த – முதல் சொற்கள்

கீழே உள்ள
சொல்லின் மேல்
சொடுக்கவும்


தகடு
தகடூர்
தகர்
தகரம்
தகவு
தகை
தகைப்பு
தகைபெறு
தகைமை
தகைவு
தசம்
தசும்பு
தட்கு
தட்டம்
தட்டு
தட்டை
தட்ப
தட
தடம்
தடவரல்
தடவரும்
தடவு
தடாகம்
தடாரி
தடி
தடிவு
தடை
தடைஇ
தடைஇய
தண்
தண்டம்
தண்டலை
தண்டா
தண்டு
தண்ணடை
தண்ணம்
தண்ணுமை
தண்மை
தண
தணக்கம்
தத்து
ததர்
ததரல்
ததை
தப்பல்
தபு
தபுதி
தம்
தம்பலம்
தமர்
தமனியம்
தமாலம்
தமி
தமிழ்
தயக்கு
தயங்கு
தரவு
தராய்
தரீஇ
தருக்கு
தருப்பை
தரூஉ
தலை
தலைக்கூடு
தலைக்கை
தலைக்கொள்
தலைக்கோல்
தலைச்செல்
தலைத்தா
தலைத்தலை
தலைப்படு
தலைப்பாடு
தலைப்பிரி
தலைப்பெய்
தலைப்பெயர்
தலைப்போகு
தலைமடங்கு
தலைமண
தலைமயக்கு
தலைமயங்கு
தலைமிகு
தலையளி
தலைவரு(தல்)
தலைவாய்
தலைவை
தவ
தவசி
தவல்
தவா
தவாலியர்
தவிர்
தழங்கு
தழல்
தழிஞ்சி
தழீஇ
தழீஇய
தழும்பன்
தழூஉ
தழூஉ_அணி
தழை
தளம்பு
தளவம்
தளவு
தளி
தளிர்
தளை
தளைவிடு
தறி
தறுகண்
தறுகணாளர்
தறை
தன்முன்
தனம்
தனாது
தனித்தலை

தகடு

(பெ) 1. உலோகத்தட்டு, metal plate
2. பூவின் புறவிதழ், outer petal of a flower

1.

புலி பொறி கொண்ட பூ கேழ் தட்டத்து
தகடு கண் புதைய கொளீஇ துகள் தீர்ந்து – நெடு 126,127

புலியின் உருவம் பொறிக்கப்பட்ட பொலிவு பெற்ற நிறத்தையுடைய தட்டம் போன்ற
தகடுகளால் நடுவுவெளியான இடம் மறையும்படி கோக்கப்பட்டு, குற்றமற்று

2.

முள் சினை
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி – பெரும் 214,215

முள்ளையுடைய கொம்புகளையுடைய
அரும்புகள் சூழ்ந்த இதழ்களையுடைய மறிந்த வாயையுடைய முள்ளியின்

மேல்


தகடூர்

(பெ) தருமபுரி, அதியமான் என்னும் சிற்றரசனுக்குத் தலைநகர்.
Capital of Atiyamāṉ, a Tamilian chieftain of ancient times, now identified with Dharmapuri

வில் பயில் இறும்பின் தகடூர் நூறி – பதி 78/9

விற்படையினர் நிறைந்த காவற்காட்டையுடைய தகடூரைத் தகர்த்து

மேல்


தகர்

(பெ) 1. மேட்டு நிலம், elevated land
2. ஆட்டுக்கிடா, male of sheep

1.

வேல் தலை அன்ன வை நுதி நெடும் தகர்
ஈத்து இலை வேய்ந்த எய் புற குரம்பை – பெரும் 87,88

வேலின் முனையைப் போன்ற கூர்மையான முனையைக்கொண்ட, நெடிய மேட்டில் உள்ள
ஈந்தினுடைய இலையால் வேயப்பட்ட எய்ப்பன்றியின் முதுகு போலும் புறத்தினையுடைய குடில்

2.

தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇ – மலை 414

கிடாக்கள் கலந்த செம்மறியாடுகள் வெள்ளாடுகளோடு கலந்து

மேல்


தகரம்

(பெ) 1. ஒரு வாசனை மரம், Wax-flower dog-bane, Tabernae montana
2. தகர மரக்கட்டையை அரைத்துக் குழைத்துச்செய்த மயிர்ச்சாந்து, Aromatic unguent for the hair

1.

கவரி,
அயல
தகர தண் நிழல் பிணையொடு வதியும் – புறம் 132/4-6

கவரிமா
பக்கத்திலுள்ள
தகரமரத்தின் குளிர்ந்த நிழலின்கண் தனது பிணையுடனே தங்கும்

2.

தகரம் நீவிய துவரா கூந்தல் – பதி 89/16

மணம்வீசும் தகரமயிர்ச்சாந்து பூசிய எண்ணெய்ப்பசை நீங்காத கூந்தல்

மேல்


தகவு

(பெ) 1. தகுதி, suitability, worthiness
2. கற்பு, chastity

1.

தாழ்ந்தாய் போல் வந்து தகவு இல செய்யாது – கலி 69/22

தாழ்ந்தவன் போல் வந்து தகுதியில்லாதவற்றைச் செய்யாதே!

2.

தகவு உடை மங்கையர் சான்றாண்மை சான்றார் – பரி 20/88

கற்புடைய மங்கையர் சான்றாண்மை மிக்க பெரியவர்

மேல்


தகை

1. (வி) 1. தடுத்து நிறுத்து, stop, resist
2. கட்டு, bind
3. அழகுபடுத்து, make beautiful
4. உள்ளடக்கு, enclose
5. சுற்று, wind round, coil
2. (பெ) 1. மாலை, garland
2. தன்மை, இயல்பு, nature, characteristic
3. உயர்வு, excellence, greatness
4. அழகு, beauty, loveliness
5. பொருத்தம், இயைபு, fitness, suitability
6. நன்மை, நலம், goodness, virtue

1.1.

ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க
சென்றி பெரும நின் தகைக்குநர் யாரோ – அகம் 46/15,16

ஒளிரும் வளையணிந்த தலைவியின் அழகு குன்றினும் குன்றுக;
போய்விடு பெருந்தகையே! உன்னைத் தடுப்பவர் யாருமில்லை.

1.2.

ஓங்கு நிலை வாயில் தூங்குபு தகைத்த
வில் விசை மாட்டிய விழு சீர் ஐயவி – பதி 22/22,23

உயர்ந்து நிற்கும் வாயில்களில், தொங்கிக்கொண்டிருக்கும்படி கட்டிய,
எந்திர வில்கள் பொருத்தப்பட்ட, மிகுந்த சிறப்பினையுடைய ஐயவித்துலா மரங்களும்

1.3.

குவி இணர் எருக்கின் ததர் பூ கண்ணி
ஆடூஉ சென்னி தகைப்ப – அகம் 301/11,12

குவிந்த கொத்துக்களையுடைய எருக்கினது நெருங்கிய பூக்களாலான கண்ணி
ஆடவர் சென்னியை அழகுறுத்த

1.4.

தண் கேணி தகை முற்றத்து – பட் 51

குளிர்ந்த சிறிய குளங்களை உள்ளேயடக்கின முற்றத்தையுடைய

1.5.

தகை தார்
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண்
கிள்ளிவளவன் படர்குவை ஆயின் – புறம் 69/14-16

சுற்றப்பட்ட மாலையையும்
ஒள்ளிய எரியை ஒக்கும் நிறம் பொருந்திய பசும்பொன்னால் செய்யப்பட்ட பூணினையுமுடைய
கிள்ளி வளவனைடத்தே செல்குவையாயின்

2.1.

முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து – திரு 139

மொட்டு வாய் நெகிழ்ந்த மாலை சூழ்ந்த மார்பினையும் (கொண்ட)

2.2.

முகிழ் தகை
முரவை போகிய முரியா அரிசி – பொரு 112,113

(முல்லை)அரும்பின் தன்மையையுடைய
(தீட்டப்படாத அரிசியிலுள்ள)வரி நீக்கப்பெற்ற(தீட்டிய) உடையாத(முழு) அரிசியின்

2.3.

கரும் கால் வேங்கை நாள் உறு புது பூ
பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப
தகை வனப்பு உற்ற – நற் 313/1-3

கருமையான அடிமரத்தையுடைய வேங்கை மரத்தின் காலையில் பூத்த புதிய பூக்கள்
பொன்வேலை செய்யும் பொற்கொல்லனின் சிறந்த கைவேலைப்பாட்டைப் போல
சிறப்பான வனப்பைப் பெற்றன

2.4.

தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே – நற் 370/11

அழகிய மலர் போன்ற மையுண்ட கண்களைத் தன் கைகளினால் மூடிக்கொண்டாள்.

2.5.

பொய் வலாளன் மெய் உற மரீஇய
வாய் தகை பொய் கனா மருட்ட ஏற்று எழுந்து
அமளி தைவந்தனனே – குறு 30/2-4

அந்தப் பொய்சொல்வதில் வல்ல தலைவன் என்னை மார்புறத் தழுவிய
வாய்ப்பதற்கேதுவான பொய்க்கனவு மருட்ட, நினைவு பெற்று எழுந்து
படுக்கையைத் தடவிப்பார்த்தேன்!

2.6.

எழில் தகை இள முலை பொலிய – ஐங் 347/2

அழகும் நலமும் சேர்ந்த என்னுடைய இளம் முலைகள் பொலிவுபெறும்படியாக

மேல்


தகைப்பு

(பெ) 1. வீட்டின் உள்கட்டு, inner portion of a house
2. படைகளின் அணிவகுப்பு, Battle array of an army
3. கட்டுமானம், built structure
4. அரண்மனைக் கட்டுமானம், Palatial building

1.

கொடும் திண்ணை பல் தகைப்பின்
புழை வாயில் போகு இடைகழி
மழை தோயும் உயர் மாடத்து – பட் 143-145

சுற்றுத் திண்ணையினையும், பல உள்கட்டுக்களையும்,
சிறுவாசலையும், பெரியவாசலையும், நீண்ட நடை(ரேழி)களையும் உடைய
மேகங்களை எட்டித்தொடும்(அளவுக்கு) உயரமான மாடத்தில்

2.

ஆர் அரண் கடந்த தார் அரும் தகைப்பின்
பீடு கொள் மாலை பெரும் படை தலைவ – பதி 24/4,5

கடத்தற்கரிய அரண்களை அழித்துச் செல்லும் முன்னணிப்படையின் அரிய அணிவகுப்பினையுடைய
பெருமை கொள்ளும் இயல்பினையுடைய பெரும் படைக்குத் தலைவனே!

3.

எந்திர தகைப்பின் அம்பு உடை வாயில் – பதி 53/7

(வில் இல்லாமல்) எந்திரக் கட்டுமானத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அம்புகளை உடைய வாயில்

4.

களிறு நிலை முணைஇய தார் அரும் தகைப்பின்
புறஞ்சிறை வயிரியர் காணின் – பதி 64/7,8

களிறுகள் நிற்பதற்கு வெறுத்த, ஒழுங்காக அமைந்த உயர்ந்த கட்டுக்காவலையுடைய அரண்மனையின்
வெளிப்புறத்தில் கூத்தர்கள் வரக் காணும்போது

மேல்


தகைபெறு

(வி) அழகுடன் விளங்கு, look beautiful

தகைபெறு கழனி அம் தண் துறை ஊர கேள் – கலி 79/6

அழகுபெற்ற வயல்வெளிகளையுடைய அழகிய குளிர்ந்த துறையையுடைய ஊரனே கேட்பாயாக!

மேல்


தகைமை

(பெ) 1. பண்பு, தன்மை, இயல்பு, nature, characteristic
2. அழகு, beauty
3. தகுதிப்பாடு, suitability

1.

பகைமையின் கடிது அவர் தகைமையின் நலியும் நோய் – கலி 137/17

பகைமையிலும் கொடியது அவரது பண்புகளால் நான் நலிகின்ற நோய்;

2.

அடு நறா மகிழ் தட்ப ஆடுவாள் தகைமையின்
நுனை இலங்கு எஃகு என சிவந்த நோக்கமொடு
துணை அணை கேள்வனை துனிப்பவள் நிலையும் – பரி 21/20-22

சமைக்கப்பட்ட கள்ளை உண்டதனாலான களிப்பு தன்னைத் தடுக்க, ஆடுகின்ற விறலியின் அழகு காரணமாக,
நுனி ஒளிரும் வேலினைப்போன்ற சிவந்த பார்வையோடே,
தனக்குத் துணையாக அணைத்துக்கொண்டிருக்கும் தன் கணவனிடம் ஊடல்கொண்டவளின் நிலையும்,

3.

வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்
கூந்தல் முரற்சியின் கொடிதே
மறப்பல் மாதோ நின் விறல் தகைமையே – நற் 270/9-11

பகைவரை ஓட்டிய ஏந்திய வேற்படையை உடைய நன்னன்
பகைவரின் உரிமைமகளிரின் கூந்தலைக் கயிறாகத் திரித்த கொடுமையினும் கொடியது,
மறந்துவிடுவேன் உன் சிறப்பியல்பின் தகுதிப்பாட்டினை.

மேல்


தகைவு

(பெ) தடுத்தல், obstruction

கண்டவர் இல் என உலகத்துள் உணராதார்
தங்காது தகைவு இன்றி தாம் செய்யும் வினைகளுள் – கலி 125/1,2

தாம் செய்யும் தவறுகளை உலகத்தில் கண்டவர் யாரும் இல்லை என்று எண்ணிக்கொண்டு, அறியாதவர்கள்
அவற்றைச் செய்யக்கூடாது என்று எண்ணாமலும், அவற்றைத் தடுப்பார் யாரும் இன்றியும், செய்கின்ற செயல்களுள்

மேல்


தசம்

(பெ) பத்து, ten

தசம் நான்கு எய்திய பணை மருள் நோன் தாள்
இகல் மீக்கூறும் ஏந்து எழில் வரி நுதல்
பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து – நெடு 115-117

பத்துக்கள் நான்கு(நாற்பது ஆண்டு)சென்ற, முரசென்று மருளும் வலிய கால்களையும்,
போரில் புகழ்ந்து போற்றப்படும் உயர்ந்த அழகினையும், புகர்நிறைந்த மத்தகத்தினையுமுடைய,
போரிட்டு வீழ்ந்த யானையின், தானாக வீழ்ந்த கொம்புகளின் இரண்டுபுறங்களையும் சீவி,

மேல்


தசும்பு

(பெ) பானை, குடம், pot,

துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதி தேறல் – மலை 463

(வேகும்போது கொதிப்பதால்)குலுங்கும் பானையிலிருந்து வடித்த (நெல்லின்)இளம் முளைகளாலான தெளிந்த கள்ளை

மேல்


தட்கு

(வி) 1. தங்கு, remain,stay
2. தளையிடு, கட்டு, bind, enchain

1.

செற்ற தெவ்வர் கலங்க தலைச்சென்று
அஞ்சுவர தட்கும் அணங்கு உடை துப்பின் – மது 139,140

(தம்மால்)செறப்பட்ட பகைவர் மனம் கலங்கும்படி அவரிடம் சென்று
(அவர்க்கு)அச்சம் தோன்றத் தங்கும், வருத்தத்தை உடைய வலிமையினையும்,

2.

ஓடி உய்தலும் கூடுமன்
ஒக்கல் வாழ்க்கை தட்கும் மா காலே – புறம் 193/3,4

நன்னெறிக்கண்ணே ஒழுகிப் பிழைக்கவும் கூடும்
சுற்றத்தோடு கூடி வாழும் இல்வாழ்க்கை காலைத் தளையிட்டு நிற்கும்.

மேல்


தட்டம்

(பெ) கச்சு, broad tape

புலி பொறி கொண்ட பூ கேழ் தட்டத்து
தகடு கண் புதைய கொளீஇ துகள் தீர்ந்து – நெடு 126,127

புலியின் உருவம் பொறிக்கப்பட்ட பொலிவு பெற்ற நிறத்தையுடைய தட்டம் போன்ற
தகடுகளால் நடுவுவெளியான இடம் மறையும்படி கோக்கப்பட்டு, குற்றமற்று

மேல்


தட்டு

(வி) தளை, கட்டு, பிணி, bind, entangle

நிலன் நெளி மருங்கில் நீர்நிலை பெருக
தட்டோர் அம்ம இவண் தட்டோரே – புறம் 18/28,29

நிலம் குழிந்தவிடத்தில் நீர்நிலை பெருகும்வண்ணம் நீரினைப் பிணித்துவைத்தோர்
தாம் செல்லும் உலகத்துச் செல்வம் முதலாகியவற்றை இவ்வுலகத்துத் தம் பேரோடு பிணித்துக்கொண்டவராவர்.

மேல்


தட்டை

(பெ) 1. சோளம், கரும்பு, மூங்கில் போன்றவற்றின் நடுப்பகுதி, stalk, stubble
2. கிளிகடிகருவி, A mechanism made of split bamboo for scaring away parrots from grain fields
3. கரடிகை என்னும் பறை, a kind of drum

1.

கண் விடுபு உடையூஉ தட்டை கவின் அழிந்து – மது 305

முங்கிலின் கணுக்கள் திறக்கப்பட்டு உடைவதனால் தட்டை அழகு அழிந்து

2.

ஒலி கழை தட்டை புடையுநர் புனம்-தொறும்
கிளி கடி மகளிர் விளி படு பூசல் – மலை 328,329

ஒலிக்கும் மூங்கில் தட்டைகளை மீண்டும் மீண்டும் அடிப்பவராய், புனங்கள்தோறும்
கிளியை விரட்டுகின்ற பெண்களின் கூச்சலால் எழும் ஆரவாரமும்;

3.

இட்டு வாய் சுனைய பகு வாய் தேரை
தட்டை_பறையின் கறங்கும் நாடன் – குறு 193/2,3

சிறிய வாயையுடைய சுனையில் உள்ள பிளந்த வாயையுடைய தேரைகள்
தட்டைப் பறையைப் போல ஒலிக்கும் நாட்டையுடைய தலைவன்

மேல்


தட்ப

(வி.எ) 1. தடுக்க, to stop, to prevent
2. தணிய, be alleviated

1.

காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்
யானே பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி – நற் 94/2,3

அன்பான மொழிகளைக் கூறுதல் ஆண்மகனுக்குச் சிறந்த பண்பாகும்;
நானோ எனது பெண்மையுணர்வு தடுக்க அந்நோயை வெளிப்படுத்தாதவாறு தாங்குகிறேன்;

2.

ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணி பொலிந்த நின்
களி தட்ப வந்த இ கவின் காண இயைந்ததை – கலி 66/19,20

ஒளிவீசும் நெற்றியினராகிய பரத்தையருடன் ஒரே ஆடையில் மகிழ்ந்திருந்த உன்
காம வேட்கை சிறிது தணிய, இங்கு வந்த காட்சியின் அழகைக் காண் நேர்ந்தது.

மேல்


தட

(பெ.அ) 1. அகலமான, விரிந்த, பெரிய, large, broad
2. வளைந்த, bent, curved

1.

வலம்புரி பொறித்த மா தாங்கு தட கை – முல் 2

வலம்புரி(ச் சங்கின்) குறிகள் பொறிக்கப்பட்ட, திருமகளை அணைத்த பெரிய கையில்

2.

தட மருப்பு எருமை தாமரை முனையின் – அகம் 91/15

வளைந்த கொம்பையுடைய எருமை தாமரையை வெறுக்குமாயின்

மேல்


தடம்

(பெ) 1. அகலம், பரப்பு, width, expanse
2. பெருமை, greatness
3. வளைவு, curve, bend
4. குளம், tank

1.

பாடு இமிழ் பனி கடல் துழைஇ பெடையோடு
உடங்கு இரை தேரும் தடம் தாள் நாரை – நற் 91/3,4

ஓசை முழங்குகின்ற குளிர்ந்த கடலில் துழாவித் தன் பெடையோடு
சேர்ந்து இரையைத் தேடும் அகன்ற பாதங்களையுடைய நாரை

தடம் கடல் வாயில் உண்டு சில் நீர் என
——————-
கார் எதிர்ந்தன்றால் – நற் 115/4-7

பரந்த கடலின் நீரை வாயினால் எடுத்துக்கொண்டு அதனைச் சிறிதளவு நீரே என்னும்படி,
—————————-
கார்காலம் எதிர்ப்பட்டது

2.

தன் நாற்றம் மீது தடம் பொழில் தான் யாற்று
வெம் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப – பரி 20/12,13

பெரிய பொழில்களின் மலர்களின் மணத்திற்கும் மேலாக, ஆற்றின்
வெம்மையான மணலில் புதுநீர் பரவுவதால் புதிதாய் புகுந்து பரவும் நாற்றம் குளிர்ந்த வாடையாய் மாற

3.

தடம் கோட்டு ஆமான் மடங்கல் மா நிரை – நற் 57/1

வளைந்த கொம்புகளையுடைய காட்டுப்பசு, சிங்கம் முதலான விலங்குகளின் கூட்டம்

4.

முகை வாய்த்த தடம் போலும் இளமையும் நிலையுமோ – கலி 17/16

மொட்டுக்களைப் பெற்ற குளம் நாளும் வற்றுவதைப் போல இவளின் இளமையும் வற்றாமல் நிற்குமோ?

மேல்


தடவரல்

(பெ) வளைவு, bending, curving

ஐய செய்ய மதன் இல சிறிய நின்
அடி நிலன் உறுதல் அஞ்சி பைய
தடவரல் ஒதுக்கம் தகை கொள இயலி
காணிய வம்மோ கற்பு மேம்படுவி – அகம் 323/4-7

அழகிய சிவந்த வலியற்ற சிறிய உன்
அடிகள் நிலத்தில் பொருந்துதலை அஞ்சி, மெல்லென
உடல் வளைந்து நடக்கும் நடை அழகுபெற நடந்து
காணுதற்கு வருவாயாக, கற்பில் மேம்பட்டவளே!

மேல்


தடவரும்

(வி-பெ) தடவுதல், வருடுதல், stroking

கன்று உடை மட பிடி களிறொடு தடவரும்
புன் தலை மன்றத்து அம் குடி சீறூர் – அகம் 321/9,10

கன்றினையுடைய இளைய பெண்யானை தன் களிற்றுடன் கூடித் தடவிப்பார்க்கும்
பொலிவற்ற இடத்தினையுடைய மன்றினையும் அழகிய குடியிருப்பினையும் உடைய சீறூரில்

மேல்


தடவு

(பெ) 1. கணப்புச்சட்டி, earthen pot holding fire with cinder
2. மண்சட்டி, earthern pot
3. ஓமகுண்டம், sacrificial pit
4. ஒரு மரம், a tree
5. வளைவு, curve, bend
6. அகலம், breadth
7. பெருமை, greatness

1.

பகு வாய் தடவில் செம் நெருப்பு ஆர – நெடு 66

பிளந்த வாயையுடைய கணப்புச்சட்டியின் சிவந்த நெருப்பின் (வெம்மையை)நுகர;

2.

கள் உடை தடவில் புள் ஒலித்து ஓவா – நற் 227/7

கள்ளையுடைய குடத்தில் வண்டினங்கள் மொய்த்து ஒலியெழுப்புதல் நிற்காத

3.

நீயே வட பால் முனிவன் தடவினுள் தோன்றி – புறம் 201/8

நீதான், வடபக்கத்து முனிவனுடைய ஓமகுண்டத்தில் தோன்றி

4.

அன்றில்
இறவின் அன்ன கொடு வாய் பெடையொடு
தடவின் ஓங்கு சினை கட்சியில் – குறு 160/1-3

ஆண் அன்றில்
இறாமீனைப் போன்ற வளைந்த மூக்கினையுடைய பெண் அன்றிலோடு
தடா மரத்தின் உயர்ந்த கிளையிலுள்ள கூட்டிலிருந்து

5.

தடவு நிலை பலவின் முழு முதல் கொண்ட
சிறு சுளை பெரும் பழம் கடுப்ப – பெரும் 77,78

வளைந்த நிலைமையினையுடைய பலாமரத்தின் அடிப்பகுதியில் குலைகொண்ட
சிறியதாகிய சுளையினையுடைய பெரிய பழத்தை ஒப்ப,

6.

இறவு புறத்து அன்ன பிணர் படு தடவு முதல்
சுறவு கோட்டு அன்ன முள் இலை தாழை – நற் 19/1,2

இறாலின் முதுகைப் போன்ற சொரசொரப்பு வாய்ந்த அகன்ற அடியினைக்கொண்ட
சுறாமீனின் கூரிய கொம்பைப் போன்ற முட்களைக் கொண்ட இலையையுடைய தாழையின்

7.

உரவு திரை பொருத பிணர் படு தடவு முதல்
அரவு வாள் வாய முள் இலை தாழை – நற் 235/1,2

வலிமையான அலைகள் மோதுகின்ற சொரசொரப்பான பெரிய அடியையும்,
அரத்தின் வாய்போன்றதாயுள்ள முள்ளாலான இலைகளையும் கொண்ட தாழை

மேல்


தடாகம்

(பெ) குளம், pond

தடாகம் ஏற்ற தண் சுனை பாங்கர் – பரி 9/77

தடாகத்தைப் போன்ற குளிர்ந்த சுனையின் பக்கத்தில்

மேல்


தடாரி

(பெ) 1. உடுக்கை, Drum shaped like an hour-glass
2. கிணைப்பறை, A drum or tabor of the agricultural tract

1.

கை கசடு இருந்த என் கண் அகன் தடாரி – பொரு 70

கை அழுக்கு இருந்த என் கண் அகன்ற உடுக்கையில்

2.

அரி குரல் தடாரியின் யாமை மிளிர – புறம் 249/4

அரித்து எழும் ஓசையையுடைய கிணைப்பறையின் முகமே போலும் யாமை பிறழ

மேல்


தடி

1. (வி) 1. கொல், அழி, kill, destroy
2. வெட்டு, cut down, hew down
2. (பெ) 1. துண்டம், piece
2. தசை, flesh

1.1

சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் – திரு 46

சூரனாகிய தலைவனைக் கொன்ற ஒளிவிடுகின்ற இலைத்தொழிலையுடைய நெடிய வேல்

1.2.

மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து – திரு 60

மாமரத்தின் அடியை வெட்டின குற்றம் இல்லாத வெற்றியினையும்

2.1.

கரும் கண் வராஅல் பெரும் தடி மிளிர்வையொடு – நற் 60/4

கரிய கண்களையுடைய வரால் மீனின் பெரும் துண்டங்கள் குழம்பிலே இட்டவற்றை

2.2.

என்பொடு தடி படு இடம் எல்லாம் எமக்கு ஈயும்-மன்னே – புறம் 235/6

எலும்புடன் தசைத்துண்டங்கள் இருக்கும் வழியெல்லாம் எமக்குக் கொடுப்பான்

மேல்


தடிவு

(பெ) துண்டாக்குதல், cutting,

தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம் – புறம் 320/13

துண்டு துண்டாக அறுத்து நிறைந்திட்ட இறைச்சியை

மேல்


தடை

1. (வி) 1. தடு, hinder, stop
2. அகன்றிரு, be broad
– 2. (பெ) இடையூறு, hindrance, obstacle

1.1.

நசையுநர் தடையா நன் பெரு வாயில் – பொரு 66

விரும்பி வந்தாரைத் தடுக்காத நல்ல பெரிய (கோபுர)வாயிலினுள்

1.2.

தடையின திரண்ட தோள் தகை வாட சிதைத்ததை – கலி 45/15

அகன்று திரண்டு இருக்கும் தோள்களின் அழகு வாட நீ சிதைத்துவிட்டாய்

2.

வேண்டு வழி நடந்து தாங்கு தடை பொருது – பரி 7/19

விருப்பமான வழிகளிலெல்லாம் நடந்து, குறுக்கிடும் இடையூறுகளை மோதித்தாக்கி,

மேல்


தடைஇ

(வி.எ) தடவி என்பதன் திரிபு
1. வருடி, stroking
2. மறைத்து, hiding
3. திரண்டு, be rotund

1.

கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ
கரும் கோட்டு சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப – நெடு 69,70

பெரிய எழுகின்ற முலையின் வெப்பத்தால் வருடி,
கரிய தண்டினையுடைய சிறுயாழைப் பண் நிற்கும் முறையிலே நிறுத்த

2.

தழையும் தாரும் தந்தனன் இவன் என
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ
தைஇ திங்கள் தண் கயம் படியும் – நற் 80/5-7

உடுக்கும் தழையும், சூடும் மாலையும் தந்தான் இவன் என்று
அணிகலன் அணிந்த தோழியரோடு தகுந்த நாணத்தை மறைத்துக்கொண்டு
தைத்திங்களில் குளிர்ந்த குளத்துநீரில் நீராடும்

3.

முறம் செவி யானை தட கையின் தடைஇ
இறைஞ்சிய குரல பைம் தாள் செந்தினை – நற் 376/1,2

முறம் போன்ற செவியினைக் கொண்ட யானையின் நீண்ட கையினைப் போல, பருத்து வளர்ந்து
தலைசாய்த்த கதிர்களைக் கொண்ட பசிய தாள்களைக் கொண்ட செந்தினையை

மேல்


தடைஇய

(வி.எ/பெ.எ) தடவிய என்பதன் திரிபு, பருத்து வளர்ந்த, திரண்ட, being rotund

அம் பணை தடைஇய மென் தோள் முகிழ் முலை – நெடு 149

அழகான மூங்கில் (போலத்)பருத்து வளர்ந்த மெல்லிய தோளினையும், (மொட்டுப்போல்)குவிந்த முலை

தேம் முதிர் சிலம்பில் தடைஇய
வேய் மருள் பணை தோள் அழியலள்-மன்னே – நற் 188/8,9

தேன் மிக்க மலைச்சரிவில் பருத்து வளர்ந்த
மூங்கில் போன்ற பருத்த தோள்கள் மெலிந்துபோகுமாறு ஆகமாட்டாள்.

மேல்


தண்

(பெ) குளிர்ச்சி, coolness

தண் பணை தழீஇய தளரா இருக்கை – பொரு 169
தண் பணை தழீஇய தளரா இருக்கை – சிறு 78
தண் பணை தழீஇய தளரா இருக்கை – பெரும் 242

குளிர்ந்த வயலையுடைய மருத நிலம் சூழ்ந்த சோர்வுறாத குடியிருப்புகளில்

மேல்


தண்டம்

(பெ) 1. படை, army
2. அனாவசியமாய் ஏற்படும் இழப்பு, Loss; useless expense;
3. தண்டனை, punishment

1.

தண்டம் இரண்டும் தலைஇ தாக்கி நின்றவை – பரி 10/60

படைகள் இரண்டும் ஒருவரையொருவர் தாக்கி நின்றவை

2.

தன் மார்பும் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும் – பரி 20/64

தன்னுடைய தலைவனின் மார்பை உனக்கு வீணாகத் தந்திருக்கும் முத்துமாலையையுடைய இவளின் மார்பும்

3.

வந்து அடி பொருந்தி முந்தை நிற்பின்
தண்டமும் தணிதி நீ பண்டையின் பெரிதே – புறம் 10/5,6

வந்து நின் பாதத்தை அடைந்து முன்னே நிற்பாராயின்
அவரைச் செய்யும் தண்டமும் தணிவை நீ, முன்னைக்காட்டிலும் பெரிதான அருளினால்

மேல்


தண்டலை

(பெ) சோலை, grove

பல் வேறு பூ திரள் தண்டலை சுற்றி – மது 341

பலவாய் வேறுபட்ட பூத்திரளையுடைய பூந்தோட்டங்கள் சூழ்ந்த

மேல்


தண்டா

(பெ.எ) 1. குறைவுபடாத, non decreasing, non diminishing
2. கெடாத, அழியாத, non perishing
3. தடைப்படாத, without hindrance

1.

தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி – பெரும் 460

குறையாத கொடையினையுடைய நின் பெரிய பெயரைப் புகழ்ந்துசொல்லி

2.

தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா
வண்டு ஓர் அன்ன அவன் தண்டா காட்சி
கண்டும் கழல் தொடி வலித்த என்
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே – நற் 25/9-12

தேனை உண்ணும் வேட்கையினால் மலரின் தன்மையை ஆராயாமல் போய் விழுகின்ற
வண்டின் ஒரு தன்மையை ஒத்த அவனது கெடாத தோற்றப்பொலிவைக்
கண்டும் கழன்றுபோன வளையல்களை மீண்டும் செறித்துக்கொண்ட எனது
பண்பற்ற செய்கை என்னில் நினைப்பாகவே இருக்கின்றது.

3.

நெடு மதில் நிரை ஞாயில்
அம்பு உமிழ் அயில் அருப்பம்
தண்டாது தலைச்சென்று – மது 66-68

நெடிய மதிலினையும், வரிசையான ஞாயில்களையும்,
அம்பு விடுகின்ற, வேல் வீசுகின்ற அரண்களையும்,
தடைப்படாமல் மேற்சென்று

மேல்


தண்டு

1. (வி)

1. வற்புறுத்து, insist on
2. விருப்பம்கொள், be desirous
3. இறையாகப்பெறு, வசூல்செய், get as share to the king, collect as tax

2. (பெ)

1. தடி, staff. stick
2. குறுந்தடி, club
3. பல்லக்கு, காவடி ஆகியவற்றின் கழி, pole of a palanquin, etc.,
4. இலை,பூ ஆகியவற்றின் காம்பு, stalk, stem

1.1

துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின்
பராஅரை வேவை பருகு என தண்டி – பொரு 103,104

அறுகம் புல் கட்டுக்களை கவ்வித்தின்ற செம்மறிக்கிடாயின் அழகிய புழுக்கப்பட்ட(இறைச்சியின்)
பெரிய (மேல்)தொடை நெகிழ வெந்ததனைத் ‘உண்பாயாக’ என்று வற்புறுத்தி,

1.2.

தண்டி தண்டின் தாய் செல்வாரும் – பரி 10/100

விருப்பத்துடன் வாழைத்தண்டுகளைத் தழுவிக்கொண்டு தாவித்தாவிச் செல்வார் சிலர்;

1.3.

தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ – மலை 425

தசைகளையும் கிழங்குகளையும் இறையாகப்பெற்றவராய் (அவற்றை உமக்குக்)கொடுத்து

2.1.

விழு தண்டு ஊன்றிய மழு தின் வன் கை
——————-
ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன் – பெரும் 170-175

விழுமிய தடியை ஊன்றின கோடரித் தழும்பிருந்த வலிய கையினையும்,
————————-
ஒன்றாய்ப் பொருந்தின உடையினையும் உடைய, கூழை உண்ணுகிற இடைமகன்

2.2.

தண்டு கால் ஆக தளர்தல் ஓம்பி – மலை 371

(முரசை அடிக்கும்)குறுந்தடியை (மூன்றாவது)காலாக (ஊன்றிக்)கொண்டு, தடுமாறுதலினின்றும் (உம்மைக்)காத்து,

2.3.

சகடமும் தண்டு ஆர் சிவிகையும் பண்ணி – பரி 10/17

வண்டிகள், தண்டு மரங்களோடு கூடிய பல்லக்குகள் ஆகியவற்றைத் தயார்செய்துகொண்டு

2.4.

குவளை பசும் தண்டு கொண்டு – பரி 11/102

குவளையின் இளம் தண்டினைக் கையில் கொண்டு

மேல்


தண்ணடை

(பெ) 1. தண் அடை, குளிர்ந்த தழை, green leaves
2. மருதநிலம், agricultural tract
3. மருதநிலத்து ஊர்கள், villages in an agricultural tract

1.

மலர் தலை காரான் அகற்றிய தண்ணடை
ஒண் தொடி மகளிர் இழை அணி கூட்டும் – நற் 391/4,5

பருத்த தலையைக் கொண்ட காராம்பசு தின்னாதுவிட்ட குளிர்ந்த தழைகளை
ஒளிரும் வளையணிந்த மகளிர் தம் அணிகலன்களுக்கு அழகுண்டாகச் சேர்த்து அணியும்

2.

தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில் – அகம் 84/14

மருதநிலம் சூழ்ந்த கொடிகள் அசையும் அரிய எயிலை

3.

பிணங்கு கதிர்
அலமரும் கழனி தண்ணடை ஒழிய – புறம் 285/14,15

கதிர்கள் பின்னிக்கொண்டு அசையும் கழனிகளையுடைய மருதநிலத்து ஊர்களை இரவலர்களுக்குக் கொடுத்து ஒழிந்ததைனால்

மேல்


தண்ணம்

(பெ) குளிர்ச்சி, coolness

தண்ணம் துறைவன் சாயல் மார்பே – நற் 327/9

குளிர்ந்த துறைகளைச் சேர்ந்தவனது மென்மையான மார்பு

மேல்


தண்ணுமை

(பெ) மிருதங்கம் போன்ற ஒரு தோற்கருவி, a kind of drum

1.

தோலை மடித்துப்போர்த்த வாயை உடையது.

மடி வாய் தண்ணுமை நடுவண் சிலைப்ப – பெரும் 144

(தோலை)மடித்துப் போர்த்த வாயையுடைய மத்தளம் (தங்களுக்கு)நடுவில் முழங்க

2.

நெல் அறுவடையின்போது பறவைகளையும், விலங்குகளையும் விரட்ட ஒலிக்கப்படும்.

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
செம் கண் எருமை இனம் பிரி ஒருத்தல் – மலை 471,472

வெண்ணெல்லை அறுப்போரின் முழவு(எழுப்பும் ஓசை)க்குப் பயந்து,
சிவந்த கண்களையுடைய எருமைகளின் கூட்டத்தினைப் பிரிந்த (ஒற்றை)எருமைக்கடா

3.

இதன் ஒலி தழங்கு குரல் எனப்படும், ஒன்றுகூடிய மேகங்கள் உறுமுகின்ற சத்தத்தை ஒக்கும்

மடி வாய் தண்ணுமை தழங்கு குரல் கேட்ட
எருவை சேவல் கிளை_வயின் பெயரும் – நற் 298/3,4

மடித்துவிட்ட வாயையுடைய தண்ணுமைப் பறையின் முழங்குகின்ற ஓசையைக் கேட்ட
பருந்தின் சேவல் தன் சொந்தங்களை நோக்கிப் பறந்து செல்லும்.

கழனி உழவர் தண்ணுமை இசைப்பின்
பழன மஞ்ஞை மழை செத்து ஆலும் – – பதி 90/41,42

வயல்வெளிகளிலிருக்கும் உழவர்கள் தண்ணுமையை முழக்கினால்
நீர்நிலைகளில் வாழும் மயில்கள் மேகங்களின் முழக்கம் என்று எண்ணி ஆடுகின்ற,

4.

இதனுடைய வாய் பெரிதும் அகலமாக இருக்கும். இதன் ஒலி அருவிநீர் விழுவதுபோன்று இருக்கும்.

பேழ் வாய் தண்ணுமை இடம் தொட்டு அன்ன
அருவி இழிதரும் பெரு வரை நாடன் – நற் 347/6,7

அகன்ற வாயையுடைய தண்ணுமைப் பறையின் முகப்பைத் தட்டுவது போன்று
அருவிகள் ஒலித்துக்கொண்டு இறங்கும் பெரிய மலைகளையுடைய நாட்டினன்

5.

ஊர் ஊராகச் செல்லும் வணிகர் கூட்டம், ஓர் ஊருக்குச் சென்றால், முதலில் இதனை ஒலிப்பர்.

சாத்து வந்து இறுத்து என
வளை அணி நெடு வேல் ஏந்தி
மிளை வந்து பெயரும் தண்ணுமை குரலே – குறு 390/3-5

வணிகர்கூட்டம் வந்து சேர்ந்ததாக
வளையை அணிந்த நெடிய வேலை ஏந்தி,
காவற்காட்டில் வந்து மீள்கின்ற தண்ணுமை என்னும் முரசொலி

6

இது கையினால் அடித்து முழக்கப்படும்.

தூ கணை கிழித்த மா கண் தண்ணுமை
கைவல் இளையர் கை அலை அழுங்க – பதி 51/33,34

உன் வலிமையான அம்புகள் பாய்ந்து கிழித்த, பகைவரின் கரிய கண்ணையுடைய தண்ணுமையை,
இசைக்கும் தொழிலில் வல்ல இளையர்கள் கையால் தட்டி இசைப்பதைத் தவிர்க்க,

7.

இது தோலால் போர்த்தப்பட்டிருக்கும். போரின் தொடக்கத்தைக் குறிக்க இது ஒலிக்கப்படும்.

போர்ப்பு_உறு தண்ணுமை ஆர்ப்பு எழுந்து நுவல – பதி 84/15

தோலால் போர்க்கப்பட்ட தண்ணுமையின் மிகுந்த ஓசை எழுந்து போரைத் தெரிவிக்க,

8.

திருமண வீட்டில் இதனை ஒலிப்பர்.

நெருநை
அடல் ஏற்று எருத்து இறுத்தார் கண்டும் மற்று இன்றும்
உடல் ஏறு கோள் சாற்றுவார்
ஆங்கு இனி
தண்ணுமை பாணி தளராது எழூஉக – கலி 102/30-34

இதற்கு முன்பும்
கொலைவெறியுள்ள காளையின் கழுத்தை அணைத்துக்கொண்டவர்களைக் கண்டிருக்கின்றனர்! இன்றும்
சீற்றங்கொண்ட காளையைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று பறை சாற்றுகின்றனரே!
அங்கே இப்பொழுது
மணம்செய்வதற்குத் தண்ணுமையில் தாளம் தவறாமல் எழுப்புவார்களாக,

9.

இதன் முகப்பு வாரினால் இழுத்துக்கட்டப்பட்டிருக்கும். பாலைநிலத்துக் கள்வர் ஊரில் உள்ள மாடுகளைத்
திருடிக்கொண்டு தமது ஊர் திரும்பிய பின்னர் இதனை ஒலித்து மகிழ்வர்.

வேட்ட கள்வர் விசி_உறு கடும் கண்
சே கோள் அறையும் தண்ணுமை – அகம் 63/17,18

வேட்டையாடும் கள்வரின், வாரினை இழுத்துக்கட்டிய கடிய கண்களையுடைய,
காளைகளைப் பிடிக்கும்போது அடிக்கும் பறையின் ஒலி

10.

பாலைநிலத்தில் அரண்களை எழுப்பிக்கொண்டு ஆறலைக் கள்வர் இதனை ஒலிப்பர்.
இதனைக் கேட்டு வழிச்செல்வோர் அஞ்சி நடுங்குவர்

கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின்
எழுந்த தண்ணுமை இடம் கண் பாணி
அரும் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென
குன்று சேர் கவலை இசைக்கும் அத்தம் – அகம் 87/7-10

கொடுமையையுடைய மறவரது கற்கள் பொருந்திய காட்டரண்களில்
எழுந்த தண்ணுமைப் பறையின் அகன்ற கண்ணிலிருந்து எழும் ஒலி
அரும் சுரம் செல்வோர்நெஞ்சு நடுக்குற ஒலிக்கும்
குன்றினைச் சேர்ந்த கவர்த்த நெறிகளையுடைய காட்டில்

11.

ஊருக்குப் பொதுவான மன்றத்தில் இது தொங்கவிடப்பட்டிருக்கும்.

பொதுவில் தூங்கும் விசி_உறு தண்ணுமை
வளி பொரு தெண் கண் கேட்பின் – புறம் 89/7,8

பொதுமன்றத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் இழுத்துக்கட்டப்பட்ட தண்ணுமை
காற்று அடிப்பதால் எழுப்பும் தெளிந்த ஓசையையுடைய கண்ணின்கண் ஒலியைக்கேட்டால்

12.

இந்தத் தண்ணுமையை இயக்குபவர் புலையர் எனப்பட்டனர்.

மடி வாய் தண்ணுமை இழிசினன் குரலே – புறம் 289/10

தோலை மடித்துப் போர்த்த வாயையுடைய தண்ணுமையை ஒலிக்கும் புலையனின் குரல்

மேல்


தண்மை

(பெ) குளிர்ச்சி, coolness

ஆடல் மகளிர் பாடல் கொள புணர்மார்
தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை
கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ – நெடு 67-69

ஆடல் மகளிர் (தாம் பாடுகின்ற)பாடலுக்குப் பொருந்த (யாழ்)நரம்பைக் கூட்டுதற்கு,
குளிர்ச்சியால் நிலைகுலைந்த இனிய குரலாகிய நரம்பை,
பெரிய எழுகின்ற முலையின் வெப்பத்தால் தடவி,

மேல்


தண

(வி) அகன்றுசெல், நீங்கு, go away, depart

மணக்கும்_கால் மலர் அன்ன தகையவாய் சிறிது நீர்
தணக்கும்-கால் கலுழ்பு ஆனா கண் எனவும் உள அன்றோ – கலி 25/13,14

ஒன்றாகக் கூடியிருக்கும்போது மலர் போன்ற மலர்ச்சியுள்ளதாய் இருந்துவிட்டு, சிறிதளவு நீர்
விலகியிருக்கும்போது கலங்கி அழுவதை நிறுத்தாத கண்கள் என்றும் இருக்கின்றனவே!

மேல்


தணக்கம்

(பெ) 1. நுணா என்னும் கொடி,பூ, Small ach root, Morinda umbellata
2. தணக்கு, helicopter tree, Gyrocarpus americanus Jacq

பாங்கர் மராஅம் பல் பூ தணக்கம் – குறி 85

ஓமை, மரவம்பூ, பல பூக்களையுடைய தணக்கம்பூ

மேல்


தத்து

(வி) (தவளை போல்) தாவு, குதி, leap, hop (like a frog)

கை புனை குறும் தொடி தத்த பைபய
முத்த வார் மணல் பொன் கழங்கு ஆடும் – பெரும் 334,335

கையில் புனைந்த குறும் வளையல்கள் தாவிக்குதிக்க, மெல்ல மெல்ல
முத்தை ஒத்த வார்ந்த மணலில் பொன்னாற் செய்த கழங்கைக் கொண்டு விளையாடும்,

மேல்


ததர்

1. (வி) செறிவுடன் இரு, be dense
2. (பெ) பூங்கொத்து, cluster, bunch

1.

குவி இணர் எருக்கின் ததர் பூ கண்ணி – அகம் 301/11

குவிந்த கொத்துக்களையுடைய எருக்கினது செறிவான பூக்களாலான கண்ணி

2.

சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினை
ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல – சிறு 254,255

மழைத்துளியில் நனைந்த முருக்க மரத்தின் மிக்க உயரத்திற்கு வளர்ந்த நீண்ட கொம்பில்
பூங்கொத்து முறுக்கு நெகிழ்ந்த காட்சியைப் போல

மேல்


ததரல்

(பெ) மரப்பட்டை, bark of a tree

களிறு சுவைத்திட்ட கோது உடை ததரல்
கல்லா உமணர்க்கு தீமூட்டு ஆகும் – அகம் 257/16,17

களிற்றியானை சுவைத்துப்போட்ட சக்கையாகிய மரப்பட்டைகள்
கல்லாத உப்பு வாணிகர்க்குத் தீமூட்டுவதற்கு ஆகும்.

மேல்


ததை

(வி) 1. அடர்த்தியாய் இரு, நெருக்கமாய் இரு, be dense, be crowded
2. சிதைவடை, உடைபடு, be broken, shattered
3. மிகு, நிறை, be plenty, abundant

1.

வெண் மணல் விரிந்த வீ ததை கானல் – குறு 386/1

வெள்ளை மணல் பரவிய மலர்கள் செறிந்துகிடக்கும் கடற்கரைச்சோலையில் உள்ள,

2.

மட நடை நாரை
பதைப்ப ததைந்த நெய்தல் – ஐங் 155/2,3

இளமையான நடையைக் கொண்ட நாரை
சிறகடித்து அங்குமிங்கும் பறந்துதிரிவதால் சிதைந்துபோன நெய்தல் மலர்

3.

ததைந்து செல் அருவியின் அலர் எழ – அகம் 303/7

மிக்குச் செல்லும் அருவியின் ஒலி போன்று அலராகி வெளிப்பட

மேல்


தப்பல்

(பெ) தவறு, குற்றம், fault, mistake

மை பட்டு அன்ன மா முக முசு கலை
ஆற்ற பாயா தப்பல் ஏற்ற
கோட்டொடு போகி ஆங்கு – குறு 121/2-4

மையை ஊற்றியதைப் போன்ற கரிய முகத்தைக்கொண்ட ஆண்குரங்கு
தாங்கக் கூடிய கிளையில் தாவாத தவறு, அதனை ஏற்றுக்கொண்டு முறிந்த
கிளைக்கு ஆகினாற்போன்று

மேல்


தபு

(வி) 1. கெடு(தல்), அழிபடு(தல்), perish, become extinct
2. கெடு(த்தல்), destroy, ruin

1.

சேயரும் நணியரும் நலன் நயந்து வந்த
இளம் பல் செல்வர் வளம் தப வாங்கி – மது 571,572

தொலைவிலுள்ளாரும் அருகிலுள்ளாரும் வடிவழகை விரும்பி வந்த
இளவயதினராகிய பல செல்வந்தரை (அவருடைய)செல்வம்(எல்லாம்) கெடும்படியாகக் கவர்ந்துகொண்டு,

2.

உள்ளம் அழிய ஊக்குநர் மிடல் தபுத்து
உள்ளுநர் பனிக்கும் பாழ் ஆயினவே – பதி 13/18,19

நெஞ்சம் நிலைகுலைய, துணிந்து செல்வோரின் மனவலிமையைக் கெடுத்து,
நினைத்துப்பார்ப்போர் நெஞ்சம் நடுங்கும் பாழிடங்கள் ஆயின;

மேல்


தபுதி

(பெ) கேடு, அழிவு, ruin, death

தன் அகம் புக்க குறு நடை புறவின்
தபுதி அஞ்சி சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக – புறம் 43/6-8

தன் இடத்தை அடைந்த குறிய நடையை உடைய புறாவினது
அழிவிற்கு அஞ்சி துலாத்தலையுள் புக்க
வரையாத வண்மையைஉடைய வலியோனது மரபினுள்ளாய்

மேல்


தம்

1. (வி) தருக, கொணர்க, bring, take in
2. (சு.பெ) தாம் என்பதன் முதற்குறை, his, her, their

1.

மா தாங்கு எறுழ் தோள் மறவர் தம்-மின் – மது 729

குதிரையைச் செலுத்தும் வலியையுடைய தோளினையும் உடைய மறவரைக் கொணர்மின்

2.

நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே – நற் 32/8,9

முதலில் ஆராய்ந்து நட்புச் செய்வரே அன்றி,
நட்புச் செய்தபின் அவரைப்பற்றி ஆராயமாட்டார், தம்மைச் சார்ந்தவரிடத்து


தம்பலம்

(பெ) வெற்றிலைப்பாக்கு, Betel with areca-nut;

வை காண் முது பகட்டின் பக்கத்தின் போகாது
தையால் தம்பலம் தின்றியோ என்று தன்
பக்கு அழித்து கொண்டீ என தரலும் – கலி 65/12-14

வைக்கோலைப் பார்த்த வயதான மாட்டைப் போல என் பக்கத்திலிருந்து போகாமல்
“பெண்ணே, வெற்றிலைபாக்கு போடுகின்றாயோ?” என்று தன்
பையினைத் திறந்து “எடுத்துக்கொள்” என்று தந்தான்;

மேல்


தமர்

(பெ) சுற்றத்தார், தமக்கு வேண்டியோர், relations, well-wishers

தாய் உடை நெடு நகர் தமர் பாராட்ட – அகம் 310/7

தாய்மார் உள்ள பெரிய மனையில் சுற்றத்தார் பாராட்ட

பகைவரும்,
தம் திறை கொடுத்து தமர் ஆயினரே – அகம் 44/1,2

பகைவரும்
தாம் கொடுக்கவேண்டிய கப்பத்தைச் செலுத்தி வேண்டியவர்கள் ஆகிவிட்டனர்;

மேல்


தமனியம்

(பெ) பொன், gold

தமனியம் வளைஇய தாவு இல் விளங்கு இழை – மது 704

பொன்னின் ஒளி சூழ்ந்து குற்றமற்றுத் தகதகக்கும் பேரணிகலன்களால்

மேல்


தமாலம்

(பெ) பச்சிலை, நறைக்கொடி, a fragrant creeper

நெடும் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த
பசும் கேழ் இலைய நறும் கொடி தமாலம்
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும் – நற் 292/1-3

நெடிதுயர்ந்த குளிர்ச்சியான சந்தனமரத்தின் ஆடுகின்ற கிளைகளில் சுற்றிக்கொண்டிருக்கும்
பசுமை நிறங்கொண்ட இலைகளையுடைய மணமிக்க தமாலக்கொடியை
இனிய தேனை எடுக்கும் குறவர்கள் வளைத்து முறிக்கும்

மேல்


தமி

1. (வி) தனித்திரு, be lonely
2. (பெ) தனிமை, loneliness

1.

நீல் நிற புன்னை தமி ஒண் கைதை – நற் 163/8

கருநிறப் புன்னையின் பக்கத்தில் தனித்திருக்கும் ஒளிபொருந்திய தாழை மடல்

2.

மடை மாண் செப்பில் தமிய வைகிய – குறு 9/2

அழகிய பொருத்துவாய் அமைந்த செம்பினுள் தனிமையுடன் இருக்கும்

மேல்


தமிழ்

(பெ) 1. தமிழ் மொழி, the language Tamil
2. தமிழர், the Tamil people

1.

தெரி மாண் தமிழ் மும்மை தென்னம்பொருப்பன் – பரி 26/1

ஆராய்ந்தெடுத்த மாட்சிமைக்குரிய தமிழ் மூன்றினையும் கொண்ட தெற்குமலைக்குத் தலைவனான பாண்டியனின்

2.

சிறியிலை உழிஞை தெரியல் சூடி
கொண்டி மிகைபட தண் தமிழ் செறித்து – பதி 63/8,9

சிறிய இலைகளையுடைய உழிஞைப்பூ மாலையைச் சூடிக்கொண்டு
பகைவர் நாட்டுக் கொள்ளைப்பொருள் மிகுந்திருக்க, அருளுள்ளம் கொண்ட தமிழ்வீரர்களை நிறையக் கொண்டு

மேல்


தயக்கு

(பெ) தளர்வு, தொய்வு, slackness,looseness

நுண் வினை கச்சை தயக்கு அற கட்டி – குறி 125

நுண்ணிய வேலைப்பாடு கொண்ட கச்சை(க் கட்டின சேலை) தொய்வு இன்றிக் கட்டி,

மேல்


தயங்கு

(வி) 1. முன்னும் பின்னும் அசை, move to and fro, sway
2. மனமழி, வாடு, loose heart, be dispirited
3. ஒளிவிடு, ஒளிர், shine, glitter

1.

களிற்று தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி – சிறு 123

யானை(யைச் செலுத்துதலால் உண்டான) தழும்பு கிடந்த, வீரக்கழல் அலையாடும், திருத்தமான அடியினையும்,

2.

தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து – பதி 79/15

தும்பைப் போரின் தன்மை பொருந்திய போரைச் செய்ததால் உடல் சோர்ந்து ஓய்ந்திருக்க,

3.

தயங்கு இரும் பித்தை பொலிய சூடி – புறம் 371/4

ஒளிர்கின்ற தலைமயிர் அழகுறச் சூடிக்கொண்டு

மேல்


தரவு

(பெ) தருகை, giving

வெருவரு செலவின் வெகுளி வேழம்
தரவு_இடை தங்கல் ஓவு இலனே – பொரு 172,173

அச்சம் தரும் ஓட்டத்தையும், சினத்தையும் உடைய யானைகளை
(இவன் பிறர்க்குக் கொடை)தரும்போது(அதில்)நிலைகொள்ளலில் ஒழிதல் இலன்

மேல்


தராய்

(பெ) மேட்டுநிலம், elevated land

ஞெண்டு ஆடு செறுவில் தராய்க்கண் வைத்த
விலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ – மலை 460,461

நண்டுகள் ஓடித்திரியும் வயல்களின்(அருகே) களத்துமேட்டில் வைத்த, 460
மலை போன்ற (நெற்கதிர்)போர்களின் அடிப்பாகத்தை இழுத்து

மேல்


தரீஇ

(வி.எ) தந்து என்பதன் திரிபு, giving

வாள் முக பாண்டில் வலவனொடு தரீஇ
அன்றே விடுக்கும் அவன் பரிசில் மென் தோள் – சிறு 260,261

ஒளியுள்ள முகத்தினையும் உடைய காளையை (அதனைச் செலுத்தும்)பாகனோடு, கொடுத்து,
அன்றே விடுப்பான் அவனுடைய பரிசில்

மேல்


தருக்கு

1. (வி)

1. இறுமாப்புக்கொள், be proud, vain
2. வெற்றிப்பெருமிதம் கொள், be exulted

2. (பெ) செருக்கு, இறுமாப்பு, arrogance, haughtiness

1.1.

தருக்கேம் பெரும நின் நல்கல் விருப்பு_உற்று
தாழ்ந்தாய் போல் வந்து தகவு இல செய்யாது – கலி 69/21,22

இறுமாப்புக்கொள்ளமாட்டோம், பெருமானே! உன் அன்பினால் விருப்பமுற்றுத்
தாழ்ந்தவன் போல் வந்து தகுதியில்லாதவற்றைச் செய்யாதே!

1.2.

தருக்கிய பிற ஆக தன் இலள் இவள் என
செருக்கினால் வந்து ஈங்கு சொல் உகுத்தீவாயோ – கலி 69/17,18

உன்னுடைய வெற்றிப் பெருமிதம் இவ்வாறு வேறு விதமாக இருக்க, இவள் தனக்கெனப் பெருமிதம் இல்லாதவள் என்று
பெருமையினால் வந்து இங்கு பேசிக்கொண்டிருக்கிறாயே!

2.

குரூஉ கண் கொலை ஏறு கொண்டேன் யான் என்னும்
தருக்கு அன்றோ ஆயர்_மகன் – கலி 104/71,72

சிவந்த கண்களைக் கொண்ட கொலைக்குணமுள்ள காளையை அடக்கிவிட்டேன் நான் என்னும்
செருக்கினால் அன்றோ அந்த ஆயர்மகன்?”

மேல்


தருப்பை

(பெ) கூரை வேயப் பயன்படும் நீளமான ஒருவகைப்புல், long grass used for the roof in huts

வேழம் நிரைத்து வெண் கோடு விரைஇ
தாழை முடித்து தருப்பை வேய்ந்த
குறி இறை குரம்பை பறி உடை முன்றில் – பெரும் 263-265

மூங்கில்கோலை நெடு வரிசையாகச் சார்த்தி, வெண்மையான மரக்கொம்புகளை குறுக்காகப் பரப்பி,
தாழைநாரால் (இரண்டையும்)முடித்துத் தருப்பைப்புல்லை (அதன் மேல்)வேய்ந்த
குறுகிய இறப்பையுடைய குடிலின், (மீன்பிடிக்கும்)பறியினையுடைய முற்றத்தில்

மேல்


தரூஉ

(வி.எ) தந்து என்பதன் திரிபு

குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து – மது 520

சிறியனவும் பெரியனவுமாகிய மடிப்புடைவைகளைக் கொண்டுவந்து விரித்து,

மேல்


தலை

1. (வி)

1. மழை பெய், rain
2. சேர், கூடு, join, unite

2. (வி.அ) அத்துடன், in addition to, besides
3. (பெ)

1. சிரம், head
2. முதல், origin, beginning
3. இடம், place
4. நுனி, முனை, end, tip
5. உச்சி, மேற்பரப்பு, top

1.1.

சிறு பல் கருவித்து ஆகி வலன் ஏர்பு
பெரும் பெயல் தலைக புனனே – நற் 328/6,7

சிறிய பலவான மின்னல், இடி போன்றவற்றைக் கொண்டு வலமாக ஏறி
பெரும் மழை பெய்வதாக, இங்கே

1.2.

வண்டல் ஆயமொடு உண்துறை தலைஇ
புனல் ஆடு மகளிர் இட்ட பொலம் குழை – பெரும் 311,312

(சிறு வீடு கட்டும்)விளையாட்டுடைய தோழியருடன் நீருண்ணும் துறையில் கூடி
நீராடுகின்ற மகளிர் (நீரில்)நழுவவிட்டுச்சென்ற பொன்னாற் செய்த மகரக்குழையினை

2.

தளி பொழி கானம் தலை தவ பலவே – மலை 385

மழைத்துளிகள் நிறைய விழும் காடுகளும் கூட(அத்துடன்)மிகப் பலவாம்

3.1.

கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை
ஒண் தொடி தட கையின் ஏந்தி – திரு 53,54

கண்களைத் தோண்டி உண்ணப்பட்ட மிக்க முடை நாற்றத்தையுடைய கரிய தலையை
ஒள்ளிய தொடியையுடைய பெரிய கையில் ஏந்தி

3.2.

தலை பெயல் தலைஇய தண் நறும் கானத்து – திரு 9

முதல்மழை பொழிந்த தண்ணிய நறிய காட்டில்

3.3.

அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர் – பொரு 1

இடையறாத (செல்வ)வருவாயினையுடைய அகன்ற இடத்தையுடைய பெரிய ஊர்களிடத்து

3.4.

வேல் தலை அன்ன வை நுதி நெடும் தகர்
ஈத்து இலை வேய்ந்த எய் புற குரம்பை – பெரும் 87,88

வேலின் முனையைப் போன்ற கூர்மையான முனையைக்கொண்ட, நெடிய மேட்டில் உள்ள
ஈந்தினுடைய இலையால் வேயப்பட்ட எய்ப்பன்றியின் முதுகு போலும் புறத்தினையுடைய குடிலின்கண்,

3.5.

இயங்கு புனல் கொழித்த வெண் தலை குவவு மணல் – மது 336

ஓடுகின்ற நீர் கொழித்துக்கொணர்ந்த வெள்ளிய மேற்பரப்பையுடைய திரண்ட மணலையுடைய

மேல்


தலைக்கூடு

(வி) ஒன்றுசேர், assemble, come together

முன் பகல் தலைக்கூடி நன் பகல் அவள் நீத்து
பின்பகல் பிறர் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய் – கலி 74/10,11

முற்பகலில் ஒருத்தியிடம் சேர்ந்திருந்து, உச்சிவேளையில் அவளை விட்டுப் பிரிந்து
பிற்பகலில் வேறொருத்தியை நாடிச் செல்லும் உன் நெஞ்சமும் பைத்தியம்பிடித்தது;

மேல்


தலைக்கை தா

(வி) அன்பு மிகுதியால் கையால் தழுவு, clasp a person in the arms with exceeding love

எல் வளை மகளிர் தலைக்கை தரூஉந்து – புறம் 24/9

விளங்கிய வளையையுடைய மகளிர்க்கு முதற்கை கொடுக்கும் (அவர்களை இறுகத் தழுவும்).

மேல்


தலைக்கொள்

(வி) 1. கைப்பற்று, capture, seize
2. கெடு,அழி, destroy
3. மேற்கொள், observe, undertake
4. தொடங்கு, commence

1.

மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில்
கரும் கண் எயிற்றி காதல் மகனொடு
கான இரும் பிடி கன்று தலைக்கொள்ளும்

புறம் 181/1-3

மன்றத்தின்கண் நிற்கும் விளாமரத்தின் மனையில் வீழ்ந்த விளாம்பழத்தைக்
கரிய கண்ணை உடைய மறத்தியின் காதல் மகனுடனே
காட்டில்வாழும் கரிய பிடியின் கன்று வந்து எடுக்கும்.

2.

ஒண் படை கடும் தார் முன்பு தலைக்கொள்-மார்
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய – புறம் 15/14,15

ஒள்ளிய படைக்கலங்களையுடைய உன் விரைந்த தூசிப்படையின் வலிமையினைக் கெடுத்தல்வேண்டி
தம் ஆசை கொடுவர வந்தோர் அந்த ஆசை பின்னொழிய

3.

அதனால் அகறல் அறியா அணி இழை நல்லார்
இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர் இ – பரி 9/23,24

அதனால், தம் துணைவர் தம்மைவிட்டு அகன்றிருத்தலையே அறியாத அழகிய அணிகலன் அணிந்த மகளிர்
தம் கணவருடன் மனவேறுபாடு மேற்கொண்டு அவரை வருத்தும் தவறினைச் செய்யமாட்டார்;

4.

மலை பரந்து தலைக்கொண்டு முழங்கிய முழங்கு அழல்
மயங்கு அதர் மறுகலின் மலை தலைக்கொண்டு என
விசும்பு உற நிவந்து அழலும் விலங்கு அரு வெம் சுரம் – கலி 150/4-6

மலைகளில் பரவி அவ்விடங்களையெல்லாம் மேற்கொண்டு, முழங்கிய முழக்கத்தையுடைய தீக்கொழுந்துகள்
குழப்பத்தைத்தரும் குறுக்குநெடுக்கான வழிகளே பாதைகளாய்க் கொண்ட மலைகளைத் தொடக்கமாகக் கொண்டு
வானத்தில் தோயும்படியாக உயர்ந்து வெம்மையைச் செய்யும் கடப்பதற்கு அரிய கொடுமையான காட்டுவழியை

மேல்


தலைக்கோல்

(பெ) காவுமரம்,

மண் கனை முழவின் தலைக்கோல் கொண்டு – மலை 370

(தோலில் பூசப்பட்ட கரிய)சாந்து நிறைந்த முரசின் (அதை எடுத்துச்செல்லக் கட்டிய)காவுமரத்தைக் கையில் பிடித்து

மேல்


தலைச்செல்

(வி) எதிர், take on, attack, confront

அம்பு உமிழ் அயில் அருப்பம்
தண்டாது தலைச்சென்று
கொண்டு நீங்கிய விழு சிறப்பின் – மது 67-69

அம்பு விடுகின்ற, வேல் வீசுகின்ற அரண்களையும்,
தடைப்படாமல் மேற்சென்று,
கைக்கொண்டு போந்த சீரிய தலைமையோடு

மேல்


தலைத்தா

(வி) உருவாக்கு, ஏற்படுத்து, விளைவி, create, cause to occur,

அகல் நகர் கொள்ளா அலர் தலைத்தந்து
பகல் முனி வெம் சுரம் உள்ளல் அறிந்தேன் – கலி 19/4,5

இந்தப் பெரிய ஊரே கொள்ளாத அளவுக்குப் பழிச்சொற்கள் உருவாகச் செய்து,
ஞாயிறு காயும் கொடிய காட்டுவழியில் செல்ல எண்ணிக்கொண்டிருப்பதை அறிந்தேன்,

மேல்


தலைத்தலை

1. (வி.அ) 1. மேலும் மேலும், more and more
2. இடந்தோறும், in all places
– 2. (பெ) ஒவ்வொருவரும், every one

1.1

வருநர் வரையா செழும் பல் தாரம்
கொளக்கொள குறையாது தலைத்தலை சிறப்ப – பதி 88/26,27

– பெருங்கூட்டமான இரவலருக்கும் – வரையாது வழங்கும் செழுமையான, பலவாகிய செல்வம்,
அந்த இரவலர் வாங்கிக்கொண்டேயிருக்கவும் குறைந்துபோகாமல் மேலும் மேலும் மிகுந்திருக்க,

1.2.

தத்தம் துணையோடு ஒருங்கு உடன் ஆடும்
தத்து அரி கண்ணார் தலைத்தலை வருமே – பரி 16/9,10

தத்தம் காதல் துணைவரோடு ஒன்றுகூடி நீராடுகின்ற
செவ்வரியும், கருவரியும் படர்ந்த கண்களையுடைய மகளிர் நீர்த்துறைதோறும் வருவர்;

2.

மகிழ்நன்
மருது உயர்ந்து ஓங்கிய விரி பூ பெரும் துறை
பெண்டிரோடு ஆடும் என்ப தன்
தண் தார் அகலம் தலைத்தலை கொளவே – ஐங் 33/1-4

நம் தலைவன்
மருதமரங்கள் உயர்ந்து ஓங்கி வளர்ந்திருக்கும் மலர்ந்த பூக்களைக் கொண்ட பெரிய துறையில்
தன் காதற்பெண்டிரோடு நீராடி இன்புறுவன் என்று சொல்கின்றனர், அவனது
குளிர்ந்த மாலையணிந்த மார்பினை ஒவ்வொருவராகப் பற்றிக்கொண்டு

மேல்


தலைப்படு

(வி) 1. காணப்படு, தோன்று, appear
2. சேர், ஐக்கியமாகு, unite
3. தொடங்கு, ஒன்றைச்செய்ய முற்படு, commence, set about
4. எதிர்ப்படு, meet, encounter
5. அடை, பெறு, obtain, attain

1.

சுரம் தலைப்பட்ட நெல்லி அம் பசும் காய் – குறு 209/1

பாலைநிலைத்து வழியில் காணப்படும் நெல்லியின் அழகிய பசிய காய்கள்

2.

மாய பொதுவன் உரைத்த உரை எல்லாம்
வாய் ஆவது ஆயின் தலைப்பட்டாம் – கலி 112/21,22

இந்த மாய்மால இடையன் சொன்ன சொல் எல்லாம்
உண்மையாக வாய்த்தால் இவனோடு சேர்ந்து வாழலாம்

3.

கண்ணியது உணரா அளவை ஒண்_நுதல்
வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன் – அகம் 5/6,7

(நாம்)எண்ணியதை முழுதும் உணர்வதற்கு முன்னரேயே, ஒள்நுதல் தலைவி,
(நாம்) பொருள்தேட முற்படுதலை ஏற்றுக்கொள்ளா எண்ணத்துடன் –

4.

அத்த கள்வர் ஆ தொழு அறுத்து என
பிற்படு பூசலின் வழிவழி ஓடி
மெய் தலைப்படுதல் செல்லேன் – அகம் 7/14-16

வழிப்பறிக் கள்வர்கள் பசுக்களைத் தொழுவை உடைத்துக் கொண்டுசென்றனராக,
அவர்களின் பின்னே துரத்திச்செல்வோர் ஆரவாரிப்பது போல, அங்குமிங்கும் ஓடி,
அவளின் மேனியை எதிர்ப்பட்டிலேன்

5.

தன் நலம் கரந்தாளை தலைப்படும் ஆறு எவன்-கொலோ – கலி 138/7

தன்னுடைய நலத்தை நான் காணாதவாறு மறைத்துக்கொண்டவளை அடைகின்ற வழிதான் எதுவோ?

மேல்


தலைப்பாடு

(பெ) தற்செயல் நிகழ்வு, chance occurrence

விறகு ஒய் மாக்கள் பொன் பெற்று அன்னது ஓர்
தலைப்பாடு அன்று அவன் ஈகை – புறம் 70/17,18

விறகைக் காட்டிலிருந்து ஊரகத்துக்குச் செலுத்தும் மாந்தர் அக் காட்டகத்து விழுப்பொருள் எடுத்துக்கொண்டாற் போல்வதொரு
எதிர்பாரா நிகழ்வு அன்று அவன் ஈகை

மேல்


தலைப்பிரி

(வி) நீங்கு, விலகு, பிரிந்துசெல், separate,part, depart

நனம் தலை கானத்து இனம் தலைப்பிரிந்த
புன்கண் மட மான் நேர்பட – குறு 272/3,4

பரந்த பரப்பையுடைய காட்டில், தன் இனத்தைவிட்டுப் பிரிந்த
துன்பத்தைக் கொண்ட இளையமான் நேரே இருக்க

மேல்


தலைப்பெய்

(வி) 1. கூடு, join
2. ஒன்றுசேர், come together

1.

உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை – அகம் 86/1

உழுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த செவ்விய குழைதலையுடைய பொங்கலோடு

2.

நல்லாய் பொய் எல்லாம் ஏற்றி தவறு தலைப்பெய்து
கையொடு கண்டாய் பிழைத்தேன் அருள் இனி – கலி 95/27,28

நல்லவளே! பெய்யையெல்லாம் என் தலையில் ஏற்றி, தவறுகளையெல்லாம் ஒன்றுசேர்த்து,
என்னைக் கையோடு பிடித்துவிட்டாய், தவறிழைத்தேன்! அருள்செய்வாயாக!”

மேல்


தலைப்பெயர்

(வி) 1. மீளச்செய், திரும்பப்பெறு, redeem, get back
2. தலைகீழாகப்புரட்டு, turn upside down, invert
3. கழி, கடந்துபோ, pass by

1.

ஆடு தலை துருவின் தோடு தலைப்பெயர்க்கும்
வன் கை இடையன் – நற் 169/6,7

ஆடுகின்ற தலையையுடைய செம்மறியாட்டின் கூட்டத்தை ஓட்டிக்கொண்டு திரும்பும்
வலிமையான கையையுடைய இடையன்

2.

அண்ணல் யானை எண்ணின் கொங்கர்
குட கடல் ஓட்டிய ஞான்றை
தலைப்பெயர்த்து இட்ட வேலினும் பலவே – புறம் 130/5-7

தலைமையை உடைத்தாகிய யானையை எண்ணின நீ கொங்கரை
மேல்கடற்கண்ணே ஓட்டிய நாளில்
அவர் புறங்கொடுத்தலால் தலைகீழாகச் சாய்த்துப்பிடித்த வேலினும் பல

3.

யாண்டு தலைப்பெயர வேண்டு புலத்து இறுத்து – பதி 15/1

ஆண்டுகள் கழிந்துபோக, நீ வேண்டிய நாட்டில் தங்கி,

மேல்


தலைப்போகு

(வி) முடிவு போதல், reach the very end

பலர்க்கு நிழல் ஆகி உலகம் மீக்கூறி
தலைப்போகு அன்மையின் சிறு வழி மடங்கி – புறம் 223/1,2

பலருக்கும் உன் அருளால் நிழலாக இருந்து, உலகத்தாஉ புகழ்ந்து சொல்ல,
மறுமையை நினைத்தால் முடிவு போதலென்பது இல்லாததினால் சிறிய இடத்தில் இருந்து

மேல்


தலைமடங்கு

(வி) தலைவணங்கு, be submissive

ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க – பதி 71/17

பசுக்களின் பயனைக் கொண்டு வாழும் இடையர்களின் கழுவுள் என்னும் தலைவன் தலைவணங்கி நிற்க,

மேல்


தலைமண

(வி) 1. ஒன்றோடொன்று பின்னி, பின்னிப்பிணை, be interwined, entangled
2. நெருங்கிக்கல, crowd, throng

1.

தேறு நீர் புணரியோடு யாறு தலைமணக்கும்
மலி ஓதத்து ஒலி கூடல் – பட் 97,98

தெளிந்த கடலின் அலைகளுடன் காவிரியாறு கலக்கும்
மிகுந்த அலைஆரவாரம் ஒலிக்கும் புகார்முகத்தில்,

2.

குன்று தலைமணந்த புன்_புல வைப்பும் – பதி 30/13

குன்றுகள் கூடிக்கிடக்கும் புன்புலமாகிய பாலைநில ஊர்களின் மக்களும்

சினை தலைமணந்த சுரும்பு படு செம் தீ
ஒண் பூ பிண்டி அவிழ்ந்த காவில் – மது 700,701

மரக்கிளைகளில் நெருக்கமாய்க்கூடின சுரும்புகள் உண்டாக்குகின்ற செந்தீ(ப்போன்ற)
ஒளிரும் பூக்களையுடைய அசோக மரங்கள் மலர்ந்துள்ள பொழிலில்

மேல்


தலைமயக்கு

(வி) பின்னிக்கிட, entagled

வெண் பூ வேளையொடு சுரை தலைமயக்கிய
விரவு மொழி கட்டூர் வயவர் வேந்தே – பதி 90/29,30

வெள்ளையான பூவைக்கொண்ட வேளைக் கொடியுடன் சுரைக்கொடியும் பின்னிக்கிடக்கும்
பல்வேறு மொழிகளைப் பேசுவோர் கலந்திருக்கும் பாடிவீடுகளில் இருக்கும் வீரர்களுக்கு வேந்தனே!

மேல்


தலைமயங்கு

(வி) 1. பிரிந்துசெல், go astray as a deer from the herd
2. கலந்திரு, be mixed up
3. மிகு, பெருகு, increase, multiply
4. கைகல, நெருங்கிச் சண்டையிடு, fight at close quarters

1.

எல் படு பொழுதின் இனம் தலைமயங்கி
கட்சி காணா கடமான் நல் ஏறு – புறம் 157/9,10

ஞாயிறு மறைகின்ற காலத்தில் இனத்திலிருந்து பிரிந்து
தான் சேரும் இருப்பிடத்தைக் காணாத காட்டின்கண் உள்ள மானின் நல்ல ஆண்மான்

2.

கங்கை வாரியும் காவிரி பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளம் தலைமயங்கிய நனம் தலை மறுகின் – பட் 190-193

கங்கையாற்றின் விளைச்சலும், காவிரியாற்றின் செல்வங்களும்,
ஈழத்தின் உணவுப்பொருளும், கடாரத்தின் ஈட்டமும்,
அரிதானவும், பெரிதானவும், (நிலத்தின் முதுகு)நெளியும்படி திரண்டு,
செல்வங்கள் (ஒன்றோடொன்று)கலந்துகிடக்கும் அகன்ற இடங்களுடைய தெருக்களும்

3.

பொன் செய் காசின் ஒண் பழம் தாஅம்
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம் – நற் 274/4,5

பொன்னால் செய்யப்பட்ட மேகலைக்காசு போன்று ஒள்ளிய பழங்கள் உதிரும்
குமிழமரங்கள் நிறைந்துவளர்ந்த, சிறிதானவும் பலவானதுமான வழிகளில்

4.

தமிழ் தலைமயங்கிய தலையாலம்கானத்து – புறம் 19/2

தமிழ்ப்படை கைகலந்த தலையாலங்கானத்துக்கண்

மேல்


தலைமிகு

(வி) மிகுந்த மேன்மைபெறு, excell in

போர் தலைமிகுத்த ஈர்_ஐம்பதின்மரொடு – பதி 14/5

போர் செய்வதில் மிகுந்த மேன்மை பெற்ற நூறு பேர்களுடன்,

மேல்


தலையளி

1. (வி) 1. கருணையுடன் நோக்கு, view compassionately
2. வரிசைசெய், சீர்செய், gift
2. (பெ) உயர்ந்த அன்பு, ideal love

1.1

நாடு தலையளிக்கும் ஒண் முகம் போல – புறம் 67/3

தன் நாட்டைக் கருணையுடன் நோக்கும் ஒள்ளிய முகத்தைப் போல

1.2.

இன்னா செயினும் இனிது தலையளிப்பினும்
நின் வரைப்பினள் என் தோழி – குறு 397/6,7

இன்னாதவற்றைச் செய்தாலும், இனியவற்றை அளித்தாலும்
உன் எல்லைக்குட்பட்டவளே என் தோழி!

2.

மறு அற்ற மைந்தர் தோள் எய்தார் மணந்தார்
முறுவல் தலையளி எய்தார் நின் குன்றம் – பரி 19/92,93

குறைவற்ற தம் காதலரின் அணைப்பினைப் பெறமாட்டார், தம்மை மணந்தாரின்
புன்முறுவலுடன் கூடிய அன்பைப் பெறமாட்டார்,

மேல்


தலைவரு(தல்)

(வி) 1. அறைகூவலாக முன்தோன்று. appear as challenge
2. அழைப்பாக முன்தோன்று, appear on request
3. ஒன்றுகூடு, ஒன்றுசேர், unite, join together
4. நிகழ், சம்பவி, happen, occur

1.

அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா
நிரை காழ் எஃகம் நீரின் மூழ்க
புரையோர் சேர்ந்து என – புறம் 354/1-3

முடிவேந்தர் நேர் நின்று போரிடவரினும் அடங்குதல் அமையாத
நிரைத்த காம்பு அணிந்த வேலை நீர்ப்படை செய்யும்பொருட்டு
சான்றோர்களாகிய உயர்ந்த வீரர்கள் வந்து கூடினராக

2.

எந்தையும் யாயும் உணர காட்டி
ஒளித்த செய்தி வெளிப்பட கிளந்த பின்
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப
நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே – குறு 374/1-4

நம் தந்தையும் தாயும் உணரும்படி அறிவித்து
மறைத்து வைத்திருந்த செய்தியை வெளிப்படையாகப் பேசிய பின்னர்
மலைகள் பொருந்திய இடத்தைச் சேர்ந்த நம் தலைவன் நம்மிடம் வந்து வேண்ட
நல்லதையே விரும்பும் கொள்கையினால் கருத்துகள் ஒன்றுபட்டன;

3.

கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழு புகழ் நாள் தலைவந்து என – அகம் 86/6,7

தீய கோள்களின் தொடர்பு நீங்கப்பெற்ற வளைந்த வெள்ளிய திங்களை
குற்றமற்ற சிறந்த புகழினையுடைய உரோகணி என்னும் நாள்மீன் வந்து அடைந்ததாக

4.

மா என மடலொடு மறுகில் தோன்றி
தெற்றென தூற்றலும் பழியே
வாழ்தலும் பழியே பிரிவு தலைவரினே – குறு 32/4-6

பனைமடலைக் குதிரை மா என்று கொண்டு தெருவில் தோன்றி
பலர் அறியத் தூற்றலும் தலைவிக்குப் பழிதருவதே!
அப் பழிக்கு அஞ்சி வாழ்தலும் பழிதருவதே பிரிவு நிகழுமாயின்.

மேல்


தலைவாய்

(பெ) முதல் மதகு, main sluice of a tank

துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும் – மலை 475

வேகமான நீரோட்டத்தையுடைய முதல் மதகில் ஒழிவின்றி ஓடும்

மேல்


தலைவை

(வி) உச்சியில் வை, have it on the top

நிணம் பொதி வழுக்கில் தோன்றும்
மழை தலைவைத்து அவர் மணி நெடும் குன்றே – ஐங் 207/3,4

நிணத்தைப் பொதிந்துவைத்து மூடியுள்ள மெல்லிய ஏடைப் போல் தெரிகிறது,
மேகங்களை உச்சியில் கொண்டுள்ளன, அவரின் மணிபோன்ற நெடிய குன்று

மேல்


தவ

(வி.அ) மிகவும், much, intensely

தளி பொழி கானம் தலை தவ பலவே – மலை 385

மழைத்துளிகள் நிறைய விழும் காடுகளும் கூட(அத்துடன்)மிகப் பலவாம்;

மேல்


தவசி

(பெ) தவம் செய்பவர், துறவி, முனிவர், ascetic, hermit

நீடிய சடையோடு ஆடா மேனி
குன்று உறை தவசியர் போல – நற் 141/4,5

நீண்ட சடையும் நீராடாத மேனியுமுடைய
குன்றுகளில் வாழும் தவசிமாரைப் போல

மேல்


தவல்

(பெ) 1. குறைதல், diminishing, decreasing
2. குற்றம், கேடு, fault, blemish
3. மரணம், death

1.

தவல் இல் அரு நோய் தலைத்தந்தோரே – ஐங் 320/5

கொஞ்சமும் குறையாத பொறுக்கமுடியாத பிரிவுத் துயரத்தைத் தந்தவர்.

2.

என் திறம் யாதும் வினவல் வினவின்
பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய
தவல் அரும் செய்_வினை முற்றாமல் ஆண்டு ஓர்
அவலம் படுதலும் உண்டு – கலி 19/10-13

என்னுடைய நிலைமை பற்றி ஒன்றும் கேட்கவேண்டாம்; அப்படிக் கேட்டால்,
ஞாயிற்றைப் போல விளங்கும் உன் தலைமைச் சிறப்பெல்லாம் அழிந்துபோகுமாறு
உன்னுடைய குற்றமற்ற அருமையான பணிகள் முற்றுப்பெறாமல், அங்கு ஓர்
அவலநிலை உருவாகக் கூடும்.

3.

வரை அளந்து அறியா திரை அரு நீத்தத்து
அவல மறு சுழி மறுகலின்
தவலே நன்று-மன் தகுதியும் அதுவே – புறம் 238/17-19

எல்லை அளந்து அறியாத திரை அரிதாகிய வெள்ளத்தின்கண்
துன்பமாகிய மறுசுழியின்கண் பட்டு சுழலுவதனிலும்
இறந்துபடுதலே நன்று, நமக்குத் தக்க செய்கையும் அதுவே.

மேல்


தவா

(பெ.அ) குறையாத, non diminishing

உண்டு என தவாஅ கள்ளின்
வண் கை வேந்தே – பதி 43/35,36

உண்டபோதும் குறையாத, கள்ளினையுடைய
வளமையான கொடையினையுடைய வேந்தனே!

மேல்


தவாலியர்

(வி) தாழ்வின்றி இரு, be prosperous

முன் திணை முதல்வர் போல நின்று நீ
கெடாஅ நல் இசை நிலைஇ
தவாஅலியரோ இ உலகமோடு உடனே – பதி 14/20-22

சேரர் குலத்து முன்னோர்களைப் போல, நிலையான புகழுடன், நீ
கெடாத நல்ல புகழை நிலைபெறச் செய்து
தாழ்வின்றி வாழ்க! இந்த உலகத்தில்.

மேல்


தவிர்

(வி) 1. ஒழி, இல்லாமல்போ, cease, become extinct
2. விலக்கு, ஒதுக்கு, shun, exclude
3. விலகு, abstain, refrain
4. தணி, subside, abate
5. தடு, தடைசெய், hinder, obstruct

1.

கதிர் பகா ஞாயிறே கல் சேர்தி ஆயின்
அவரை நினைத்து நிறுத்து என் கை நீட்டி
தருகுவை ஆயின் தவிரும் என் நெஞ்சத்து
உயிர் திரியா மாட்டிய தீ – கலி 142/37-40

கதிர்களை யாருக்கும் பகிர்ந்தளிக்காத ஞாயிறே! நீ மலையில் மறைவாயானால்,
அவரை நினைத்து, அவருள்ள இடத்தில் அவரை நிறுத்திப்பிடித்து, என் கைவரை நீட்டி
உன் கதிர்களைத் தருவாயானால், அணைந்துபோகும், என் நெஞ்சத்தில்
என் உயிரையே திரியாகக் கொண்டு கொளுத்திய காமத்தீ;

2.

அன்பினர் வாழி தோழி நன் புகழ்
உலப்பு இன்று பெறினும் தவிரலர் – நற் 115/9,10

அன்புடையவர், வாழ்க தோழியே! பெரிய புகழைக்
குறைவின்றிப் பெற்றாலும் நம்மை விலக்கமாட்டார்;

3.

இவன் இவள் ஐம்பால் பற்றவும் இவள் இவன்
புன் தலை ஓரி வாங்குநள் பரியவும்
காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது – குறு 229/1-3

இவன் இவளின் பின்னிய கூந்தலைப் பற்றி இழுக்கவும், இவள் இவனது
சீவப்படாத தலையின் மயிரைப் பற்றி வளைத்துவிட்டு ஓடவும்,
அன்புமிக்க செவிலித்தாயர் விலக்கிவிடவும் விலகாது

4.

கொலை சினம் தவிரா மதன் உடை முன்பின் – அகம் 148/2

கொல்லும் சினம் குறையாத செருக்குப் பொருந்திய வலிமையினையும்

5.

ஒழிய சூழ்ந்தனை ஆயின் தவிராது
செல் இனி சிறக்க நின் உள்ளம் – அகம் 19/7,8

(திரும்பிச்) செல்ல நினைத்தால், தடையின்றிப்
போகலாம் இனியே – சிறப்புறட்டும் உன் உள்ளம்!

மேல்


தழங்கு

(வி) 1. குழறுகின்ற பேச்சு போல ஒலி எழுப்பு, make a sound as of a drunkard
2. முரசடிப்பது போன்ற ஒலி எழுப்பு, make a rattling sound, make short successive sounds
3. மழை பெய்யும்போது வானில் எழும் உறுமுகின்ற முழக்கம் போன்று ஒலித்தல்
4.ஆபத்து நேரிடும்போது யானை எழுப்பும் பிளிறல் போன்று ஒலித்தல்

1.

பெரிதாகக் குடித்தவர்களின் குழறுகின்ற நாக்கு போல் ஒலி எழுப்புதல்.

உண்டு மகிழ் தட்ட மழலை நாவின்
பழம்_செருக்காளர் தழங்கு குரல் தோன்ற – மது 668,669

(கள்ளை முந்தின இரவில்)உண்டு களிப்பின் ஆழத்தைத் தொட்ட, குழறும் வார்த்தையுடைய,
பழைய களிப்பினையுடையாருடைய உறுமுகின்ற குரல்கள் தோன்றி நிற்க,

2.

‘டம டம’ என்று முரசு பெரிதாக எழுப்பும் ஓசைபோல் ஒலித்தல்.

2.1

ஆறலைக்களவர், வழிப்போக்கர் வரவை அறிவிக்க முரசடிப்பது போன்று ஒலித்தல்

வம்ப மாக்கள் வரு_திறம் நோக்கி
செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர்
மடி வாய் தண்ணுமை தழங்கு குரல் – நற் 298/1-3

பாலை வழியில், புதிய மக்கள் வருகின்ற தன்மையைப் பார்த்து,
செம்மையான அம்பினை அவர்மீது தொடுக்கும் சினந்த பார்வையினரான ஆடவர் எழுப்பும்
மடித்துவிட்ட வாயையுடைய தண்ணுமைப் பறையின் முழங்குகின்ற ஓசை

2.2

மணவிழாவின்போது முரசு அடிப்பது போன்று ஒலித்தல்.

நல்கூர் நுசுப்பின் மெல் இயல் குறு_மகள்
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய
பழங்கண் மாமையும் உடைய தழங்கு குரல்
மயிர் கண் முரசினோரும் முன்
உயிர் குறியெதிர்ப்பை பெறல் அரும்-குரைத்தே – நற் 93/8-12

மெலிந்துபோன இடையையும், மெல்லிய இயல்பினையும் கொண்ட இளமகளின்
பூண்கள் தாழ்ந்த மார்பு நாணம் துன்புறுத்துவதால் வருத்தமுற்ற
மெலிவடைந்து நிறமாற்றம் பெற்றன; ஆதலால் ஒலிக்கின்ற குரலையுடைய
மயிர்சீவாத தோல் போர்த்த கண்ணையுடைய மணமுரசின் ஒலியைக் கேட்பதற்கு முன்
இவளிடம் உயிர் இருக்கும்படியான ஒரு குறிப்புத் தோன்றக் காணப்பெறுதல் அரிதே!

2.3

விடிந்துவிட்டதைத் தெரிவிக்க முரசு அடிப்பது போன்று ஒலித்தல்

தழங்கு குரல் முரசம் காலை இயம்ப
கடும் சின வேந்தன் தொழில் எதிர்ந்தனனே – ஐங் 448/1,2

முழங்குகின்ற குரலில் முரசம் காலையில் ஒலிக்க,
கடும் சினத்தையுடைய வேந்தன் போரை எதிர்கொண்டான்;

2.4

போர் மறவர்க்கு உணவு படைக்க அழைக்கும் முரசு அடிப்பது போன்று ஒலித்தல்

பெரும் சமம் ததைந்த செரு புகல் மறவர்
உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு கொளை புணர்ந்து
பெரும் சோறு உகுத்தற்கு எறியும்
கடும் சின வேந்தே நின் தழங்கு குரல் முரசே – பதி 30/41-44

பகைவரின் பெரிய போரினைச் சிதைத்துக் கெடுத்த போரை விரும்பும் மறவர்களால்,
இடி போன்ற நிலத்தை அதிரச் செய்யும் குரலோடு, யாழிசை சேர்ந்தொலிக்க,
போர்வீரருக்குப் பெரிய விருந்துணவு படைப்பதற்கு அறையப்பெறுகின்றது –
கடும் சினமுள்ள வேந்தனே! உன்னுடைய முழங்குகின்ற ஒலியையுடைய முரசம்

2.5

போர்ப்பாசறையில் தங்கியிருப்போருக்கு அறிவிப்புக்கொடுக்க முரசு அடிப்பது போன்று ஒலித்தல்.
இது காற்றால் அலைப்புண்ட கடலின் ஆர்ப்பரிப்பு போல் இருக்கும்.

கால் கடிப்பு ஆக கடல் ஒலித்து ஆங்கு
வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண்
கடும் சிலை கடவும் தழங்கு குரல் முரசம் – பதி 68/1-3

காற்றே குறுந்தடியாய் மோதியடிக்க, கடல் பேரொலி எழுப்புவதைப் போல
பகைவர் நாட்டினில் எழுப்பித் தங்கியிருக்கும் பாசறையின் நடுவே
மிகுந்த முழக்கத்தைச் செய்யும் ஒலிக்கின்ற ஓசையையுடைய முரசமானது

2.6

பாசறையில் இரவுக்காவலர் நடுயாமத்தை அறிவிக்க முரசு அடிப்பது போன்று ஒலித்தல்.

சிறு கண் யானை நெடு நா ஒண் மணி
கழி பிணி கறை தோல் பொழி கணை உதைப்பு
தழங்கு குரல் முரசமொடு முழங்கும் யாமத்து – அகம் 24/13-15

சிறு கண் யானையின் நெடு நா ஒள் மணியோசையும்,
கழியில் பிணித்த கரிய தோல் கேடகத்தில் வந்து தைக்கும் அம்புகளின் ஓசையும்,
முழங்கும் ஓசையை உடைய முரசின் ஒலியுடன் சேர்ந்து ஒலிக்கும் யாமத்தில்

இங்கு காட்டப்பட்டுள்ள முரசொலிகள் அறிவிப்பு சார்ந்தவையாகவே இருப்பதால், முரசினை
‘டம டம டம’என்று அடிக்கும்போது எழும் ஓசையே தழங்கு குரல் என்று ஆகும்.

3.

மழை பெய்வதற்குச் சற்று முன் வானத்தில் எழும் உறுமுகின்ற இடிமுழக்கம்.

3.1.

தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம்
இன்னே பெய்ய மின்னுமால் தோழி – நற் 7/5,6

மிக்கு ஒலிக்கின்ற இடியோடு முழக்கமிட்டு வானம்
இதோ பெய்வதற்கு மின்னுகின்றது தோழி!

3.2.

மா மலை விடர்_அகம் விளங்க மின்னி
மாயோள் இருந்த தேஎம் நோக்கி
வியல் இரு விசும்பு அகம் புதைய பாஅய்
பெயல் தொடங்கினவே பெய்யா வானம்
——————————-
தழங்கு குரல் உருமின் கங்குலானே – நற் 371/2-9

காயா மரங்களைக் கொண்ட குன்றினில் கொன்றைப் பூக்களைப் போலப்
பெரிய மலையின் பிளவிடங்கள் விளங்கித் தோன்றும்படி மின்னி
மாமை நிறத்தவள் இருந்த இடத்தை நோக்கி
அகன்ற கரிய விசும்பிடம் எல்லாம் மறையும்படி பரவி
மழை பெய்யத் தொடங்கின, இதுவரை பெய்யாத மேகங்கள்
———————————
முழங்குகின்ற ஓசையுடன் இடி இடிக்கும் இரவுப்பொழுதில்

3.3.

தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன மா இதழ் பாவை – அகம் 136/12,13

ஒலிக்கும் குரலையுடைய மேகத்தின் முதல்மழையால் ஈன்ற
கழுவிய நீலமணியை ஒத்த கரிய இதழையுடைய பாவை போன்ற கிழங்கு

4.

ஆபத்து நேரிடும்போது யானை எழுப்பும் பிளிறல் போன்று ஒலித்தல்

கன்று அரைப்பட்ட கயந்தலை மடப்பிடி
வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின்
ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தென கிளையொடு
நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல் – மலை 307-310

கன்றை வயிற்றுக்குக் கீழே(கால்களுக்கிடையே) கொண்ட இளந் தலையுடைய பேதைமையுள்ள பெண்யானை,
வலிமைக்கு ஓர் எல்லை என்று கூறத்தக்க அதன் கணவன் பாதுகாத்துநிற்பதினால்,
ஒளிரும் நிறமுள்ள வலிமையுள்ள புலி பாய்ந்ததினால், (தன்)சுற்றத்தோடு,
உயர்ந்த மலையில் (மற்றவரை உதவிக்குக்)கூப்பிடும் இடியோசை போன்று முழங்கும் குரலும்;

இந்தப் பிளிறல் ஓசையைக் கேட்க இங்கே சொடுக்குங்கள்.

மேல்


தழல்

(பெ) கிளிகடிகருவி, A mechanism for scaring away parrots in a corn field

சாரல் சூரல் தகை பெற வலந்த
தழலும் தட்டையும் குளிரும் பிறவும்
கிளி கடி மரபின ஊழூழ் வாங்கி – குறி 42-44

மலைச்சரிவில்(விளைந்த) பிரம்பினால் அழகுபெறப் பின்னிய,
கவணும், தட்டையும், குளிரும், ஏனையவும்(ஆகிய)
கிளிகளை விரட்டும் இயல்புடையவற்றை அடுத்தடுத்து கையில் எடுத்து

மேல்


தழிஞ்சி

(பெ) புறத்துறைகளில் ஒன்று, one of the themes in the thiNai puRam.

விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணி
குரல் புணர் இன் இசை தழிஞ்சி பாடி – பதி 57/8,9

விரலால் வாசிக்கப்படும் பேரியாழில், பாலைப் பண்ணை அமைத்து,
குரல் என்ற நரம்போடு சேர்த்த இனிய இசையில் தழிஞ்சி என்னும் துறையைப் பாடி

மேல்


தழீஇ

(வி.எ) தழுவி என்ற வினையெச்சத்தின் மரூஉ, the twisted form the word ‘thazhuvi’

குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇ
கொடு வரி இரும் புலி காக்கும் – குறு 215/5,6

சிறிய மலையின் பக்கத்தில் தான் விரும்பிய துணையைத் தழுவி
வளைந்த வரிகளையுஇடைய பெரிய புலியினின்றும் காக்கும்

மேல்


தழீஇய

(வி.எ) தழுவிய என்ற வினையெச்சத்தின் மரூஉ, the twisted form the word ‘thazhuviya’

தண் பணை தழீஇய தளரா இருக்கை – பொரு 169
தண் பணை தழீஇய தளரா இருக்கை – சிறு 78
தண் பணை தழீஇய தளரா இருக்கை – பெரும் 242

குளிர்ந்த வயலையுடைய மருத நிலம் சூழ்ந்த சோர்வுறாத குடியிருப்பினையுடைய

மேல்


தழும்பன்

(பெ) ஒரு வள்ளலான சிற்றரசன், An ancient chief of the Tamil land, noted for his liberality;

பிடி மிதி வழுதுணை பெரும் பெயர் தழும்பன்
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர் – அகம் 227/17,18

பெண்யானை மிதித்த வழுதுணங்காய் போன்ற தழும்பினையுடையதால் வழுதுணைத் தழும்பன் என்னும் பெயர் கொண்டவனின்
காவல் பொருந்திய மதில் எல்லையையுடைய ஊணூருக்கு அப்பால்

மேல்


தழூஉ

(பெ) தழுவிக்கொள்ளுதல், embracing, uniting, clasping

சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ – மது 614

புகழ் மிக்க முருகனை வழிபடுதலால், தழுவிக் கைகோத்து,

மேல்


தழூஉ_அணி

(பெ) தழுவணி, குரவைக் கூத்து, dancing round clasping hands

தொடலை ஆயமொடு தழூஉ_அணி அயர்ந்தும் – குறு 294/2

மாலையையுடைய மகளிர் கூட்டத்தோடு தழுவிக்கொண்ட ஆட்டம் ஆடியும் இருக்கும்போது

மேல்


தழை

(பெ) 1. தழையுடை, A waist garment of strung leaves and flowers
2. மயிலிறகுக் கொத்து, bunch of peacock’s feathers

1.

சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ – திரு 203,204

சுரும்பு (தேன்)உண்ணும்படி தொடுத்த பெரிய குளிர்ந்த அழகினையுடைய தழையுடையை
திருந்திய வடங்களையுடைய அல்குலிடத்தே அசையும்படி உடுத்தி

2.

மின் இரும் பீலி அணி தழை கோட்டொடு – மலை 5

மின்னுகின்ற கரிய மயில் இறகுகளின் அழகிய கொத்து(கட்டப்பட்ட) கொம்பு வாத்தியமும் சேர்த்து,

மேல்


தளம்பு

(பெ) சேறுகுத்தி, உழவர் சேற்றிலுள்ள கட்டிகளையுடைக்கும் கருவி, an instrument to break lumps in mud by ploughmen

மலங்கு மிளிர் செறுவின் தளம்பு தடிந்திட்ட
பழன வாளை – புறம் 61/3,4

விலாங்கு மீன்கள் பிறழ்கின்ற வயலில் தளம்பு துண்டித்துப்போட்ட
பொய்கையின் வாளைமீன்

மேல்


தளவம்

(பெ) செம்முல்லை, golden jasmine, jasminum polyanthum Franch

புதல் இவர் தளவம் பூ கொடி அவிழ – நற் 242/2

புதர்கள் மேல் ஏறிப்படர்கின்ற செம்முல்லைக் கொடியின் பூக்கள் மலர

மேல்


தளவு

(பெ) செம்முல்லை, பார்க்க : தளவம்

பனி வளர் தளவின் சிரல் வாய் செம் முகை – ஐங் 447/2

பனியினால் வளரும் செம்முல்லையின் மீன்கொத்தியின் மூக்கு போன்ற சிவந்த அரும்புகளைச்

மேல்


தளி

1. (வி) துளி, சொட்டு, drip, trickle
2. (பெ) 1. மழைத்துளி, rain drop
2. முதல் மழை, first shower of rain in a season
3. மேகம், cloud

1.

நுண் மழை தளித்து என நறு மலர் தாஅய் – ஐங் 328/1

நுண்ணிதான மழைத்துளிகள் வீழ்ந்ததால் நறிய மலர்கள் உதிர்ந்து பரவி

2.1.

தன் பாடிய தளி உணவின்
புள் தேம்ப புயல் மாறி – பட் 3,4

தன்னை(மேகத்தை)ப் பாடிய, மழைத்துளியையே உணவாகக்கொண்ட
வானம்பாடி வருந்த மழை பெய்யாமற்போக

2.2.

தான் வந்தன்றே தளி தரு தண் கார் – குறு 65/3

தான் வந்தது முதல்மழையைத் தரும் குளிர்ந்த கார்ப்பருவம்

2.3.

தளியின் சிறந்தனை வந்த புலவர்க்கு – கலி 50/16

மேகத்தினும் சிறந்தவனாக, உன்னை நாடி வந்த புலவர்க்கு

மேல்


தளிர்

1. (வி) 1. துளிர்விடு, sprout, shoot forth
2. மனமகிழ், rejoice
3. செழி, வளம்பெறு, prosper, flourish
– 2. (பெ) இளம் இலை, tender shoot, sprout

1.1

ஆஅம் தளிர்க்கும் இடை சென்றார் மீள்தரின்
யாஅம் தளிர்க்குவேம்-மன் – கலி 143/29,30

ஆச்சாமரம் தளிர்க்கும் காட்டிடையே சென்றவர் மீண்டு வந்தால்
நானும் அவர்களைப் போல் மனம் மகிழ்வேன்;

1.2.

ஆஅம் தளிர்க்கும் இடை சென்றார் மீள்தரின்
யாஅம் தளிர்க்குவேம்-மன் – கலி 143/29,30

ஆச்சாமரம் தளிர்க்கும் காட்டிடையே சென்றவர் மீண்டு வந்தால்
நானும் அவர்களைப் போல் மனம் மகிழ்வேன்;

1.3.

வறந்த ஞாலம் தளிர்ப்ப வீசி – ஐங் 452/1

வறண்டுகிடந்த நிலம் வளம்பெறுமாறு பெருமழை பெய்து

2.

செயலை தண் தளிர் துயல்வரும் காதினன் – திரு 207

அசோகின் குளிர்ந்த தளிர் அசைகின்ற செவியை உடையவன்

மேல்


தளை

(பெ) 1. கட்டு, பிணிப்பு, fastening
2. மலரும் நிலையிலுள்ள பூ, மொட்டு, a bud in a flowering stage
3. கயிறு, cord, rope

1.

தளை அவிழ் அலரி தண் நறும் கோதை – நற் 367/9

கட்டு அவிழும் மலராலாகிய குளிர்ந்த, மணங்கமழும் மாலையை

நாணு தளை ஆக வைகி மாண் வினைக்கு
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே – அகம் 29/21-23

மான உணர்வு கட்டிப்போட்டதனால் தங்கி, மாண்புள்ள வினை காரணமாக
(என்)உடம்பு அங்கு இருந்ததே ஒழிய
பேதைமை உள்ள (என்) நெஞ்சம் உன் அருகிலேயேதான் இருந்தது.

2.

இளையர் ஆடும் தளை அவிழ் கானல் – ஐங் 198/2

இளம்பெண்கள் விளையாடும் மொட்டுகள் கட்டவிழ்ந்த கடற்கரைச் சோலை

3.

சேற்று நிலை முனைஇய செம் கண் காரான்
ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து – அகம் 46/1,2

சேற்றில் நிற்பதை வெறுத்த சிவந்த கண்களையுடைய எருமை
ஊரார் உறங்கும் இருளில் தனது வலுவுள்ள கயிறை அறுத்துக்கொண்டு

மேல்


தளைவிடு

(வி) மலர், முறுக்கவிழ், unfold, blossom

போது அவிழ் பனி பொய்கை புதுவது தளைவிட்ட
தாது சூழ் தாமரை தனி மலர் புறம் சேர்பு – கலி 69/1,2

மலரும் தருவாயிலிருக்கும் மொட்டுக்கள் கட்டவிழும் குளிர்ச்சியான பொய்கையில் புதிதாக முறுக்கவிழ்ந்த
பூந்தாதுக்கள் சூழ்ந்த தாமரையின் தனித்த மலரைப் புறத்தே சேர்ந்து,

மேல்

தறி – (பெ) 1. நடுகழி, கட்டுத்தறி, stake, short wooden pole planted
2. முளைக்கோல், peg

1.

நெடும் தாம்பு தொடுத்த குறும் தறி முன்றில்
கொடு முக துருவையொடு வெள்ளை சேக்கும் – பெரும் 152,153

நெடிய தாம்புகள் கட்டப்பட்ட குறிய முளைகளையும் உடைய முற்றத்தில்,
வளைந்த முகத்தையுடைய செம்மறியாட்டுடன் வெள்ளாடும் கிடக்கும்

2.

செம் கேழ் வட்டம் சுருக்கி கொடும் தறி
சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க – நெடு 58,59

சிவந்த நிறத்தையுடைய விசிறி (மூடிச்)சுருக்கிடப்பட்டு, வளைந்த முளைக்கோலில்,
சிலந்தியின் வெள்ளிய நூலால் சூழப்பட்டனவாய் தொங்கிக்கொண்டிருக்க

மேல்


தறுகண்

(பெ) 1. கொல்லுதல், killing
2. அஞ்சாமை, fearlessness

1.

தறுகண் பூட்கை தயங்கு மணி மருங்கின்
சிறு கண் யானையொடு பெரும் தேர் எய்தி – சிறு 141,142

கடுகக் கொல்லுதலை மேற்கோளாகக் கொண்டதும், அலையாடும் மணியை உடைய பக்கத்தினையும்
சிறிய கண்ணையும் உடைய யானையுடன் பெரிய தேரையும் பெற்று

2.

மென் தினை மேய்ந்த தறுகண் பன்றி – ஐங் 261/1

மென்மையான தினைப் பயிரை மேய்ந்த எதற்கும் அஞ்சாத காட்டுப்பன்றி

மேல்


தறுகணாளர்

(பெ) அஞ்சாமையுடைய வீரர், valiant soldiers

செறி சுரை வெள் வேல் மழவர் தாங்கிய
தறுகணாளர் நல் இசை நிறும்-மார் – அகம் 269/4,5

திணிந்த சுரையையுடைய வெள்ளிய வேலையுடைய வெட்சி வீரரைத் தடுத்துப் பொருதுபட்ட
அஞ்சாமையையுடைய கரந்தை வீரரது நல்ல புகழை நிலைநிறுத்துமாறு

மேல்


தறை

(வி) தட்டையாகு, become flat, be flattened

தீர தறைந்த தலையும் தன் கம்பலும் – கலி 65/6

முற்றிலும் மொட்டையான தலையும், மேலே பொத்திய துணியும் உடையவனாய்

மேல்


தன்முன்

(பெ) தனக்கு முன்னவன், அண்ணன், elder brother

பூ விரி கச்சை புகழோன் தன்முன்
பனி_வரை மார்பன் பயந்த நுண் பொருள் – சிறு 239,240

பூத்தொழில் பரந்த கச்சையினையுடைய புகழ்வாய்ந்தவன்(அருச்சுனன்) அண்ணனும்,
பனி மலை (இமயம்)(போன்ற)மார்பையுடையவனும் ஆகிய வீமசேனனின் நுணுகிய பொருளையுடைய

மேல்


தனம்

(பெ) செல்வம், பொன், wealth, gold

தனம் தரு நன் கலம் சிதைய தாக்கும்
சிறு வெள் இறவின் குப்பை அன்ன – அகம் 152/7,8

பொன்னைக் கொண்டுவரும் நல்ல மரக்கலம் சிதையுமாறு தாக்குகின்ற
சிறிய வெள்ளிய இறாமீனின் தொகுதி போன்ற

மேல்


தனாது

(பெ) தன்னுடையது, ones own

உறை துறந்து இருந்த புறவில் தனாது
செம்_கதிர்_செல்வன் தெறுதலின் மண் பக – நற் 164/1,2

மழையே முற்றிலும் இல்லாதிருந்த காட்டுப்பகுதியில், (அந்தப் பாலை நிலம்) தனக்குரிய
சிவந்த கதிர்களையுடைய செல்வனான ஞாயிறு சுட்டெரித்தலால், நிலம் பிளந்துபோக

மேல்


தனித்தலை

(பெ) தனியிடம், lonely place

வான் சோறு கொண்டு, தீம் பால் வேண்டும்,
முனித்தலைப் புதல்வர் தந்தை,
தனித்தலைப் பெரும் காடு முன்னிய பின்னே – புறம் 250/7-9

வெள்ளைச் சோற்றை உண்டு இனிய பாலைக் விரும்பிய
குடுமித் தலையையுடைய புதல்வர்களின் தந்தை
தனியிடமாகிய சுடுகாட்டை அடைந்த பின்பு

மேல்