ஐ – முதல் சொற்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்


ஐது
ஐம்பால்
ஐயவி
ஐயை
ஐவனம்

(பெ) 1. ஐந்து என்ற எண்
2. அழகு, beauty
3. தலைவன், lord
4. வியப்பு, wonder

1.

ஆட்டு அயர்ந்து அரி படும் விரை மாண் பகழி – பரி 10/97

நீர்விளையாட்டை ஆடிக் களித்து, வண்டுகள் மொய்க்கின்ற, மணத்தினால் மாட்சிமையுடைய ஐந்து மன்மத அம்புகளின்

2.

கை ஏந்து அகல் நிறைய நெய் சொரிந்து – நெடு 102

கைகளில் ஏந்தியிருக்கின்ற அழகுடைய தகளி நிறைய நெய் சொரிந்து

3.

கரும் கால் வேம்பின் ஒண் பூ யாணர்
என் இன்றியும் கழிவது-கொல்லோ – குறு 24/1,2

கரிய அடிமரத்தையுடைய வேம்பின் ஒள்ளிய புதுப்பூக்கள்
என் தலைவர் இல்லாமலேயே வீணே பூத்து ஒழியுமோ?

4.

தேய்ந்தன்று பிறையும் அன்று – கலி 55/9

(நெற்றி) வியப்படையும் வகையில் தேய்ந்திருக்கிறது, ஆனால் அது பிறையும் இல்லை;

மேல்


ஐது

(பெ) 1. மென்மையானது, மெல்லியது, that which is soft
2. நுண்மையானது, that which is fine, minute, subtle
3. வியப்பிற்குரியது, that which is wonderful
4. அழகினையுடையது, that which is beautiful
5. பதமானது, that which is in proper condition

1.

ஐது அகல் அல்குல் மகளிர் – புறம் 389/16

மெல்லிதாய் அகன்ற அல்குலையுடைய நின் மகளிர்

2.

அம் மா மேனி ஐது அமை நுசுப்பின் – அகம் 75/18

அழகிய மாமை நிறத்தையுடைய மேனியினையும் நுண்ணிதாய் அமைந்த இடையினையும்

3.

அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும் – நற் 264/3

அழகு விளங்கிய கலாபத்தை வியப்புடையதாக விரித்து ஆடுகின்ற

4.

நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை – அகம் 119/11

நெய்தல் பூப்போலும் உருவினையுடைய அழகிதாய் விளங்கும் அகன்ற இலையினையும்

5.

மனையோள்
ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்குறுத்த
திரிமரக் குரல் இசை கடுப்ப – அகம் 224/10-12

மனைவி
பதமாகக் காய்ந்த அரிசியைப் பெய்து சுற்றுதல் செய்த
திரிகையின் குரலொலியைப் போல

மேல்


ஐம்பால்

(பெ) 1. கொண்டை, குழல், பனிச்சை, முடி, சுருள் என்னும் ஐந்துவகையான் கூந்தல் முடிப்பு
Woman’s hair, from its being dressed in five modes
2. ஐந்து கால் எடுத்துப் பின்னப்பட்டிருக்கும் பெண்-கூந்தல் ஒப்பனை

1.

வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால்
மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து – மலை 30,31

மணமாலை (இன்னும்)மணக்கும்(புதுமணம் மாறாத), (மொய்க்கும்)வண்டுகளும் மணம்வீசும் கூந்தலினையுடைய 30
இளம்பெண்ணின் அழகுநிறைந்த, மெல்லிதாக அசையும் அழகிய மார்பகத்தே

2.

தேம் கமழ் ஐம்பால் பற்றி – நற் 100/4

இனிதாய்க் கமழும் என் கூந்தலைப் பற்றி இழுத்து,

மேல்


ஐயவி

(பெ) 1. வெண்கடுகு, white mustard, Sinapis alba
2. கதவிற்குக் காவலாகப் புறவாயிலிலே தூக்கப்படும் துலாமரம், Upright bar for the gate of a fort

1.1

நெடிய தண்டையுடைய இந்தப் பயிர், குறிஞ்சிநிலத்துத் தோரைநெல், வெண்ணெல் ஆகியவற்றுடன் பின்னிப்
பிணைந்து வளரும்..

நறும் காழ் கொன்று கோட்டின் வித்திய
குறும் கதிர் தோரை நெடும் கால் ஐயவி
ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி – மது 286-288

நறிய அகிலையும் சந்தனத்தையும் வெட்டி மேட்டுநிலத்தே விதைத்த
குறிய கதிர்களைக் கொண்ட தோரைநெல்லும், நெடிய தண்டையுடைய வெண்சிறுகடுகும்,
ஐவனம் என்னும் வெள்ளிய நெல்லொடு பிணக்கம் கொண்டு வளர்ந்து,

1.2.

சின்னஞ்சிறிய ஞாழல் பூவினைப்போல் இருக்கும்

ஐயவி அன்ன சிறு வீ ஞாழல் – குறு 50/1

வெண்சிறு கடுகுபோன்ற சிறிய பூக்களைக்கொண்ட ஞாழல்

1.3.

இதனை அரைத்து வாசலில் பூசினால் தீங்கான சக்திகள் அணுகா என்பது நம்பிக்கை

ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை – நெடு 86

வெண்சிறுகடுகு அப்பிவைத்த நெய்யணிந்த நெடிய நிலையினையுடைய

1.4.

குழந்தை பெற்ற மகளிர் இதனை அரைத்துப்பூசி எண்ணெய்தேய்த்துக் குளிப்பர்

வெறி_உற விரிந்த அறுவை மெல் அணை
புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈர் அணி
பசு_நெய் கூர்ந்த மென்மை யாக்கை
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த – நற் 40/5-9

நறுமணம் கமழ விரிக்கப்பட்ட விரிப்பினைக் கொண்ட மென்மையான அணையில்
ஈன்றணிமையின் மணம் மணக்க, செவிலி துயில்விக்க, புதல்வன் தூங்க,
வெண்சிறுகடுகை அரைத்து அப்பி, எண்ணெய்பூசிக் குளித்த, ஈருடை தரித்த,
பசுநெய் தடவிய மென்மையான உடம்பினையுடைய,
சிறப்புப் பொருந்திய தலைவி இரு இமைகளையும் மூடிப் படுத்திருக்க,

1.5.

போரில் காயம்பட்டு வீட்டில் படுத்திருப்போனைத் தீய ஆவியினின்றும் காக்க அவனைச் சுற்றி ஐயவியைத் தூவி விடுவர்.

தீம் கனி இரவமொடு வேம்பு மனை செரீஇ
வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க
கை பய பெயர்த்து மை இழுது இழுகி
ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
இசை மணி எறிந்து காஞ்சி பாடி
நெடு நகர் வரைப்பின் கடி நறை புகைஇ
காக்கம் வம்மோ – புறம் 281/ 1- 7

இனிய கனிகளையுடைய இரவமரத் தழைகளுடன், வேப்பிலையையும் வீட்டு நிலையில் செருகிவைத்து
வளைந்த கொம்பையுடைய யாழும் பல இன்னிசைக் கருவிகளும் முழங்க
கையை மெல்ல எடுத்து மையினைத் தடவி
வெண்கடுகைத் தூவிவிட்டு, ஆம்பல் குழகை ஊதி
ஓசையைச் செய்யும் மணியை இயக்கி, காஞ்சிப்பண்ணைப் பாடி,
நெடிய மனையில் நறுமணம் கமழும் அகில் முதலியவற்றைப் புகைத்து
காப்போமாக,வருக.

2.

பூணா ஐயவி தூக்கிய மதில – பதி 16/4

பூசிக்கொள்ளும் ஐயவி அல்லாத ஐயவித்துலாம் என்னும் மரம் தொங்கவிடப்பட்டிருக்கும் உள் மதிலில் உள்ள

மேல்


ஐயை

(பெ) ஒரு சங்ககால இளவரசி, a princess of sangam age
உறையூரை ஆண்ட தித்தன் என்ற அரசனின் மகள் இந்த ஐயை.

இழை அணி பணை தோள் ஐயை தந்தை
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன்
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் – அகம் 6/3-5

நகைகள் அணிந்த, மூங்கில் போன்ற தோள் உடைய, ஐயை-இன் தந்தையாகிய,
மழை போன்று வளம்தரும் மிக்க வண்மையுடைய தித்தனின்,
குவியல் நெல்லையுடைய உறந்தை நகரில்

மேல்


ஐவனம்

(பெ) மலை நெல், mountain paddy

நறும் காழ் கொன்று கோட்டின் வித்திய
குறும் கதிர் தோரை நெடும் கால் ஐயவி
ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி – மது 286-288

நறிய அகிலையும் சந்தனத்தையும் வெட்டி மேட்டுநிலத்தே விதைத்த
குறிய கதிர்களைக் கொண்ட தோரைநெல்லும், நெடிய தண்டையுடைய வெண்சிறுகடுகும்,
ஐவனம் என்னும் வெள்ளிய நெல்லொடு பிணக்கம் கொண்டு வளர்ந்து,

மேல்