையுடைய முருக்கினது
பெரிய மரக்கட்டையாற் செய்யப்பட்ட தூணமாகிய இலக்கைப் போல
பொருவார்க்குத் தொலையாத நினது வென்றி வாழ்வதாக

சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால் – கலி 43/3

சந்தன மரத்தின் கட்டையால் செய்யப்பட்ட உலக்கைகளால்

4

வார் கோல்
கொடு மர மறவர் பெரும – புறம் 43/10,11

நீண்ட அம்பினையும்
வளைந்த வில்லினையும் உடைய மறவர்க்குத் தலைவனே

மேல்


மரல்

(பெ) ஒரு வகைக் கற்றாழை, பெருங்குரும்பை, Bowstring hemp, stemless plant, Sanseviera zeylanica;
A shrub the fibre of which is used for cordage (ropes in the rigging of a ship)

1.

இதன் பழம் சிவப்பாக, சிறிய உருண்டையாக இருக்கும். வெயிலில் நடந்தால் பாதங்களில் உண்டாகும்
கொப்புளங்களுக்கு இந்தப் பழங்களை உவமிப்பர்

வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி
அரக்கு உருக்கு அன்ன செம் நிலன் ஒதுங்கலின்
பரல் பகை உழந்த நோயொடு சிவணி
மரல் பழுத்து அன்ன மறுகு நீர் மொக்குள் – பொரு 42-45

ஓடியிளைத்த நாயின் நாவைப்போன்ற பெருமை தக்கிருக்கும் சிறிய பாதங்களையும்,(அப்பாதங்களில் ஏற்பட்ட)-
சாதிலிங்கத்தை உருக்கின தன்மையை ஒத்த சிவந்த நிலத்தே நடக்கையினால்
பரல் கல்லாகைய பகையால் வருந்தின நோயுடன் பொருந்தி,
மரல் பழுத்தாற் போன்ற துளும்பும் நீரையுடைய கொப்புளங்களையும்,

2.

மரல் நாரைக்கொண்டு வில்யாழ் என்ற ஒருவகை யாழைச் செய்வர்.

குமிழின்
புழல் கோட்டு தொடுத்த மரல் புரி நரம்பின்
வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி – பெரும் 180-182

குமிழினது
உள்ளீடற்ற கொம்பிடத்தே வளைத்துக் கட்டின மரலின் கயிறாகிய நரம்பினையுடைய
வில்யாழ் இசைக்கும் விரலாலே எறிந்து எழுப்பப்பட்ட குறிஞ்சிப்பண்ணை,

3.

இந்தக் கற்றாழையின் நாரினால் மலர்களைத் தொடுத்து மாலை செய்வர்.

தேம் பட மலர்ந்த மராஅ மெல் இணரும்
உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்
தளிரொடு மிடைந்த காமரு கண்ணி
திரங்கு மரல் நாரில் பொலிய சூடி – மலை 428-431

தேன் உண்டாக மலர்ந்த மராமரத்தின் மென்மையான பூங்கொத்தும்,
யானை முறித்த அழகிய தளிர்களையுடைய யாம் பூவும்,
தளிர்களோடே இறுகக்கலந்த கட்டழகான மாலையை,
நன்கு காய்ந்த கற்றாழை நாரில் (கட்டி)அழகுபெறச் சூடி,

4.

மரல் நாரினால் நெய்த துணியை ஆடையாக உடுத்திக்கொண்டனர் மலைவாழ் குறவர்கள்.

மரல் நார் உடுக்கை மலை உறை குறவர் – நற் 64/4

மரல் நாரினால் செய்த உடையினையுடைய, மலையில் வாழும் குறவர்கள்

5.

இந்த மரல் மடல்களில் வரிவரியான கோடுகள் இருக்கும்.

வேனில் ஓதி பாடு நடை வழலை
வரி மரல் நுகும்பின் வாடி – நற் 92/2,3

வேனிற்காலத்து ஓந்தியின் வருத்தமான நடையைக்கொண்ட ஆண் ஓந்தி
வரிகள் உள்ள பெருங்குரும்பையின் குருத்துப்போல வாடி

6.

புன்னை மரத்தின் அரும்புகள், மரல் பழங்களைப்போல் மொக்குளாக இருக்கும்.

படு காழ் நாறிய பராஅரை புன்னை
அடு மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழ – நற் 278/1,2

விழுந்த விதை முளைத்து மரமாகிய பருத்த அடிமரத்தைக் கொண்ட புன்னையின்,
அடுத்து வளர்ந்த மரலின் பழம் போல், அரும்புகள் வாய் திறந்து

7.

வறிய காலத்திலும் அற்றுப்போகாமல் இருக்கும் இந்த மரலின் மடல்களை விலங்குகள் உணவாகக் கொள்ளும்

மரல் புகா அருந்திய மா எருத்து இரலை – குறு 232/3

மரல்செடியை உணவாக அருந்திய பெரிய கழுத்தைக் கொண்ட இரலை மான்

மரையா மரல் கவர மாரி வறப்ப – கலி 6/1

காட்டுப்பசுக்கள் கற்றாழையைத் தின்னும்படியாக மழை வறண்டுபோக

மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும் – அகம் 49/12

இளையமானின் தளர்வுற்ற கூட்டம் வற்றிய மரல் செடிகளைச் சுவைக்கும்

மேல்


மரவம்

(பெ) குங்குமமரம், saffron, வெண்கடம்பு, Seaside Indian oak, Barringtonia racemosa
இது மராமரம் என்பர் பொ.வே.சோமசுந்தரனார்
மரவம் – குங்கும மரம் என்பர் ச.வே.சுப்பிரமணியனார்
இது கடம்பு, வெண்கடம்பு என்பார் ஔவை.துரைசாமியார்

குரவம் மலர மரவம் பூப்ப – ஐங் 357/1

குரா மரங்கள் மலர்ந்தமையானும், மராமரங்கள் மலர்ந்தமையானும்

மள்ளர் அன்ன மரவம் தழீஇ – ஐங் 400/1

மறவரை ஒத்த வன்மையுடைய மராமரத்தைப் பற்றித் தழுவிக்கொண்டு

மேல்


மரன்

(பெ) மரம், பார்க்க : மரம்

மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து – திரு 42

மந்திகளும் ஏறி அறியாத மரம் நெருங்கின பக்கமலையில்,

மேல்


மரா

1. (பெ) 1. மராம், வெண்கடம்பு, பார்க்க : மரவம், செங்கடம்பு ,
Small Indian oak, Barringtonia acutangula
– 2. (பெ.அ) 1. பழகாத, untrained (elephant)
2. இனத்தோடு மருவாத, (elephant) not joined with its herd

1.1.

இந்த வெண்கடம்பு மலர் மாலையினைப் பலராமன் தன் கழுத்தில் சூடியுள்ளார்.

அரா அணர் கயம் தலை தம்முன் மார்பின்
மரா மலர் தாரின் மாண் வர தோன்றி – பரி 15/19,20

பாம்பாய் நிமிர்ந்து நிற்கும் மென்மையான தலைகளைக் கொண்ட ஆதிசேடனின் அவதாரமாகிய பலராமன்
மார்பில் உள்ள
வெண்கடம்பு மலர் மாலையைப் போன்று மாட்சிமை தோன்றக் காணப்பட்டு,

1.2.

மராமரத்தின் அடிமரம் வளைவுகள் இன்றி செவ்விதாக இருக்கும்.

இலையுடை நறும்பூ
செம் கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு – திரு 201,202

இலையையுடைய நறிய பூங்கொத்துக்களையும்
செவ்விய காலினையும் உடைய மராத்திடத்தனவாகிய வெள்ளிய கொத்துக்களை நடுவே வைத்து

1.3.

மராமரத்தின் பூக்களில் தேன் மிகுதியாக இருக்கும்.

தேம் பட மலர்ந்த மராஅ மெல் இணரும் – மலை 428

தேன் உண்டாக மலர்ந்த மராமரத்தின் மென்மையான பூங்கொத்தும்,

1.4.

நெடுவழிகளிலும், ஊர் மன்றங்களிலும் உள்ள மரா மரங்களின் அடியில் தெய்வங்களை வைத்து வணங்குவர்

கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த
கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை – மலை 395,396

மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள் – குறு 87/1

1.5.

மரா மரம் முதுவேனிலில் இலையுதிர்த்துக் குறைவான இலைகளைக் கொண்டிருக்கும்
(leafless for a period around June).
அதனால் அந்த மரம்தரும் நிழல் வரிவரியாக இருக்கும்.

புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம் – அகம் 3/11

குறைந்த இலைகளை உடைய மரா மரங்களை உடைய அகன்ற நீண்ட நெறியை,

செம் கால் மராஅத்த வரி நிழல் இருந்தோர் – ஐங் 381/2

1.6.

வெண்கடம்பு மரத்தின் பூ வலப்பக்கமாகச் சுழித்திருக்கும்.

சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராஅத்து
வேனில் அம் சினை கமழும் – குறு 22/3,4

மலைப்பக்கமானது தனக்கு அழகாகக் கொண்ட வலமாகச் சுரித்த வெண்கடம்பு மலரையுடைய
வேனில்காலத்தில் மலர்ந்த அழகிய கிளையினிடத்தில் மணக்கும்

வலம் சுரி மராஅத்து சுரம் கமழ் புது வீ – அகம் 83/1

வலமாகச் சுரித்த வெண்கடம்பினது சுரமெல்லாம் கமழும் புதிய பூக்களை

அவரோ வாரார் தான் வந்தன்றே
வலம் சுரி மராஅம் வேய்ந்து நம்
மணம் கமழ் தண் பொழில் மலரும் பொழுதே – ஐங் 348

அவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது –
வலமாகச் சுழித்திருக்கும் மராமரத்துப் பூக்களை மேற்பகுதியில் பரப்பிக்கொண்டு, நம்முடைய
மணங்கமழ்கின்ற குளிர்ந்த பொழில் மலர்ந்து காட்சியளிக்கும் நேரம்

1.7

வெண்கடம்பு மலர்கள் வெயில் கதிர்கள் போல் விரிந்திருக்கும்.
சுண்ணாம்பைச் சுற்றிலும் ஊற்றிவிட்டதைப் போலவும் இருக்கும்.
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்து – அகம் 317/15

வெயில் போலும் ஒளிபொருந்திய மலர்கள் செறிந்த மராமரத்திலிருந்து

வாலிய
சுதை விரிந்து அன்ன பல் பூ மராஅம் – அகம் 211/1,2

வெள்ளிய
சுண்ணாம்பு பரந்திருந்தாலொத்த அதன் பலவாய பூக்கள்
பார்க்க : முந்தைய படம்.

1.8.

மராமரத்தின் இன்னொரு வகையானது செங்கடம்பு மரம்.
தழைக்கின்ற காலத்தில் இது செறிவான இலைகளையுடையது. இதன் பூக்கள் உருண்டையாக இருக்கும்.

இருள் பட பொதுளிய பராரை மராஅத்து
உருள் பூ தண் தார் புரளும் மார்பினன் – திரு 10,11

இருள் உண்டாகத் தழைத்த பரிய அடியையுடைய செங்கடம்பின்
தேர்உருள் போலும் பூவால் செய்யப்பட்ட குளிர்ந்த மாலை அசையும் மார்பினையுடையவனும்

1.9.

மரா என்ற செங்கடம்பு மரத்தின் பூக்கள் நெருப்பைக் கக்குவது போல் இருக்கும்.

எரி கான்று அன்ன பூ சினை மராஅத்து – மலை 498

நெருப்பைக் கக்கியது போன்ற பூப்பூத்த கிளைகளையுடைய மரா மரத்தில்,

2.1

குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது – அகம் 13/7,8

பயம்பில் பிடித்த பழகாத யானைகளை
உரிய மொழியால் தொழிலை உணர்த்தும் சிறு பொழுதல்லது

2.2

மராஅ யானை மதம் தப ஒற்றி – அகம் 18/4

இனத்தோடு மருவாத ஒற்றைக் களிற்றியானையை அதன் மதம் கெட மோதி

மேல்


மராம்

(பெ) பார்க்க : மரவம், மரா

வாலிய
சுதை விரிந்து அன்ன பல் பூ மராஅம் – அகம் 211/1,2

வெள்ளிய
சுண்ணாம்பு பரந்திருந்தாலொத்த அதன் பலவாய பூக்கள்

மேல்


மரீஇ

(வி.எ) 1. மருவி, பழக்கமாகக் கொண்டு, becoming accustomed
2. மருவி, பொருந்தி, coming into close contact
3. மருவி, கிட்டிச்சேர்ந்து, having come closely, approaching
4. மருவி, தழுவி, embracing
5. மருவி, இணைந்து, சேர்ந்து, கலந்து, having blended, joined together

1

புனல் கால்கழீஇய பொழில்தொறும் திரள் கால்
சோலை கமுகின் சூல் வயிற்று அன்ன
நீல பை குடம் தொலைச்சி நாளும்
பெரு மகிழ் இருக்கை மரீஇ – பெரும் 380-383

மழைநீர் தூய்மைப்படுத்திய பொழில்கள்தோறும், திரண்ட தண்டினையுடைய
சோலையிடத்து நிற்கும் கமுகின் சூல்கொண்ட வயிற்றை ஒத்த
நீலநிறம் அமைந்த தோல் பையிலுள்ள கள்ளையுண்டு – நாள்தோறும்
பெரிய கள் மகிழ்ச்சியின் இருத்தலைப் பழக்கமாகக்கொண்டு

2

மா கொடி அதிரல் பூவொடு பாதிரி
தூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி – நற் 52/1-4

கரிய கொடியையுடைய காட்டுமல்லிகையின் மலரோடு, பாதிரியின்
தூய தகடு போன்ற மலரை எதிர்த்துக் கட்டிய சரத்தைச் சூடிய கூந்தலின்
மணம் கமழும் நாற்றத்திடத்தே பொருந்தினேனாய், நாம் இவளின்
அழகுத்தேமல் பரந்த மார்பினைச் சேர்த்துத் தழுவி,

3

பல் பூ கானல் பகற்குறி மரீஇ
செல்வல் கொண்க செறித்தனள் யாயே – நற் 258/1,2

நிறையப் பூக்களைக்கொண்ட கடற்கரைச் சோலையில் நீங்கள் பகலில் சந்திக்கும் இடத்தைக் கிட்டிச்சேர்ந்துவிட்டுச்
செல்கிறேன், தலைவனே! தலைவியை வீட்டிற்குள் அடைத்துவைத்துவிட்டாள் அவளின் தாய்

4

படப்பை வேங்கைக்கு மறந்தனர்-கொல்லோ
மறப்பு அரும் பணை தோள் மரீஇ
துறத்தல் வல்லியோர் புள்_வாய் தூதே – குறு 266/3-5

கொல்லைப்புறத்து வேங்கை மரத்துக்கு ஒரு சொல் சொல்ல மறந்துவிட்டாரே!
மறக்கமுடியாத பருத்த தோளைத் தழுவி
நம்மைத் துறந்து செல்லும் ஆற்றலுள்ளோர் பறவைகள் மூலம் விடும் தூதின் வழியாக

5

அமர் கண் ஆமான் அம் செவி குழவி
கானவர் எடுப்ப வெரீஇ இனம் தீர்ந்து
கானம் நண்ணிய சிறுகுடி பட்டு என
இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்து
மனை உறை வாழ்க்கை வல்லி ஆங்கு – குறு 322/1-5

அமர்த்த கண்களையுடைய ஆமானின் அழகிய செவிகளையுடைய குட்டி
குறவர்கள் விரட்டியதால் வெருண்டு, தன் கூட்டத்தைவிட்டு ஓடி
காட்டின்கண் சேர்ந்துள்ள சிறுகுடியில் அகப்பட்டுக்கொள்ள,
இளம்பெண்கள் அதனைப் பேண, அவருடன் கலந்து, அவ்விடத்தை விரும்பி
வீட்டில் வாழும் வாழ்க்கையைப் பற்றிக்கொண்டதைப்போல்

மேல்


மரீஇய

(வி.எ) 1. மருவிய – வழக்கமாகக் கொண்ட, having been accustomed to
2. மருவிய – பொருந்திய, having close contact
3. மருவிய – ஒன்றுகல, be united together, blend
4. மருவிய – தழுவிய, embracing
5. மருவிய – எய்திய, சேர்ந்த, coming near; approaching
6. மருவிய – பொருந்திய, தன்னுள் கொண்டு அமைந்த, constituting, comprising

1

கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள்
ஆர்வ நெஞ்சமொடு அளைஇ
மார்பு உற படுத்தல் மரீஇய கண்ணே – நற் 171/9-11

பேய்கள் நிலைகொண்டு நடமாடும் பொழுதைக் கொண்ட நள்ளிரவில்
ஆசையுடன் அவனுடைய நெஞ்சோடு கலந்து
அவனது மார்பினைத் தழுவிக்கொண்டு படுத்திருப்பதை வழக்கமாகக் கொண்ட கண்கள்

2

தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி – பெரும் 169

செருப்பு (விடாமல்)கிடந்த வடு அழுந்தின வலிய அடியினையும்,

3

அக நாடு புக்கு அவர் அருப்பம் வௌவி
யாண்டு பல கழிய வேண்டு புலத்து இறுத்து
மேம்பட மரீஇய வெல் போர் குருசில் – மது 149-151

(பகைவர்)உள்நாடுகளில் புகுந்து, அவரின் அரண்களைக் கைக்கொண்டு,
ஆண்டுகள் பல கழியுமாறு (நீ)விரும்பும் இடத்திலே தங்கி, 150
(அந்நிலங்கள்)மேன்மைபெற அந்த நாட்டோடு ஒன்றுகலந்த வெல்லும் போரினையுடைய தலைவனே

4

பூ துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல் – நெடு 145

(முன்பு)பூப்போட்ட துகில் இறுகத் தழுவிக்கிடக்கும் உயர்ந்த வளைவினையுடைய அல்குலில்

அல்கல்
பொய் வலாளன் மெய் உற மரீஇய
வாய் தகை பொய் கனா மருட்ட – குறு 30/1-3

நேற்று இரவில்
அந்தப் பொய்சொல்வதில் வல்ல தலைவன் என்னை மார்புறத் தழுவிய
வாய்ப்பதற்கேதுவான பொய்க்கனவு மருட்ட,

5

போது அவிழ்
பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்
புன்னை அம் சேரி இ ஊர் – குறு 320/5-7

மொட்டுகள் விரிந்த
பொன்னிற பூங்கொத்துகளைச் சேர்ந்த பறவைகள் ஒலிக்கும் கிளைகளுள்ள
புன்னை மரங்கள் சூழ்ந்த அழகிய சேரிகளையுடைய இந்த ஊரில் உள்ளோர்

6

போது அவிழ்
பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்
புன்னை அம் சேரி இ ஊர் – குறு 320/5-7

செவ்வி அரும்பு மலர்ந்த
பொன் போன்ற பூங்கொத்துக்கள் பொருந்திய, வண்டுகள் ஒலிக்கின்ற கிளைகளையுடைய
புன்னைமரங்கள் உள்ள சேரிகள் உள்ள இவ்வூரார்

மேல்


மரீஇயோர்

(பெ) 1. மருவியோர் – தன்னைச் சேர்ந்தவர், people who belong to one
2. மருவியோர் – தன்னைத் தழுவியவர், one who embraced
3. மருவியோர் – பொருந்தியோர், one who had a close contact with
4. மருவியோர் – வழக்கமாகக் கொண்டவர், மேற்கொள்பவர், one whos is accustomed to

1

களிறே,
—————————– ————————– ——–
மரீஇயோர் அறியாது மைந்து பட்டன்றே – புறம் 13/5-8

யானை
———————– ——————– ——————–
பாகனின் கட்டுக்கு அடங்காமல் அது வெறி கொண்டு உள்ளது.

2

சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே – குறு 102/4

சான்றோர் அல்லர் நான் தழுவியவர்

3

தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே – அகம் 231/15

பூவிதழ் பொருந்திய கூந்தற்கண்ணே பொருந்தித் துயின்றோராய அவர்

4

பலரோடு உண்டல் மரீஇயோனே – புறம் 234/6

பலரோடுங்கூடி உண்டலை மேற்கொண்டோன்.

மேல்


மரு

(பெ) 1. காதல் மயக்கம், sexual desire
2. நறுமணம், fragrance

1

மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ள
பொய்யினால் புரிவுண்ட நம்மையோ மறந்தைக்க – கலி 27/17,18

கருமையான அழகிய மலர் போன்ற மைதீட்டிய என் கண்களில் மயக்கத்தை ஊட்டி, அவை மகிழும்படி
கூறிய பொய் மொழிகளால் நெஞ்சைப் பறிகொடுத்த நம்மைத்தான் அவர் மறந்துவிட்டுப்போகட்டும்,

2

துயில் இன்றி யாம் நீந்த தொழுவை அம் புனல் ஆடி
மயில் இயலார் மரு உண்டு மறந்து அமைகுவான்-மன்னோ – கலி 30/5,6

துயில் இன்றி நான் இரவைக் கழிக்க, நீர்நிலைகளில் இனிமையாக நீர்விளையாட்டு ஆடி
மயிலின் தன்மையுள்ள பரத்தையரின் நறுமணத்தை நுகர்ந்துகொண்டு நம்மை மறந்திருப்பாரோ –

மேல்


மருஊட்டு

(வி) புணர்ச்சியின்போது ஆடவர் மகளிர் கண்களைத் தம் நாவால் தடவுதல்,
man licking the eyelids of a woman during sexual union

மை எழில் மலர் உண்கண் மருஊட்டி மகிழ் கொள்ள
பொய்யினால் புரிவுண்ட நம்மையோ மறந்தைக்க – கலி 27/17,18

கருமையான அழகிய மலர் போன்ற மைதீட்டிய என் கண்களை நாவால் தடவிக்கொடுத்து, நான் மகிழும்படி
கூறிய பொய் மொழிகளால் நெஞ்சைப் பறிகொடுத்த நம்மைத்தான் அவர் மறந்துவிட்டுப்போகட்டும்,
புலவர் அ.மாணிக்கம் உரை

மேல்


மருகன்

(பெ) வழித்தோன்றல், வாரிசு, Descendant, scion, member of a clan

கடும் பகட்டு யானை சோழர் மருகன்
நெடும் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன் – அகம் 356/12,13

கடிய களிற்றியானைகளையுடைய சோழரது வழிவந்தோனாகிய
நீண்ட நெற்கதிர்களையுடைய வல்லத்தின் தலைவன்

மேல்


மருங்கு

(பெ) 1. பக்கம், side
2. விலாப்பாகம், Side of the body
3. இடை, இடுப்பு, waist
4. குலம், Race, tribe, family
5. நூல், science, treatise
6. இருந்த இடம், சுவடு, தடம், trace
7. இடம், land, place
8. எல்லை, limit
9. செல்வம், wealth

1

மருங்கு மறைத்த திருந்து இழை பணை தோள் – நற் 93/7

பக்கங்களை மறைத்த திருந்திய அணிகலன்களால் பெரிதாய்த் தோன்றும் தோள்களையும்,

பெரும் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ
இரும் கழி மருங்கு நிலைபெற்றனையோ – நற் 155/6,7

பெரிய கடற் பரப்பில் அமர்ந்திருக்கும் தெய்வமகளோ?
கரிய கழியின் பக்கத்தே நிலைகொண்டு உறைபவளோ?

2

தறுகண் பூட்கை தயங்கு மணி மருங்கின்
சிறு கண் யானையொடு பெரும் தேர் எய்தி – சிறு 141,142

கடுகக் கொல்லுதலை மேற்கோளாகக் கொண்டதும், அலையாடும் மணியை உடைய விலாப்பக்கத்தினையும்
சிறிய கண்ணையும் உடைய யானையுடன் பெரிய தேரையும் பெற்று

3

மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன் – திரு 214

இடையில் கட்டப்பட்ட, நிலத்தளவும் தொங்குகின்ற துகிலினையுடையன்,

4

சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி – திரு 275

சூரபன்மாவின் குலத்தை இல்லையாக்கின வலிமையுடைமையால் மதவலி என்னும் பெயரையுடைத்தோய்

5

முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை
நேர்வரும் குரைய கலம் கெடின் புணரும்
சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்
மாசு அற கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்
ஆசு அறு காட்சி ஐயர்க்கும் அ நிலை
எளிய என்னார் தொன் மருங்கு அறிஞர் – குறி 13-18

முத்தாலும், மாணிக்கத்தாலும், பொன்னாலும், அவ்வளவு(மிகுந்த)
நேர்த்தியாக அமைந்த நகைகள் சீர்குலைந்துபோனால் (மீண்டும்)சேர்த்துக்கட்ட முடியும்;
(ஆனால் தமக்குரிய)நற்குணங்களின் தன்மையும், உயர்ந்த நிலையும், ஒழுக்கமும் சீர்குலைந்தால்,
கறை போகும்படி கழுவி பொலிவுள்ள புகழை (மீண்டும்)நிறுவுதல்,
குற்றமற்ற அறிவையுடைய பெரியோர்களுக்கும், முன்புபோல இருந்த நிலை
எளிய காரியம் என்னார் தொன்மையான நூலை அறிந்தோர்;

6

அரும் கடி வரைப்பின் ஊர் கவின் அழிய
பெரும் பாழ் செய்தும் அமையான் மருங்கு அற
மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே – பட் 269-271

அரிய காவலையுடைய மதிலையுடைய பகைவரின் படைவீடுகள் அழகு அழியவும்,
பெரும் அழிவைச் செய்தும் மனநிறைவடையானாய் – இருந்த சுவடே இல்லையாகும்படி,
மலைகளையெல்லாம் மட்டப்படுத்துவான், கடல்களையெல்லாம் தூர்ப்பான்,

7

அகழ் இழிந்து அன்ன கான்யாற்று நடவை
வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பி – மலை 214,215

அகழியில் இறங்குவது போன்ற, காட்டாற்று வழித்தடம்
வழுக்கும் இடங்களைக் கொண்டிருத்தலால், வழுவாமை காத்து,

இழை மருங்கு அறியா நுழை நூல் கலிங்கம் – மலை 561

இழை நுழைந்தஇடம் தெரியாத அளவில் நுண்ணிய நூலால் நெய்த புடைவைகளை

துயர் மருங்கு அறிந்தனள் போல அன்னை – நற் 61/4

நான் துயரத்தோடு இருந்த நிலையை என் அன்னை அறிந்தவள் போல

நீர் மருங்கு அறியாது தேர் மருங்கு ஓடி – அகம் 29/17

நீர் இருக்குமிடம் அறியாது, கானல்நீர் தோன்றுமிடமெல்லாம் ஓடி,

8

செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறி-மார்
கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த – மலை 394,395

போகும் இடத்தின் பெயரும் எல்லையும் அறியும்படி,
கல்லைக் கொத்தி எழுதிய, நல்ல அடிப்பகுதியையுடைய மரா மரத்தடிகளில்

9

முன்னும் வந்தோன் மருங்கிலன் இன்னும் – புறம் 391/11

இவன் முன்பேயும் இங்கே வந்தவன் பொருள் இல்லாதன்

மேல்


மருங்குல்

(பெ) 1. வயிறு, Stomach, abdomen
2. விலாப்பக்கம், side of the body
3. இடை, இடுப்பு, நடுப்பக்கம், waist, middle

1

ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்
வளை கை கிணை_மகள் – சிறு 135,136

மெலிவடையச்செய்யும் பசியால் வருந்திய, ஒடுங்கி ஒட்டிப்போன, வயிற்றினையும்,
வளையல்(அணிந்த) கையினையும் உடைய கிணைமகள்

2

மாரி யானையின் மருங்குல் தீண்டி
பொரி அரை ஞெமிர்ந்த புழல் காய் கொன்றை – நற் 141/2,3

மழையில் நனையும் யானையின் பக்கங்கள் உராய்தலால்
பொரிந்தது போல் ஆகிய அடிமரத்தின் பட்டை தேய்ந்த, உள்ளே துளையுள்ள காய்களைக் கொண்ட கொன்றை

3

நுணங்கு எழில் ஒண் தித்தி நுழை நொசி மட மருங்குல்
வணங்கு இறை வரி முன்கை வரி ஆர்ந்த அல்குலாய் – கலி 60/3,4

நுட்பமான அழகிய ஒளிவிடும் சிறு புள்ளிகளையும், மிகவும் சிறியதாக மெலிந்திருக்கும் இளமை ததும்பும்
இடையினையும்,
வளைந்து இறங்குகின்ற, வளையல் அணிந்த முன்கையினையும், அழகு நிறைந்த அல்குலையும் உடையவளே!

மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல் – அகம் 297/7

நடுப்பக்கம் மெலிந்த அச்சம் மிக்க நடுகல்லில்

மேல்


மருங்கூர்

(பெ) ஒரு சங்க காலத் துறைமுகப் பட்டினம், a port city during sangam period

பல் பூ கானல் பகற்குறி மரீஇ
செல்வல் கொண்க செறித்தனள் யாயே
கதிர் கால் வெம்ப கல் காய் ஞாயிற்று
திரு உடை வியல் நகர் வரு விருந்து அயர்-மார்
பொன் தொடி மகளிர் புறங்கடை உகுத்த
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட
அகல் அங்காடி அசை நிழல் குவித்த
பச்சிறா கவர்ந்த பசும் கண் காக்கை
தூங்கல் வங்கத்து கூம்பில் சேக்கும்
மருங்கூர் பட்டினத்து அன்ன இவள்
நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே – நற் 258

நிறையப் பூக்களைக்கொண்ட கடற்கரைச் சோலையில் நீங்கள் பகலில் சந்திக்கும் இடத்தைப் பார்த்துவிட்டுச்
செல்வாயாக, தலைவனே! தலைவியை வீட்டிற்குள் அடைத்துவைத்துவிட்டாள் அவளின் தாய்
கதிர்கள் கால்களை வெம்பிப்போகச்செய்ய, பாறைகளைச் சூடேற்றும் ஞாயிற்றுப் பகலில்
செல்வம் மிக்க தம் பெரிய வீட்டில், வந்திருக்கின்ற விருந்தினரை உபசரிக்க,
பொன் வளையல் அணிந்த மகளிர் வீட்டுக் கொல்லைப்புறத்தில் உதிர்த்துவிட்ட,
கொக்கின் நகம் போன்ற சோற்றை விரும்பி உண்டு, பொழுது மறைய
அகன்ற மீன்கடையில் நீண்டுசெல்லும் நிழலில் குவித்த
பசிய இறாமீனைக் கவர்ந்த பசுமையான கண்களைக்கொண்ட காக்கை,
அசைவாடிக்கொண்டிருக்கும் தோணியின் பாய்மரக்கூம்பினில் சென்றுதங்கும்
மருங்கூர்ப் பட்டினத்தைப் போன்ற இவளது
நெருக்கமாயுள்ள அழகிய ஒளிவிடும் வளையல்கள் கழன்றோடுவதைக் கண்டு –

தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசை
பிடி மிதி வழுதுணை பெரும் பெயர் தழும்பன்
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர்
விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர்
இரும் கழி படப்பை மருங்கூர் பட்டினத்து
எல் உமிழ் ஆவணத்து அன்ன
கல்லென் கம்பலை செய்து அகன்றோரே – அகம் 227/16-22

தூங்கல் எனும் புலவரால் பாடப்பெற்ற மிக உயர்ந்த நல்ல புகழ் வாய்ந்த
பெண்யானை மிதித்தமையால் ஏற்பட்ட வழுதுணங்காய் போலும் தழும்பினையுடைய வழுதுணைத் தழும்பன்
என்பானுடைய
காவல் பொருந்திய மதிலெல்லையையுடைய ஊணூருக்கு அப்பாலுள்ள
மிக்க பொருள் நிலைபெற்றிருக்கும் பெருமை கொண்ட அழகிய நகராகிய
பெரிய உப்பங்கழிப் பக்கங்களையுடைய மருங்கூர்ப்பட்டினத்து
ஒளிவீசும் கடைத்தெருவைப் போன்ற
கல்லென்னும் அலரை இவ்வூரிலெழச்செய்து பிரிந்தகன்றோராகிய நம் காதலர்

இவற்றினின்றும் நாம் அறிவன.

1. மருங்கூர்ப்பட்டினத்தில் பெரும்பெரும் அங்காடிகள் இருந்தன.
2. பெரும் அங்காடிகளின் கட்டிட நிழல்களில், கடலில் பிடித்து வந்த இறா மீன்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
3. மருங்கூர்ப்பட்டினத்துக் கடலில் கப்பல்கள் நங்கூரமிட்டு நின்றன.

எனவே, மருங்கூர்ப்பட்டினம் ஒரு பெருவணிகத்தலமாகவும்; சிறந்த துறைமுகமுமாகவும் விளங்கியது என்று
அறிகிறோம்.

நற்றிணை 258-ஆம் பாடலைப் பாடிய இதே நக்கீரர், தனது இன்னொரு பாடலான நற்றிணை 358-இல்

பசும்பூண் வழுதி மருங்கை

என்று இம் மருங்கூரைக் குறிப்பிடுகிறார்.
இப்பட்டினம் பசும்பூண் பாண்டியனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது என்பதிலிருந்து இது பாண்டிய நாட்டுக்
கடற்கரைப் பகுதியில் இருந்து ஒரு பட்டினம் என்பது உறுதிப்படும்

இந்த மருங்கூர் எங்கு உள்ளது என்பதில் ஆய்வாளர்களின் கருத்துகள் வேறுபடுகின்றன.

மருங்கூர் என்ற பெயரில் தமிழத்தில் சிலஊர்கள் இன்றும் உள்ள நிலையில் தொண்டிக்கு மேல் உள்ள
மருங்கூர் பட்டினமே சங்க இலக்கியம் குறிப்பிடும் மருங்கூர் பட்டினமாகும்.
இன்றைய இராமநாதபுரம் பகுதியில் உள்ள ‘பாசிப்பட்டின’த்திற்கு மேல் அமைந்துள்ள மருங்கூர் பட்டினமே
சங்ககால துறைமுகப் பட்டினமாக இருந்திருக்கும் என்ற முடிவுக்கு வரலாம்.
இங்கே சொடுக்குக

இது கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும் என்கிறது
விக்கிப்பீடியா கட்டுரை (இங்கே சொடுக்குக )

கடலூர் மாவட்டத்தில் உள்ள மருங்கூர் ஒரு சங்ககால நகரம் தான் என்கிறார் திருமதி.சுபாஷினி.
(இங்கே சொடுக்குக)
(இங்கே சொடுக்குக)

சங்ககாலப் புலவர்கள் மூவர் இவ்வூரைச் சேர்ந்தவர்கள்.
மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார்(அகநானூறு 80.), மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் (நற்றிணை 289),
மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்(அகநானூறு 327.) ஆகியோர் அந்தப் புலவர்கள்.

மேல்


மருங்கை

(பெ) பார்க்க : மருங்கூர்

பசும் பூண் வழுதி மருங்கை அன்ன என் – நற் 358/10

மேல்


மருட்கை

(பெ) 1. மருட்சி, மனக்கலக்கம், தடுமாற்றம், Bewilderment
2. வியப்பு, wonder, astonishment

1

மா மலை நாட மருட்கை உடைத்தே
செம் கோல் கொடும் குரல் சிறுதினை வியன் புனம்
கொய் பதம் குறுகும்_காலை எம்
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே – நற் 57/7-10

பெரிய மலைநாடனே! என் மனம் மருட்சியடைகின்றது,
நிமிர்ந்த தண்டினையும் வளைந்த கதிர்களையும் கொண்ட சிறுதினையின் அகன்ற கொல்லைக்காடு
கதிர் அறுக்கும் பருவத்தை அடையும் இந்த நேரத்தில், எமது
கருத்த நெய்ப்பசையுள்ள கூந்தலைக்கொண்டவளின் சிறப்பு மிக்க நலம் சிதைந்துவிடுமே என்று –

2

நினைக்கும்_காலை மருட்கை உடைத்தே
எனை பெரும் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல் – புறம் 217/1,2

கருதுங்காலத்து வியக்கும்தன்மையுடையது
எத்துணையும் பெரிய தலைமையுடனே இவன் சிறப்புகளைக் கைவிட்டு வரத் துணிதல்

மேல்


மருட்டல்

(பெ) 1. காதல் மயக்கம், enticement
2. மயக்கம், கலக்கம், தடுமாற்றம், bewilderment

1

தொய்யில் இள முலை இனிய தைவந்து
தொய்யல் அம் தட கையின் வீழ் பிடி அளிக்கும்
மையல் யானையின் மருட்டலும் மருட்டினன் – கலி 54/12-14

மேலும் தொய்யில் வரைந்த என் இளமையான முலைகளை இனிதாகத் தடவிக்கொடுத்து,
நெகிழ்வுற்ற தன் அழகிய பருத்த கைகளால், தான் விரும்பும் பெண்யானையைத் தடவிக்கொடுக்கும்
மையல் கொண்ட யானையைப் போல் எனக்குக் காதல்மயக்கத்தையும் ஊட்டி மயக்கினான்;

2

நனவின்வாயே போல துஞ்சுநர்
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே – அகம் 158/10,11

நனவினது உண்மைத் தோற்றம் போல, துயில்வோரைக்
கனவு அவ்விடத்து மயக்கலும் உண்டு

மேல்


மருட்டு

(வி) 1. மயக்கிச்சிக்கவை, நயமாகப்பேசி இணங்கவை, coax, allur
2. மயக்கு, தன்வசப்படுத்து, fascinate, seduce, entice
3. ஒத்திரு, resemble

1

அம்ம வாழி கொண்க எம்_வயின்
மாண் நலம் மருட்டும் நின்னினும்
பாணன் நல்லோர் நலம் சிதைக்கும்மே – ஐங் 139

வாழ்க நீ தலைவனே! என்னிடம் உள்ள
சிறந்த அழகினைப் பாராட்டி மயக்குமொழி பேசும் உன்னைக் காட்டிலும்
உன் பாணன் நல்ல மகளிர் பலரின் பெண்மை நலத்தைச் சிதைக்கவல்லான்.

நீ மருட்டும் சொல்கண் மருள்வார்க்கு உரை அவை – கலி 108/47

உன்னுடைய மயக்கும் சொற்களுக்கு மயங்குவார்க்கு இதைச் சொல்!

2

பொய் வலாளன் மெய் உற மரீஇய
வாய் தகை பொய் கனா மருட்ட ஏற்று எழுந்து
அமளி தைவந்தனனே – குறு 30/2-4

அந்தப் பொய்சொல்வதில் வல்ல தலைவன் என்னை மார்புறத் தழுவிய
வாய்ப்பதற்கேதுவான பொய்க்கனவு மயக்க, நினைவு பெற்று எழுந்து
படுக்கையைத் தடவிப்பார்த்தேன்!

தொய்யில் இள முலை இனிய தைவந்து
தொய்யல் அம் தட கையின் வீழ் பிடி அளிக்கும்
மையல் யானையின் மருட்டலும் மருட்டினன் – கலி 54/12-14

மேலும் தொய்யில் வரைந்த என் இளமையான முலைகளை இனிதாகத் தடவிக்கொடுத்து,
நெகிழ்வுற்ற தன் அழகிய பருத்த கைகளால், தான் விரும்பும் பெண்யானையைத் தடவிக்கொடுக்கும்
மையல் கொண்ட யானையைப் போல் எனக்குக் காதல்மயக்கத்தையும் ஊட்டி மயக்கினான்;

3

அலை நீர் தாழை அன்னம் பூப்பவும்
தலை நாள் செருந்தி தமனியம் மருட்டவும்
கடும் சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும் – சிறு 146-148

அலையும் நீர்(கடற்கரையில் இருக்கும்)தாழை அன்னம்(போலே) பூக்கவும்,
(இளவேனிற்காலத்தின்)முதல் நாளில் செருந்தி (பூத்து)பொன்னை ஒத்திருக்கவும்,
முதல் சூலையுடைய கழிமுள்ளி ஒளியையுடைய நீலமணிபோலப் பூக்கவும்,

மேல்


மருடல்

(பெ) மருளுதல், திகைத்தல், be perplexed, bewildered

வையை வரு புனல் ஆடல் இனிது-கொல்
செவ்வேள் கோ குன்றம் நுகர்தல் இனிது-கொல்
வை வேல் நுதி அன்ன கண்ணார் துணை ஆக
எவ்வாறு செய்வாம்-கொல் யாம் என நாளும்
வழி மயக்கு_உற்று மருடல் நெடியான்
நெடு மாட கூடற்கு இயல்பு – பரி 35/1-6

வையையில் புதிதாக வருகின்ற நீரில் புனலாடுவது இனியதா?
முருகப்பிரான் இருக்கும் தலைமைப் பண்புள்ள திருப்பரங்குன்றத்தினை வணங்கி இன்புறுதல் இனியதா?
கூர்மையான வேலின் நுனி போன்ற கண்களையுடைய பெண்கள் துணையாக வர
இவ்விரண்டினில் எதனைச் செய்வோம் நாம் என்று எந்நாளும்
வழியறியாது மருட்சியடைதல், பாண்டியனின்
நெடிய மாடங்களையுடைய மதுரை மக்களுக்கு இயல்பு.

மேல்


மருடிர்

(வி.மு) மருளுகின்றீர், மனம்தடுமாறுகிண்றீர், you become bewildered

மயங்கினாள் என்று மருடிர் கலங்கன்-மின் – கலி 143/19

அறிவுகெட்டுப்போய்விட்டாளோ என்று மருளுகின்றீர், கலங்கவேண்டாம்,

மேல்


மருத்து

(பெ) காற்று, wind

நின் தோற்றமும் அகலமும் நீரின் உள
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள – பரி 4/30-32

உனது வெளிப்பாடும், பரப்பும் கடலினிடத்தில் உள்ளன;
உன் உருவமும் ஒலியும் ஆகாயத்தில் உள்ளன;
உன் பிறப்பும், மறைதலும் காற்றினில் உள்ளன;

மேல்


மருதம்

(பெ) 1. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகைத் அகத்திணைப்பகுப்புளுள் ஒன்று,
one of the five love-modes of human life
2. மருத நிலத்திற்குரிய நிலம் – வயலும் வயல் சார்ந்த இடம், agricultural tract, wet land
3. மருத நிலப்பண், A morning melody-type peculiar to agricultural tracts;
4. மருது என்ற ஒரு வகை மரம்/பூ, a kind of tree/ its flower,
நீர் மருது அல்லது வெண்மருது (Arjuna., Terminalia arjuna),
கருமருது (Black winged myrobalan,),
பூ மருது(Flowering murdah.), பிள்ளைமருது (terminalia paniculatta)

1,2

மருதம் சான்ற மருத தண் பணை – சிறு 186

மருதத்திணை ஒழுக்கம் நிலைபெறுவதற்கமைந்த மருத நிலத்தில் குளிர்ந்த வயலினையுடையதும்

3

குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்
நறும் பூ கண்ணி குறவர் சூட
கானவர் மருதம் பாட அகவர்
நீல் நிற முல்லை பல் திணை நுவல – பொரு 218-221

குறிஞ்சிப்பண்ணைப் பரதவர் பாடவும், நெய்தலாகிய
நறிய பூவால் புனைந்த கண்ணியைக் குறவர்கள் சூடவும்,
முல்லை நிலத்து மக்கள் மருதப்பண்ணைப் பாட, உழவர்கள்
நீல நிறமுடைய முல்லைக்கொடி படர்ந்த பலவாகிய காட்டுநிலத்தைக் கொண்டாடவும்

4

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
பழன பல் புள் இரிய கழனி
வாங்கு சினை மருத தூங்கு துணர் உதிரும்
தேர் வண் விராஅன் இருப்பை – நற் 350/104

வெண்ணெல் கதிர்களை அறுப்பவர்களின் தண்ணுமைப் பறையின் ஒலிக்கு வெருண்டு
பழனத்தில் உள்ள பலவான பறவைகள் பறந்தோட, வயல்வெளியில்
வளைந்த கிளைகளைக் கொண்ட மருதமரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் பூங்கொத்துக்கள் உதிர்கின்ற
தேர்க்கொடை கொடுப்பதில் சிறந்த விரான் என்பானின் இருப்பையூர்

இந்த மருதமரங்கள் நீண்ட நாள் வாழக்கூடியவை. நீர்நிலைகளை ஒட்டி நன்கு வளரும்

முடம் முதிர் மருதத்து பெரும் துறை – ஐங் 31/3
தொல் நிலை மருதத்து பெரும் துறை – ஐங் 75/3
துறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடு – புறம் 344/3

இதன் பூவில் நுனியில் முடிபோன்ற அமைப்புகள் இருக்கும்.

உளை பூ மருதத்து கிளை குருகு இருக்கும் – ஐங் 7/4

மேலே மயிர் போன்ற நார்முடியைக் கொண்ட பூவினையுடைய மருதமரத்தில் தம் இனத்துடன் பறவைகள்
இருக்கும்

மேல்


மருதன்

(பெ) பார்க்க : மாங்குடிமருதன்

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக என் நிலவரை – புறம் 72/13-16

மேல்


மருதி

(பெ) சங்க காலத்துப் பெண் ஒருத்தியின் பெயர், the name of a woman of sangam period

மாதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த
ஆதிமந்தி காதலன் காட்டி
படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின்
மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர் – அகம் 222/9-12

திசையெல்லாம் தன் கணவனைத் தேடி மதிமயங்கி வாடிய
அவன் மனையாளாகிய ஆதிமந்திக்கு அவள் காதலனைக் காட்டி
ஒலிக்கும் கடலில் புக்கு மறைந்த பாடுதல் அமைந்த சிறப்பினையுடைய
மருதியை ஒத்த சிறந்த புகழைப் பெரும்பொருட்டு

மருதி வரலாறு.
ஆதிமந்தி என்பவன் சோழநாட்டு நீச்சல்வீரன். அவன் அரச குடும்பத்தினர் முன்னிலையில் காவிரியில் நீச்சல்
நடனம் ஆடியபோது அவனைக் காவிரி ஆற்று வெள்ளம் கொண்டு சென்றது. வெள்ளத்தில் சென்ற
ஆட்டன் அத்தியை மருதி என்பவள் காப்பாற்றி அவனுடன் வாழ்ந்து வந்தாள். ஆட்டன் அத்தியைக் காதலித்த
கரிகாலன் மகள் ஆதிமந்தி தன் காதலனைத் தேடிக்கொண்டு வந்தாள். தன்னோடு வாழும் ஆட்டன் அத்தி
இளவரசியின் காதலன் என உணர்ந்ததும் அவனை ஆதிமந்தியிடம் ஒப்படைத்து விட்டு, மருதி கடலில் பாய்ந்து
தன்னை மாய்த்துக் கொண்டாள்.

மேல்


மருது

(பெ) பார்க்க : மருதம் – 4

தட மருப்பு எருமை பிணர் சுவல் இரும் போத்து
மட நடை நாரை பல் இனம் இரிய
நெடு நீர் தண் கயம் துடுமென பாய்ந்து
நாள்_தொழில் வருத்தம் வீட சேண் சினை
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் – நற் 330/1-5

அகன்ற கொம்புகளையுடைய எருமையின் சொரசொரப்பான பிடரியைக் கொண்ட கரிய ஆணானது,
இள நடையையுடைய நாரையின் பலவான கூட்டம் வெருண்டோட
நெடிய நீர் நிரம்பிய குளிர்ந்த குளத்தில் துடுமென்று விரைவாகப் பாய்ந்து
அந்த நாளிற்செய்த உழும் தொழிலின் வருத்தம் நீங்கும்படியாக நீராடி, நீண்ட கிளைகளையுடைய
இருள் நிரம்பியது போன்ற அடர்ந்த மருதமரத்தின் இனிய நிழலில் படுத்திருக்கும்

மேல்


மருந்துரை

(பெ) தேவ மருத்துவர்கள், divine physicians

மருந்து_உரை இருவரும் திருந்து_நூல் எண்மரும் – பரி 8/5

தேவ மருத்துவராகிய அசுவனி, தேவர் ஆகிய இருவரும், மக்கள் திருந்துவதற்குக் காரணமான
நூல்களை உணர்ந்த எண்பது வசுக்களும்

மேல்


மருப்பு

(பெ) 1. விலங்கின் கொம்பு, horn of a beast
2. யானையின் தந்தம், tusk of an elephant
3. யாழின் ஓர் உறுப்பு, a part of a lute

1

வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும் – பெரும் 110

வளைந்த கொம்பினையுடைய காட்டுப்பன்றியின் வரவைப் பார்த்து நிற்கும்

வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும் – ஐங் 265/2

வளைந்த வெண்மையான கொம்பினையுடைய ஆண்பன்றி காத்துவளர்க்கும்

திரி மருப்பு இரலையொடு மட மான் உகள – முல் 99

முறுக்குண்ட கொம்பினையுடைய புல்வாய்க்கலையோடே மடப்பத்தையுடைய மான் துள்ள,

தட மருப்பு எருமை மட நடை குழவி – நற் 120/1

அகலமான கொம்புகளையுடைய எருமைகளின் இள நடையினைக் கொண்ட கன்றுகள்

சுறவு மருப்பு அன்ன முள் தோடு ஒசிய – நற் 131/5

சுறாமீனின் கொம்பு போன்ற முள்ளைக் கொண்ட இலைகள் முறிய

தகர் மருப்பு ஏய்ப்ப சுற்றுபு சுரிந்த – அகம் 101/4

செம்மறியாட்டுக் கிடாயின் கொம்பினை ஒப்பச் சுற்றிக் கடை சுருண்ட

கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு – குறு 363/1

கண்ணி போல் வளைந்த கொம்பினையுடைய தலைமைப் பண்புள்ள நல்ல காளை,

2

பெரும் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும் – அகம் 109/13

பெரிய களிற்றின் கொம்பொடு புலியின் வரி பொருந்திய தோலைத் தண்டமாகத் தான் ஏவலரை இறுக்கச்செய்யும்

3

பாம்பு அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின்
மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும் – பொரு 13,14

பாம்பு தலையெடுத்தாற் போன்ற ஓங்கிய கரிய தண்டினையும்;
கருநிறப்பெண்ணின் முன்கையில் (அணியப்பட்ட)அழகிய வளையலை ஒத்ததும்,

மேல்


மருமான்

(பெ) பார்க்க : மருகன்

குட புலம் காவலர் மருமான் ஒன்னார்
வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த
எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன் – சிறு 47-49

மேற்றிசைக்கண்ணுள்ள நிலத்தைக் காக்கும் சேரர் குடியிலுள்ளோன் – பகைவருடைய
வட நாட்டு இமயமலையின் மேல் வளைந்த வில்(சின்னத்தைப்) பொறித்த
கணையத்திற்கு மாற்றான திணிந்த தோளினையும், கடக்கின்ற தேரினையும் உடைய குட்டுவனுடைய

மேல்


மருவு

1. (வி) 1. தழுவு, பின்பற்று, embrace, follow, adopt
2. நெருங்கு, come close
3. வழக்கப்படு, நிலைபெறு, be established
– 2. (பெ) 1. தழுவுதல், பின்பற்றுதல், embracing, following, adhering to
2. வழக்கப்படுதல், பயிலுதல், becomung accustomed to
3. காதல்மயக்கம், பித்துப்பிடித்தல்,

1.1

பெரும் கடல் குட்டத்து புலவு திரை ஓதம்
இரும் கழி மருவி பாய பெரிது எழுந்து
உரு கெழு பானாள் வருவன பெயர்தலின் – மது 540-542

பெரிய கடலின் ஆழ்பகுதியினின்(று வரும்) புலால் நாறும் அலைகளின் எழுச்சி
கரிய கழியில் தழுவிப் பரப்பதற்காக மிகுந்து எழுந்து,
அச்சம் பொருந்திய நடுயாமத்தே வருவனவாய் மீளுதலால்,

மகிழ களி பட்ட தேன் தேறல் மாற்றி
குருதி துடையா குறுகி மருவ – பரி 16/28,29

அவன் மகிழும்படி, களிப்பு மிக்க தேனால் சமைக்கப்பட்ட தேறலை அவனுக்குத் தர, அவன் அதனை மறுத்து,
அவள் மீது படிந்திருக்கும் சாயநீரைத் துடைப்பான்போல் கிட்டே சென்று அவளைத் தழுவிக்கொள்ள

இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த
புன் தலை மன்றம் வழிநாள் காணின்
அழுங்கல் மூதூர்க்கு இன்னாது ஆகும்
அதுவே மருவினம் மாலை – அகம் 301/23-26

மிகப் பெரிய சுற்றத்தினையுடைய கூத்தர் போய்விட்ட
பொலிவற்ற இடத்தினையுடைய மன்றினைப் பின்னாளில் காணின்
அக்காட்சி ஆரவாரம் கொண்டிருந்த முதிய ஊரார்க்கு துன்பம் உண்டாகும்
அத்தகைய துன்பத்தையே தழுவியுள்ளோம் இந்த மாலையில்

1.2

மருவ இன் நகர் அகன் கடை தலை – புறம் 387/17

நெருங்குதற்கு இனிய பெருமனையின் அகன்ற முற்றத்திடத்து

1.3

அமர் கண் ஆமான் அம் செவி குழவி
கானவர் எடுப்ப வெரீஇ இனம் தீர்ந்து
கானம் நண்ணிய சிறுகுடி பட்டு என
இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்து
மனை உறை வாழ்க்கை வல்லி ஆங்கு
மருவின் இனியவும் உளவோ
செல்வாம் தோழி ஒல்வாங்கு நடந்தே – குறு 322

அமர்த்த கண்களையுடைய ஆமானின் அழகிய செவிகளையுடைய குட்டி
குறவர்கள் விரட்டியதால் வெருண்டு, தன் கூட்டத்தைவிட்டு ஓடி
காட்டின்கண் சேர்ந்துள்ள சிறுகுடியில் அகப்பட்டுக்கொள்ள,
இளம்பெண்கள் அதனைப் பேண, அவருடன் கலந்து, அவ்விடத்தை விரும்பி
வீட்டில் வாழும் வாழ்க்கையைப் பற்றிக்கொண்டதைப்போல்
பழக்கப்பட்டுப்போனால் வேறு இனிமையுடையன உண்டோ?
(தலைவன் இருக்குமிடத்துக்குச்)செல்வோம் தோழி! இயன்ற அளவுக்கு நடந்து

2.1

மறையில் தான் மருவு_உற மணந்த நட்பு அருகலான்
பிறை புரை நுதல் அவர் பேணி நம்
உறை வரைந்தனர் அவர் உவக்கும் நாளே – கலி 45/22-24

மறைவாகத் தான் தழுவுதலுற மணந்த நட்பு இல்லாமல்போய்விடுமோ என்று
பிறை போன்ற நெற்றியையுடையவளே! அவரைப் பேணி நாம்
அவரிடத்தில் , அவர் விரும்பிய நாளில். தங்குதலை உன் உறவினரிடம் பேசிமுடித்துவிட்டார்.

2.2

ஆறலை கள்வர் படை விட அருளின்
மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை – பொரு 21,22

வழி(ப்போவாரை) அலைக்கின்ற கள்வர் (தம்)படைக்கலங்களைக் கைவிடும்படி செய்து, அருளின்
மாறாகிய மறப்பண்பினை (அவரிடத்திலிருந்து)அகற்றுகின்ற மருவுதல் இனிய பாலை யாழை
மருவுதல் – கேட்டற்பொருட்டும், பயிலற்பொருட்டும் அடிக்கடிஅதனை எய்துதல் – பெருமழைப்புலவர் உரை

2.3

மருவு ஊட்டி மாறியதன் கொண்டு எனக்கு
மருவு_உழி பட்டது என் நெஞ்சு – கலி 144/14,15

எனக்குக் காதல்மயக்கம் ஊட்டிவிட்டுக் கைவிட்டுச் சென்ற அன்றுமுதல்
என் நெஞ்சு மயக்கம் கொண்டுவிட்டது.

மேல்


மருள்

1. (வி) 1. கலங்கு, மயங்கு, மனம்தடுமாறு, be bewildered, perplexed
2. வியப்படை, wonder, be amazed
3. மிரளு, வெருவு, be frightened, scared
4. ஒப்பாகு, be similar
– 2. (பெ) 1. மனக்கலக்கம், குழப்பம், மனத்தடுமாற்றம், bewilderment, perplexity, confusion
2. மயக்கம், misapprehension
3. பிறவிமுதல் அறிவின்றி மயங்கியிருக்கும் நிலை, Congenital idiocy
– 3. (இ.சொ) ஓர் உவம உருபு, a particle of comparison

1.1, 1.2

ஆறு செல் வருத்தம் அகல நீக்கி
அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும்
மனம் கவல்பு இன்றி மாழாந்து எழுந்து
மாலை அன்னதோர் புன்மையும் காலை
கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும்
கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப – பொரு 93-98

வழிபோன வருத்தத்தை என்னிடத்துச் சிறிதும் நில்லாமல் போக்கி,
கள்ளின் செருக்காலுண்டான மெய்நடுக்கமல்லது வேறு
மனக்கவர்ச்சி (சிறிதும்)இல்லாமல், துயின்று (பின்னர் உணர்ந்து)எழுந்து,
(முந்திய)மாலையில் (என்னிடத்தில் நின்ற) அப்படி ஒரு(மிகவும் அதிகமான) சிறுமையும், காலையில்
கண்டோர் மருளுதற்குக் காரணமான வண்டுகள் மொய்க்கின்ற (புதிய)நிலையும்,
கனவோ என்று கலங்கின என்னுடைய நெஞ்சு துணியும்படி

1.3

உரவு சினம் செருக்கி துன்னுதொறும் வெகுளும்
முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி
திளையா கண்ண வளைகுபு நெரிதர
நடுங்குவனம் எழுந்து நல் அடி தளர்ந்து யாம்
இடும்பை கூர் மனத்தேம் மருண்டு புலம் படர – குறி 130-134

மிகுகின்ற சினத்தால் செருக்கி, (தம் மேல் ஏதேனும்)நெருங்குந்தோறும் வெகுண்டுவரும்,
(மூங்கில்)முளை(போலும்) கூர்மையுள்ள பற்களையுடைய, பெரிய நகங்களையுடைய, நாய்
இமையாத கண்களையுடையவாய் (எம்மை)வளைத்துக்கொண்டு மேலேமேலே வருகையினால்,
அஞ்சிநடுங்கியவராய் (இருப்பை விட்டு)எழுந்து, (எம்)நல்ல கால்கள் தள்ளாட, யாங்கள்
வருத்தம் மிக்க மனத்தையுடையவராய் மிரண்டு (வேறு)இடத்திற்குச் செல்ல

1.4, 3

பொரி அரை கோங்கின் பொன் மருள் பசு வீ – ஐங் 367/1

பொரிந்துபோன அடிப்பகுதியை உடைய கோங்கின் பொன்னை ஒத்த புதிய பூக்களை

முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் – நற் 353/4

வளைந்து முதிர்ந்த பலாவின் குடம் போன்ற பெரிய பழத்தை,

2.1

நகுதரும் தன் நாணு கைவிட்டு இகுதரும்
கண்ணீர் துடையா கவிழ்ந்து நிலன் நோக்கி
அன்ன இடும்பை பல செய்து தன்னை
வினவுவார்க்கு ஏதில சொல்லி கனவு போல்
தெருளும் மருளும் மயங்கி வருபவள் – கலி 144/3-7

நகைக்கிறாள், தன் நாணத்தைக் கைவிட்டு, ஒழுகுகின்ற
கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, தலையைக் கவிழ்ந்து தரையைப் பார்த்துக்கொண்டு,
இவை போல துன்பத்தைக் காட்டும் செயல்கள் பலவற்றைச் செய்து, ஏனென்று தன்னைக்
கேட்பாருக்குத் தொடர்பில்லாத பதில்களைச் சொல்லி, கனவு காண்பவள் போல் காணப்பட்டு,
சிலநேரம் தெளிந்த அறிவோடும், சிலநேரம் குழம்பிய அறிவோடும் மாறிமாறித் தோன்றுபவளிடம்

2.2

மான் ஏறு மட பிணை தழீஇ மருள் கூர்ந்து
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும்
—————— ———————————
மாலை வந்தன்று மாரி மா மழை – குறு 319/1-5

ஆண்மான்கள் தம் மடப்பம் பொருந்திய பெண்மான்களைத் தழுவி, மயக்கம் மிக்கு
காட்டில் சேர்ந்த புதர்களில் மறைந்து ஒதுங்கவும்
—————————- ———————-
கார்காலத்துப் பெரிய மழை இம் மாலைப்பொழுதின்கண் வந்தது

மருள் – மயக்கம், திசை இருண்டு மழை பொழிதலின் மருள்கூர்ந்து ஒடுங்கின என்க – பெருமழைப்புலவர் உரை

2.3

சிறப்பு இல் சிதடும் உறுப்பு இல் பிண்டமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம் – புறம் 28/1-4

மக்கள் பிறப்பில் சிறப்பு இல்லாத குருடும், வடிவில்லாத தசைத்திரளும்
கூன் உடையவரும், குறுகிய உருவம் படைத்தோரும், ஊமையரும், செவிடரும்
விலங்கு வடிவாகப்பிறப்பவரும், அறிவின்றியே மயங்கி இருக்கும் பிறவிகளும் உளப்பட உலகத்தில்
உயிர்வாழ்பவர்க்கு
எட்டுவகைப்பட்ட பெரிய எச்சம் என்று சொல்லப்பட்ட இவையெல்லாம்

மேல்


மருளி

(பெ) மயக்கம், delusion

பொருள் அல்லால் பொருளும் உண்டோ என யாழ நின்
மருளி கொள் மட நோக்கம் மயக்கப்பட்டு அயர்த்தாயோ – கலி 14/10,11

பொருள் இல்லாவிட்டால் நாம் ஒரு பொருட்டாக இருக்கமாட்டோம் என்ற உன்
மாயத்தோற்றம் கொண்ட அறியாமை வயப்பட்ட எண்ணத்தால் மயக்கப்பட்டு உணர்விழந்தாயோ?

மேல்


மரூஉ

(பெ) மருவுதல், பயின்றிருத்தல், becoming accustomed to

நாம் உறை தேஎம் மரூஉ பெயர்ந்து – அகம் 280/7

நாம் தங்கும் இந்நாட்டில் பயின்றிருத்தலின் நீங்கி

மேல்


மரை

(பெ) 1. காட்டுமாடு, ஆமா, bison, wild cow/ox
2. மான் வகை, indian elk sambur

1

சிலை ஒலி வெரீஇய செம் கண் மரை விடை – மலை 406

வில்லின் ஓசைக்குப் பயந்த சிவந்த கண்களையுடைய காட்டெருது

2

ஓய் பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி – நற் 43/3

மிகுந்த பசியையுடைய செந்நாய் மெலிந்த மரை என்னும் மானைக் கொன்று

மேல்


மரையா

(பெ) பார்க்க – மரை

ஆடு அமை ஒழுகிய தண் நறும் சாரல்
மென் நடை மரையா துஞ்சும் – குறு 115/4,5

ஆடுகின்ற மூங்கில்கள் நீண்டு வளர்ந்த குளிர்ந்த மணமுள்ள மலைச் சரிவில்
மெல்லிய நடையையுடைய காட்டுப்பசுக்கள்/மரைமான்கள் துயிலும்

மேல்


மரையான்

(பெ) பார்க்க : மரை

மலை தலைவந்த மரையான் கதழ் விடை – மலை 331

மலையிலிருந்து புறப்பட்டுவந்த காட்டுமாட்டின் சீறியெழுந்த காளையும்,

மட கண் மரையான் பெரும் செவி குழவி – மலை 506

பேதைமை மிகுந்த கண்களையுடைய மரைமானின் பெரிய காதுகளைக்கொண்ட குட்டியும்,

மேல்


மல்

(பெ) 1. வளம், Fertility, richness;
2. மற்போர், wrestling

1

மல் அற்று அம்ம இ மலை கெழு வெற்பு என – நற் 93/4

வளப்பம் கொண்டது இந்த மலைகள் பொருந்திய மலைத்தொடர் என்று

2

மல் ஆர் அகலம் வடு அஞ்சி மம்மர் கூர்ந்து – பரி 12/72

அவனது மற்போருக்கு இயைந்த மார்பில் பட்ட புண்ணுக்காக அச்சமுற்று, துயரங்கொண்டு

மேல்


மல்கு

(வி) 1. மிகு, அதிகமாகு, increase, abound
2. நிறை, ததும்பு, be filled up, well up

1

கணை கால் மா மலர் கரப்ப மல்கு கழி
துணை சுறா வழங்கலும் வழங்கும் – நற் 67/6,7

திரண்ட தண்டினையுடைய கரிய மலர்கள் மறைந்துபோகும்படி நீர் பெருகும் கழிகளில்
துணையோடு சுறாமீன்கள் நீந்தவும் செய்யும்

2

மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுர முதல் – குறு 347/1

நீர் ததும்பும் சுனைகள் வற்றிப்போன வறண்ட பாலைநிலத்தின் தொடக்கத்தில்

மேல்


மல்லர்

(பெ) மற்போர் வீரர், wrestler

மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன் – கலி 134/1

மற்போர் வீரர்களின் வீரத்தை அழித்துக் கெடுத்த, மலராலான குளிர்ந்த மாலையை அணிந்த மார்பினனாகிய
திருமால்

மேல்


மல்லல்

(பெ) 1. வளப்பம், செல்வம், wealth, fertility, richness
2. மிகுதி, பெருக்கம், abundance, fullness
3. வலிமை, power, strength

1

மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் – நெடு 29

மாடங்கள் உயர்ந்துநிற்கும் வளப்பமுள்ள பழைய ஊரில்,

2

மல்லல் புனல் வையை மா மலை விட்டு இருத்தல்
இல்லத்து நீ தனி சேறல் இளிவரல் – பரி 11/43,44

மிக்க வெள்ளத்தையுடைய வையையே! உன் பெரிய மலையை விட்டு நிலையாகத் தங்கியிருக்கும்
இல்லமாகிய கடலுக்கு நீ தனியே சென்றடைவது சிறப்பானதன்று

3

வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர்
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை
கூர் நுதி செம் வாய் எருவை சேவல்
படு பிண பைம் தலை தொடுவன குழீஇ
மல்லல் மொசி விரல் ஒற்றி மணி கொண்டு
வல் வாய் பேடைக்கு சொரியும் ஆங்கண் – அகம் 215/10-15

வடித்தல் செய்த அம்பினையுயைய ஏவலராய மறவர்
வழிப்போகும் ஆட்களைக் கொன்று அவர்களை இட்டு மூடிய கண்டார்க்கு அச்சம் வரும் கற்குவியல்களில்
கூரிய அலகினைக் கொண்ட சிவந்த வாயினையுடைய ஆண் பருந்துகள்
இறந்துபட்ட பிணங்களின்பசிய தலையினைத் தோண்டுவனவாகிக் கூடி
வலிய நெருங்கிய விரலால் தோண்டி கண்மணியைப் பெயர்த்துக்கொண்டு
வலிய வாயினையுடைய தம் பேடைக்குச் சொரியும் அவ்விடத்தே

மேல்


மல்லன்

(பெ) மற்போர் வீரன், werstler

மைந்து உடை மல்லன் மத வலி முருக்கி – புறம் 80/2

வலியையுடைய மல்லனது மிக்க வலியைக் கெடுத்து

மேல்


மல்லிகா

– (பெ) மல்லிகை, jasmine

கல்லகார பூவால் கண்ணி தொடுத்தாளை
நில்லிகா என்பாள் போல் நெய்தல் தொடுத்தாளே
மல்லிகா மாலை வளாய் – பரி 11/103-105

குளிரிப்பூவால் தலைமாலை தொடுக்கும் ஒருத்தியை
அவ்வாறு தொடுப்பதை நிறுத்துக என்பாள் போல் நெய்தல் மலரைத் தொடுத்தாள்
மல்லிகை மாலையில் இடையிடையே கலந்து;

மேல்


மல்லிகை

(பெ) பூங்கொடி வகை, Himalayan heart-leaved smooth jasmine, m.cl., Jasminum anestomosans;

மல்லிகை மௌவல் மணம் கமழ் சண்பகம் – பரி 12/77

மேல்


மலக்கு

(பெ) கலக்கம், மயக்கம், குழப்பம், bewilderment, confusion

என் எனப்படும்-கொல் தோழி மின்னு வர
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ அதன்_எதிர்
கான மஞ்ஞை கடிய ஏங்கும்
ஏதில கலந்த இரண்டற்கு என்
பேதை நெஞ்சம் பெரு மலக்கு_உறுமே – குறு 194

(இந்த நெஞ்சின் நிலையை)என்னவென்று சொல்வது தோழி? மின்னல்வர
முகில்கள் எழுந்து ஒலிக்கும், அதுமட்டுமோ? அதற்கு எதிராக
காட்டு மயில்கள் விரைவாக ஏக்கத்துடன் கூவும்
ஒன்றற்கொன்று தொடர்பிலாது கலந்த இந்த இரண்டு ஒலிகளாலும் என்
பேதை நெஞ்சம் பெரிய அளவில் கலக்கமடையும்.

மேல்


மலங்கு

(பெ) விலாங்கு மீன், true eel

மலங்கு மிளிர் செறுவின் தளம்பு தடிந்து இட்ட
பழன வாளை பரூஉ கண் துணியல் – புறம் 61/3,4

விலாங்கு மீன் பிறழ்கின்ற செய்யின்கண்ணே கட்டிகளை உடைக்கும் கருவி வெட்டிப்போட்ட
பொய்கையிடத்து வாளையினது பரிய இடத்தையுடைய தடியை

மேல்


மலர்

1. (வி) 1. பூவின் மொட்டு விரி, open, as a flower; to bloom
2. விரிந்து அகலு, be wide open
3. தோன்று, appear
4. வாய்ப்புறம் மேலாக நிமிரச்செய், turn the face or mouth upward, as of a pot
– 2. (பெ) 1. பூ, full blown flower
2. அகற்சி, breadth

1.1

கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர் – திரு 75

கண்ணைப்போன்று விரிந்த விருப்பம் மருவின சுனைப் பூக்களில்,

1.2

மலர திறந்த வாயில் பலர் உண – குறி 203

அகலத் திறந்துகிடக்கின்ற வாயிலில் (வந்து)பலரும் உண்ணும்படி,

முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும்
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்
ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும் – சிறு 231-234

முதியோர்க்குக் குவித்த கைகளையுடையோய்’ என்றும்,
‘வீரர்க்குத் திறந்த மார்பை உடையோய்’ எனவும்,
‘உழவர்க்கு நிழல்செய்த செங்கோலையுடையோய்’ எனவும்,
‘தேரினையுடையோர்க்கு வெம்மைசெய்த வேலினையுடையோய்’ எனவும்,

1.3

மா கண் மலர்ந்த முலையள் தன்னையும் – புறம் 352/14

கரிய கண் தோன்றிய முலையையுடையளாயினாள் தமையனும்

1.4

அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும்
கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின் – புறம் 393/4,5

சோறு சமைத்தற்கண் உள்ள விருப்பத்தை மறந்த எம்முடைய மட்பானையை நிமிர்த்துச் சமைக்கச்செய்யும்
பரவுக்கடனை அறிந்தாளும் செல்வர் பிற நாட்டிலும் இல்லாராதலால்

2.1

கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர் – திரு 75

கண்ணைப்போன்று விரிந்த விருப்பம் மருவின சுனைப் பூக்களில்,

2.2

மலர் தலை உலகத்துள்ளும் பலர் தொழ
விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர் – பெரும் 410,411

அகன்ற இடத்தையுடைய உலகத்து நகரங்களினுள்ளும், பலரும் தொழும்படி,
விழாக்களால் மேம்பட்ட பழைய வெற்றிச்சிறப்பையும் உடைய காஞ்சிநகர்

மேல்


மலர்ப்பு

(பெ) வெளிக்காட்டுதல், exposing

வணங்கு சிலை பொருத நின் மணம் கமழ் அகலம்
மகளிர்க்கு அல்லது மலர்ப்பு அறியலையே – பதி 63/4,5

வளைந்த வானவில்லோடு போட்டிபோடும் பூமாலையின் மணம் கமழ்கின்ற உன் மார்பானது
மகளிரைத் தவிர வேறு யாருக்கும் திறந்து காட்டுவதனை அறியாது;

மேல்


மலர்ப்போர்

(பெ) நிமிர்த்துவோர், one who turns the face or mouth upward, as of a pot

ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்து என
ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை
மலர்ப்போர் யார் என வினவலின் – புறம் 179/1-3

உலகத்தின் மேல் வண்மையுள்ளோர் இறந்தாராக
பிறர்பால் ஏலாது கவிழ்ந்த என் இரத்தலையுடைய மண்டையை
நிமிர்த்தி வாய்திறக்க வைப்போர் யார் என்று கேட்டலின்

மேல்


மலர்பு

(பெ) விரிதல், wide open as the palms

இரப்போர்க்கு கவிதல் அல்லதை இரைஇய
மலர்பு அறியா என கேட்டிகும் இனியே – பதி 52/11,12

வேண்டிக் கைநீட்டுவோருக்காகக் கவிகிறதேயன்றி, பிறரிடம் வேண்டி
உன் கைகள் விரிந்திருப்பதை அறியமாட்டா என்பதைக் கேள்விட்டிருக்கிறோம்;

மேல்


மலி

1. வி) 1. மிகுந்திரு, அதிக அளவில் காணப்படு, be plentiful, abound
2. நிறைந்திரு, be full
3. பெருக்கமடை, swell
– 2. (பெ) மிகுதி, plenty

1.1

மாடம் மலி மறுகின் கூடல் குட வயின் – திரு 71

மாடங்கள் மிகுந்திருக்கும் (ஏனைத்)தெருக்களையும் உடைய மதுரையின் மேற்றிசையில்

1.2

நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதி பெயர – பதி 31/10

நெஞ்சில் நிறைந்த உவகையினராய், தாம் வாழும் ஊர்களுக்குத் திரும்பிச் செல்வர்;

1.3

அன்னிமிஞிலி போல மெய்ம் மலிந்து
ஆனா உவகையேம் ஆயினெம் – அகம் 262/12,13

அன்னி மிஞிலி என்பாளைப் போல உடல் பூரிக்கப்பெற்று
அமையாத மகிழ்ச்சி உடையேம் ஆயினம்

2

வீயா யாணர் நின்_வயினானே
தாவாது ஆகும் மலி பெறு வயவே – பதி 36/1,2

குன்றாத புதுச்செல்வங்கள் வந்தடையும் உன்னிடத்தில்
குறைபடாததாகும், மிகுதியாகப் பெற்ற வலிமை;

மேல்


மலிதரு(தல்)

(வி) நிறைவாக இரு(த்தல்), be full, plenty

கடும் பகட்டு யானை நெடும் தேர் செழியன்
மலை புரை நெடு நகர் கூடல் ஆடிய
மலிதரு கம்பலை போல – அகம் 296/11-13

கடிய பெரிய யானையினையும் நெடிய தேரினையும் உடைய பாண்டியன் நெடுஞ்செழியன்
மலையைஒத்த நீண்ட கோயிலையுடைய மதுரைக்கண் வெற்றிக்களிப்பால் ஆடும்போது
நிறைவாக எழுந்த ஆரவாரம் போல

பூத்த புகையும் அவியும் புலராமை
மறாஅற்க வானம் மலிதந்து நீத்தம்
வறாஅற்க வைகை நினக்கு – பரி 16/53-55

பொலிவுற்ற அகிற்புகையும், பலியுணவும், குறையாமலிருக்கும்பொருட்டு
மறவாதிருக்கட்டும் வானம், மிகுந்த பெருக்கினைத் தந்து வெள்ளம்
வற்றாது இருக்கட்டும் வையையே உனக்கு.

மேல்


மலிர்

(வி) 1. வழிந்தோடும்படி நிரம்பு, பெருக்கெடு, flood
2. நீர் முதலியன ஒழுகு, கசி, flow, leak, drop
3. பயின்று வா, come frequently

1

வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்து
கிளி போல் காய கிளை துணர் வடித்து
புளி_பதன் அமைத்த புது குட மலிர் நிறை – அகம் 37/7-9

காற்றால் கிளைத்த கொழுவிய தளிர்களையுடைய மாமரத்தில்
கிளி(மூக்கு) போன்ற காய்களைக் கொண்ட கிளை(யில் தொங்கும்) கொத்துக்களைச் சாறெடுத்து,
புளிப்புச் சுவை சேர்த்துப் புதுக்குடங்களில் விளிம்புதட்ட நிறைத்ததை,

நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை – குறு 99/4

உயர்ந்த மரத்தின் உச்சிக் கிளைகளைத் தொட்டுக்கொள்ளப் பெருக்கெடுத்த வெள்ளம்

2

அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த
ஈர் மணல் மலிர் நெறி சிதைய இழுமென
உரும் இசை புணரி உடைதரும் துறைவற்கு – குறு 351/2-4

வளையில் வாழும் நண்டு தன் கூர்மையான நகத்தால் கீறிய
ஈரமான மணலையுடைய நீரொழுகும் வழி சிதைந்துபோகும்படி, இழும் என்று
இடியோசை போன்ற முழக்கத்தையுடைய அலைகள் உடைக்கும் கடல்துறைத் தலைவனுக்கு

வையை உடைந்த மடை அடைத்த_கண்ணும்
பின்னும் மலிரும் பிசிர் போல இன்னும்
அனற்றினை – பரி 6/82-84

வையையில் உடைந்த மடையை அடைத்தபோதும்,
மீண்டும் ஒழுகும் கசிவுநீர் போல, இங்கு வந்த பின்னும்
அவரை வெம்மையுறச் செய்தாய்!

3

துனியல் மலர் உண்கண் சொல் வேறு நாற்றம்
கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது – பரி 8/53,54

பெரிதும் வருந்தாதே! மலர் போன்ற மையுண்ட கண்களையுடையவளே! நீ சொல்வது உண்மை அன்று; இந்த மணம்
பழங்களிலும், மலர்களிலும், பயின்றுவந்த காற்றினால் அடித்துக்கொண்டுவந்ததாலும் உண்டானது,

மேல்


மலிவனம்

(த.ப.வி.மு) மிக்க அவா கொண்டிருந்தோம், we were filled with great desire

மா இரும் குருந்தும் வேங்கையும் பிறவும்
அரக்கு விரித்து அன்ன பரேர் அம் புழகுடன்
மால் அங்கு உடையம் மலிவனம் மறுகி – குறி 95-97

கரிய பெரிய குருத்தம்பூ, வேங்கைப்பூ (ஆகிய பூக்களுடன்), பிறபூக்களையும்,
சாதிலிங்கத்தைப் பரப்பினாற் போன்ற பருத்த அழகினையுடைய மலையெருக்கம்பூவுடன்,
(எதைப்பறிப்பது என்று)குழப்பம் உள்ளவராயும், அவா மிகுந்தவராயும் (பலகாலும்)திரிந்து

மேல்


மலிவு

(பெ) உவகை, உற்சாகம், happiness, cheerfulness

மலிவு உடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள் – பரி 19/88

மகிழ்வுடைய நெஞ்சத்தால் அன்பர்கள் வந்து செய்கின்ற பூசையில்,

மேல்


மலை

1. (வி) 1. சூடு, அணி, wear, put on
2. மாறுபடு, முரண்படு, be in conflict with, be in dispute with
3. போரிடு, சண்டையிடு, fight, war
4. மாறுபடு, be opposed, unfriendly
5. எதிர்கொள், encounter
6. மேற்கொள், undertake, take upon oneself
7. தலையில் தூக்கிவை, (போற்று), raise one to head – idiom – praise, fete
– 2. (பெ) பர்வதம், mountain, hill

1.1

தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை
மலை-மார் இடூஉம் ஏம பூசல் – மலை 305,306

முதல்நாளில்(=முதன்முதலில்) பூத்த பொன் போன்ற கொத்தினையுடைய வேங்கை மலர்களைச்
சூடுவதற்குப் (பெண்கள்)போடும் (தீங்கற்ற)மகிழ்ச்சி ஆரவாரமும்;

1.2

சிலை தார் அகலம் மலைக்குநர் உளர் எனின் – புறம் 61/14

இந்திர வில் போலும் மாலையையுடைய மார்போடும் மாறுபடுவோர் உளர் எனின்

1.3

கடல் கண்டு அன்ன ஒண் படை தானையொடு
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ – புறம் 197/3,4

கடலைக் கண்டாற்போலும் ஒள்ளிய படைக்கலத்தையுடைய சேனையுடனே
மலையோடு மாறுபட்டுப் பொரும் களிற்றினையுடையர் எனவும்

1.4

மலைத்த தெவ்வர் மறம் தப கடந்த
காஞ்சி சான்ற வயவர் பெரும – பதி 65/3,4

எதிர்த்துப் போரிட்ட பகைவரின் வீரம் அழியும்படி வென்ற,
காஞ்சித்திணைக்கு அமைந்த வீரர்களுக்குத் தலைவனே!

1.5

மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்
மலைத்தல் போகிய சிலை தார் மார்ப – புறம் 10/9,10

பெண்களை எதிர்கொள்ளுதல் அன்றி, பகைவரை
எதிர்கொள்ளல் என்பது இல்லாமல் போன இந்திர வில் போலும் மாலையையுடைய மார்பினனே

1.6

பொழுதும் எல்லின்று பெயலும் ஓவாது
கழுது கண் பனிப்ப வீசும் அதன்_தலை
புலி பல் தாலி புதல்வன் புல்லி
அன்னா என்னும் அன்னையும் அன்னோ
என் மலைந்தனன்-கொல் தானே தன் மலை
ஆரம் நாறும் மார்பினன்
மாரி யானையின் வந்து நின்றனனே – குறு 161

பொழுதோ இருண்டுவிட்டது; மழையும் ஓயாமல்
பேய்களும் கண்களை மூடிக்கொள்ள ஓங்கியடிக்கின்றது. அதற்குமேலும்
புலிப்பல் தாலியுடைய மகனைத் தழுவிக்கொண்டு
‘அடி பெண்ணே’ என்று கூப்பிடுகிறாள் அன்னையும்;
அவன் எதனைச் செய்ய மேற்கொண்டானோ? தனது மலையின்
சந்தனம் மணக்கும் மார்பினன்
மழையில் நனைந்துநிற்கும் யானையைப் போல வந்து நின்றுகொண்டிருந்தான்

அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா
மெல்லியான் பருவம் போல் மயங்கு இருள் தலை வர – கலி 129/5,6

நல்லன அல்லாதவற்றை மேற்கொண்டு அற நெறிகளை நிலைநிறுத்தாத
ஆற்றல் குறைந்த மன்னனின் அரசாட்சியைப் போல மயக்கும் இருள் கவிய,

1.7

பொன் மலை சுடர் சேர புலம்பிய இடன் நோக்கி
தன் மலைந்து உலகு ஏத்த தகை மதி ஏர்தர – கலி 126/1,2

பொன் வளம் மிக்க மேற்கு மலையில் ஞாயிறு மறைய, அதற்காக வருந்திய உலகை நோக்கி,
தன்னைத் தலையில் தூக்கிவைத்து உலகம் கொண்டாடும்படியாக, அதற்கேற்ற தகுதியையுடைய திங்கள் எழ

2

மணி மலை பணை தோள் மா நில_மடந்தை – சிறு 1

மணிகளையுடைய மலையே மூங்கில்(போன்ற) தோள்களாகவுள்ள பெரிய நிலமகளின்

மேல்


மலைப்பு

(பெ) போரிடல், warring

மதர் கயல் மலைப்பின் அன்ன கண் – அகம் 140/10

மதர்த்த கயல் இரண்டு எதிர்த்துப் பொருவது போன்ற அவள் கண்கள்

மேல்


மலைமகள்

(பெ) மலையரசனின் மகளான உமை, uma, the daughter of the king of hills

மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே – திரு 257

மலைமகளின் மகனே, பகைவருக்குக் கூற்றுவனே,

மேல்


மலையன்

(பெ) மலையமான் திருமுடிக் காரி, a chieftain during sangam period, a great philanthropist
மலையமான் சேர நாட்டு குறுநில மன்னர்கள் வம்சத்துள் ஒன்றாகும்.
அதில் மலையமான் திருமுடிக்காரி என்பவன் சங்க காலத்தில் வாழ்ந்த மன்னர்களில் ஒருவன்.
இவன் சிறந்த வீரன்; பெரிய வள்ளல்; புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்டவன்.
இவர்கள் திருக்கோயிலூர் என்று இப்போது அழைக்கப்படும் திருக்கோவலூர் என்ற ஊரைத் தலைமையிடமாகக்
கொண்டு ஆட்சி செய்துள்ளார்கள். மலையமான் கடையெழு வள்ளல்களில் ஒருவன்.

தொலையா நல் இசை விளங்கு மலையன்
மகிழாது ஈத்த இழை அணி நெடும் தேர் – புறம் 123/3,4

கெடாத நல்ல புகழ் விளங்கும் மலையன்
மது நுகர்ந்து மகிழாது வழங்கிய பொற்படைகளால் அணியப்பட்ட உயர்ந்த தேர்

மாரி ஈகை மற போர் மலையனும் – புறம் 158/7,8

மாரி போலும் வண்மையையும், மிக்க போரினையுடைய மலையனும்

மேல்


மலைவு

(பெ) தடை, இடையூறு, obstruction, hindrance, hurdle

மா கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு
கோள் புலி வழங்கும் சோலை
எனைத்து என்று எண்ணுகோ முயக்கு இடை மலைவே – குறு 237/5-7

பெரிய கடல் அலையைப் போன்று முழங்கி, வலப்பக்கமாய் எழுந்து,
கொலைசெய்யும் புலி திரியும் சோலை
எத்தனை என்று எண்ணுவேன், தலைவியை முயங்குவதற்கு இடையிலே உள்ள அந்தத் தடைகள்-

மேல்


மழ

(பெ) 1. இளமை, youth
2. குழந்தைப்பருவம், tender age, infancy

1

குருதி வேட்கை உரு கெழு வய_மான்
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும் – நற் 192/1,2

இரத்த வெறிகொண்ட அச்சம் பொருந்திய வலிய புலியானது
வலிமை மிகுந்த ஆற்றலுடைய இளமையான களிற்றினை எதிர்பார்த்திருக்கும்

மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர் – பரி 11/88,89

மையோலையைக் கையில் பிடித்து சுவடி தூக்கி ஆடும் இளம் சிறுவரின் ஆட்டத்திற்கு மாறாக எழுந்து,
பொய்யாக ஆட்டத்தை ஆடுகின்ற தோழியரைக் கொண்ட அந்தக் கன்னி மகளிர்,

கிழவர் கிழவியர் என்னாது ஏழ்_காறும்
மழ ஈன்று மல்லல் கேள் மன்னுக என்மாரும் – பரி 11/120,121

கிழவர், கிழவியர் என்று சொல்லப்படாமல், எமது ஏழாம் பருவத்தினை யாம் அடையும்வரைக்கும்
இளமையைத் தந்து யாம் செல்வத்தோடும் சுற்றத்தோடும் நிலைபெறவேண்டும் என்போரும்

2

மண்டாத கூறி மழ குழக்கு ஆகின்றே – கலி 108/21

பொருந்தாத சொற்களைச் சொல்லிக் குழந்தைப் பருவத்து அறியாமையைக் காட்டுகிறது உன் செயல்

மேல்


மழபுலம்

(பெ) மழவர்கள் நிலம், the land of the mazahavas
திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவேரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி
Region north of the Cauvery on the western side of Thiruchirapally;
(using https://thanithamizhakarathikalanjiyam.github.io)

மழபுலம் வணக்கிய மா வண் புல்லி – அகம் 61/12

மழவரது நிலத்தை வணங்கச் செய்த மிக்க வண்மையையுடைய புல்லி என்பானது

மேல்


மழவர்

(பெ) மழநாட்டைச் சேர்ந்தவர், those belonging to mazha naadu.
திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவிரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி முதல்
பண்டைய எருமைநாடு வரை (தற்போதய மைசூர்) தற்கால நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர்,
அரியலூர், திருவண்ணாமலை மாவட்டத்தின் மேற்கு பகுதி, திருச்சி மாவட்டத்தின் சில பகுதிகள் மற்றும்
கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது மழநாடு.

1.

இவர்கள் மணிகட்டிய வேலை ஏந்திப் போர் புரியும் பாங்கினர்.

தனி மணி இரட்டும் தாள் உடை கடிகை
நுழை நுதி நெடு வேல் குறும் படை மழவர் – அகம் 35/3,4

2.

வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சியும், வள்ளல் ஓரியும் மழவர் பெருமகன் எனக் குறிப்பிடப்படுகின்றனர்

ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன் – புறம் 88/3
மழவர் பெருமகன் மா வள் ஓரி – நற் 52/9

3.

பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தின் தலைவனான பல்யானைச் செல்கெழு குட்டுவன், மழவர்களைக் காக்கும்
கவசமாக விளங்கினான்.

குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை – பதி 21/24

4.

பதிற்றுப்பத்தில் ஆறாம்பத்துத் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மழவர்களைக் காக்கும்
கவசமாக விளங்கினான்.

வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை – பதி 55/8

5.

மழவர் வில்லும் அம்பும் ஏந்தியவராய் வீளை (வாய் ஊதல்) அடித்துக்கொண்டு நாள்தோறும் ஆனிரைகள்
மேய்த்து வருவர்

வீளை அம்பின் விழு தொடை மழவர்
நாள் ஆ உய்த்த நாம வெம் சுரத்து – அகம் 131/6,7

6.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் விடியும் பொழுதில் தன்னைத் தாக்கிய
மழவர்களை விரட்டினான்

இரவு தலைப்பெயரும் ஏம வைகறை
மை படு பெரும் தோள் மழவர் ஓட்டி – மது 686,687

7.

பொதினி எனப்பட்ட பழனிமலை அரசன் தன்னைத் தாக்கிய இந்த மழவர்களை விரட்டினான்

வண்டு பட ததைந்த கண்ணி ஒண் கழல்
உருவ குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நல் போர் நெடுவேள் ஆவி
அறு கோட்டு யானை பொதினி ஆங்கண் – அகம் 1/1-4

8.

சிற்றூரைச் சேர்ந்த ஆயர்கள் கையைத் தலை மீது வைத்து வருந்தும்படி கொழுத்த ஆவினைக் கவர்ந்து
அதன் இறைச்சியைப் பாலைத்திணை மழவர் உண்டனர். கன்றினையுடைய பசுவினைக் கொன்று உண்டனர்.
கடவுளுக்கும் காணிக்கையாகப் பலியிட்டனர்.

வய வாள் எறிந்து வில்லின் நீக்கி
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்
அம்பு சேண் படுத்து வன்_புலத்து உய்த்து என
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய்
புலவு புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை – அகம் 309/1-6

9.

வேங்கட நாட்டை ஆண்ட தமிழ்மன்னன் புல்லி, மழவர்களை வணங்கச் செய்து அவர்களது நாட்டைத் தன்
ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான்.

மழபுலம் வணக்கிய மா வண் புல்லி – அகம் 61/12

10.

இவர்கள், இன்றைய ஜிலேபி போன்ற, இனிய குழல்போன்ற தின்பண்டங்களை உணவாகக்கொண்ட
கழலணிந்த காலினையுடையவர்கள்.

தீம் புழல் வல்சி கழல் கால் மழவர் – மது 395

11.

பாலைத்திணை மழவர்கள் கொடியவர்கள். அவர்கள் களவினையே வாழ்க்கையாகக் கொண்டிருந்தனர்.

கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த – அகம் 91/11

மேல்


மழி

(வி) முடியை வழி, சிரை, shave

கொய் மழி தலையொடு கைம்மை உற கலங்கிய
கழி கல மகடூஉ போல – புறம் 261/17,18

கொய்யப்பட்ட மொட்டையாகிய தலையுடனே கைம்மை நோன்பு மிகக் கலக்கமுற்ற
ஒழிக்கப்பட்ட அணிகலத்தையுடைய அவன் மனைவியை ஒப்ப

மேல்


மழு

(பெ) 1. சிறிய கைப்பிடி கொண்ட கோடலி போன்ற ஆயுதம், axe-like weapon
2. போர்க்கோடரி, battle-axe

1

விழு தண்டு ஊன்றிய மழு தின் வன் கை – பெரும் 170

விழுமிய தடியை ஊன்றின கோடரித் தழும்பிருந்த வலிய கையினையும்,

2

மழு வாள் நெடியோன் தலைவன் ஆக – மது 455

மழுவாகிய வாளையுடைய பெரியோனாகிய சிவபெருமான் தலைவனாய் இருக்க,

மேல்


மழுகு

(வி) 1. கூர் மழுங்கு, become blunt
2. ஒளி மங்கு, be dim, obscure

1

வை நுதி மழுகிய தடம் கோட்டு யானை – ஐங் 444/3

கூர்மையான நுனியும் மழுங்கிவிட்ட பெரிய கொம்பினைக் கொண்ட யானைப்படையையுடைய

2

விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்று
பசும் கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி – புறம் 376/1,2

விசும்பின்கண்ணதாகிய நீத்தத்தைக் கடந்து சென்ற ஞாயிற்றினுடைய
பரிய கதிர் ஒளி குறைந்த செந்நிறங்கொண்டு மேற்றிசையில் வளைந்து தோன்றும் அந்திமாலைப்போதின்

மேல்


மழுங்கல்

(பெ) மொன்னை, ஒளி குன்றல், bluntness, dullness

உர உரும் உரறும் நீரின் பரந்த
பாம்பு பை மழுங்கல் அன்றியும் – நற் 238/8,9

வலிய இடி முழங்கும் இயல்பினால், பரந்த
பாம்புகளின் படங்கள் அடங்கிப்போகின்றன, அதற்குமேலும்

மேல்


மழுங்கு

(வி) 1. கத்தி முதலியன கூர்மை கெடு, become blunt as edge or point of a weapon
2. ஒளி குறை, become dim, obscure
3. தேய்வுறு, become worn out
4. அறிவின் கூர்மை, உணர்வாற்றல், உள்ள உறுதிப்பாடு முதலியன குறைவாகு,
lose keenness of intellect or determination

1

வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம் – பெரும் 119

கூரிய முனை மழுங்கின புலால் நாறும் வாயையுடைய வேல்களை

2

ஒண் சுடர் உருப்பு ஒளி மழுங்க சினம் தணிந்து
சென்ற ஞாயிறு நன் பகல் கொண்டு
குட முதல் குன்றம் சேர – மது 545-547

ஒள்ளிய கதிர்களின் வெப்பமும் ஒளியும் குன்ற, சினம் குறைந்து,
(மேற்றிசையில்)சென்ற ஞாயிறு நல்ல பகற்பொழுதைச் சேரக்கொண்டு,
மேற்கு அடிவானத்தில் மலையினைச் சேர,

3

கொல்லை உழு கொழு ஏய்ப்ப பல்லே
எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி
உயிர்ப்பிடம் பெறாஅது ஊண் முனிந்து – பொரு 117-119

கொல்லை நிலத்தில் உழுத கொழுப் போன்று, (எம்)பற்கள்
பகலும் இரவும் இறைச்சியைத் தின்று தேய்வுற்று,
மூச்சு விடுவதற்கும் இடம்பெறாமையால், அவ்வுணவுகளை வெறுத்து,

4

உரவு தகை மழுங்கி தன் இடும்பையால் ஒருவனை
இரப்பவன் நெஞ்சம் போல் புல்லென்று புறம்மாறி
கரப்பவன் நெஞ்சம் போல் மரம் எல்லாம் இலை கூம்ப – கலி 120/4-6

தன் உள்ள உறுதியின் மேன்மை தேயும்படியாக, தனக்கு வந்த வறுமையினால் ஒருவனை
இரந்துகேட்பவனின் நெஞ்சம் போல பொலிவிழந்து தோற்றத்தில் தொய்வுபட்டு,
இரப்பவனைக் கண்டு மறைந்துகொள்பவன் நெஞ்சம் போல மரம் எல்லாம் இலைகள் எல்லாம் குவிந்துபோக,

மேல்


மழுபு

(பெ) சேறு, mud

மழுபொடு நின்ற மலி புனல் வையை – பரி 24/80

சேற்றோடு கலங்கிய மிக்க வெள்ளத்தையுடைய வையை ஆற்றில்

மேல்


மழை

(பெ) 1. கருத்த மேகங்களினின்றும் இறங்கும் நீர், rain
2. நீருண்ட மேகங்கள், clouds charged with rain
3. குளிர்ச்சி, coolness

1

கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து – அகம் 13/13

மிகுந்த மழையைப் பொழிந்த ஞாயிறு கொண்ட அதிகாலைநேரத்தில்

2

கண மழை பொழிந்த கான் மடி இரவில் – அகம் 392/12

கூட்டமான மேகங்கள் மழையைச் சொரிந்த கானமெல்லாம் அடங்கிய இரவில்

3

ஈரிய கலுழும் இவள் பெரு மதர் மழை கண் – குறி 248

ஈரமுள்ளனவாய் கலங்கிநின்றன – இவளின் பெரிய செழிப்பான குளிர்ந்த கண்கள்

மேல்


மள்ளர்

(பெ) 1. படைவீரர், soldiers
2. திண்ணியர், strong powerful persons
3. குறவர், குறிஞ்சிநில மக்கள், the inhabitants of mountainous tract

1

உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை
வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை – புறம் 77/9,10

வெகுண்டு மேல் வந்த புதிய வீரரை
மதித்தலும் அவமதித்தலும் இலன்

2

மள்ளர் குழீஇய விழவினானும்
மகளிர் தழீஇய துணங்கையானும்
யாண்டும் காணேன் மாண் தக்கோனை – குறு 31/1-3

உடல் வலிமையுடையவர்கள் கூடியுள்ள சேரி விழாக்களிலும்,
மகளிர் தழுவியாடும் துணங்கைக்கூத்திலும்,
எங்குமே கண்டேனில்லை மாண்புக்குரிய தலைவனை!

3

மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்
உயர் நெடும் குன்றம் படு மழை தலைஇ – ஐங் 371/1,2

குறவர்களின் கொட்டுமுழக்கத்தைக் கேட்டு மயில்கள் களித்து ஆடுகின்ற
உயர்ந்து நீண்ட குன்றுகளிலெல்லாம் தொங்கும் மேகங்கள் மழைபெய்து

மேல்


மள்ளன்

(பெ) பார்க்க: மள்ளர் – 1, 2

1

யார்கொல் அளியர் தாமே யார் நார்
செறிய தொடுத்த கண்ணி
கவி கை மள்ளன் கைப்பட்டோரே – புறம் 81/3-5

இரங்கத்தக்கவர் தாம் யார்கொல், நாரால்
பயிலத் தொடுக்கப்பட்ட ஆத்திக்கண்ணியையும்
இடக் கவிந்த கையினையுமுடைய வீரனது கையின்கண் பட்டோர்

2

கோள் சுரும்பு அரற்றும் நாள் சுரத்து அமன்ற
நெடும் கால் மராஅத்து குறும் சினை பற்றி
வலம் சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற
மள்ளன் உள்ளம் மகிழ் கூர்ந்தன்றே – ஐங் 383/1-4

தேனை உண்ணும் சுரும்பினங்கள் ஒலிக்கும் நாள் காலையில் பாலைவழியில் செறிவான
நெடிய அடிப்பகுதியைக் கொண்ட குட்டையான கிளையைப் பிடித்து
வலமாகச் சுழித்துப் பூக்கும் வெண்மையான பூங்கொத்துகளைத் தன் காதலி பறித்துக்கொள்வதற்கு நின்ற
இளைஞனின் உள்ளம் மகிழ்ச்சியடைந்தது,

மேல்


மற்று

1. (இ.சொ) 1. பிரிநிலை இடைச்சொல், disjunctive
2. வினைமாற்று, disjunctive
3. பிறிதுப்பொருள் குறிப்பு, A term meaning other, another
4. அசைநிலை, an expletive
2. (வி.அ) பின்னர், afterwards

1.1

எல்லை தருநன் பல் கதிர் பரப்பி
குல்லை கரியவும் கோடு எரி நைப்பவும்
அருவி மா மலை நிழத்தவும் மற்று
கருவி வானம் கடற்கோல் மறப்பவும் – பொரு 233-236

பகற்பொழுதைத் தருகின்ற ஞாயிறு பலவாகிய கதிர்களைப் பரப்புகையினாலே
கஞ்சங்குல்லை தீயவும், மரங்களினுடைய கொம்புகளை நெருப்புத் தின்னவும்
அருவி பாய்தலைப் பெரிய மலைகள் தவிர்ப்பவும், இவை ஒழிந்த
அந்தத் தொகுதியையுடைய முகில்கடலிடத்தே நீர் முகத்தலை மறந்தொழியவும்

1.2

தேம்படு சாரல் சிறுதினை பெரும் குரல்
செம் வாய் பைம் கிளி கவர நீ மற்று
எ வாய் சென்றனை அவண் என கூறி – நற் 147/2-4

தேன் பொருந்திய மலைச் சாரலிடத்தேயுள்ள புனத்தின்கண் விளைந்து நிற்கும் சிறுதினையின் பெரிய கதிர்களை
சிவந்த வாயும், பசிய நிறமுமுடைய கிளிகள் கவர்ந்துகொண்டு செல்ல, நீ
எங்கே சென்றிருந்தாய் அவ்விடத்தினின்றும் நீங்கி என்று சொல்லியழைத்து

1.3

நின்று
வரையக நாடன் வரூஉம் என்பது
உண்டு-கொல் அன்று-கொல் யாது-கொல் மற்று என – நற் 122/6-8

நின்று
மலை சூழ்ந்த நாட்டையுடைய தலைவன் வருவான் என்பது
உண்மையோ, இல்லையோ, வேறு யாதோ என

1.4

ஒரு மகள் உடையேன்-மன்னே அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு
பெரு மலை அரும் சுரம் நெருநல் சென்றனள்
இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே – நற் 184/1-5

ஒரே ஒரு மகளை உடையவள் நான்; அவளும்
போர்க்களத்தில் மிக்குச் செல்லும் வலிமையையுடைய கூரிய வேலையுடைய காளையோடு
பெரிய மலைகளினூடே செல்லும் அரிய வழியில் நேற்றுச் சென்றுவிட்டாள்;
இப்பொழுது தாங்கிக்கொள் உன் வருத்தத்தை என்று சொல்கிறீர்! அது
எப்படிச் சாத்தியமாகும்? அறிவுள்ள மக்களே!

2

செருக்கொடு நின்ற காலை மற்று அவன்
திரு கிளர் கோயில் ஒரு சிறை தங்கி – பொரு 89,90

மகிழ்ச்சியுடனே யான் நின்ற அந்தப் பொழுதிலே, பின்னர் அம் மன்னனுடைய
செல்வம் விளங்குகின்ற அரண்மனையின் அகத்தே ஒரு பக்கத்தே கிடந்து

மேல்


மற்றும்

(வி.அ) மீண்டும், again

மற்றும் கூடும் மனை மடி துயிலே – நற் 360/11

மீண்டும் (பிறிதொரு காலத்தினும்) கூடும், நீ மனையின்கண் வந்து துயிலுகின்ற துயில்

மேல்


மற்றை

(பெ.அ) மற்ற, பிற, ஏனைய, other

கடவுள் வழங்கும் கையறு கங்குலும்
அச்சம் அறியாது ஏமம் ஆகிய
மற்றை யாமம் பகல் உற கழிப்பி – மது 651-653

தெய்வங்கள் உலாவும் செயலற்ற இருளிடத்தும்,
அச்சத்தை அறியாமல் காவலையுடைய
மற்ற யாமத்தை (அடுத்துவந்த நடு யாமத்தினின்றும்)பகுத்தல் உண்டாகப் போக்கி,

மணி பீலி சூட்டிய நூலொடு மற்றை
அணி பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து – கலி 138/8,9

நீலமணி போன்ற பீலியைக் கட்டிய நூலில், ஏனைய
அழகிய பூளைப்பூ, ஆவிரம்பூ, எருக்கம்பூ ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டி,

மேல்


மறப்பு

(பெ) 1. மறத்தல், failing to remember
2. கவனக்குறைவு, carelessness, absent-mindedness
3. அசட்டை செய்தல், புறக்கணித்தல், நீங்குதல், overlooking, disregarding, getting rid of

1

மறப்பு அரும் காதலி ஒழிய
இறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவே – குறு 151/4,5

மறத்தல் என்பது அரியதான காதலியை விட்டுப்பிரிந்து
செல்வேன் என்று சொல்வது இங்கு நம் இளமைக்கு இறுதியாகும்.

2

யாய் மறப்பு அறியா மடந்தை – நற் 301/8

எமது தாயின் கவனத்தைவிட்டுச் சிறிதும் அகலாத மடந்தை,

3

தேம் மறப்பு அறியா கமழ் கூந்தலளே – நற் 301/9

அகிலின் நெய்ப்பூச்சு நீங்குதல் இல்லாத மணங்கமழ்கின்ற கூந்தலையுடையவள்.

மேல்


மறம்

(பெ) 1. வீரம், bravery, valour
2. கொலைத்தொழில், murder, killing
3. வலிமை, strength, power

1

யானை தாக்கினும் அரவு மேல் செலினும்
நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும்
சூல்_மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை – பெரும் 134-136

யானை (தன்னைத்)தாக்க வந்தாலும், பாம்பு (தன்)மேல் (ஊர்ந்து)சென்றாலும்,
நீல நிற மேகத்தில் வலிய உருமேறு இடித்தாலும்,
சூல்கொண்ட மகளும் (அவற்றிற்கு அஞ்சிப்)பின்வாங்காத வீரத்தைப் பூண்ட வாழ்க்கை

2

மறம் திருந்தார் என்னாய் நீ மலை இடை வந்த_கால்
அறம் சாரான் மூப்பே போல் அழி_தக்காள் வைகறை
திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திரு தகும் – கலி 38/18-20

வழியில் கொள்ளையர்கள் கொலைச்செயலினின்றும் மாறவில்லை என்று கருதாமல், நீ மலைவெளியில்
வந்தபோது
அறநெறியைக் கைவிட்டவன் முதுமையில் சீரழிவது போல், மனம் அழிந்துபோய்க் கிடந்தவள், விடியற்காலையில்
நல்லொழுக்கமுடையவனின் செல்வம் போல் நாளும் சீர்பெற்றுச் சிறப்புறுவாள்,

3

நீயே பிறர் ஓம்பு_உறு மற மன் எயில்
ஓம்பாது கடந்து அட்டு – புறம் 40/1,2

நீ, பகைவரது பாதுகாத்த வலிமை நிலைபெற்ற அரண்களைப்
பாதுகாவாது எதிர் நின்று அழித்து

மேல்


மறலி

(பெ) கூற்றுவன், Yama, the god of death

மறலி அன்ன களிற்று மிசையோனே – புறம் 13/4

கூற்றம் போன்ற களிற்றின்மேலோன்

மேல்


மறலு

(வி) 1. போர்வெறிகொள், எதிர், மாறுபடு, oppose, differ
2. எதிரிட்டுத் தாக்கு, oppose and attack

1

மறவர் மறல மா படை உறுப்ப – பதி 82/7

வீரர்கள் போர்வெறிகொண்டு திரிய, குதிரைகள் போர்க் கவசங்கள் பூண்டு இருக்க,

வாளி வாளிகள் நிலைபெற மறலுவார் – பரி 9/54

ஒருவரின் கண்களாகிய அம்புகள் மற்றவரின் கண்களாகிய அம்புகள் மேல் நிலைத்து நிற்குமாறு எதிர்த்து
நோக்குவார்,

2

காண்-தொறும் பொலியும் கதழ் வாய் வேழம்
இரும் கேழ் வய புலி வெரீஇ அயலது
கரும் கால் வேங்கை ஊறுபட மறலி
பெரும் சினம் தணியும் குன்ற நாடன் – நற் 217/2-5

காணுந்தோறும் பொலிவுற்று விளங்கும், விரைவான செயற்பாடு வாய்க்கப்பெற்ற யானை
கரிய நிறமுள்ள வலிமையான புலியை வெருட்டி ஓடச் செய்து, அருகிலிருக்கும்
கரிய அடிமரத்தைக் கொண்ட வேங்கை மரம் சிதையுமாறு மோதித்தாக்கி
தன்னுடைய பெரும் கோபத்தைத் தணித்துக்கொள்ளும் குன்றுகளையுடைய நாட்டினன்,

மேல்


மறவர்

(பெ) 1. வீரர், brave men, warriors
2. பாலை நில மக்கள், inhabitants of the desert tract
3. கொடியோர், cruel, wiked persons
4. வேடுவர், persons of hunters tribe

1

சுரும்பு ஆர் கண்ணி பெரும் புகல் மறவர்
கடும் களிறு ஓட்டலின் – மது 596,597

வண்டுகள் நிறைந்த போர்ப்பூவினையும், பெரிய விருப்பத்தையுமுடைய வீரர்கள்
கடிய களிறுகளை (ஒன்றோடொன்று பொருமாறு)செலுத்துதலால்,

2

புறவு அணி கொண்ட பூ நாறு கடத்து இடை
கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர் – நற் 48/5,6

காட்டினை அழகுசெய்த பூவின் மணம் கமழும் கற்கள் பரந்த வழியில்
‘கிடின்’ என்று ஒலிக்கும்படி மோதிக்கொள்ளும் திரண்ட தோள்வளை அணிந்த பாலைமக்கள்

3

விழு தொடை மறவர் வில் இட தொலைந்தோர்
எழுத்து உடை நடுகல் அன்ன – ஐங் 352/1,2

சிறப்பாக அம்பினைத் தொடுப்பதில் வல்ல கொடிய மறவர்கள் வில்லால் எய்ய, இறந்துபட்டோரின்
பெயர் பொறித்த எழுத்துகளைக் கொண்ட நடுகல்லைப் போன்று

4

தினை கள் உண்ட தெறி கோல் மறவர்
விசைத்த வில்லர் வேட்டம் போகி
முல்லை படப்பை புல்வாய் கெண்டும்
காமர் புறவினதுவே – அகம் 284/8-11

தினையினால் ஆக்கிய கள்ளினை உண்ட நாணினைத் தெறித்து விடுக்கும் அம்பினையுடைய மறவர்கள்
வேகமாக இழுத்து நாண் புட்டிய வில்லினராய் வேட்டையாடி
முல்லைநிலத் தோட்டத்தே மானை அறுத்து உண்ணும்
அழகிய காட்டின்கண்ணது

மேல்


மறவல்

(பெ) மறத்தல், forgetting

மறவல் ஓம்பு-மதி எம்மே – அகம் 19/9

எம்மை மறத்தலை நீக்குவாயாக

மேல்


மறவலேன்

(வி.மு) மறவேனாயினேன், I had not forgotten him

அவன் மறவலேனே பிறர் உள்ளலேனே – புறம் 395/32

அவனை மறவேனாயினேன், பிறரை நினைப்பது இல்லேன் ஆயினேன்

மேல்


மறவன்

(பெ) 1. வீரன், brave man, warrior
2. படைத்தலைவன், head of an army

1

பீலி கண்ணி பெருந்தகை மறவன்
மேல்வரும் களிற்றொடு வேல் துரந்து – புறம் 274/2,3

பீலியால் தொடுக்கப்பட்ட கண்ணியினையுடைய பெருந்தகையாகிய வீரன்
தன் மேல் கொலைகுறித்து வந்த களிற்றின் நெற்றியிலே வேலைச் செலுத்தி

2

திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன் – அகம் 13/6

செல்வம் விரும்புகின்ற மார்பின் பாண்டியனின் படைத்தலைவனான

இழை அணி யானை சோழர் மறவன் – அகம் 326/9

அணிகலன் அணிந்த யானையையுடைய சோழனின் படைத்தலைவன்

வசை இல் வெம் போர் வானவன் மறவன் – அகம் 143/10

பழியில்லாத கொடிய போர் வல்ல சேரனின் படைத்தலைவன்

மேல்


மறவி

(பெ) 1. மறதி, Forgetfulness

சிறு வெள்ளாங்குருகே சிறு வெள்ளாங்குருகே
————– ——————- —————-
எம் ஊர் வந்து எம் உண்துறை துழைஇ
சினை கெளிற்று ஆர்கையை அவர் ஊர் பெயர்தி
அனைய அன்பினையோ பெரு மறவியையோ – நற் 70/1-7

சிறிய வெள்ளைக் குருகே! சிறிய வெள்ளைக் குருகே!
——————- —————————— —————————
எமது ஊருக்கு வந்து எமது உண்துறையில் புகுந்து தேடி
சினைப்பட்ட கெளிற்றுமீனைத் தின்றுவிட்டு அவர் ஊருக்குச் செல்கின்றாய்!
அதற்கு நன்றியுள்ள அன்போடு இருப்பாயோ? இல்லை பெரிய மறதியைக் கொண்டிருப்பாயோ?

மேல்


மறவை

(பெ) 1. கொடுஞ்செயல், that which is cruel by nature
2. வீரம் மிக்க செயல்புரிவோன், a person possessing bravery

1

அறவை நெஞ்சத்து ஆயர் வளரும்
மறவை நெஞ்சத்து ஆய் இலாளர்
—————————— —————————-
விழவு அணி வியன் களம் அன்ன – புறம் 390/1-4

அறம் புரியும் நெஞ்சினையுடைய ஆயர்களும், பெருகுகின்ற
கொடுஞ்செயல் பொருந்திய நெஞ்சத்தினையுடைய சிறுகுடியில் வாழ்பவரும் கூடி எடுக்கும்
——————————– ————————-
விழாவால் பொலியும் அகன்ற மன்றத்தை ஒத்த

2

அறவை ஆயின் நினது என திறத்தல்
மறவை ஆயின் போரொடு திறத்தல்
அறவையும் மறவையும் அல்லை ஆக – புறம் 44/11-13

அறத்தை உடையையாயின் இது நினதன்றோ என்று சொல்லித் திறத்தல் செய்வாயாக
மறத்தை உடையை ஆயின் போரால் திறத்தல் செய்வாயாக
அவ்வாறன்றி, அறத்தையும், மறத்தையும் உடையை அல்லை ஆக

மேல்


மறன்

(பெ) பார்க்க : மறம்

1

மனை உறை கோழி மறன் உடை சேவல் – அகம் 277/15

மனையில் உறையும் கோழியின் தறுகண்மையை உடைய சேவலின்

2

நின்ற துப்பொடு நின் குறித்து எழுந்த
எண் இல் காட்சி இளையோர் தோற்பின்
நின் பெரும் செல்வம் யார்க்கு எஞ்சுவையே
அமர் வெம் செல்வ நீ அவர்க்கு உலையின்
இகழுநர் உவப்ப பழி எஞ்சுவையே
அதனால் ஒழிக தில் அத்தை நின் மறனே – புறம் 213/14-19

நிலைபெற்ற வலியோடு நின்னைக் கருதிப் போர்செய்தற்கு எழுந்திருந்த
சூழ்ச்சியில்லாத அறிவையுடைய நின் புதல்வர் தோற்றால்
நினது பெரிய செல்வத்தை யாவர்க்குக் கொடுப்பாய்,
போரை விரும்பிய செல்வனே! நீ அவர்க்குத் தோற்றால்
நின்னை இகழும் பகைவர் உவப்ப பழியை உலகத்தே விட்டுச்செல்வாய்
அதனால், ஒழிவதாக நின்னுடைய கொலைவெறி

3

திறன் இலோர் திருத்திய தீது தீர் கொள்கை
மறனும் மாற்றலர்க்கு அணங்கும் நீ – பரி 1/42,43

திறனில்லாதவர்களைத் திருத்திய தீமை பயக்காத கொள்கையையுடைய
மாற்றாரை எதிர்த்தழிக்கும் வலிமையும், உன்னை மறுதலிப்போருக்கு அச்சத்தை உண்டாக்கும் அணங்கும் நீ!

மேல்


மறா

(பெ.அ) மறவாத, not forgeting

மறாஅ அரைச நின் மாலையும் வந்தன்று – கலி 147/44

கடமை மறவாத அரசனாகிய ஞாயிறே! உன் மாலைக் காலமும் வந்துவிட்டது,

மேல்


மறாதீவாள்

(வி.மு) மறுக்கமாட்டாள், (she) wont deny

சொல்லின் மறாதீவாள்-மன்னோ இவள் – கலி 61/10

“சொன்னால் மறுக்கமாட்டாளோ இவள்?

மேல்


மறாமை

(பெ) மறவாதிருத்தல், not forgetingu

செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை – கலி 133/11

செறிவு எனப்படுவது கூறிய எதனையும் மறக்காதிருத்தல்,

மேல்


மறாற்க

(வி.மு) மறவாதிருக்கட்டும், let it not forget

மறாஅற்க வானம் மலிதந்து நீத்தம்
வறாஅற்க வைகை நினக்கு – பரி 16/54,55

மறவாதிருக்கட்டும் வானம், மிகுந்த பெருக்கினைத் தந்து வெள்ளம்
வற்றாது இருக்கட்டும் வையையே உனக்கு.

மேல்


மறி

1. (வி) 1. தலைகீழாகு, be turned upside down
2. மடங்கு, get folded
3. முறுக்கப்படு, be twisted
2. (பெ) ஆடு, மான் இவற்றின் இளமை, young of sheep, deer, etc.,

1.1

எரி மறிந்து அன்ன நாவின் இலங்கு எயிற்று
கருமறி காதின் கவை அடி பேய்மகள் – சிறு 196,197

தீச்சுவாலை தலைகீழானது போன்ற நாவினையும், ஒளிரும் பற்களையும்,
வெள்ளாட்டு(க் காதினைப்போன்ற) காதுகளையும், பிளந்த பாதங்களையும் உடைய பேய்மகள்

1.2

மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை – முல் 59

குதிரைச் சவுக்கு வளைந்துகிடக்கின்ற, மடங்கிப் புடைக்குமாறு நெருங்கக் கட்டின உடையையும்,

1.3

எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை
மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி – கலி 15/5,6

வலிமை மிகுந்த கழுத்தினையும், வன்மையான பார்வையினையும், கலைமானின்
கொம்பு போல திருக்குண்டும் முறுக்குண்டதுமாய் விழுகின்ற தாடியையும்,

2

இரும் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன் – பரி 5/62

கரிய கண்ணையுடைய வெள்ளாட்டின் அழகிய குட்டியாகக் கொடுத்தான்;

செ வரை சேக்கை வருடை மான் மறி
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி – குறு 187/1,2

செம்மையான மலையில் வாழும் வருடைமானின் குட்டி
தன் தாயின் மடியிலிருந்து பொழியும் இனிய பாலை வயிறாரக் குடித்து

மேல்


மறிதரு(தல்)

(வி) மாறி மாறித் திரி(தல்), roam or wander here and there repeatedly

வீ அகம் புலம்ப வேட்டம் போகிய
மாஅல் அம் சிறை மணி நிற தும்பி
வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு
ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின்
வேங்கை அம் சினை என விறல் புலி முற்றியும்
பூ பொறி யானை புகர் முகம் குறுகியும்
வலி மிகு வெகுளியான் வாள்_உற்ற மன்னரை
நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல் மறிதரும்
அயம் இழி அருவிய அணி மலை நன் நாட – கலி 46/1-9

தான் இருந்து தேனுண்ட மலர்களைத் தனியே விட்டுவிட்டு, வேறு பூக்களை நாடிச் சென்ற
பெரிய, அழகிய சிறகுகளைக் கொண்ட நீல மணி போன்ற நிறத்தையுடைய தும்பிகள்,
வாயிலிருந்து வடியும் மதத்தையும், வெண்மையான கொம்பையும் உடைய தலைமை யானையுடன்
அழகிய வரிகள் கொண்ட புலி தாக்கிய போது
வேங்கை மரத்தின் அழகிய கிளை என்று எண்ணி ஆற்றல் வாய்ந்த புலியைச் சூழ்ந்துகொண்டும்
நெற்றியில் புள்ளிகள் பொறித்த யானையின் புள்ளிபுள்ளியான முகத்தைச் சேர்ந்தும்,
வலி மிகும் சினத்தால் வாளை உருவிக்கொண்டு நின்ற மன்னர்களைச்
சமாதானம் செய்யும் வழியை நாடி அவர்களை நண்பர்களாக்க முயல்பவர்கள் போல மாறி மாறித் திரியும்,
சுனை மீது விழுகின்ற அருவியை உடைய, அழகிய மலையைச் சேர்ந்த நல்ல நாட்டினனே!

மேல்


மறு

1. (வி) 1. வேண்டாம்/இல்லை என்று கூறு, refuse, deny
2. இல்லாமல் போ, cease to exist
– 2. (பெ) 1. குற்றம், fault, blemish
2. மச்சம், mole
3. களங்கம், கறை, blot, stain
– 3. (பெ.அ) மீண்டும், மறுபடியும், further, once more

1.1

பிரசம் கலந்த வெண் சுவை தீம் பால்
விரி கதிர் பொன் கலத்து ஒரு கை ஏந்தி
புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல்
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்
முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்ப தத்து_உற்று
அரி நரை கூந்தல் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி – நற் 110/1-8

தேன் கலந்த நல்ல சுவையையுடைய இனிய பாலை,
விரிந்து ஒளிவிடும் பொன்னால் ஆன பாத்திரத்தில் இட்டு அதனை ஒரு கையில் ஏந்திக்கொண்டு
அடித்தால் சுருண்டுகொள்ளும் மெல்லிய நுனியையுடைய சிறிய கோலை,
‘குடி’ என்று உயர்த்திப்பிடிக்க, அதினின்றும் தப்பிப்பிழைக்க, தெளிவான தன்மையுள்ள
முத்துக்களைப் பரல்களாகக் கொண்ட பொற்சிலம்பு ஒலிக்கத் தத்தித்தத்தி ஓடி,
மென்மையான நரைக்கூந்தலையுடைய செவ்விய முதுமையையுடைய செவிலியர்
ஓடித் தளர்ந்து தம் முயற்சியைக் கைவிட, பந்தல்கால்களுக்கிடையே ஓடி
செவிலியரின் கெஞ்சலுக்கு வேண்டாம் என்று மறுக்கும் சிறிய விளையாட்டைச் செய்பவள்,

நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே
இல் என மறுக்கும் சிறுமையும் இலனே – புறம் 180/1,2

நாள்தோறும் தொடர்ந்து கொடுக்கும் செல்வமும் உடையானல்லன்
இரந்தோர்க்கு இல்லை எனச் சொல்லி மறுக்கும் புன்மையுமுடையன் அல்லன்

1.2

கோடு வார்ந்து அன்ன வெண் பூ தாழை
எறி திரை உதைத்தலின் பொங்கி தாது சோர்பு
சிறுகுடி பாக்கத்து மறுகு புலா மறுக்கும் – நற் 203/4-6

சங்கினை நீட்டிவைத்தது போன்ற, வெள்ளையான பூவைக்கொண்ட தாழையானது,
ஓங்கி வீசும் அலைகள் மோதுவதால் சிலிர்த்து வாய்திறக்கத் தாது உதிர்ந்து
சிறிதளவு மக்கள் உள்ள கடற்கரை ஊரின் தெருவில் எழும் புலவுநாற்றத்தைப் போக்கும்

தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து – பதி 13/17

சாணப்பூச்சு இல்லாமற்போன, ஆரவாரம் அழிந்துபோன ஊர்ப்பொதுவிடங்கள்,

2.1

மறு இல் கற்பின் வாள்_நுதல் கணவன் – திரு 6

குற்றமற்ற கற்பினையும், ஒளியுடைய நெற்றியினையும், உடையவளின் கொழுநன்

2.2

இரு நிலம் கடந்த திரு மறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை – பெரும் 29,30

பெரிய நிலத்தை அளந்துகொண்ட திருமகளாகிய மறுவை அணிந்த
கடல் (போலும்) நிறத்தையுடையவன் பின்னிடத்தோனாய்

2.3

நித்தில மதாணி அ தகு மதி மறு
செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம் – பரி 2/30,31

நித்தில மதாணி என்னும் அழகிய தகுதிபடைத்த மதியினோடு, அந்த மதியில் உள்ள களங்கம் போன்று
சிவந்த நிறத்தவளான திருமகள் வீற்றிருக்கும் உன் மாசற்ற மார்பு;

ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த
செம் மறு தலைய நெய்த்தோர் வாய
வல்லிய பெரும் தலை குருளை – நற் 2/3-5

வழியே செல்லும் மக்களின் தலையைத் தாக்கியதால்
சிவந்து கறையேறிய தலையையும், குருதியொழுகும் வாயையும் உடைய
வலிமையுடைய பெரிய தலையினைக் கொண்ட புலிக்குட்டிகள்

3

மறு கால் உழுத ஈர செறுவின் – நற் 210/2

மீண்டும் சாகுபடிக்காக உழுத ஈரமான வரப்புள்ள பாத்திகளில்

மேல்


மறுக்கம்

(பெ) மயக்கம், bewilderment, dismay

மன்பது மறுக்க துன்பம் களைவோன் – பரி 15/52

உயிர்களின் மயக்கம் தரும் துன்பத்தைக் களைவோன்,

மேல்


மறுக்குந்து

(வி.மு) மயங்கச்செய்யும், would make one perplexed

மீன் நொடுத்து நெல் குவைஇ
மிசை அம்பியின் மனை மறுக்குந்து – புறம் 343/1,2

மீன்களை விற்று விலைக்கு மாறாகப் பெற்ற நெற்குவைகளால்
வீடும் உயர்ந்த தோணிகளும் பிரித்தறியாதவாறு காண்பார் மயங்கச்செய்யும்

மேல்


மறுகால்

(பெ) இரண்டாம் முறை சாகுபடி, second crop

பெரும் புன குறவன் சிறுதினை மறுகால்
கொழும் கொடி அவரை பூக்கும் – குறு 82/4,5

பெரும் தினைப்புனத்தையுடைய குறவனின் சிறுதினையை அறுத்த மறுகாலில்
கொழுத்த கொடியுள்ள அவரை பூத்து நிற்கும்

மேல்


மறுகு

1. (வி) 1. அலைந்துதிரி, wander, roam about
2. கோது, தேய்த்துவிடு, preen, stoke, rub on
3. உள்ளம் வேறுபடு, dissent
4. எடுத்துச்செல், கொண்டுபோ, carry
5. தேய்த்துக் கூழாக்கு, grind to paste
6. கூடிக்குலாவு, துள்ளித்திரி, உகளு, jump with joy
7. வருந்து, grieve, be distressed
8. துளும்பு, ததும்பு, brim over
9. முறுகு, become hardened
10. சுழலு, whilrl
– 2. (பெ) தெரு, சாலை, street, road

1.1

மா இரும் குருந்தும் வேங்கையும் பிறவும்
அரக்கு விரித்து அன்ன பரேர் அம் புழகுடன்
மால் அங்கு உடையம் மலிவனம் மறுகி
வான் கண் கழீஇய அகல் அறை குவைஇ – குறி 95-98

கரிய பெரிய குருத்தம்பூ, வேங்கைப்பூ (ஆகிய பூக்களுடன்), பிறபூக்களையும்,
சாதிலிங்கத்தைப் பரப்பினாற் போன்ற பருத்த அழகினையுடைய மலையெருக்கம்பூவுடன்,
(எதைப்பறிப்பது என்று)குழப்பம் உள்ளவராயும், அவா மிகுந்தவராயும் (பலகாலும்)திரிந்து (பறித்து),
மழை (பெய்து)தன்னிடத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தின அகன்ற பாறையில் குவித்து,

1.2

மிளகு பெய்து அனைய சுவைய புன் காய்
உலறு தலை உகாஅய் சிதர் சிதர்ந்து உண்ட
புலம்பு கொள் நெடும் சினை ஏறி நினைந்து தன்
பொறி கிளர் எருத்தம் வெறிபட மறுகி
புன் புறா உயவும் வெம் துகள் இயவின் – நற் 66/1-5

மிளகினைப் பெய்து சமைத்தது போன்ற சுவையை உடைய புல்லிய காய்களை,
உலர்ந்த உச்சிக்கிளைகளைக் கொண்ட உகாய் மரத்தில், வண்டுகளை விலக்கிவிட்டு உண்டு,
தனித்திருந்த நீண்ட கிளையில் ஏறி, தன் பெடையை நினைத்து, தன்
புள்ளிகள் விளங்கும் பிடரிமயிர் மணங்கமழத் தேய்த்துவிடும்
புல்லிய புறா வருந்தும் வெம்மையான புழுதியையுடைய காட்டுவழியில்

1.3

நறு_நுதால் என்-கொல் ஐம்_கூந்தல் உளர
சிறு முல்லை நாறியதற்கு குறு மறுகி
ஒல்லாது உடன்று எமர் செய்தார் – கலி 105/53-55

நறிய நெற்றியையுடையவளே! என்ன ஆயிற்று இப்போது? நாம் நம் கூந்தலை அவிழ்த்து ஆற்றிவிட,
அது முல்லைமணம் கமழக் கண்டதற்கு, உள்ளம் வேறுபட்டு,
பொறுக்காமல் சண்டைபோட்டு என் சுற்றத்தார் கொண்டாரே,

1.4

சிறு புல் உணவு நெறி பட மறுகி
நுண் பல் எறும்பி கொண்டு அளை செறித்த – அகம் 377/2,3

சிறிய புல்லரிசியை ஒழுங்குபட எடுத்துச்சென்று
சிறிய பலவாய எறும்புகள் கொண்டுவந்து தம் வளையில் தொகுத்துவைத்த

தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர்
மீன் நெய்யொடு நறவு மறுகவும்
தீம் கரும்போடு அவல் வகுத்தோர்
மான் குறையொடு மது மறுகவும் – பொரு 214-217

தேனாகிய நெய்யோடு, கிழங்கை(யும்) விற்றவர்கள்
மீனின் நெய்யோடு நறவையும் மாறாகக் கொண்டுபோகவும்,
இனிய கரும்போடு அவலைக் கூறுபடுத்தி விற்றோர்,
மானின் தசையோடு கள்ளையும் மாறாகக் கொண்டுபோகவும்,

1.5

நரந்தம் அரைப்ப நறும் சாந்து மறுக – மது 553

கத்தூரியை அரைக்க, நறிய சந்தனத்தைத் தேய்த்துக் கூழாக்க

1.6

ஏறு முரண் சிறப்ப ஏறு எதிர் இரங்க
மாதர் மான் பிணை மறியொடு மறுக – ஐங் 493/1,2

இடிகள் மாறுபட்டு முழங்க, எருதுகள் அவற்றுக்கு எதிர்முழக்கமிட,
காதலையுடைய பெண்மான் தன் குட்டியோடு கூடிக்குலாவ

பெரும் கவின் பெற்ற சிறு தலை நௌவி
மட கண் பிணையொடு மறுகுவன உகள – மது 275,276

பெரும் அழகைப் பெற்ற சிறிய தலையையுடைய நௌவிமான்
மடப்பத்தையுடைய கண்ணையுடைய பிணையோடே கூடிக்குலாவுவனவாய் துள்ள

1.7

நாள் வலை முகந்த கோள் வல் பரதவர்
நுணங்கு மணல் ஆங்கண் உணங்க பெய்ம்மார்
பறி கொள் கொள்ளையர் மறுக உக்க
மீன் ஆர் குருகின் கானலம் பெருந்துறை – அகம் 300/1-4

நாள் காலையில் வலையினால் மீன்களை முகந்துகொண்ட மீன் பிடித்தலில் வல்ல பரதவர்கள்
நுண்ணிய மணலிடத்தே புலரும்படி பெய்வாராய்
பறியால் கொண்ட மிக்க மீனினையுடையவர் வருந்தும்படி சொரிந்த
மீன்களைத் தின்னும் பறவைகளையுடைய சோலையையுடைய அழகிய பெரிய கடல் துறையில்

தொடங்கு வினை தவிரா அசைவு இல் நோன் தாள்
கிடந்து உயிர் மறுகுவது ஆயினும் இடம் படின்
வீழ் களிறு மிசையா புலியினும் சிறந்த – அகம் 29/1-3

தொடங்கிய வினையைக் கைவிடாத – தளர்ச்சியற்ற – வலிமையான முயற்சியை உடைய –
(படுத்துக்)கிடந்து உயிர் வருந்தினாலும், (தான் தாக்கி) இடப்பக்கம் சாய்ந்து
விழுந்த களிறை உண்ணாத புலியைக் காட்டிலும் சிறந்த,

1.8

மரல் பழுத்து அன்ன மறுகு நீர் மொக்குள் – பொரு 45

மரல் பழுத்தாற் போன்ற துளும்பும் நீரையுடைய கொப்புளங்களையும்,

1.9

நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆரிடை
கழலோன் காப்ப கடுகுபு போகி
அறு சுனை மருங்கின் மறுகுபு வெந்த
வெம் வெம் கலுழி தவ்வென குடிக்கிய
யாங்கு வல்லுநள்-கொல் தானே – குறு 356/1-5

நிழல் அடங்கி அற்றுப்போன நீர் அற்ற கடக்கமுடியாத பாலைவெளியில்
காலில் கழல் அணிந்த தலைவன் காத்துவர, விரைந்து சென்று
நீர் அற்றுப்போன சுனையின் பக்கத்தில் முறுகிப்போய்ச் சூடான
மிகுந்த வெப்பமுடைய கலங்கிய நீரைத் தவ்வென்று குடிப்பதற்கு
எவ்வாறு முடியும் அவளால்?

1.10

அவல மறுசுழி மறுகலின்
தவலே நன்றுமன் தகுதியும் அதுவே – புறம் 238/18,19

துன்பமாகிய மறுசுழியின்கண் சுழலுவதைக்காட்டிலும்
இறந்துபடுதலே நன்று, நமக்குத் தக்க செய்கையும் அதுவே

2

மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின்
பரதர் மலிந்த பல் வேறு தெருவின் – பெரும் 322,323

மாடங்கள் உயர்ந்து நின்ற மணல் மிக்க சாலைகளையும்,
பரதவர் மிக்கு வாழ்கின்ற பலவாய் வேறுபட்ட தெருக்களையும்,

கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கி – நற் 311/6

கொழுத்த மீனைச் சுடுகின்ற புகை தெருவெங்கும் பரக்க

மேல்


மறுத்தரல்

(பெ) திருப்பித்தருதல், returning, giving back

செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம் அ நலம்
பயலையால் உணப்பட்டு பண்டை நீர் ஒழிந்த_கால்
பொய் அற்ற கேள்வியால் புரையோரை படர்ந்து நீ
மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ – கலி 15/12-15

அசோக மரத்தின் அழகிய தளிரைப் போன்றது இவளின் எழில் நலம், அந்த நலம்
பசலை நோயால் பாழடிக்கப்பட்டு அதன் பண்டைய இயல்பு அழிந்தபோது –
பொய்யற்ற கேள்வியறிவால் உயர்ந்த சான்றோரைச் சார்ந்து நீ பெறப்பொகும்
மாசற்ற நோன்புநெறிகளால் திருப்பித்தர முடியுமா?

மேல்


மறுத்தரவு

(பெ) திரும்பி வருதல், மீளுதல், coming back, retreading

இனி எல்லா யாம் தீது இலேம் என்று தெளிப்பவும் கைந்நீவி
யாதொன்றும் எம் கண் மறுத்தரவு இல் ஆயின்
மே தக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம் – கலி 81/33-35

“இப்போது, ஏடி! நான் தீது இலேன் என்று தெளிவாக எடுத்துரைக்கவும், கைமீறிப்போய்,
சிறிதளவும் என்னிடம் கொண்ட கோபத்திலிருந்து மீளுதல் இல்லை என்றால்
சிறப்புடைய எம் தந்தையின் பெயர்கொண்டவனை நான் எடுத்துச் செல்கிறேன்,

மேல்


மறுதரல்

(பெ) 1. மீண்டு வருதல், returning
2. மறுத்தல், denying

1

சென்ற தேஎத்து செய்வினை முற்றி
மறுதரல் உள்ளத்தர் எனினும் – அகம் 333/20,21

தாம் சென்றுள்ள நாட்டில் தாம் செய்யும் தொழிலை முடித்துக்கொண்டு
மீண்டு வரும் எண்ணமுடையவராயினும்

2

அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் என்பது ஓர் வாய்_சொல் தேறாய்
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி
அறிவு அறிந்து அளவல் வேண்டும் மறுதரற்கு
அரிய வாழி தோழி – நற் 32/3-7

அழகிய மலைக்கு உரியவனான தலைவன் நம்மை விரும்பி எப்போதும்
வருந்தினான் என்ற ஒரு வாய்ச்சொல்லை உணரமாட்டாய்;
நீயாகவே நேரில் கண்டும், உன்னைச் சேர்ந்தவரோடு கலந்துகொண்டும்
அறியவேண்டியவற்றை அறிந்து அளவளாவ வேண்டும்; அவனது நிலையை மறுப்பதற்கு
அரியது ஆகும், வாழ்க தோழியே!

மேல்


மறுப்படு

(வி) 1. சிதைவுறு, be injured, spoiled
2. களங்கமடை, get stained

1

அலமரல் உண்கண்ணார் ஆய் கோதை குழைத்த நின்
மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையா_கால்
என்னை நீ செய்யினும் உரைத்தீவார் இல்_வழி
முன் அடி பணிந்து எம்மை உணர்த்திய வருதி-மன் – கலி 73/12-15

சுழலுகின்ற மைதீட்டிய கண்களையுடைய பரத்தையரின் அழகிய மாலைகளைத் துவளச் செய்த உன்
மலர்ந்த மார்பில் பூசிய கலைந்துபோன சந்தனம் வந்து சொல்லாதபோது;
எப்படிப்பட்ட தவறுகளை நீ செய்தாலும் அதைப் பற்றிப் பேசமாட்டாதார் இல்லாதபோது
காலுக்கு முன்னால் பணிந்து எம் சினத்தைத் தீர்ப்பதற்கு வருவாய் –

2

பரதவர்
எறி உளி பொருத ஏமுறு பெரு மீன்
புண் உமிழ் குருதி புலவு கடல் மறுப்பட – அகம் 210/1-3

பரதவரால்
எறியப்பட்ட உளி தாக்கிய களிப்புப் பொருந்திய பெரிய மீன்
தன் புண்ணிலிருந்து ஒழுகிய உதிரத்தால் புலால் நாறும் கடல் நீர் களங்கமடைய

மேல்


மறுமை

(பெ) 1. மறு பிறவி, next birth
2. மறு உலகம், சுவர்க்கம், the next world, heaven

1

இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகியர் எம் கணவனை – குறு 49/3,4

இப் பிறவி போய் இனி எத்தனை பிறவியெடுத்தாலும்
நீயே என் கணவனாக இருக்கவேண்டும்

2

இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறு இன்று எய்துப – அகம் 66/1,2

இவ்வுலகத்தே புகழொடும் விளக்கமுற்று
மேல் உலக வாழ்வினையும் குற்றமின்றி எய்துவர்

மேல்


மறுமொழி

(பெ) மறுசொல், பதில், reply, answer

ஆடு வரி அலவன் ஓடு_வயின் ஆற்றாது
அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறு_மகட்கு
உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் – நற் 106/3-6

அங்குமிங்கும் அலைந்துதிரியும் புள்ளிகளைக் கொண்ட நண்டுகள் ஓடுவனவற்றைப் பிடிக்க மாட்டாது
சோர்வுற்று அதன் மீது விருப்பம் நீங்கிய குற்றமற்ற சிறுமகளுக்காக
வருத்தமுற்றவனாய் அவளிடம் சென்று நான் எனது உள்ளத்துக் காமநோயைப் பற்றிக் கூற
அதற்கு மறுசொல் சொல்வதற்கும் முடியாதவளாய்

மேல்


மறுவரல்

(வி) 1. மனம் கலங்கு(தல்), be distressed
2. சுழலு, சுற்றிச்சுற்றி வா, whirl, run around

1

கணம்_கொள் அருவி கான் கெழு நாடன்
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல்
இது என அறியா மறுவரல் பொழுதில் – அகம் 22/2-4

திரண்ட நீர் உள்ள அருவிகளை உடைய காடுகள் நிறைந்த நாட்டைச் சேர்ந்த தலைவனின்
மணங் கமழும் அகன்ற மார்பைத் தழுவியதால் ஏற்பட்ட துன்பத்தை,
இன்னது என்று அறியாமல் (தாய்) மனக்கலக்கம் அடைந்த போழ்து,

காலை எழுந்து கடும் தேர் பண்ணி
வால் இழை மகளிர் தழீஇய சென்ற
மல்லல் ஊரன் எல்லினன் பெரிது என
மறுவரும் சிறுவன் தாயே – குறு 45/1-4

காலையில் எழுந்து, வலிமையான தனது தேரைப்பூட்டி
ஒளிவிடும் அணிகலன்களை அணிந்த மகளிரைத் தழுவுவதற்குச் சென்ற
வளமிக்க ஊரனாகிய தலைவன் ஒப்பனையுடன் நன்கு விளங்கினான் என்று
மனம் கலங்குகின்றாள் சிறுவனின் தாய்!

2

முழந்தாள் இரும் பிடி கயம் தலை குழவி
நறவு மலி பாக்கத்து குற_மகள் ஈன்ற
குறி இறை புதல்வரொடு மறுவந்து ஓடி
முன்_நாள் இனியது ஆகி – குறு 394/1-4

முழந்தாளையுடைய கரிய பெண்யானையின் மெல்லிய தலையையுடைய கன்று
கள் மிகுதியாக உள்ள பாக்கத்தில் உள்ள குறத்தி ஈன்ற
குட்டையான கைகளையுடைய புதல்வரோடு சுற்றிச்சுற்றி ஓடி,
முற்காலத்தில் இனியதாக இருந்து

மேல்


மறுவித்தம்

(பெ) மறுதாயம், casting a ‘one’ again in dice

நறு வீ தாழ் புன்னை கீழ் நயந்து நீ அளித்த_கால்
மறுவித்தம் இட்டவன் மனம் போல நந்தியாள்
அறிவித்து நீ நீங்க கருதியாய்க்கு அ பொருள்
சிறு_வித்தம் இட்டான் போல் செறி துயர் உழப்பவோ – கலி 136/13-16

நறிய மலர்கள் உதிர்ந்துகிடக்கும் புன்னை மரத்தின் கீழ் விருப்பத்துடன் நீ இவளிடம் அன்புசெய்தபோது
மறுதாயம் கிட்டியவன் மனத்தைப் போல மகிழ்ந்து சிறந்தவள்,
பிரிந்து போவேன் என்று அறிவித்து நீ பிரியக் கருதிய உன் பொருட்டாய்
பெரிய எண் பெறவேண்டிய இடத்தில் சிறிய தாயம் இட்டவனைப் போல் மிகுந்த துயரில் வருந்தமாட்டாளோ

மேல்


மறை

1. (வி) 1. பார்வையிலிருந்து நீங்கு, become invisible, vanish, disappear
2. பார்வையிலிருந்து நீக்கு, make invisible, hide
3. மூடு, cover
4. ஒளித்துவை, hide
5. காப்பாற்று, save, protect
6. தடு, block
– 2. (பெ) 1. வேதம், scripture
2. இரகசியம், secret
3. மறைவிடம், மறைத்துக்கொள்ளும் இடம், place of concealment, place which one conceals
4. மறைவிடம், மறைந்து/ஒளிந்து கொள்ளும் இடம், place where one conceals
5. மறைத்தற்குரிய உறுப்புகள், parts of the body for concealment
6. மச்சம், mole
7. மறைத்தல், concealing
8. களவு வாழ்க்கை, pre marital secret love career
9. வஞ்சனை, ஏமாற்று, fraud, deceit

1.1

பொன் மலி புது வீ தாஅம் அவர் நாட்டு
மணி நிற மால் வரை மறைதொறும் இவள்
அறை மலர் நெடும் கண் ஆர்ந்தன பனியே – ஐங் 208/3-5

பொன்னிற மிக்க புதிய மலர்கள் பரவிக்கிடக்கும் அவருடைய நாட்டின்
நீலமணி போன்ற நிறமுள்ள பெரிய மலை, மாலையில் மறையும்போதெல்லாம் இவளின்
சிறப்பித்துச் சொல்லக்கூடிய மலரைப் போன்ற நீண்ட கண்களில் நிரம்பின கண்ணீர்.

1.2

சாரல்
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை
ஆடு மழை மங்குலின் மறைக்கும் – நற் 282/6-8

மலைச் சாரலில்
அகில் கட்டையை எரிக்கும் குறவன், முதலில் சருகளைக் கொளுத்துவதால் எழுகின்ற புகை
அசைகின்ற மழையின் மேகமூட்டம் போலப் பரந்து மறைக்கும்

1.3

தோள் புறம் மறைக்கும் நல்கூர் நுசுப்பின்
உளர் இயல் ஐம்பால் உமட்டியர் – சிறு 59,60

தளர்ந்த இடையினையுடைய, தோளையும் முதுகையும் மூடுகின்ற
அசைகின்ற இயல்புடைய ஐந்து பகுதியாகிய கூந்தலினையுடைய உப்பு வாணிகத்தியர்

1.4

மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல
என் ஐ வாழிய பலவே பன்னிய
மலை கெழு நாடனொடு நம்மிடை சிறிய
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல
நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து
தோள் பழி மறைக்கும் உதவி
போக்கு இல் பொலம் தொடி செறீஇயோனே – நற் 136/3-9

மருந்தினை ஆராய்ந்து கொடுக்கும் மருத்துவனைப் போல
என் தந்தை வாழ்க பல்லாண்டு! புகழ்ச்சிமிக்க
மலையைப் பொருந்திய நாட்டவனுக்கும் நமக்கும் இடையே சிறிதளவு
பிரிவு உள்ளதை அறிந்திருப்பவர் போல,
காதலன் நீங்கியவழித் தானும் நீங்காமல், அவன் வந்தால் தன் எல்லைக்குள் நின்று
தோளில் உண்டாகும் மெலிவு பிறர்க்குத் தோன்றாமல் ஒளிக்கும் உதவியையுடைய
கழன்று போகாத பொன்னாலான வளையல்களை என் கைகளில் செறித்தார்

1.5

பலர் குறை செய்த மலர் தார் அண்ணற்கு
ஒருவரும் இல்லை மாதோ செருவத்து
சிறப்பு உடை செம் கண் புகைய ஓர்
தோல் கொண்டு மறைக்கும் சால்பு உடையோனே – புறம் 311/4-7

பலரது குறைகளைத் தீர்த்துதவிய மாலையை அணிந்த இத் தலைவனுக்கு
போர்க்களத்தில் ஒருவரும் இல்லையோ,
சிறப்புடைய கண்கள் சினத்தால் சிவந்து புகையெழ நோக்கி, தன் ஒரு
கேடகத்தைக் கொண்டு காப்பாற்றும் வலிமையுடையவன்

1.6

உறைப்புழி ஓலை போல
மறைக்குவன் பெரும நின் குறித்து வரு வேலே – புறம் 290/7,8

மழை பெய்யுமிடத்து இடைநின்று நம்மை அதனின்றும் காக்கும் பனையோலை போல
தான் இடைநின்று தடுத்திடுவான், பெருமானே, பகைவர் நின்னைக்குறித்து எறிய வரும் வேலை

2.1

பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும்
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும்
கடவுள் மால் வரை கண்விடுத்து அன்ன
அடையா வாயில் அவன் அரும் கடை குறுகி – சிறு 203-206

கிணைப்பொருநர்களுக்கோ, புலமையோர்க்கோ,
அரிய வேதத்தை ஓதும் நாவினையுடைய அந்தணர்க்கோ,
கடவுள் – பெருமையுடைய (மேரு)மலை வாழும் – (இமைக்காமல்)கண் விழித்திருப்பதைப் போன்ற
மூடப்படாத வாயிலையுடைய அவனுடைய (ஏனையோர் புகுதற்கு)அரிய தலைவாயிலை அணு

2.2

யானே ஈண்டையேனே என் நலனே
ஆனா நோயொடு கானலஃதே
துறைவன் தம் ஊரானே
மறை அலர் ஆகி மன்றத்தஃதே – குறு 97

நான் இவ்விடத்தில் இருக்கின்றேன்; என் பெண்மை நலமோ
பொறுக்கமுடியாத காதல் நோயுடன் கடற்கரைச் சோலையில் உள்ளது;
தலைவன் தனது ஊரில் இருக்கின்றான்;
இரகசியமான எங்கள் நட்போ பலரும் தூற்றும் பழிச்சொல்லாகி தெருவிற்கிடக்கிறது

2.3

முறம் செவி மறை பாய்பு முரண் செய்த புலி செத்து – கலி 52/1

தன் முறம் போன்ற செவியின் மறைவிடத்தில் பாய்ந்து தாக்கிய புலியைச் சினந்து

2.4

கல் குயின்று அன்ன என் நல்கூர் வளி மறை – புறம் 196/12

கல்லால்செதுக்கப்பட்டது போன்ற எனது வறுமைமிக்க, காற்றுக்கு மறைவிடமான எனது வீடு

2.5

ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே —
————————- —————————
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே – அகம் 136/25-29

விரைவாக
நாணியவளாய் இறைஞ்சினாள்,
—————— —————————–
பெரிய பலவான கூந்தலின் இருளினால் மறைத்தற்குரிய உறுப்புகளை மறைத்து.

2.6

மறை ஏற்றின் மேல் இருந்து ஆடி துறை அம்பி
ஊர்வான் போல் தோன்றும் அவன் – கலி 103/38,39

மச்சத்தையுடைய காளையின் மேலேயிருந்து ஆட்டம்காண்பித்துக்கொண்டு, நீர்த்துறையில் தோணியில்
செல்பவன் போலத் தோன்றுகின்றான்”;

2.7

வெயில் மறை கொண்ட உரு கெழு சிறப்பின்
மாலை வெண்குடை ஒக்குமால் எனவே – புறம் 60/11,12

வெயிலை மறைத்தற்கு எடுத்த அச்சம் பொருந்திய தலைமையையுடைய
தாமம் பொருந்திய வெண்கொற்றக்குடையை ஒக்கும் எனக் கருதி

2.8

மறையின் என்
மென் தோள் நெகிழ்த்தானை மேஎய் அவன் ஆங்கண்
சென்று சேட்பட்டது என் நெஞ்சு – கலி 143/14-16

களவு வாழ்க்கையால் என்னுடைய
மென்மையான தோள்களை மெலிவித்தவனை விரும்பி, அவனிடம்
சென்று எனக்கு மிகவும் தொலைவில் இருக்கிறது என் நெஞ்சு;

2.9

மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது
அறை கொன்று மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச
பறை அறைந்து ஆங்கு ஒருவன் நீத்தான் – கலி 143/10-12

வஞ்சனையாக யாழ்வாசித்து, அந்த யாழிசையைக் கேட்டு மயங்கிநின்ற அசுணமாவை, இரக்கமில்லாமல்,
வஞ்சனையால் அதனைக் கொல்லும்படியாக, அதன் அருமையான உயிர் போகும்படி
பறையால் மிகுந்த ஒலியை எழுப்பியது போன்று, ஒருவன் என்னை வஞ்சித்து என்னைக் கைவிட்டான்

மேல்


மறைகம்

(வி.மு) மறைந்துகொள்வோம், let us hide

திதலை அல்குல் நலம் பாராட்டிய
வருமே தோழி வார் மணல் சேர்ப்பன்
இறை பட வாங்கிய முழவு முதல் புன்னை
மா அரை மறைகம் வம்-மதி பானாள் – நற் 307/4-7

உன் தேமல் படர்ந்த அல்குலின் அழகைப் பாராட்டுவதற்கு
வருகின்றான் தோழி! நீண்ட மணல் பரந்த நெய்தல்நிலத் தலைவன்!
நம் வீட்டுக் கூரையின் சாய்ப்பில் படுமாறு வளைந்த முழவு போன்ற அடியையுடைய புன்னையின்
கரிய அடிப்பகுதியில் மறைந்துகொள்வோம் வா!

மேல்


மறைகு

(வி.மு) மறைந்துகொள்வேன், (I) hide myself

வெண் மணல் நெடும் கோட்டு மறைகோ
அம்ம தோழி கூறு-மதி நீயே – அகம் 380/12,13

(நான்) வெல்லிய நெடிய மணற் கரையில்மறைந்துகொள்ளுவேனோ
தோழியே, நீ கூறுவாயாக.

மேல்


மன்

1. (வி) 1. மன்னெனும் ஏவல், நிலைபெறு,
be fixed – V.Viswanatha Pillai, Tamil and English Dictionery
2. மன்னெனும் ஏவல், தங்கு,
remain, be settled – V.Viswanatha Pillai, Tamil and English Dictionery
– 2. (பெ) 1. அரசன், king
2. நிலைபேறு, permanency – கதிரைவேற்பிள்ளை தமிழ்மொழி அகராதி
3. பெருமை, greatness – Tamil Lexicon, , உயர்வு, excellence – Pals Tamil Dictionery
4. பன்மை, மிகுதி, multiplicity, plurality, abundance
5. ஆக்கம், prosperity
6. தலைமை, superiority
– 3. (இ.சொ) 1. அசைநிலை, an expletive
2. ஆக்கக் குறிப்பு – an affix particle indicating change from one state to another
3. ஒழியிசை – ellipsis, Indicating words omitted necessary for a full sense
4. இரக்கக்குறிப்பு, an affix particle indicating pity
5. மிகுதிக்குறிப்பு, an affix particle indicating abundance
6. கழிவுக்குறிப்பு, an affix particle indicating what is gone

1.1

மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும் – பெரும் 32

அகன்ற இடத்தையுடைய உலகத்தில் நிலைபெற்ற உயிர்களைப் புரக்கும்- நச்.உரை

1.2

விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி – சிறு 247

வெற்றியையுடைத்தாகிய வேலினையுடைய முடிவேந்தர் மன்னும் அரண்களை அழித்து – நச்.உரை
வெற்றியை உடைத்தாகிய வேலினையுடைய முடிவேந்தர் உறையும் அரண்களை அழித்து – பொ.வே.சோ.உரை

2.1

மன் மீக்கூறுநர் மறம் தப கடந்தே – பதி 11/25

மன்னர்களுள் செருக்குற்று மீக்கூறும் மன்னர்களின் மறம் கெட்டழியுமாறு வஞ்சியாது பொருது வென்று
– ஔ.சு.து.உரை

மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் – அகம் 220/5

மன்னர் வழியை அழித்த பரசுராமன் – ந.மு.வே.உரை

மன் மகளிர் சென்னியர் ஆடல் தொடங்க – பரி 7/80

அரசனால் தலைக்கோல் பெற்ற மகளிரும் பாணரும் கூத்தாடுதலைத் தொடங்க – பொ.வே.சோ.உரை

2.2

மன் உயிர் அறியா துன் அரும் பொதியில் – குறு 376/1

நிலைபெற்ற உயிர்த்தொகுதியினரால் முற்ற அறியப்படாத அணுகுதற்கு அரிய பொதியில் மலையிலுள்ள
– உ.வே.சா.உரை

மண் உடை ஞாலத்து மன் உயிர்க்கு எஞ்சாது – பதி 15/35

மண்ணுலகத்தில் வாழும் நிலைபெற்ற உயிர்கட்கு குறைவறக்கொடுத்து – ஔவை.சு.து.உரை

மன் உயிர் முதல்வனை ஆதலின் – பரி 1/56

நிலைபெற்ற உயிர்கட்கு தலைவனும் ஆக – பொ.வே.சோ.உரை

மன் எயில் உடையோர் போல – நற் 150/5

நிலைபெற்ற மதில்களையுடைய குறுநில மன்னர் போல – பின்.நா.உரை

தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை – அகம் 392/23

தன்னைப் பற்றுக்கோடாகவுடைய நிலைபெற்ற மதில்களையுடைய அரண் – ந.மு.வே.உரை

ஒன்பதிற்று தட கை மன் பேராள – பரி 3/39

ஒன்பது பெருங்கைகளையுடைய நிலைபெற்ற புகழோனே – பொ.வே.சோ.உரை

2.3

மால் பெயல் தலைஇய மன் நெடும் குன்றத்து – நற் 268/2

மேகம் மழைபெய்துவிட்ட மிக்க நெடிய குன்றத்தின்கண் – பின்.நாரா.உரை

நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா – பதி 25/5

நின்னைப் பகைத்தோருடைய பெரிய நகர் மதில்கள் வாழ்வாரின்மையின் கதவு முதலிய காப்பு வைக்கப்படாது
அழிந்தன – ஔவை.சு.து.உரை

மன் உயிர் ஏமுற மலர் ஞாலம் புரவு ஈன்று – கலி 34/1

பெருமையையுடைய உயிர்கள் எல்லாம் உயிர் வாழும்படி அகன்ற உலகிடத்து பாதுகாத்தலை உண்டாக்கி
– நச்.உரை

தன் உயிர் போல தழீஇ உலகத்து
மன் உயிர் காக்கும் இ மன்னனும் – கலி 143/52,53

தன் உயிரைப் பாதுகாக்குமாறு போல உலகத்துப்
பெரிய உயிர்களை எல்லாம் தழீஇப் பாதுகாக்கும் இம் மன்னனும் – நச்.உரை

வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள – அகம் 390/5

வளைந்த சுரிந்த கூந்தலின் முடி முழுதும் பெரிதும் அலையக்கொண்டு – ந.மு.வே.உரை

2.4

நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் – திரு 278

நின் தன்மையெல்லாம் முற்ற அளவிட்டறிதல் பல்லுயிர்க்கும் அரிதாகையினாலே – நச்.உரை

மன் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும் – பதி 24/27

மிக்குற்ற உயிர்களைப் புரத்தல் வேண்டி வலமாக எழுந்து முழங்கும் – ஔவை.சு.து.உரை

மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே – அகம் 68/10

மன்னுயிர் மடிந்தன்றால் பொழுது என்பதனால், ஊர், காவலர், நாய் முதலியவை துஞ்சுதலும் கூறினாள்
– ந.மு.வே.உரை

2.5

திரு நிலைஇய பெரு மன் எயில் – பட் 291

திருமகள் நிலைபெற்ற பெரிய ஆக்கத்தையுடைய உறந்தையின் மதிலினிடத்தே- நச்.உரை

2.6

திரு நிலைஇய பெரு மன் எயில் – பட் 291

வீரத்திருமகள் என்றும் நிலைபெற்ற பெரிய தலைமையினையுடைய மதில் – பொ.வே.சோ.உரை

3.1

தடவு நிமிர் முத்தீ பேணிய மன் எச்சில் – பரி 5/42

குண்டங்களில் எழுந்த முத்தீயும் கொள்ளுதலானே சேடமாகியவற்றை – பொ.வே.சோ
(மன் – பொருள் இல்லை)

அது-மன் எம் பரிசில் ஆவியர் கோவே – புறம் 147/9

அதுவாகும் எம்முடைய பரிசில் ஆவியருடைய வேந்தே –

மன் – அசை

3.2

பொரி அரை ஞெமிர்ந்த புழல் காய் கொன்றை
நீடிய சடையோடு ஆடா மேனி
குன்று உறை தவசியர் போல பலவுடன்
என்றூழ் நீள் இடை பொற்ப தோன்றும்
அரும் சுரம் எளிய-மன் நினக்கே – நற் 141/3-7

பொரிந்தது போல் ஆகிய அடிமரத்தின் பட்டை தேய்ந்த, உள்ளே துளையுள்ள காய்களைக் கொண்ட கொன்றை
நீண்ட சடையும் நீராடாத மேனியுமுடைய
குன்றுகளில் வாழும் தவசிமாரைப் போல, பலவாக
வெயில் பரந்த நீண்ட இடைவேளி அழகுறத் தோன்றும்
அரிய காட்டுவழிகள் கடந்துசெல்ல எளிதானவை உனக்கு

எளியமன் என்புழி மன்னைச்சொல் ஆக்கம் குறித்து நின்றது – ஔ.சு.து.உரை

3.3

குடுமி நெற்றி நெடு மா தோகை
————— ———————
கிளிகடி மகளிரின் விளிபட பயிரும்
கார்-மன் இதுவால் தோழி – அகம் 194/11-16

குடுமி பொருந்திய தலையினையுடைய நீண்ட கரிய மயில்
—————— ——————-
கிளிகளை ஓட்டும் மகளிர் போல ஒலியுண்டாக அகவும்
கார்காலம் இதுவேயாகும், தோழி (அவர் இன்னும் வந்திலரே)

3.4

பெரும் பாழ் ஆகும்-மன் அளிய தாமே – பதி 22/38

பெரிய பாழ்நிலம் ஆகிவிடும் அவைதாம் அளிக்கத்தக்கன (மன் – இரக்கப்பொருட்டு)

3.5

வண்டன் அனையை-மன் நீயே – பதி 31/23

வண்டன் என்னும் வள்ளலை நீ பெரிதும் ஒத்திருக்கின்றாய் (மன் – மிகுதி குறித்து நின்றது)

3.6

வென் வேல் பொறையன் என்றலின் வெருவா
வெப்பு உடை ஆடூஉ செத்தனென்-மன் யான் – பதி 86/3,4

வெற்றி பொருந்திய வேலையுடைய பொறையன் என்று எல்லாரும் சொல்லுதலால், உளம் அஞ்சி
வெம்மையுடைய ஆண்மகன் என்றே முன்பெல்லாம் கருதினேன் நான் (அது இப்பொழுது கழிந்தது)

மேல்


மன்பது

(பெ) உயிர்க்கூட்டம், all lives

மன்பது மறுக்க துன்பம் களைவோன் – பரி 15/52

உயிர்களின் மயக்கம் தரும் துன்பத்தைக் களைவோன்

மூ_ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும்
மாயோய் நின் வயின் பரந்தவை உரைத்தேம் – பரி 3/9,10

மூன்று ஏழேழு உலகங்களாகிய இருபத்தியொரு உலகங்களும், அவ் உலகத்து உயிர்களும்,
மாயவனே! உன்னிடமிருந்து தோன்றிப் பரவினவை என்று சொன்னோம்,

மேல்


மன்பதை

(பெ) உயிரினம், மனித இனம், all life, humanity

மன்பதை எல்லாம் மடிந்த இரும் கங்குல் – கலி 65/3

உலகத்து உயிர்கள் எல்லாம் உறங்கிவிட்ட இருட்டான நள்ளிரவில்,

வெண் தோடு நிரைஇய வேந்து உடை அரும் சமம்
கொன்று புறம்பெற்று மன்பதை நிரப்பி – பதி 40/10,11

வெண்மையான பனந்தோட்டினை வரிசையாகத் தொடுத்து அணிந்தவராய் வரும் வேந்தர்களையுடைய
அரிய போரினை
அழித்து, அவரைப் புறமிடச் செய்து, அவ்விடங்களில் மக்களைக் குடியேறச் செய்த,

மேல்


மன்ற

(வி.அ) 1. தேற்றமாக, நிச்சயமாக, உறுதியாக, certainly
2. தெளிவாக, clearly

1

வண்டு படு மலரின் சாஅய்
தமியென் மன்ற அளியென் யானே – குறு 30/5,6

வண்டுகள்மொய்த்து உழக்கிய குவளை மலரைப் போல நலிந்து
தேற்றமாகத் தனித்தவளாயினேன், யான் இரங்குதற்குரியேன்

2

கல் உயர் நனம் தலை நல்ல கூறி
புணர்ந்து உடன் போதல் பொருள் என
உணர்ந்தேன் மன்ற அவர் உணரா ஊங்கே – குறு 297/5-7

மலைகள் ஓங்கி உயர்ந்த அகன்ற இடத்தில் நல்ல சொற்களைக் கூறி
தலைவனோடு சேர்ந்து போதலே செய்யத்தக்க காரியம் என்று
யான் உணர்ந்தேன் தெளிவாக, அவர் உணர்வதற்கு முன்னர்

மேல்


மன்றம்

(பெ) மக்கள் கூடும் ஊர்ப்பொது இடம், place for common public gathering

மலர் தலை மன்றத்து பலர் உடன் குழீஇ
கையினும் கலத்தினும் மெய் உற தீண்டி
பெரும் சினத்தால் புறக்கொடாஅது
இரும் செருவின் இகல் மொய்ம்பினோர் – பட் 69-72

அகன்ற இடத்தையுடைய அம்பலங்களில் பலரும் சேரத் திரண்டு,
(வெறும்)கைகளாலும் ஆயுதங்களாலும் உடலில் படும்படி பற்றியும் அடித்தும்,
மிகுந்த சினத்தால் புறமுதுகுகொடாமல்,
நீண்ட போர்(செய்யும்) போட்டிபோடும் வலிமையுடையோர்

அரு விலை நறும் பூ தூஉய் தெருவில்
முது வாய் கோடியர் முழவொடு புணர்ந்த
திரி புரி நரம்பின் தீம் தொடை ஓர்க்கும்
பெரு விழா கழிந்த பேஎம் முதிர் மன்றத்து – பட் 252-255

அரிய விலை(க்கு வாங்கிய) நறுமணமுள்ள பூக்களைச் சிதறி, தெருவினில்
அறிவு வாய்க்கப்பெற்ற கூத்தருடைய மத்தளத்தின் தாளத்தோடு கூடின
முறுக்கப்பட்ட புரி(போன்ற) நரம்பின் இனிய கட்டினையுடைய யாழைக் கேட்கும்
பெரிய திருநாள் முடிந்துபோன, அச்சம் மிகுந்த, மன்றத்தில்

காஞ்சி தாது உக்கு அன்ன தாது எரு மன்றத்து
தூங்கும் குரவையுள் – கலி 108/60,61

காஞ்சிப் பூவின் பூந்தாதுக்கள் உதிர்ந்தது போன்ற சாண எருவையுடைய ஊர் மன்றத்தில்
ஆடுகின்ற குரவைக் கூத்தில்,

மேல்


மன்றல்

(பெ) 1. திருமணம், மணவிழா, marriage, wedding
2. நறுமணம், fragrance

1

இருவேம் ஆய்ந்த மன்றல் இது என – குறி 21

தலைவனும் யானுமே ஆய்ந்துசெய்த மணம் இது என்று

கூடல்
மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ – பரி 8/30

கூடல்நகரில்
மணவிழா பொருந்திய மணிநிற முரசுகளின் முழக்கம் எழ,

2

கொன்றை கொடி இணர் ஊழ்ப்ப கொடி மலர்
மன்றல மலர மலர் காந்தள் வாய் நாற – பரி 8/24,25

கொன்றை மரங்களில் கொடி போன்று பூங்கொத்துக்ள் மலர்ந்திருக்க, கொடிகளில் மலர்கள்
நறுமணம் உடையவாய் மலர்ந்திருக்க, மலரான காந்தள் இடமெல்லாம் மணக்க,

மேல்


மன்று

(பெ) பார்க்க: மன்றம்

மனை உறை புறவின் செம் கால் சேவல்
இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது – நெடு 45,46

வீட்டில் வாழும் புறாவின் சிவந்த காலினையுடைய சேவல்
(தான்)இன்பம் நுகரும் பெடையொடு நாற்சந்தியில் (இரை)தேடி உண்ணாமல்

அடு புலி முன்பின் தொடு கழல் மறவர்
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழல் படுக்கும் – அகம் 75/6,7

கொல்லும் புலி போலும் வலியையும் கட்டப்பெற்ற கழலையுமுடைய மறவர்கள்
பழையதாய் வருகிற இயல்பையுடைய தமது சீறூரிலுள்ள மன்றத்தி நிழலிலே கண்படுக்கும்

மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே – அகம் 128/1

ஊர் மன்றம் தன் ஒலி அடங்க மனைகளும் துயின்றன

சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ
மன்று-தொறும் நின்ற குரவை – மது 614,615

புகழ் மிக்க முருகனை வழிபடுதலால், தழுவிக் கைகோத்து,
மன்றங்கள்தோறும் நின்ற குரவைக்கூத்தும்

மேல்


மன்னு

(வி) 1. நிலைபெறு, நீடித்திரு, endure, be lasting, permanent
2. பொருந்து, இயைபுடன் இரு, agree, be in accord with

1

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் – புறம் 165/1

எப்பொருளும் நிலையாத இவ்வுலகத்தின்கண் நிலைபெறுதலைக் கருதினோர்

2

பல் மணம் மன்னு பின் இரும் கூந்தலர் – பரி 19/89

பலவகைப்பட்ட நறுமணங்களும் பொருந்திய பின்னலையுடைய கருங்கூந்தலையுடைய மகளிரும்,

இவள் மன்னும்
ஒண்_நுதல் ஆயத்தார் ஓராங்கு திளைப்பினும்
முள் நுனை தோன்றாமை முறுவல் கொண்டு அடக்கி தன்
கண்ணினும் முகத்தினும் நகுபவள் – கலி 142/5-8

இவளைப் பொருந்திச் சூழ்ந்திருக்கும்
ஒளிவிடும் நெற்றியையுடைய தோழியர் எல்லாரும் ஒன்றாகக் கூடிச் சிரிக்கும் காலத்திலும்,
முள்ளின் நுனை போன்ற தன் பற்கள் வெளியில் தெரியாமல் புன்முறுவல் கொண்டு, சிரிப்பை அடக்கித் தன்
கண்ணாலும், முகத்தாலும் மட்டுமே சிரிக்கும் இயல்புடையவள்,

மேல்


மன்னும்

1. (வி.அ) மிகவும், பெரிதும், overwhelmingly, exceedingly
2. (இ.சொ) அசைச்சொல், an expletive

1

அன்பினர் மன்னும் பெரியர் – நற் 224/1

நம்மிடம் அன்புகொண்டவர் மிகுதியும்; மிகவும் பெரியவர்

2

உண்பது மன்னும் அதுவே
பரிசில் மன்னும் குருசில் கொண்டதுவே – புறம் 333/18,19

உண்பது அதுவேயாகும்
அவன் தன்பால் வரும் பரிசிலர்க்கு நல்கும் பரிசில் குருசிலாகி அவன் பகைவரை வென்று பெற்ற பொருளேயாகும்

மேல்


மனவன்

(பெ) மனத்தையுடையவன், (mean-)minded person

கோட்டியுள் கொம்பர் குவி முலை நோக்குவோன்
ஓட்டை மனவன் உரம் இலி என்மரும் – பரி 12/50,51

கூடவருகின்றவர்களுள், பூங்கொம்பு போன்ற ஒரு பெண்ணின் குவிந்த முலையைக் கூர்ந்து பார்ப்பவன்
ஓட்டையான மனத்தையுடையவன், நெஞ்சுரம் அற்றவன் என்று சொல்வோரும்,

மேல்


மனவு

(பெ) அக்குமணி, சங்குமணி, chank bead, mock pearlgb

ஞமலி தந்த மனவு சூல் உடும்பின் – பெரும் 132

நாய்(கடித்துக்) கொணர்ந்த அக்குமணி(போன்ற) முட்டைகளையுடைய உடும்பின்

மனவு கோப்பு அன்ன நன் நெடும் கூந்தல்
அகவன்_மகளே – குறு 23/2,3

சங்குமணியைக் கோத்தது போன்ற நல்ல நெடிய கூந்தலையுடைய
கட்டுவிச்சியே

மேல்


மனன்

(பெ) மனம், mind

பொருந்தி யான் தான் வேட்ட பொருள்_வயின் நினைந்த சொல்
திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய
மருந்து போல் மருந்து ஆகி மனன் உவப்ப
பெரும் பெயர் மீளி பெயர்ந்தனன் செலவே – கலி 17/18-21

பொருத்தமாக, நான் அவன் விரும்பிய செயல் ஆர்வத்தினால் விளையும் கேடுகளை நினைந்து கூறிய சொற்கள்,
சீர்படுத்தும் நிலையிலுள்ள உடம்பிற்கு மருத்துவன் ஊட்டிய
மருந்தினைப் போல் நல்ல மருந்தாக வேலைசெய்ய, உன் மனம் களிக்கும்படி,
பெரும் புகழ் கொண்ட நம் தலைவன் கைவிட்டுவிட்டான் தன் பயணத்தை.

மேல்


மனாலம்

(பெ) குங்குமம், saffron

செம் வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப
அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின்
மணி நிற இரும் கழி நீர் நிறம் பெயர்ந்து
மனால கலவை போல அரண் கொன்று – பதி 11/7-10

கூரிய வாயினையுடைய வாள்படை குறுக்கே வருவோரை வீழ்த்த,
அவரின் அரிய மார்பு பிளந்த புண்ணிலிருந்து வெளிவரும் குருதியினால்
நீல மணி போன்ற பெரிய கழி தனது நீரின் நிறம் மாறிக்
குங்குமக் கலவை போலாக, அவரின் அரணை அழித்து,

மேல்


மனும்

(பெ.அ) மன்னும் என்பதன் குறுக்கல் விகாரம், the shortened form of the word ‘mannum’
மன்னு – நிலைபெறு

நச்சல் கூடாது பெரும இ செலவு
ஒழிதல் வேண்டுவல் சூழின் பழி இன்று
மன்னவன் புறந்தர வரு விருந்து ஓம்பி
தன் நகர் விழைய கூடின்
இன் உறல் வியன் மார்ப அது மனும் பொருளே – கலி 8/19-23

பொருள் மீது ஆசை கூடாது பெருமானே!, இந்தப் பயணத்தைக்
கைவிடும்படி வேண்டுகிறேன், ஆராய்ந்து பார்த்தால் இது தவறல்ல,
மன்னவன் பேணிப்பாதுகாக்க, வீட்டுக்கு வரும் விருந்தினரை உபசரித்து,
தன் மனைவி மக்கள் விரும்பும்படி, அவருடன் சேர்ந்திருப்பது,
இனிய நெருக்கமான உறவினுக்குரிய அகன்ற மார்பினையுடையவனே! அதுவே நிலைத்த பொருளும் ஆகும்.

மேல்


மனை

(பெ) 1. வீடு, house
2. வீடு கட்டும் இடம், house site
3. களம், field, locality

1

கானக்கோழி கதிர் குத்த
மனை கோழி தினை கவர – பொரு 222,223

காட்டுக் கோழிகள் நெற்கதிரைத் கொத்தித் தின்னவும்,
வீட்டுக் கோழிகள் தினையைத் தின்னவும்,

2

நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து – நெடு 76-78

(கட்டிடக்கலை)நூலை அறிந்த கலைஞர் மிகச்சரியாக நூலை நேரே பிடித்து,
திசைகளைக் குறித்துக்கொண்டு, தெய்வங்களை (ஏறிட்டுப்)பார்த்து(த் தொழுது),
பெரும் புகழ்பெற்ற அரசர்க்குத் தகுந்தவகையில் நிலத்தைப் பகுத்துக்கொண்டு

3

வேலன் வேண்ட வெறி மனை வந்தோய் – நற் 34/9

வேலன் வெறியாடி வேண்டிக்கொள்ள வெறியாடும் களத்துக்கு வந்திருக்கிறாய்

மேல்


மனையோள்

(பெ) மனையாள், மனைவி, wife

அகன் பெரு வட்டி நிறைய மனையோள்
அரிகால் பெரும் பயறு நிறைக்கும் ஊர – ஐங் 47/2,3

அகன்ற பெரிய வட்டி நிறையும்படியாக, இல்லத்தரசிகள்
நெல்லறுத்த வயலில் விளைந்த பெரும்பயற்றை நிரப்பித்தருகின்ற ஊரைச் சேர்ந்த தலைவனே!

மேல்