பே – முதல் சொற்கள்

பே

(பெ) அச்சம், fear

காஅய் கடவுள் சேஎய் செவ்வேள்
சால்வ தலைவ என பேஎ விழவினுள்
வேலன் ஏத்தும் வெறியும் உளவே – பரி 5/13-15

உலகத்தை அழிக்கும் கடவுளான சிவனின் மகனே! செவ்வேளே!
சான்றாண்மையுடையவனே! தலைவனே! என்று அச்சந்தரும் வெறியாட்டு விழாவில்
வேலன் புகழ்ந்துபாடும் வெறியாட்டுப் பாடல்களும் உள்ளன;

மேல்


பேகன்

(பெ) சங்ககாலச் சிற்றரசன், கடையெழு வள்ளல்களில் ஒருவன்
A liberal chief of sangam period, one of last seven such chieftains

இன்றைய பழனி என்ற ஊருக்கு அந்நாளில் ஆவிநன்குடி என்று பெயர்.
ஆவியர் குலம் என்பது ஒரு குறுநில மன்னர் குடிக்குப் பெயர். அவர்கள் அரசாண்ட இடமாதலால் ஆவிநன்குடி
என்று ஊருக்குப் பெயர் வந்தது.
ஆவி, வையாவி என்று இரு வகையிலும் ஆவியர் குல மன்னர்களை வழங்குவதுண்டு.
ஆதலால் வையாவிபுரி என்றும் சொன்னார்கள்; அதுவே நாளடைவில் வையாபுரி என்று மாறியது.
அந்த ஆவியர் குலத்தில் வந்தவன் பேகன் என்னும் குறுநில மன்னன்.
பாரியைப்போல அவனும் ஒரு வேள். அவனை வையாவிக் கோப்பெரும் பேகன் என்று சொல்லுவார்கள்.
வையாவி ஊரில் உள்ள அரசனாகிய பெரிய பேகன் என்பது பொருள்.
பேகன் ஒரு சிறந்த கொடை வள்ளல்.

கடாஅ யானை கழல் கால் பேகன்
கொடை மடம்படுதல் அல்லது
படை மடம்படான் பிறர் படை மயக்குறவே – புறம் 142/4-6

மதம் மிக்க யானையினையுடைய கழல் புனைந்த காலையுடைய பேகன்
கொடையிடத்துத் தான் அறியாமைப்படுதலல்லது
பிறர் படை வந்து கலந்து பொரின் அப்படையிடத்துத் தான் அறியாமைப்படான்

மேல்


பேடி

(பெ) பெண்தன்மை மிகுந்த மூன்றாம் பாலினர், third gender person with female characteristics
Hermaphrodite with female characteristics predominating

நன் மகிழ்
பேடி பெண் கொண்டு ஆடு கை கடுப்ப
நகுவர பணைத்த திரி மருப்பு எருமை – அகம் 206/1-3

நல்ல களிப்புடன்
பேடியாகிய பெண்ணின் உருவம் பூண்டு ஆடும்போது பின்னே சென்று மேல் வளைந்த கைகளை ஒப்ப
விளங்குதலுறப் பெருத்த முறுக்குண்ட கொம்பினையுடைய எருமையின்

மேல்


பேடை

(பெ) பறவையின் பெண் பால், Female of birds; hen;
பார்க்க : பெடை

காமரு தகைய கான வாரணம்
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்
புலரா ஈர் மணல் மலிர கெண்டி
நாள்_இரை கவர மாட்டி தன்
பேடை நோக்கிய பெரும் தகு நிலையே – நற் 21/8-12

காண்போர் விரும்பும் தன்மையவான காட்டுக்கோழியின் சேவல்
மழை நீர் ஓடிய அகன்ற நெடிய முல்லைக்காட்டில்
புலராத ஈர மணலை நன்றாகக் கிளறி
அன்றைய நாளுக்குரிய இரையை அலகினால் பற்றிக் கொன்று
தன் பெடையை நோக்குகின்ற பெருமை வாய்ந்த நிலையினை

மனை உறை புறவின் செம் கால் பேடை – நற் 162/1,2

தோடு அமை தூவி தடம் தாள் நாரை
நலன் உணப்பட்ட நல்கூர் பேடை – நற் 178/2,3

உள் இறை குரீஇ கார் அணல் சேவல்
பிற புல துணையோடு உறை புலத்து அல்கி
வந்ததன் செவ்வி நோக்கி பேடை
நெறி கிளர் ஈங்கை பூவின் அன்ன
சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின் – நற் 181/1-5

கொடு வாய் பேடை குடம்பை சேரிய
உயிர் செல கடைஇ புணர் துணை
பயிர்தல் ஆனா பைதல் அம் குருகே – நற் 338/10-12

கொடும் கண் காக்கை கூர் வாய் பேடை – நற் 367/1,2

மனை உறை கோழி குறும் கால் பேடை – குறு 139/1,2

வங்கா கடந்த செம் கால் பேடை – குறு 151/1

நீர் உறை கோழி நீல சேவல்
கூர் உகிர் பேடை வயாஅம் ஊர – ஐங் 51/1,2

புன் தலை பேடை வரி நிழல் அகவும் – ஐங் 62/2

வெண் நுதல் கம்புள் அரி குரல் பேடை – ஐங் 85/1

உலறு தலை பருந்தின் உளி வாய் பேடை – ஐங் 321/1

மென் நடை பேடை துனைதர தன் சேர்ந்த
அன்ன வான் சேவல் புணர்ச்சி போல் – கலி 147/65

கொடு வாய் பேடைக்கு அல்கு_இரை தரீஇய
மான்று வேட்டு எழுந்த செம் செவி எருவை – அகம் 3/4,5

வீளை பருந்தின் கோள் வல் சேவல்
வளை வாய் பேடை வரு_திறம் பயிரும் – அகம் 33/5,6

சிறு பைம் தூவி செம் கால் பேடை
நெடு நீர் வானத்து வாவு பறை நீந்தி – அகம் 57/1,2

சிறிய மெல்லிய சிறகுகளையும் சிவந்த கால்களையும் உடைய வௌவால் பேடை
நீண்ட தன்மையையுடைய வானத்தில் தாவித்தாவிப் பறந்து கடந்து,

பொதி வயிற்று இளம் காய் பேடை ஊட்டி
போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ் – அகம் 129/8,9

பருத்த வயிற்றினையுடைய இளங்காயைப் பேடைகட்கு ஊட்டி
ஆண்பறவைகள் பிளந்து போகட்ட பஞ்சினையுடைய வெள்ளிய கொட்டையை

கடவுள் மரத்த முள் மிடை குடம்பை
சேவலொடு புணரா சிறு கரும் பேடை
இன்னாது உயங்கும் கங்குலும் – அகம் 270/12-14

தெய்வத்தினையுடைய மரத்திடத்தவாகிய முள்ளால் மிடையப்பெற்ற கூட்டில்
தன் சேவலுடன் கூடப்பெறாத அன்றில்பேடை
துன்பமுற்று வருந்தும் இரவிலும்

குடுமி கொக்கின் பைம் கால் பேடை – அகம் 290/1

வரி புற இதலின் மணி கண் பேடை – அகம் 387/10

மேல்


பேண்

(வி) வழிபடு, worship

கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்து – நற் 165/4

தெய்வம் உறையும் உயர்ந்த மலையை வழிபடும்பொருட்டு, பலிகொடுத்து எழுந்து

வில் ஏர் வாழ்க்கை விழு தொடை மறவர்
வல் ஆண் பதுக்கை கடவுள் பேண்-மார்
நடுகல் பீலி சூட்டி துடிப்படுத்து
தோப்பி கள்ளொடு துரூஉ பலி கொடுக்கும் – அகம் 35/6-9

வில்லையே ஏராகக் கொண்ட வாழ்க்கையை உடைய, சிறப்பாக அம்பு எய்யும் மறவர்கள்
தம் வலிய ஆண்மையின் சின்னமான பதுக்கைக் கடவுளை வழிபடுவதற்கு
அந்த நடுகல்லில் மயில்தோகைகளை அணிவித்து, உடுக்கு அடித்து,
நெல்லால் ஆக்கிய கள்ளோடு செம்மறியாட்டையும் பலி கொடுக்கும்

மேல்


பேணு

(வி) 1. அன்புடன் கவனி, ஆதரி, பராமரி, கா, foster, tend, nurture, care for
2. வழிபடு, worship
3. விரும்பி உபசரி, treat courteously
4. விரும்பு, desire, wish for
5. கருத்தில்கொள், mind
6. உட்கொள், take in
7. அணிசெய், adorn
8. பாதுகா, safeguard, protect
9. கவனமுடன் கையாள், take great care, treat tenderly
10. கனிவுகாட்டு, பரிவுடன் இரு, be compassionate
11. பொருட்படுத்து, மதி, regard, value

1

வாய் பறை அசாஅம் வலி முந்து கூகை
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல்
எலி வான் சூட்டொடு மலிய பேணுதும்
எஞ்சா கொள்கை எம் காதலர் வரல் நசைஇ
துஞ்சாது அலமரு பொழுதின்
அஞ்சு வர கடும் குரல் பயிற்றாதீமே – நற் 83/4-9

ஓயாது ஒலிக்கும் வாயினால் பிறரை வருத்தும், வலிமை மிகுந்த கூகையே!
ஆட்டிறைச்சி கலந்த நெய்யிட்டுச் சமைத்த வெண்சோற்றை,
வெள்ளெலியின் சூட்டு இறைச்சியோடு நிறையத் தந்து உன்னை அன்புடன் கவனித்துக்கொள்வேன்,
அன்பில் குறைவுபடாத கொள்கையுடைய எனது காதலர் வருவதை விரும்பி
நான் தூங்காது வருந்திக்கொண்டிருக்கும்வேளையில்,
அச்சம் தோன்றும் வண்ணம் உன் கடுமையான குரலில் கூவாதிருப்பாயாக!

2

ஆழி முதல்வ நின் பேணுதும் தொழுது – பரி 2/19

சக்கரப்படையை உடைய முதல்வனே! உன்னை வழிபடுகிறோம் தொழுது.

அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும் – பட் 200

தேவர்களை வழிபட்டும், வேள்வியைச் செய்வித்தும்

3

பெரிதே உலகம் பேணுநர் பலரே – புறம் 207/7

உலகம் பெரியது, விரும்பி உபசரிப்பார் பலர் இருக்கின்றனர்

4

பேணுநர் பெறாஅது விளியும்
புன் தலை பெரும்பாழ் செயும் இவள் நலனே – புறம் 346/6,7

விரும்புவோர் கிடைக்காமல் கெடும்,
புல்லிய இடமாகிய பெரிய பாழிடமாக இவ்வூரைச் செய்யும், இவள் நலன்

5

வைகல்-தோறும் இன்பமும் இளமையும்
எய் கணை நிழலின் கழியும் இ உலகத்து
காணீர் என்றலோ அரிதே அது நனி
பேணீர் ஆகுவிர் ஐய – நற் 46/1-4

ஒவ்வொரு நாளும் இன்பமும் இளமையும்
எய்யப்பட்ட அம்பின் நிழலைப் போலக் கழிகின்ற இந்த உலகத்தில்
அதனை நீவிர் அறியமாட்டீர் என்று கூறுவது இயலாது. அதனை மிகவும்
கருத்தில்கொண்ட தன்மையர் ஆவீராக ஐயனே;

6

பேர் மகிழ் செய்யும் பெரு நறா பேணியவே
கூர் நறா ஆர்ந்தவள் கண் – பரி 7/63,64

கண்டார்க்குப் பெரு மகிழ்ச்சியைச் செய்யும் பெரிய நறவத்தின் சிவந்த நிறத்தைப் பெற்றன,
மிகுதியான கள்ளினைக் குடித்தவளின் கண்;

7

தளவின் பைம் கொடி தழீஇ பையென
நிலவின் அன்ன நேர் அரும்பு பேணி
கார் நயந்து எய்தும் முல்லை – ஐங் 454/1-3

செம்முல்லையின் பசிய கொடியைத் தழுவிக்கொண்டு, மெதுவாக
நிலவைப் போன்ற அழகிய வெண்மையான அரும்புகளால் அணிசெய்து
கார்ப் பருவத்தை விரும்பித் தோன்றியிருக்கின்றன முல்லை மலர்கள்;

8

இளம் துணை புதல்வரின் முதியர் பேணி
தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல் – பதி 70/21,22

இளம் துணைவராகிய புதல்வரைப் பெற்று, முதியோரைப் பாதுகாத்து
தொன்றுதொட்ட உன் கடமையைத் தவறாது செய்யும், வெல்லுகின்ற போரையுடைய அண்ணலே!

9

மாண உருக்கிய நன் பொன் மணி உறீஇ
பேணி துடைத்து அன்ன மேனியாய் கோங்கின் – கலி 117/1,2

“நன்றாக உருக்கிய பசும்பொன்னின் நடுவே நீலமணிகளை அழுந்தப் பதித்துப்
மிக்க கவனமாகத் துடைத்துவிட்டதைப் போன்ற கரிய நிறமுடையவளே!

10.

மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து அவன்
காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும்
பேணி அவன் சிறிது அளித்த_கால் என்
நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல் – கலி 122/8-11

மிகவும் சிறப்புள்ள அழகும் காதலும் உள்ள தன் மனைவியருடன் மனம் விரும்பி வாழும் அவன்
நம்மைக் காணும் விருப்பமும் இல்லாதவனாயிருப்பதை அறிவேன், அப்படி அறிந்திருந்தாலும்
கனிவுடன் அவன் நம்மேல் சிறிதளவாவது அன்புகாட்டியவுடனே என்
நாணமற்ற நெஞ்சம் அவனுக்காக நெகிழ்ந்துபோவதையும் காண்கிறேன்;

11.

முடலை யாக்கை முழு வலி மாக்கள்
வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து
துவலை தண் துளி பேணார் – நெடு 32-34

முறுக்குண்ட உடம்பினையும், மிகுந்த உடற்பலமும் உடைய மிலேச்சர்
வண்டுகள் மொய்க்கும் கள்ளினை மிகுதியாக உண்டு, களிப்பு மிக்கு,
தூரலாக விழும் குளிர்ந்த துளியைப் பொருட்படுத்தாமல்

மேல்


பேது

(பெ) 1. (துயரத்தால்)மனம்கலங்குதல், மனக்கலக்கம், depression, dismay
2. உன்மத்தம், delirium
3. மனக்குழப்பம், மனமயக்கம், confusion, misunderstanding
4. அறிவின்மை, மடமை, lack of wisdom or intelligence, stupidity, ignorance
5. மனம்கிறுகிறுத்தல், மனம்மயங்குதல், getting charmed or allured
6. மனம்பேதலிப்பு, discomposure of mind
7. (இடையூறினால் அடையும்) மனச்சஞ்சலம், perturbation
8. (அச்சத்தினால் ஏற்படும்)திகில், fright, panic due to fear
9. வருத்தம், தீராத்துயரம், great distress
10. மகிழ்ச்சியினால் திக்குமுக்காடிப்போதல், choking with extreme joy,
Fail to perform adequately due to tension or agitation

1

கலுழ்ந்த கண்ணள் காதலன் கெடுத்த
ஆதிமந்தி போல
ஏதம் சொல்லி பேது பெரிது உறலே – அகம் 236/19-21

அழுத கண்ணினளாகிய, தன் கணவனை இழந்த
ஆதிமந்தியைப் போல
துன்பத்தைச் சொல்லி மனம்கலங்குதல் பெரிதும் அடைவது

2

அழிந்து அயல் அறிந்த எவ்வம் மேற்பட
பெரும் பேது உறுதல் களை-மதி பெரும – கலி 129/21,22

உள்ளம் உடைந்து, ஊராருக்கும் தெரிந்துவிட்ட வருத்தம் மிகுந்திட,
மிகவும் பித்துப்பிடித்தவளாய் ஆவதைத் தடுத்து நிறுத்துவாய் பெருமானே!

3

கண் இயல் கண்டு ஏத்தி காரிகை நீர் நோக்கினை
பாண் ஆதரித்து பல பாட அ பாட்டு
பேணாது ஒருத்தி பேது உற – பரி 7/65-67

சிவந்த கண்களின் இயல்பினைக் கண்டு, தலைவன் பாராட்டி, தலைவியின் அழகிய தன்மையுள்ள பார்வையை
இசைப்பாட்டால் பாட விரும்பி, பற்பல பாடல்களைப் பாட, அந்தப் பாடல்களைப்
பாடுபவனின் கருத்தை அறியாமல் மற்றொருத்தி (தன்னைக் குறித்ததெனக் கருதியவளாக) தான் மனமயக்கம் கொள்ள

4

காதலாய் நின் இயல் களவு எண்ணி களி மகிழ்
பேது உற்ற இதனை கண்டு யான் நோக்க – பரி 18/11,12

“காதலியே! உன்னுடைய மேனிவனப்பைக் களவாடிவிட்டதாக எண்ணிக் களிப்புற்றதாய் மகிழ்ந்து
அறிவின்றி இருக்கும் இந்த மயிலைக் கண்டு நான் நோக்க

5

பேது உறு மட மொழி பிணை எழில் மான் நோக்கின்
மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்ப – கலி 27/3,4

மயங்க வைக்கும் மென்மையான மொழியும், பெண்மான் போன்ற அழகிய பார்வையும் கொண்ட
மகளிரின் பற்கள் போல் மணக்கின்ற காட்டு முல்லை அரும்புகள் மலரவும்,

6

மாதர் கொள் மான் நோக்கின் மட நல்லாய் நின் கண்டார்
பேது உறூஉம் என்பதை அறிதியோ அறியாயோ – கலி 56/17,18

கண்டவர் காதல்கொள்ளும் மான் போன்ற பார்வையைக் கொண்ட இளம்பெண்ணே! உன்னைக் கண்டவர்
மனம் பேதலித்துப்போவர் என்பதனை நீ அறிவாயோ? அறியமாட்டாயோ?

7

குரங்கு உளை பொலிந்த கொய் சுவல் புரவி
நரம்பு ஆர்த்து அன்ன வாங்கு வள் பரிய
பூத்த பொங்கர் துணையொடு வதிந்த
தாது_உண்_பறவை பேது உறல் அஞ்சி
மணி நா ஆர்த்த மாண் வினை தேரன் – அகம் 4/8-12

வளைந்த தலையாட்டத்தால் பொலிவுற்ற, கொய்த பிடரிமயிரைக் கொண்ட குதிரைகள்
நரம்புகளைச் சேர்த்தது போன்ற, வளைந்த கடிவாளத்துடன் விரைந்து ஓடுகின்ற,
பூத்திருக்கும் சோலைகளில் துணையோடு தங்கி வாழும்
பூந்தாது உண்ணும் பறவை(வண்டுகள்) மனச்சஞ்சலமடைவதை(எண்ணி) அஞ்சி,
மணிகளின் நாவுகளைச் சேர்த்துக்கட்டிய, சிறந்த வேலைப்பாடுள்ள, தேரையுடைவன்

8

யாவரும் விழையும் பொலம் தொடி புதல்வனை
தேர் வழங்கு தெருவில் தமியோன் கண்டே
கூர் எயிற்று அரிவை குறுகினள் யாவரும்
காணுநர் இன்மையின் செத்தனள் பேணி
பொலம் கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை
வருக மாள என் உயிர் என பெரிது உவந்து
கொண்டனள் நின்றோள் கண்டு நிலை செல்லேன்
மாசு இல் குறு_மகள் எவன் பேது உற்றனை
நீயும் தாயை இவற்கு என யான் தன்
கரைய வந்து விரைவனென் கவைஇ
களவு உடம்படுநரின் கவிழ்ந்து நிலம் கிளையா
நாணி நின்றோள் நிலை கண்டு யானும்
பேணினென் அல்லெனோ மகிழ்ந – அகம் 16/5-17

அனைவரும் விரும்பும் பொற்கொடி அணிந்த நம் புதல்வனைத்
தேர்கள் ஓடும் தெருவில் தனியனாய்க் கண்டு
கூரிய பற்களைக் கொண்ட இளம்பெண் கிட்டச் சென்றவளாய், ஒருவருமே
பார்ப்பவர்கள் இல்லாததால், தோற்ற ஒப்புமையைக் கருதியவளாய்ப் பாசத்துடன் தூக்கி
பொன் அணிகலன்களைச் சுமந்த, பூண்கள் தாங்கிய தன் இளம் கொங்கைகளில் –
“வா என் உயிரே” எனப் பெரிதும் உவந்து-
அணைத்துக்கொண்டவளாய் நின்றவளைப் பார்த்து, நின்ற இடத்தில் நிலைகொள்ளாமல்,
“மாசற்ற இளையவளே, எதற்குத் திடுக்கிட்டுத் திகிலடைகிறாய்,
நீயும் தாயாவாய் இவனுக்கு” என்று சொல்லி நான் பாராட்டிக்
கூறி, விரைவாகச் சென்று அவளை அணைத்துக்கொள்ள,
கையும் களவுமாய்ப் பிடிபட்டவரைப் போல் தலைகவிழ்ந்து, நிலத்தைக் கீறிக்கொண்டு
நாணி நின்றவளின் நிலைகண்டு, நானும்
அன்புடன் உபசரித்தேன் அல்லவா! தலைமகனே!

9

வெம் திறல் கூற்றம் பெரும் பேது உறுப்ப
எந்தை ஆகுல அதற்படல் அறியேன் – புறம் 238/10,11

வெவ்விய திறலையுடைய கூற்றம் பெரிய துயரத்தை விளைவிக்க
என் தந்தைபோன்றவன் அதினால் இரந்துவிட்டான் என்பதை அறியேனாய் வந்தேன்

10.

திதலை அல்குல் பெரும் தோள் குறு_மகட்கு
எய்த சென்று செப்புநர் பெறினே
இவர் யார் என்குவள் அல்லள்
——————- ————————– ———-
இரும் பல் ஒலிவரும் கூந்தல்
பெரும் பேது உறுவள் யாம் வந்தனம் எனவே – நற் 6/4-11

தேமல் படிந்த அல்குலை உடையவளும், பெரிய தோளினையுடையவளுமாகிய தலைவியிடத்தே
கிட்டிச் சென்று உரைப்பவாரைப் பெற்றால்,
“இவர் யார்” என்று சொல்பவள் அல்லள் அவள்,
———————— ———————— ————-
கரிய பலவாகிய தழைத்துத் தாழ்ந்த கூந்தலாள்
பெரிதும் (மகிழ்ச்சியில்)திக்குமுக்காடிப்போவாள் நான் வந்துவிட்டேன் என்று:

மனத்துயரினால் மட்டுமன்றி, மனமகிழ்ச்சியினாலும் பேதுறல் நடக்கும் என்பதற்கு இது ஒரு சான்று.

பெரும் பேது உறுவள் யாம் வந்தனம் எனவே – பலவித உரைகள்
பின்னத்தூரார்: களிப்பினாலே பெரிதும் மயக்கமெய்தா நிற்பாள்
ச.வே.சுப்பிரமணியன் : எத்தகைய மகிழ்ச்சி அடைவாள் நாம் வருகின்றோம் என்று தெரிந்தால்
இராமையா பிள்ளை: மகிழ்ச்சியால் பெரும் மயக்கத்தை அடைவாள், நான் வந்துள்ளேன் என்பதை எண்ணி
கு.வெ.பாலசுப்ரமணியன் : மகிழ்ச்சியால் பெரிதும் மயக்கம் அடைவாள், யாம் வந்துள்ளேம் என்று தெரிந்தால்

பேது என்ற சொல் சங்க இலக்கியங்களில் 22 முறை வருகிறது. அந்த அனைத்து இடங்களிலும் அது ‘உறு’ என்ற
சொல்லை வினையாகவோ அல்லது துணைவினையாகவோ கொண்டு வருகிறது.

பெரும் பேது உறுவள் யாம் வந்தனம் எனவே – நற் 6/11
பெரும் பேது உறுதல் களை-மதி பெரும – கலி 129/22
ஏதம் சொல்லி பேது பெரிது உறலே – அகம் 236/21
பெரு விதுப்பு உறுவி பேது உறு நிலையே – அகம் 299/21
இவளும் பெரும் பேது உற்றனள் ஓரும் – அகம் 310/6
வெம் திறல் கூற்றம் பெரும் பேது உறுப்ப – புறம் 238/10
அன்னோ பெரும் பேது உற்றன்று இ அரும் கடி மூதூர் – புறம் 336/7

ஆகிய இடங்களில் ‘பேது’ என்ற சொல் ‘பெரும்’ என்ற அடைமொழி தாங்கி வருகிறது. அந்த இடங்களில்
‘உறு’ என்ற சொல் இதற்கு வினைச்சொல்லாக வந்திருக்கிறது என எடுத்துக்கொள்ளலாம்.

யாம் செய் தொல்_வினைக்கு எவன் பேது உற்றனை – நற் 88/1
காதலர் அகன்று என கலங்கி பேது உற்று – நற் 109/2
ஊதை அம் குளிரொடு பேது உற்று மயங்கிய – குறு 197/3
எறி கண் பேது உறல் ஆய் கோடு இட்டு – குறு 358/2
பேணாது ஒருத்தி பேது உற ஆயிடை – பரி 7/67
பேது உற்ற இதனை கண்டு யான் நோக்க நீ எம்மை – பரி 18/12
பேது உறு மட மொழி பிணை எழில் மான் நோக்கின் – கலி 27/3
பிரிந்து உள்ளார் அவர் ஆயின் பேது உறூஉம் பொழுது ஆயின் – கலி 28/9
பேது உறூஉம் என்பதை அறிதியோ அறியாயோ – கலி 56/18
பேது உற்றாய் போல பிறர் எவ்வம் நீ அறியாய் – கலி 56/28
தாது_உண்_பறவை பேது உறல் அஞ்சி – அகம் 4/11
மாசு இல் குறு_மகள் எவன் பேது உற்றனை – அகம் 16/12
ஆதிமந்தி போல பேது உற்று – அகம் 45/14
ஆதிமந்தி பேது உற்று இனைய – அகம் 76/10
பேது உற்றிசினே காதலம் தோழி – அகம் 135/6

ஆகிய இடங்களில் ‘பேது’ என்ற சொல்லுக்கு ‘உறு’ என்ற சொல் ஒரு துணைவினையாக (verbaliser) நின்று
பேதுறு’என்ற வினைச்சொல்லை ஆக்குகின்றது என எடுத்துக்கொள்ளலாம். தமிழ்ப்பேரகராதியும் (Tamil Lexicon)
பேது’ என்பதைப் பெயர்ச்சொல்லாகவும், ‘பேதுறு – தல்’ என்பதை வினைச்சொல்லாகவும் தனித்தனியாகக்
கையாள்கிறது என்பதுஇங்கு கவனிக்கத்தக்கது.

மேல்


பேதுறு

(வி) பேது என்ற பெயர்ச்சொல் ‘உறு’ என்ற துணைவினையைப்பெற்று, பேதுறு என்ற வினைச்சொல்
ஆகியது. The noun pEthu gets a verbaliser ‘uRu’ and becomes a verb.
பார்க்க : பேது

மேல்


பேதை

(பெ) 1. சிறுமி, மகளிர்பருவம் ஏழனுள் ஐந்து வயதுமுதல் ஏழு வயதுவரையுள்ள பருவத்துப் பெண்,
Girl between the ages of five and seven;
2. இளமையானது, that which is very young
3. அறிவிலி, அறிவில்லாதது, அறியாமை, simpleton, foolish person/thing, ignorance
4. சூதுவாதற்ற, கள்ளங்கபடமற்ற ஆண்/பெண், simple-minded person

1

முலை முகம்_செய்தன முள் எயிறு இலங்கின
தலை முடி சான்ற தண் தழை உடையை
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்
மூப்பு உடை முது பதி தாக்கு அணங்கு உடைய
காப்பும் பூண்டிசின் கடையும் போகலை
பேதை அல்லை மேதை அம் குறு_மகள் – அகம் 7/1-6

“முலைகள் கூம்பி நிறைந்த வளர்ச்சியுற்றன. கூரிய பற்கள் மின்னுகின்றன.
தலையில் கூந்தலும் நன்கு வளர்ந்துள்ளது. குளிர்ந்த தழையாடையையும் உடுத்தியுள்ளாய்.
சுற்றித்திரியும் விளையாட்டுத் தோழியருடன் எவ்விடத்தும் செல்லாதிருப்பாய்,
மிகப் பழமை வாய்ந்த இந்த மூதூர் வருத்தும் தெய்வங்களை உடையது.
(எனவே நீ)காவலுக்கு உட்பட்டிருக்கவேண்டும், வீட்டின் வெளி வாசல் வரைக்கும் போகக்கூடாது.
சிறுமி அல்லவே நீ, அறிவுள்ள சிறுமகளே!,

2

இரும் சேறு ஆடிய நுதல கொல் களிறு
பேதை ஆசினி ஒசித்த
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே – நற் 51/9-11

கரிய சேற்றைப் பூசிக்கொண்ட நெற்றியையுடையதுமான கொல்லவல்ல ஆண்யானை
இளையதாகிய ஆசினிப் பலாவின் கிளையை வளைத்து முறித்து,
மலர்கள் செறிந்த வேங்கைமரத்தின் நிழலில் தங்கியிருக்கும் மலையை உடைய நம் தலைவனுக்காக

3

பா அடி உரல பகு வாய் வள்ளை
ஏதில்_மாக்கள் நுவறலும் நுவல்ப
அழிவது எவன்-கொல் இ பேதை ஊர்க்கே – குறு 89/1-3

பரந்த அடிப்பகுதியையுடைய உரலிடத்து பகுத்த வாயாற் பாடும் வள்ளைப்பாட்டை
அயலோராகிய பெண்கள் குறையும் கூறுவர்;
கெடுதல்தான் யாது இந்த அறிவில்லாத ஊருக்கு?

4

கறவை தந்த கடும் கால் மறவர்
கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ
முதுவாய் பெண்டின் செது கால் குரம்பை
மட மயில் அன்ன என் நடை மெலி பேதை
தோள் துணை ஆக துயிற்ற துஞ்சாள் – அகம் 63/12-16

கறவைகளைக் கொண்டுவந்த மிகுந்த வேகமுள்ள காலையுடைய மறவர்களின்
ஆரவாரமிக்க சிறிய ஊரில் இரவில் தங்கி
முதிய பெண்ணின் சோர்ந்த கால்களையுடைய குடிசையில்
இளம் மயிலைப் போன்ற எனது நடை மெலிந்த பேதைமகள்
தன் தலைவன் தனது தோளையே அணையாக வைத்துத் தூங்கப்பண்ணவும் தூங்காதவளாகி,

மேல்


பேதைமை

(பெ) மடமை, Folly; ignorance; credulousness;

நோ_தக்கன்றே காமம் யாவதும்
நன்று என உணரார் மாட்டும்
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே – குறு 78/4-6

வெறுக்கத்தக்கது காமம், ஒருசிறிதும்
நன்று என உணராதவரிடத்தும்
வலிந்து சென்று நிற்கும் பெரும் மடமையை உடையது.

மேல்


பேதையார்

(பெ) உலகியல் அறியாதவர், மடையர், simple minded persons, foolish persons

அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் – கலி 133/10

அறிவு எனப்படுவது மூடர்களின் சொற்களைப் பொறுத்துக்கொள்ளுதல்

மேல்


பேம்

(பெ) அச்சம், fear

பேஎம் நிலைஇய இரும் பௌவத்து – மது 76

அச்சம் நிலைபெற்ற கரிய கடலில்,

மேல்


பேய்

(பெ) தீயசக்தி, evil spirit, ghost, demon
பேயைப்பற்றிய சங்ககால மக்களின் நம்பிக்கையைத் திருமுருகாற்றுப்படை தெள்ளென விளக்குகிறது.

உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய்
சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின்
கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க
பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு
உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூர் உகிர் கொடு விரல்
கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை
ஒண் தொடி தட கையின் ஏந்தி வெருவர
வென்று அடு விறல் களம் பாடி தோள் பெயரா
நிணம் தின் வாயள் துணங்கை தூங்க – திரு 47-56

காய்ந்து போன மயிரினையும், நிரை ஒவ்வாத பல்லினைக் கொண்ட பெரிய வாயினையும்,
சுழலும் விழியையுடைய பசிய கண்ணினையும், கொடிய பார்வையினையும்,
பிதுங்கிய கண்ணையுடைய கூகையோடு, கொடிய பாம்பும் தூங்கும் அளவிற்குப் பெரிதான
பெரிய முலையை வருத்துகின்ற காதினையும், சொரசொரப்பான பெரிய வயிற்றையும்,
(கண்டோர்)அஞ்சுதல் பொருந்திய நடையினையும் உடைய அச்சம் தோன்றுகின்ற பேயாகிய மகள்
குருதியை அளைந்த கூரிய உகிரினையுடைய கொடிய விரலால்
கண்களைத் தோண்டி உண்ணப்பட்ட மிக்க முடை நாற்றத்தையுடைய கரிய தலையை
ஒள்ளிய தொடியையுடைய பெரிய கையில் ஏந்தி, அச்சந்தோன்ற
வென்று அழிக்கும் திறலையுடைய போர்க்களத்தைப் பாடி, தோளை அசைத்து,
நிணத்தைத் தின்கின்ற வாயையுடையளாய், துணங்கைக்கூத்து ஆட

பேயின் நாக்கு தீச்சுவாலை போன்றிருக்கும் – பேயின் காதுகள் வெள்ளாட்டின் காதுகளைப் போல் இருக்குமாம்.
பேய் பிணங்களைத் தின்னும். பிணங்களின் நிணத்தை மிகவும் விரும்பி உண்ணும்.
பேயின் பாதங்கள் இரண்டாய்ப் பிளந்து இருக்குமாம்.

எரி மறிந்து அன்ன நாவின் இலங்கு எயிற்று
கருமறி காதின் கவை அடி பேய்மகள்
நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல – சிறு 196-198

தீச்சுவாலை தலைகீழானது போன்ற நாவினையும், ஒளிரும் பற்களையும்,
வெள்ளாட்டு(க் காதினைப்போன்ற) காதுகளையும், பிளந்த பாதங்களையும் உடைய பேய்மகள்
நிணத்தை தின்று சிரிக்கின்ற தோற்றத்தைப் போன்று,

பிண கோட்ட களிற்று குழும்பின்
நிண வாய் பெய்த பேய்_மகளிர் – மது 24,25

பிணங்களைக் கோத்த கொம்புகளையுடைய ஆண்யானைத் திரளின்
நிணத்தைத் தின்ற பேய்மகளிருடைய

கவை அடி கடு நோக்கத்து
பேய்_மகளிர் பெயர்பு ஆட – மது 162,163

இரட்டையான அடிகளையும் கடிய பார்வையினையும் உடைய
பேய்மகளிர் உலாவி ஆட,

பேயின் கண்கள் முரசுகளின் முகத்தைப் போல் இருக்குமாம். பேயின் கண்கள் கருமையாக இருக்குமாம்.

பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம் – பட் 236

பேயின் கண்ணை ஒத்த, முழங்குகின்ற காவலையுடைய முரசம்

கரும் கண் பேய்_மகள் வழங்கும்
பெரும் பாழ் ஆகும்-மன் அளிய தாமே – பதி 22/37,38

கரிய கண்களையுடைய பேய்மகள் கூத்தாடும்
– பெரிய பாழ்நிலமாய்விடும், அவைதாம் இரங்கத்தக்கன!

பேய்களின் ஆண் கூளி எனப்படும்.

கணம் கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇ
பிணம் தின் யாக்கை பேய்_மகள் துவன்றவும் – பட் 259,260

திரட்சிகொண்ட ஆண்பேய்களுடன் மயிரைத் தாழ்த்து மெல்லநடந்து,
பிணந்தின்னும் வடிவையுடைய பேய்மகள் நெருங்கிச்செல்லவும்;

பேய்கள் தலைமயிரை இரண்டாகாப்பிரித்துத் தொங்கவிட்டிருக்கும். கழுது என்பது பேயின் ஒரு வகை.

கவை தலை பேய்_மகள் கழுது ஊர்ந்து இயங்க – பதி 13/15

இரண்டாகப் பிரிந்த தலைமயிருடன் பேய்மகள் கழுது என்னும் பேய் மீது ஏறி சுற்றித்திரிய

பேய்கள் நள்ளிரவில் தமக்கென உருவத்தைத் தரித்துக்கொண்டு கழுதுகளுடன் சுற்றித்திரியும்.

பானாள் கொண்ட கங்குல் இடையது
பேயும் அணங்கும் உருவு கொண்டு ஆய் கோல்
கூற்ற கொல் தேர் கழுதொடு கொட்ப – மதுரைக். 631-633

நடுநிசியைக் கழித்த இரவின் இடையாமத்தே
பேய்களும், வருத்தும் தெய்வங்களும் (காணத்தக்க)உருவங்களைக் கொண்டு, ஆராய்ந்த நெறி பிறழாத
கூற்றுவனின் கொலைத் தேராகிய கழுதுடன் சுழன்றுதிரிய,

மேல்


பேய்வெண்தேர்

(பெ) கானல்நீர், mirage

பெருநீர் ஒப்பின் பேஎய்வெண்தேர்
மரன் இல் நீள் இடை மான் நசை_உறூஉம் – நற் 84/4,5

பெரிய நீர்ப்பரப்பை ஒத்த வெண்மையான் பேய்த்தேராகிய கானல்நீரை
மரங்களற்ற நீண்ட வெளியில் இருக்கும் மான்கள் நீரென விரும்பி ஓடும்,

மேல்


பேர்

1. (வி) 1. பெயர், திரும்பிச்செல், return
2. இடம்பெயர், தள்ளிச்செல், change one’s location, move
3. பெயர், நீங்கு, leave, depart
– 2. (பெ.அ) பெரிய, உயர்ந்த, சிறந்த, large, great. immense
– 3. (பெ) பெயர், name

1.1

நீயும் தேரொடு வந்து பேர்தல் செல்லாது – நற் 300/7

நீயும் அவனோடு தேருடன் வந்து திரும்பிச் செல்லாமல்,

1.2

யாரீரோ என் விலங்கியீர் என
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற – அகம் 390/14,15

நீவிர் யாவிரோ எம்மைத் தடுப்பீர் என்று
இளநகையுடையாளாய்ச் சிறிது இடம்பெயர்ந்து நின்ற

1.3

கார் எதிர் பருவம் மறப்பினும்
பேரா யாணர்த்தால் வாழ்க நின் வளனே – பதி 24/29,30

கார்காலம் எதிர்ப்படுகின்ற தன் பருவத்தை மறந்துபோனாலும் –
நீங்காத புதுமையையுடையது, வாழ்க! உன் வளம்!

2

அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர் – பொரு 1

இடையறாத (செல்வ)வருவாயினையுடைய அகன்ற இடத்தையுடைய பெரிய ஊர்களிடத்து

3

நாடு எனும் பேர் காடு ஆக – மது 156

நாடு என்னும் பெயர்(போய்) காடு என்னும் பெயராக,

யாரீரோ என பேரும் சொல்லான் – புறம் 150/23

நீர் யார் என கேட்ப பெயரும் சொல்லிற்றிலன்

மேல்


பேர்தரு(தல்)

(வி) பெயர்ந்துசெல்(லுதல்), தாண்டு, கடந்துசெல், shift one’s place, go past something

மராஅ யானை மதம் தப ஒற்றி
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம்
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து
நாம அரும் துறை பேர்தந்து யாமத்து
ஈங்கும் வருபவோ ஓங்கல் வெற்ப – அகம் 18/4-8

தன் கூட்டத்தோடு சேராத யானையின் மதம் கெட மோதி
வலியுற்று இழுக்கும் அச்சம் தருவதுமான வெள்ளத்தை
அஞ்சாமையுள்ள ஒரு காட்டுப்பன்றியைப் போல நடுங்காமல் துணிவுடன்
அச்சம்தரும் அரிய துறையைத் தாண்டி, நள்ளிரவில்
இங்கு வருபவர்களும் உளரோ? உயர்ந்த மலையைச் சேர்ந்தவனே!

மேல்


பேராளர்

(பெ) பெருமையுடையவர், renowned person

வேண்டார்
எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின்
கள்ளுடை கலத்தர் உள்ளூர் கூறிய
நெடுமொழி மறந்த சிறு பேராளர்
அஞ்சி நீங்கும்_காலை
ஏமமாக தம் முந்துறுமே – புறம் 178/7-11

விரும்ப்பாதார்
எறியும் படைக்கலம் தம்மில் கலந்த அஞ்சத்தக்க போரின்கண்
கள்ளையுடைய கலத்தைக் கையில் கொண்டராய் ஊர்க்குள்ளே இருந்து சொல்லிய
வீரம் மேம்பட்ட வார்த்தையைப் போரின்கண் மறந்த சிறிய பேராண்மையையுடையவர்
போர்க்களத்தில் அஞ்சிப் புறங்கொடுத்து ஓடும் காலத்து
அவர்க்கு அரணாக தான் முந்துற்று நிற்பான்

நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேராள
அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய் – திரு 270,271

நச்சிவந்தோர்க்கு அதனை அளித்து நுகர்விக்கும் பெரிய புகழை ஆளுதல் உடையோனே,
இடுக்கண்பட்டோர்க்கு அருள்பண்ணும், பொன்னால் செய்த அணிகலன்களையுடைய சேயோனே

மேல்


பேரியாழ்

(பெ) பெரிய யாழ், 21 நரம்புகளைக்கொண்டது, A lute of 21 strings
குறைந்த எண்ணிக்கையில் நரம்புகளைக் கொண்ட யாழ் சிறிய யாழ் அல்லது சீறியாழ் எனப்படும்.
மலைபடுகடாம் ஒரு பேரியாழை நம் மனக்கண் முன் கொணர்ந்து நிறுத்துகிறது.

தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின்
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா
குரல் ஓர்த்து தொடுத்த சுகிர் புரி நரம்பின்
அரலை தீர உரீஇ வரகின்
குரல் வார்ந்து அன்ன நுண் துளை இரீஇ
சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி
இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி
புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து
புதுவது போர்த்த பொன் போல் பச்சை
வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால்
மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து
அடங்கு மயிர் ஒழுகிய அம் வாய் கடுப்ப
அகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது
கவடு பட கவைஇய சென்று வாங்கு உந்தி
நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை
களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்
வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேரியாழ் – மலை 21-37

(கையில் சுற்றியுள்ள)தொடியின் திருக்கினைப்போன்ற ஒன்பது என்னும் எண் உண்டான வார்க்கட்டினையும்,
(பேய்க்குப் பகையாகிய)வெண்சிறுகடுகளவும்(=சிறிதளவும்) இசைச் சுருதியில் தவறு இல்லாது
ஒலிநயத்தைக் கூர்ந்து கேட்டுக்கேட்டுக் கட்டிய வகிர்ந்து முறுக்கேற்றப்பட்ட நரம்பினில்
கழலைகள் முற்றிலும் அகலுமாறு சிம்பெடுத்து, வரகின்
கதிர்(மணிகள்) ஒவ்வொன்றாக உதிர்ந்ததைப்போல நுண்ணிய துளைகளை இட்டு,
ஒலியை எதிரொலித்துப் பெரிதாக்கும் தன்மை அமைந்த (கூடு போன்ற)பத்தலினைப் பசையினால் சேர்த்து,
மின்னுகின்ற துளைகள் முற்றிலும் அடையுமாறு ஆணிகளை இறுகப் பதித்து,
புதுமையான உருவாக்கமாக தந்தத்தை யாப்பாக(பத்தரின் மேல் குறுக்குக்கட்டையாக) அமைத்து,
புதியதாகப் போர்த்திய பொன்னின் நிறம் போன்ற (நிறமுடைய) தோல்போர்வையை உடையதாய்;
மணமாலை (இன்னும்)மணக்கும்(புதுமணம் மாறாத), (மொய்க்கும்)வண்டுகளும் மணம்வீசும் கூந்தலினையுடைய
இளம்பெண்ணின் அழகுநிறைந்த, மெல்லிதாக அசையும் அழகிய மார்பகத்தே
சென்று முடிவுறும் மயிர் முறைமையோடு அமைந்திருக்கும் அழகிய அமைப்பு போன்று,
(இரண்டு ஓரங்களையும் இணைத்து)நடுவினில் சேர்வதுபோல் சீராக அமைத்து, தனக்குரிய அளவினில் மாறாது,
இரண்டாகப் பிரிவுபட உள்ளிருத்தப்பட்ட நீண்டு வளைந்த உந்தியெனும் வயிற்றுப்பகுதியையும்;
நுட்பமான அரத்தால் அராவின நுண்ணிய தன்மையும், கரிய நிறத்தில்
களாப்பழத்தை ஒத்த, சீறியெழுந்து நிற்கும் தோற்றத்தையும்,
வளைந்து உயர்ந்த கொம்பினையும் உடைய பெரிதாய் ஒலிக்கும் பேரியாழ் என்ற பெரிய யாழை

தொடை படு பேரியாழ் பாலை பண்ணி – பதி 46/5
விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணி – பதி 57/8
இடன் உடை பேரியாழ் பாலை பண்ணி – பதி 66/2

என்ற பதிற்றுப்பத்து அடிகளால், பேரியாழில் பெரும்பாலும் பாலை என்ற பண் இசைக்கப்படும் எனத் தெரிகிறது.

மேல்


பேரியாறு

(பெ) 1. பெரிய ஆறு, பேராறு, a mighty river
2. சேரநாட்டிலுள்ள பெரியாறு எனப்படும் ஆறு, the river Periyar in kerala.

1

பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும் – அகம் 35/16

கடும் புனல் மலிந்த காவிரி பேரியாற்று
நெடும் சுழி நீத்தம் மண்ணுநள் போல – அகம் 62/9,10

சுள்ளி அம் பேரியாற்று வெண் நுரை கலங்க – அகம் 149/8

கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்து ஆஅங்கு – மது 696

மாற்றரும் தெய்வத்து கூட்டம் முன்னிய
புனல் மலி பேரியாறு இழிதந்து ஆங்கு
வருநர் வரையா செழும் பல் தாரம் – பதி 88/24-26

மாற்றுதற்கரிய தெய்வமாகிய கொற்றவை கூடியிருக்கும் மலையாகிய அயிரையிடத்தே தோன்றிய
நீர் நிறைந்த பெரிய ஆறானது இறங்கி வந்தாற் போன்ற
நின்னை நோக்கி வரும் இரவலர்க்கு வரையாது வழங்கும் செழுமையாய்ப் பலவாகிய பொருள்கள்

2

நிவந்து கரை இழிதரும் நனம் தலை பேரியாற்று
சீர் உடை வியன் புலம் – பதி 28/10,11

கரையளவும் உயர்ந்து நீர் பெருகி வழிந்து இழியும் அகன்ற இடத்தையுடைய பேரியாறு பாயும்
சிறப்புப்பொருந்திய அகன்ற புலத்தில்

மேலே குறிக்கப்பட்டுள்ள பதிற்றுப்பத்துப் பாடல் அடிகள் இந்தப் பேரியாற்றின் பெயரையோ, இடத்தையோ
குறிப்பிடவில்லை. இப்பாடல் சேரமான் பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக்கோதமனார் பாடியது.
எனவே, இது இன்றைய கேரளத்தில் உள்ள பெரியாறு என அழைக்கப்படும் ஆறாக இருக்கலாம் என்பது
அறிஞர் கருத்து.

மேல்


பேரில்பெண்டு

(பெ) பெரிய குடியைச் சேர்ந்த பெண், woman belonging to a great family or lineage

சிறுவர் தாயே பேரில்பெண்டே – புறம் 270/6

இளையோர்க்குத் தாயே, பெருங்குடிப்பெண்டே

மேல்


பேரிளம்பெண்

(பெ) முப்பத்திரண்டு வயதுக்கு மேல் நாற்பது வயதுவரையுள்ள பெண்,
Woman between the ages of 32 and 40

காமர் கவினிய பேரிளம்பெண்டிர் – மது 465

விருப்பம் மருவிய அழகுபெற்ற பெரிய இளமையினையுடைய மகளிர்

மேல்


பேழ்

(பெ.அ) 1. பெரிய, large 2. பிளந்த, split, cleft

உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய்
——————— ————————— ——————–
உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் – திரு 47 – 51

காய்ந்து போன மயிரினையும், நிரை ஒவ்வாத பல்லினைக் கொண்ட பெரிய வாயினையும்,
———————————– —————————————————-
(கண்டோர்)அஞ்சுதல் பொருந்திய நடையினையும் உடைய அச்சம் தோன்றுகின்ற பேயாகிய மகள்

பூ பொறி உழுவை பேழ் வாய் ஏற்றை – நற் 104/1

அழகிய வரிகளையுடைய புலியின் பிளந்த வாயையுடைய ஆண்

பேழ் வாய் தண்ணுமை இடம் தொட்டு அன்ன – நற் 347/6

அகன்ற வாயையுடைய தண்ணுமைப் பறையின் முகப்பைத் தட்டுவது போன்று

பெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றை – அகம் 201/16

பெரிய கையினையும் பிளந்த வாயினையும் உடைய ஆண் கரடி

பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை – அகம் 246/1

சருச்சரை பொருந்திய வயிற்றினையும் பிளந்த வாயினையும் உடைய ஆண்சங்கு

மேல்


பேழை

(பெ) வேலைப்பாடமைந்த சிறு பெட்டி, ornamental chest, box

கவலை கெண்டிய அகல் வாய் சிறு குழி
கொன்றை ஒள் வீ தாஅய் செல்வர்
பொன் பெய் பேழை மூய் திறந்து அன்ன
கார் எதிர் புறவினதுவே – குறு 233/1-4

கவலைக் கிழங்கைத் தோண்டிய அகன்ற வாயையுள்ள சிறிய குழி,
கொன்றையின் ஒளிரும் பூக்கள் பரவியதால், செல்வரின்
பொன்னை இட்டுவைக்கும் பேழையின் மூடியைத் திறந்துவைத்ததைப் போன்று
கார்காலத்தை எதிர்கொள்ளும் முல்லைநிலத்தில் உள்ளது

மேல்


பேறு

(பெ) பயன், benefit

யானும் பெற்றது ஊதியம் பேறு யாது என்னேன் – புறம் 154/6

யானும் பெற்றதனைப்பயனாகக் கொண்டு பெற்ற பொருள் சிறிதாயினும் இவன் செய்தது என்னென்று இகழேன்
I don’t say what is the benefit for what I got

மேல்


பேன்

(பெ) தலைமுடியில் அல்லது உரோமங்களுக்கிடையே இருந்து குருதியை உறிஞ்சிக் குடித்து வாழும்
ஒரு சிறிய உயிரினம், louse

ஈரும் பேனும் இருந்து இறைகூடி
வேரொடு நனைந்து வேற்று இழை நுழைந்த
துன்னல் சிதாஅர் துவர நீக்கி – பொரு 79-81

ஈரும் பேனும் இருந்து ஆட்சிசெய்து,
வேர்வையால் நனைந்து, பிற (நூல்)இழைகள் உள்ளே ஒடுமாறு
தைத்தல் (உடைய)கந்தையை முழுதும் போக்கி,

மேல்