பை – முதல் சொற்கள்

பை

1. (வி) (பாம்பு)படமெடு, spread the hood as a cobra
– 2. (பெ) 1. பசுமை – வளமை, செல்வச்செழிப்பு, prosperity, flourishing condition
2. பசுமை – குளிர்ச்சி, coolness
3. பாம்பின் படம், hood of a cobra
4. துணி தோல், காகிதம் முதலியவற்றால் அமைந்த கொள்கலம், bag, sack
– 3. (பெ.அ) பார்க்க : பைம்

1

பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப – பொரு 69

படம் விரித்த பாம்பினது பொறியை ஒப்ப,

2.1

பை தீர் கடும்பொடு பதம் மிக பெறுகுவிர் – பெரும் 105

பசுமை(வளமை) தீர்ந்த சுற்றத்தோடு அவ்வுணவினை மிகப் பெறுவீர்

2.2

கயம் கண்டு அன்ன அகன் பை அம் கண் – மலை 259

குளத்தைப் பார்த்ததைப் போன்ற, அகன்ற பசுமையான(குளிர்ந்த), அழகிய அவ்விடத்தே

2.3

கடிது இடி உருமின் பாம்பு பை அவிய
இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே – குறு 268/3,4

விரைந்து இடிக்கின்ற இடியால் பாம்புகளின் படம் மடங்கும்படி,
இடியுடன் கலந்து மழை இனிதாகப் பெய்தது

2.4

ஞெலி_கோல் கல பை அதளொடு சுருக்கி – நற் 142/3

தீக்கடைகோல் வைக்கும் பையினைத் தோலுடன் சுருட்டி

மேல்


பைஇ

(வி.அ) மெல்ல, மெதுவாக, slowly

பைஇ பைய பசந்தனை பசப்பே – நற் 96/11

மெல்ல மெல்லப் பசலைபூத்தாய் பசப்பே

மேல்


பைஞ்சாய்

(பெ) பஞ்சாய், ஒரு கோரைப்புல் வகை, A grass, cyperus rotundus tuberosus
பார்க்க : பஞ்சாய்

பைஞ்சாய் பாவை ஈன்றனென் யானே – ஐங் 155/5

நான் பஞ்சாய்க் கோரைப் பாவையாகிய பிள்ளையை ஏற்கனவே பெற்றுவிட்டேன்.

அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் – அகம் 62/1,2

பள்ளத்துநீரில் வளரும் பைஞ்சாய்க் கோரைத் தண்டின் அடிப்பகுதியை ஒத்த
ஒளி சிறந்துவிளங்கும் பற்கள் பொருந்திய பவளம் போன்ற வாயினையும்,

மேல்


பைஞ்சேறு

(பெ) கரைத்த (பசுவின்) சாணம், cow-dung made into semi solid form for smearing on the floor

பைஞ்சேறு மெழுகிய படிவ நன் நகர் – பெரும் 298

பசிய சாணக் கரைசலால் மெழுகிய வழிபடும் தெய்வங்களையுடைய நன்றாகிய அகங்களையும்

மேல்


பைஞ்ஞிலம்

(பெ) மனித இனம், mankind, human race

நனம் தலை பைஞ்ஞிலம் வருக இ நிழல் என – பதி 17/9

விரிந்த இடத்தையுடைய பசுமையான நிலத்துள்ளோரே, வருக இக் குடைநிழலின் கீழ்’ என்று

உண்ணா பைஞ்ஞிலம் பனி துறை மண்ணி – பதி 31/6

உண்ணாநோன்பிருக்கும் மக்கள்கூட்டம் குளிர்ந்த நீர்த்துறையில் நீராடி,

ஞிலம் = நிலம் என்பது ஆகுபெயராய் மக்கள்தொகுதியை உணர்த்தியது.

மேல்


பைதரு(தல்)

(வி) துன்புறு(தல்), be in distress

கால் ஏமுற்ற பைதரு காலை – நற் 30/7

காற்றால் அலைக்கழிக்கப்பட்டுத் துன்புற்ற பொழுதில்

மேல்


பைதல்

(பெ) 1. இளமையானது, that which is young and tender
2. துன்பம், sorrow, distress

1

பெரும் களிறு உழுவை அட்டு என இரும் பிடி
உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது
நெய்தல் பாசடை புரையும் அம் செவி
பைதல் அம் குழவி தழீஇ ஒய்யென – நற் 47/1-4

பெரிய ஆண்யானையைப் புலி கொன்றதாக, அதன் பெரிய பெண்யானை
உடல் வாட்டமுற்று உள்ளத்தை வருத்தும் துயரத்தோடு இயங்க இயலாமல்
நெய்தலின் பசிய இலை போன்ற அழகிய செவியையுடைய
இளமையான தன் அழகிய கன்றினைத் தழுவிக்கொண்டு,

2

பாடு இன்றி பசந்த கண் பைதல பனி மல்க – கலி 16/1

உறக்கம் இன்றி, பசலை பாய்ந்த கண்கள் துன்பம்கொண்டு நீர் சொரிய,

மேல்


பைதலம்

(பெ) துன்பம் உடையேம், one who is in sorrow(first person plural)

பைதலம் அல்லேம் பாண பணை தோள்
ஐது அமைந்து அகன்ற அல்குல்
நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே – ஐங் 135-137

துன்புடையேம் ஆகமாட்டோம் பாணனே! மூங்கில் போன்ற தோள்களையும்,
மென்மையாக அமைந்து அகன்றிருக்கும் அல்குலையும் கொண்ட
நெய்தல் போன்ற அழகிய கண்களையுடையவளை நேரிலே காண நேர்ந்தாலும் –

மேல்


பைதலன்

(பெ) துன்புற்றவன், வருத்தப்படுகிறவன், one who is in sorrow(third person singular)

கொய்து ஒழி புனமும் நோக்கி நெடிது நினைந்து
பைதலன் பெயரலன்-கொல்லோ ஐ தேய்கு – அகம் 38/14,15

அறுவடை முடிந்த தினைப்புனத்தையும் பார்த்து – நீண்ட நேரம் நினைத்துக்கொண்டே இருந்து
துன்புற்றவனாய்த் திரும்பிச் செல்வானல்லனோ! என் அழகு தேய்ந்துபோகட்டும்!

மேல்


பைதலேன்

(பெ) துன்பம் உடையேன், one who is in sorrow(first person singular)

பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக – கலி 46/13

பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக – கலி 46/17

மேல்


பைதலை

(பெ) துன்பம் உடையவன்/ள், one who is in sorrow (addressed as a second person singular)

நின வாய் செத்து நீ பல உள்ளி
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும் – அகம் 126/1,2

உன் எண்ணங்களை உண்மையானவை எனக் கருதி, நீ பலவும் எண்ணி
மிகப் பெரிய துன்பத்தினையுடையையாய் வருந்துதல் அன்றியும்

மேல்


பைதிரம்

(பெ) நாடு, நிலப்பகுதி, country, province

இனம் தோடு அகல ஊர் உடன் எழுந்து
நிலம் கண் வாட நாஞ்சில் கடிந்து நீ
வாழ்தல் ஈயா வளன் அறு பைதிரம்
அன்ன ஆயின பழனம்-தோறும் – பதி 19/16-19

பசுக்கூட்டங்கள் கூட்டம் கூட்டமாகச் சிதறியோட, ஊர்மக்கள் ஒன்றுசேர ஓடிப்போக,
விளைநில இடங்களெல்லாம் களையிழக்க, உழவுத்தொழிலினை அழித்து, நீ
வாழ்வு தராததால் வளம் அற்றுப்போன பகைவர் நாடுகள்
அப்படிப்பட இயல்பினை அடைந்தன – நீர்நிலைகளிலெல்லாம்

வளம் தலைமயங்கிய பைதிரம் திருத்திய
களங்காய்க்கண்ணி நார்முடி சேரல் – பதி 38/2,3

பலவகையான வளங்கள் ஒன்றுகூடிக் கலக்கும் வகையில் நாட்டைச் செம்மை செய்த
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேர வேந்தனே!

மேல்


பைது

(பெ) 1. ஈரம், ஈரப்பசை, moisture, dampness
2. பசுமை, greenness

1

பைது அற விளைந்த பெரும் செந்நெல்லின்
தூம்பு உடை திரள் தாள் துமித்த வினைஞர் – பெரும் 230,231

ஈரப்பசை அறும்படி முற்றின பெரிய செந்நெல்லின்
உள்துளை உடைய திரண்ட தாளை அறுத்த வினைஞர்,

2

பல் வளம் பகர்பு ஊட்டும் பயன் நிலம் பைது அற
செல் கதிர் ஞாயிறு செயிர் சினம் சொரிதலின் – கலி 20/1,2

பலவிதமான வளங்களை விளைந்துகொடுத்து வாழச்செய்யும் பயன் நிறைந்த நிலங்களின் பசுமை அற்றுப்போக,
கடிதாய்ச் செல்கின்ற கதிர்களையுடைய ஞாயிறு, வருத்துகின்ற நெருப்பைக் கக்குவதால்,

மேல்


பைப்பய

(வி.அ) மெல்ல மெல்ல, சிறிது சிறிதாக, slowly,

எரி அகைந்து அன்ன தாமரை பழனத்து
பொரி அகைந்து அன்ன பொங்கு பல் சிறு மீன்
வெறி கொள் பாசடை உணீஇயர் பைப்பய
பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும் – அகம் 106/1-4

தீ கிளைத்து எரிந்தாற் போலும் தாமரைப் பூக்கலையுடைய வயலில்
நெற்பொரி முதலியன தெரித்தாற் போன்று விளங்கும் பல சிறிய மீன்களை
உண்ணும்பொருட்டு, மணங்கொண்ட பசிய இலையில் மெல்ல மெல்ல
பறத்தலொழிந்த முதிய சிச்சிலிப்பறவை அசைந்து வந்து இருக்கும்

எள் அற இயற்றிய நிழல்காண் மண்டிலத்து
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி
மதுகை மாய்தல் வேண்டும் – அகம் 71/13-15

இகழ்ச்சியற இயற்றப்பெற்ற உருவம்காணும் கண்ணாடியின்
அகத்தே ஊதிய ஆவி முதலில் பரந்து பின் சுருங்கினாற்போன்று சிறிது சிறிதாகக் குறைந்து
என் வலிமை மாய்தல் வேண்டும்.

மேல்


பைபய

(வி.அ) மெல்ல மெல்ல, சிறிது சிறிதாக, இலேசாக, slowly, softly, gently
பார்க்க : பைப்பய

பின்னி அன்ன பிணங்கு அரில் நுழைதொறும்
முன்னோன் வாங்கிய கடு விசை கணை கோல்
இன் இசை நல் யாழ் பத்தரும் விசி பிணி
மண் ஆர் முழவின் கண்ணும் ஓம்பி
கை பிணி விடாஅது பைபய கழி-மின் – மலை 379-383

பின்னிவைத்ததைப் போன்ற கொடிகள் பிணைந்திருக்கும் புதர்க்காட்டில் நுழையும்போதெல்லாம்,
முன்னே செல்பவன் (ஒதுக்கிப் பின்)விட்டுவிட்ட கடும் வேகம்கொண்ட திரண்ட கோல்,
இனிய இசையைத்தரும் நல்ல யாழின் (கூடு போன்ற)பத்தலினையும், இழுத்துக்கட்டப்பட்ட
(தோலில் பூசப்பட்ட கரிய)சாந்து நிறைந்த முரசின் மேற்பரப்பையும், (அடித்து உடைத்துவிடாதபடி)பாதுகாத்து,
(முன்செல்பவனைப் பற்றிய)கைப் பிடியை விட்டுவிடாமல் மெல்ல மெல்லப் போவீராக

பைம் கண் யானை பரூஉ தாள் உதைத்த
வெண் புற களரி விடு நீறு ஆடி
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபய
பாஅர் மலி சிறு கூவலின் தணியும் – நற் 41/1-4

சிறிய கண்ணையுடைய யானையின் பருத்த கால்கள் எற்றியதால் ஏற்பட்ட
வெண்மையான நிறத்தையுடைய களர் நிலத்தில் எழுந்த நுண்ணிய துகள் படிந்து
காட்டுவழியின் தொடக்கத்தில் வருந்திய வருத்தம் சிறிதுசிறிதாக
பாறைகள் மலிந்த சிறிய கிணற்று நீரில் தணிந்திட

வண்டல் ஆயமொடு உண்துறை தலைஇ
புனல் ஆடு மகளிர் இட்ட பொலம் குழை
இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்தென
புள் ஆர் பெண்ணை புலம்பு மடல் செல்லாது
கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த
வேள்வி தூணத்து அசைஇ யவனர்
ஓதிம விளக்கின் உயர் மிசை கொண்ட
வைகுறு_மீனின் பைபய தோன்றும் – பெரும் 311-318

(சிறு வீடு கட்டும்)விளையாட்டுடைய தோழியருடன் நீருண்ணும் துறையில் கூடி
நீராடுகின்ற மகளிர் (நீரில்)நழுவவிட்டுச்சென்ற பொன்னாற் செய்த மகரக்குழையினை,
இரையைத் தேடுகின்ற (நீல)மணி(போலும்) மீன்கொத்தி (தனக்கு)இரை என எண்ணிப் பாய்ந்தெடுத்து,
பறவைகள் நிறைந்திருக்கின்ற பனைமரத்தின் தனித்த மடலுக்குச் செல்லாமல்,
நூற்கேள்வியையுடைய அந்தணர் செய்தற்கரிய கடனாகச் செய்து முடித்த
வேள்விச்சாலையின் வேள்வித்தூணின்மேல் இருக்க, (அப்பறவை)யவனரின்
அன்ன(த்தைப்போன்ற தொங்கு) விளக்கைப்போலவும், (மகரக்குழை, விளக்கின் தீச்சுடர்)உயர்ந்த வானில் இடங்கொண்ட
வைகறை வெள்ளிமீன் போலவும் மினுக்மினுக் என்று இலேசாக ஒளிவிட்டும் தோன்றும்

மேல்


பைம்

(பெ.அ) 1. பசிய, பசுமையான, பச்சை நிறமுள்ள, green
2. புதிய, fresh

1

பைம் தாள் குவளை தூ இதழ் கிள்ளி – திரு 22

பசிய தண்டினையுடைய குவளையின் தூய இதழ்களைக் கிள்ளி இட்டு,

இது என் பைங்கிளி எடுத்த பைம் கிளி – ஐங் 375/2

இது என் பைங்கிளி போன்ற மகள் எடுத்து விளையாடிய பச்சைக் கிளி

2

பச்சூன் பெய்த சுவல் பிணி பைம் தோல் – பெரும் 283

பச்சை இறைச்சியை வைத்த, தோளில் மாட்டிய, பதப்படுத்தாத தோலினால் செய்த பையையுடைய

குவளை பைம் சுனை பருகி – புறம் 132/5

குவளைப்பூவையுடைய சுனையின் புதிய நீரைப் பருகி

படு வண்டு ஆர்க்கும் பைம் தார் மார்பின் – நற் 173/8

ஒலிக்கின்ற வண்டுகள் ஆரவாரிக்கும் பசுமையான மாலையினை அணிந்த மார்பின்
with a chest with fresh garlands that are buzzed by bees that are there

சில விலங்குகளின் கண்கள் பசுமையாக இருக்கும் என்று இலக்கியங்கள் கூறுகின்றன.

பைம் கண் ஊகம் பாம்பு பிடித்து அன்ன – சிறு 221
பைம் கண் யானை பரூஉ தாள் உதைத்த – நற் 41/1
பசி அட முடங்கிய பைம் கண் செந்நாய் – நற் 103/6
பைம் கண் மந்தி பார்ப்பொடு கவரும் – குறு 335/4

இங்கே பசுமையான கண்கள் என்பதற்கு ஈரம் படர்ந்த கண்கள் எனப் பொருள்கொள்ளுவது
பொருத்தமாகத் தோன்றுகிறது.

மேல்


பைய

(வி.அ) 1. மெதுவாக, slowly
2. மெல்லென, gently

1

மை அணல் காளையொடு பைய இயலி
பாவை அன்ன என் ஆய் தொடி மடந்தை
சென்றனள் – ஐங் 389/2-4

கரிய தாடியைக் கொண்ட காளையோடு மெதுவாக நடந்துகொண்டு
கொல்லிப்பாவை போன்ற என் அழகிய வளையல் அணிந்த சிறுபெண்
சென்றாள்

2

பசும்_பொன் அவிர் இழை பைய நிழற்ற – ஐங் 74/2

பைம்பொன்னாலான ஒளிவிடும் அணிகலன்கள் மெல்லென ஒளிவீச

மேல்


பையா

(வி) வருந்து, be afflicted

சிறு பைம் தூவி செம் கால் பேடை
நெடு நீர் வானத்து வாவு பறை நீந்தி
வெயில் அவிர் உருப்பொடு வந்து கனி பெறாஅது
பெறு நாள் யாணர் உள்ளி பையாந்து
புகல் ஏக்கு அற்ற புல்லென் உலவை
குறும் கால் இற்றி புன் தலை நெடு வீழ் – அகம் 57/1-6

சிறிய மெல்லிய சிறகுகளையும் சிவந்த கால்களையும் உடைய வௌவால் பேடை
நீண்ட தன்மையையுடைய வானத்தில் தாவித்தாவிப் பறந்து கடந்து,
வெயில் தகதகக்கும் வெம்மையோடு வந்து, (மரத்தில்) கனி பெறாது
அம் மரத்தில் எந்நாளில் புதிய கனிகள் கிடைக்குமோ என நினைந்து வருந்தி,
உட்புகுந்து கனிதின்ன ஏங்கிப்போகும் புல்லிய கிளைகளையுடைய
குட்டையான அடிமரத்தையுடைய இத்திமரத்தில் புல்லிய உச்சியை உடைய நீண்ட விழுதுகள்

வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும்
பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும்
மறுகு-தொறு புலாவும் சிறுகுடி அரவம்
வைகி கேட்டு பையாந்திசினே – நற் 114/1-4

வெண்மையான கொம்பினை வெட்டி எடுத்து அகன்ற பாறைகளில் வைக்கவும்,
பசிய ஊனைத் தோண்டியெடுத்து பெரிய நகத்தினைப் புதைத்துவைக்கவும்,
தெருக்கள்தோறும் புலால் நாற்றம் கவியும் சிறுகுடியில் எழும் ஆரவாரத்தை
விடியவிடியக் கேட்டு வருந்தினேன்;

மேல்


பையுள்

(பெ) துன்பம், வருத்தம், distress, suffering

பனி கால்கொண்ட பையுள் யாமத்து – நற் 241/10

பனி பெய்யத்தொடங்கிய துன்பத்தைத் தரும் நடுயாமத்தில்,

தீந்தொடை
பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப – அகம் 314/11,12

இனிய நரம்புத்தொடையினையுடைய
நல்ல யாழில் வருத்தத்தைத் தரும் செவ்வழிப்பண் தோன்ற

மேல்


பையென்

1. (பெ.அ) பசந்த, வெளிறிய, dim as twilight
– 2. (த.ஒ.வி.மு) பையையுடையேன், I was having the bag

1

அகல்வாய் வானம் ஆல் இருள் பரப்ப
பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு
சினவல் போகிய புன்கண் மாலை – அகம் 365/1-3

அகற்சி வாய்ந்த வானத்தின்கண் மிக்க இருள் பரக்க
ஞாயிற்றைப் போக்கிய பசந்த தோற்றத்துடன்
சினத்தல் மிக்க துன்பத்தைச் செய்யும் மாலைக்காலத்தே

2

பறையொடு தகைத்த கல பையென் – புறம் 371/5

பறையுடன் சேர்த்துக்கட்டிய மற்ற கலங்களையுடைய பையையுடையேனாய்,

மேல்


பையென்ற

(பெ.அ) 1. வருந்திய, sad
2. ஒளிமங்கிய, பொலிவிழந்த, lacking lustre

1

மாலை நீ தையென கோவலர் தனி குழல் இசை கேட்டு
பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய் – கலி 118/13,14

ஏ மாலையே! ‘தை’யென்று வரும் கோவலரின் தனித்த குழலோசையைக் கேட்டுக்
வருந்துகின்ற நெஞ்சத்தினையுடைய எங்களின் பக்கம் வந்து எம்மைப் பழித்துப்பாராட்டுகிறாய்!

2

அகல் ஆங்கண் இருள் நீங்கி அணி நிலா திகழ்ந்த பின்
பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல் நகல் இன்று
நன் நுதல் நீத்த திலகத்தள் – கலி 143/1-3

அகன்ற ஊரில் முன்பெல்லாம் இருள் நீங்கப்பெற்று அழகிய நிலா திகழ்வதுபோல் அழகுபெற்றிருந்தவள், இப்போது
பகற்காலத்தில் ஒளியிழந்த திங்களைப் போல், ஒளி இழந்த
நல்ல நெற்றியில் திலகம் இல்லாதவளாய்

மேல்


பையென

(வி.அ) 1. சிறிதுசிறிதாக, little by little, gradually
2. மெல்லென, gently
3. மெதுவாக, slowly
4. மெத் என்று, softly
5. மெல்ல, not loudly
6. இலேசாக, சிறிதளவாக, slightly
7. சிறிது நேரம் கழித்து, after some time

1

மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்
அறியாது அறுத்த சிறியிலை சாந்தம்
வறன்_உற்று ஆர முருக்கி பையென
மரம் வறிது ஆக சோர்ந்து உக்கு ஆங்கு என் – நற் 64/4-7

மரல் நாரினால் செய்த உடையினையுடைய மலையில் வாழும் குறவர்கள்
அறியாமல் மேல் பட்டையை அறுத்த சிறிய இலைகளைக் கொண்ட சந்தனமரம்
காய்ந்துபோய் மிகவும் கெட்டுச் சிறிதுசிறிதாக
மரமே வெறுமையுற்று சோர்ந்து விழுவதைப் போல

2

பையென
வடந்தை துவலை தூவ – நற் 152/5,6

மெல்லென
வாடைக்காற்று மழைத்துளிகளைத் தூவ

3

கரும் கால் வேங்கை செம் வீ வாங்கு சினை
வடு கொள பிணித்த விடு புரி முரற்சி
கை புனை சிறு நெறி வாங்கி பையென
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று
பசும் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கி
செலவுடன் விடுகோ தோழி – நற் 222/1-6

கருமையான அடிமரத்தையுடைய வேங்கையின் செம்மையான மலர்களையுடைய வளைந்த கிளையில்,
தழும்பு உண்டாகுமாறு இறுகக் கட்டிய சற்றுத்தளர்ந்த முறுக்கினைக் கொண்ட கயிற்றாலாகிய
கையால் செய்யப்பட்ட சிறிய வளைவைக் கொண்ட ஊஞ்சலை இழுத்து, மெதுவாக
விசும்பில் பறக்கும் அழகிய மயிலைப் போன்று, நான் இன்று
பசும்பொன்னால் ஆகிய மணிகள் பதித்த வடத்தையுடைய அல்குலைப் பற்றி, தள்ளிவிட்டு
உயரே செல்ல விடுக்கிறேன் தோழி!

4

ஒய்யென சிறிது ஆங்கு உயிரியர் பையென
முன்றில் கொளினே நந்துவள் பெரிது என – நற் 236/3,4

விரைவாக, நான் சிறிதாகிலும் உயிர்த்திருக்க, “மெத்தென்று
முற்றத்தில் இவளை இருத்தினால் நலம்பெறுவாள் பெரிதும்” என்று

5

மன்றல் அம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும் இன்று அவர் – குறு 177/3,4

பொதுவிடத்தில் உள்ள அழகிய பனையின் மடலில் இருந்து வாழ்கிற
அன்றில் பறவையும் மெல்லக் கூவும்;

6

தளவின் பைம் கொடி தழீஇ பையென
நிலவின் அன்ன நேர் அரும்பு பேணி
கார் நயந்து எய்தும் முல்லை – ஐங் 454/1-3

செம்முல்லையின் பசிய கொடியைத் தழுவிக்கொண்டு, இலேசாக
நிலவைப் போன்ற அழகிய வெண்மையான அரும்புகளைக் கொண்டு
கார்ப் பருவத்தை விரும்பித் தோன்றியிருக்கின்றன முல்லை மலர்கள்

7

வினை வெஃகி நீ செலின் விடும் இவள் உயிர் என
புனை_இழாய் நின் நிலை யான் கூற பையென
நிலவு வேல் நெடுந்தகை நீள் இடை
செலவு ஒழிந்தனனால் செறிக நின் வளையே – கலி 10/21-24

பொருள்தேடும் தொழிலை நாடி நீ பிரிந்து சென்றால் இவள் உயிரை விட்டுவிடுவாள் என்று,
சிறப்பாகச் செய்த அணிகலன்களைச் சூடியவளே! உன்னுடைய நிலையை நான் எடுத்துக்கூற, சிறிது நேரம் கழித்து
ஒளிவீசும் வேலையுடைய நெடுந்தகையாளர், நீண்ட அந்தப் பாலைவழியில்
பயணம் செய்வதைத் தவிர்த்துவிட்டார், கழன்றுபோகாமல் செறிந்து நிற்கட்டும் உன் வளையல்கள்.

இந்த இடத்தில், ’பையென’ என்பதற்கு ‘உடனே’ (immediately) என்று பொருள்கொள்வார் டாக்டர்.இராசமாணிக்கனார்
’நன்கு சிந்தித்து’ என்று பொருள்கொள்வார் டாக்டர்.ச.வே.சுப்பிரமணியன்.

மேல்